Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது! - 5

எது அறம்?சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

பிரீமியம் ஸ்டோரி
பாதை இனிது... பயணமும் இனிது! - 5
பாதை இனிது... பயணமும் இனிது! - 5

பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ, அவனே குருடன். 

- காந்தியடிகள்

வர் மிகச் சிறப்பாக இல்லறம் நடத்தியவர். மாபெரும் முனிவர். உயர்ந்த மெய்யறிவாளர். அன்பான கணவர். ஜனகர் என்ற அரசருக்கே மெய்யறிவைப் புகட்டியவர்.

அவர் ஒருநாள், தம் மனைவியர் இருவரையும் அழைத்தார். தாம் துறவறம் ஏற்கப் போவதாகக் கூறி, தமது சொத்துக்களை இரண்டாகப் பிரித்துக் கொடுத்தார். ஒரு மனைவி அதை ஏற்றுக் கொண்டாள். மற்றொரு மனைவியோ, மறுத்துவிட்டாள்.

‘‘உங்களுக்கு ஜனகர் அளித்த செல்வங்கள் எதுவும் எனக்கு வேண்டாம். நீங்கள் ஜனகருக்கு எதைக் கற்றுத் தந்தீர்களோ, அதை எனக்கு உபதேசியுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டாள்.

அன்பே வடிவான அந்தக் கணவர் அவளை அருகில் அழைத்து அமர்த்தி, மெய்ப்பொருள் தத்துவத்தை உபதேசித்து அருளினார்.

அந்த முனிவரின் பெயர் யாக்ஞவல்கியர். வாழ்க்கையில் மனிதனின் தேடல்கள் அனைத்தையும் அறிவார்ந்த கேள்விகளால் தொடுத்து, கணவரிடமிருந்து விஷய ஞானம் பெற்ற அந்த மனைவியின் பெயர் மைத்ரேயி. இவர்கள் இருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் உபநிஷத இலக்கியங்களில் மிக அற்புதமானவை எனப் போற்றப்படுகின்றன.

வாழ்க்கையில் மனிதன் உண்மையிலேயே எதைத் தேடுகிறான்? மனித வாழ்வின் அறுதிக் குறிக்கோள் எது? இவற்றை ஆராய்ச்சி செய்து, விடை காண்பது மிக முக்கியம்.

பாதை இனிது... பயணமும் இனிது! - 5

உலகில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் எத்தனையோ விதமான குறிக்கோள்கள் இருக்கின்றன. மதிப்பெண்கள் அதிகம் பெறுவதிலிருந்து, மங்கள்யானை விண்ணில் செலுத்துவது வரை பலருக்கும் பலவிதமான குறிக்கோள்கள்! சொல்லப் போனால், குறிக்கோள்கள்தான் மனிதனை முன்னேற்றப் பாதையில் உந்தித் தள்ளுகின்றன. அதேபோல, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சில குறிக்கோள்கள் உள்ளன. ஒரு நல்ல தலைவன் தனது நிறுவனத்தின் குறிக்கோளைத் தெளிவாக அறிந்து, அதை நோக்கி அந்த நிறுவனத்தைச் செலுத்தப் பாடுபடுவான்.

மனிதனின் குறிக்கோள்கள் பலதரப் பட்டவையாக இருந்தாலும், அவை அனைத்தையும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் வகைப்படுத்தி வைத்தனர் நம் முன்னோர்.

பலருக்கும் பணம் சம்பாதிப்பதே வாழ்வின் முக்கியமான குறிக்கோள். நிறைய இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற குறிக்கோள், சிலரை உறங்கவிடாமல் செய்கிறது. இவர்கள் வகைவகையான உணவு, வசதியான வீடு, வாகனம், வெளிநாட்டுப் பயணம் என ஐம்புலன்களுக்குச் சோறிடுவதையே தம் வாழ்வின் முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருப்பார்கள்.

மனிதனின் இன்ப நுகர்ச்சிக்குத் தீனி போடுவதையே பல நிறுவனங்கள் குறிக்கோள்களாகக் கொண்டிருக்கின்றன.

இன்ப நுகர்ச்சியில் ஆழ்ந்து ஈடுபடு பவனின் ஆசை வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் உடல் தடுமாறும்; நோய்வாய்ப் படும். அடங்காத ஆசைகள், உள்ளத்தில் தீப்பொறிகளாய்க் கனன்று கொண் டிருக்கும்.

அறம் என்பது ஓர் உயர்ந்த குறிக்கோள். தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் நலம் பயக்கும் சிந்தனைகள், சொற்கள், செயல்கள் அனைத்துமே அறம் என்ற சொல்லால் குறிக்கப்படும்.

தனி மனிதனையும் சமூகத்தையும் மேம்படுத்தும் சடங்குகள், கடமைகள், மனோபாவனைகள், குணங்கள் அனைத்தும் அறமாகும். அன்பு, பொறுமை, நிறைவு, தானம், பெரியோர்களிடம் கேட்டல், அடக்கம், பொறாமையற்று இருத்தல் முதலிய நற்குணங்களைக் கடைப்பிடித்தலும் அறம் வகையையே சாரும்.

உயிரானது, மெய்ப்பொருளாகத் தன்னை உணர்ந்து, பிறவித் தளைகளிலிருந்து விடுபட்டுப் பேரின்பத்தை உணர்வதே வீடு எனப்படும். அதுவே, மனிதப் பிறவியின் அறுதிக் குறிக்கோளாகும்.

இன்று பெரும்பாலான மனிதர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பொருளும் இன்பமுமே குறிக்கோள்களாக இருக்கின்றன. அறம் என்ற குறிக்கோள் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. அறத்துக்கு முரண்படுகிற குறிக்கோள்களை அறவே தவிர்த்துவிடும் தெளிவுடையவனாக ஒரு நிறுவனத்தின் தலைவன் திகழ வேண்டும்.

நிறுவனத்தின் குறிக்கோள், சமூக நன்மையை முன்னிறுத்துவதாக இருக்க வேண்டும். இருநூறு பேரை வாழ வைக்க, இருபதாயிரம் பேருக்குத் தீங்கிழைக்கக்கூடாது.

தொழில் எத்தகையதாக இருப்பினும், சமூக நன்மையைக் கருத்தில் கொண்டு, அறவழியில் பொருளீட்டுவதே நிறுவனத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அறிவு நல்வழியில் செல்லவேண்டும் என்பதே காயத்ரி மந்திரத்தின் பிரார்த்தனை.

திருவள்ளுவர், அறிவுக்குக் கூறும் இலக்கணங்களில் ஒன்று:

சென்றஇடத்தால் செலவிடா தீதுஓரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.
(குறள்: 422)

மனம் போன போக்கில் செல்லவிடாமல், நல்லவற்றில் மனிதனைச் செலுத்துவதே அறிவு எனப்படும்.

ஒரு சிறந்த தலைவன், தனது நிறுவனத்தின் குறிக்கோளில் இத்தகைய தெளிவுமிக்கவனாக இருப்பான். அது நாட்டுக்கே நலம் பயக்கும். குவலயம் முழுவதும் குதூகலமாக வாழ உதவும்.

- பயணிப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு