Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது! - 6

செவிக்கு அழகு!சுவாமி ஓங்காராநந்தர்

பாதை இனிது... பயணமும் இனிது! - 6

செவிக்கு அழகு!சுவாமி ஓங்காராநந்தர்

Published:Updated:
பாதை இனிது... பயணமும் இனிது! - 6

பேராசையும் கடவுளும் எதிரெதிர் துருவங்கள். எங்கே பேராசை நிலவுகிறதோ, அங்கே கடவுள் இருப்பதில்லை.  

- ஷீர்டி ஸ்ரீசாயிபாபா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாதை இனிது... பயணமும் இனிது! - 6

அவர், உலக சரித்திரத்தில் இடம்பெற்றவர். தனது ஆட்சிக் காலத்தின் முதல் நான்கு வருடங்களிலேயே அவர் இறந்திருந்தால், உலகின் மிகச் சிறந்த ஆட்சியாளர் என்ற பெயரைப் பெற்றிருப்பார் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. ஆனால், அவரின் ஒன்பதாண்டு ஆட்சிக் காலத்தில் கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, கொடுங்கோன்மைக்கு உதாரணமாகிவிட்டார். அவர்தான் அடால்ஃப் ஹிட்லர்.

தனிப்பட்ட மனிதனின் எண்ண உந்துதல்கள், சமூகத்துக்கு நலம் பயக்கலாம்; தீங்கையும் விளைவிக்கலாம். ஒரு நல்ல தலை வன் நல்லறிவும், நீண்ட கால அனுபவமும் மிக்க பெரியோர்களின் சொற்களைக் கேட்டு, தன் எண்ண ஓட்டங்களை அவற்றுடன் சீர்தூக்கிப் பார்த்த பின்னரே செயலில் இறங்க வேண்டும்.

இன்றைய இளைஞர்களின் உடல் உறுப்புகளில் ஓய்வையே அறியாமல் கலங்குபவை காதுகள்தான். உண்ணும்போதும், உறங்கும்போதும், வண்டியோட்டும்போதும் என எப்போதும், தேவையற்ற பல நூறு விஷயங்களை அவை உள்வாங்கியபடியே இருக்கின்றன.

கேட்டல் என்பது ஓர் அற்புதமான நிகழ்வு! காதுகளோடு மனதையும் திறந்து வைத்தால்தான் கேட்டல் முழுமை பெறும்.

ஒரு நல்ல தலைவனுக்குக் கல்வியறிவு மட்டுமிருந்தால் போதாது; நல்லார் இணக்கமும், கேள்வி ஞானமும் மிக முக்கியம். தனக்கு முன்னே முட்களும் புதர்களும் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் பயணித்த பெரியோரின் அனுபவம் என்ற செல்வத்தை அவன் பெற்றாக வேண்டும்.

தனிப்பட்ட ஒரு மனிதனின் முயற்சி என்றால், அவன் பலமுறை விழுந்தும் எழுந்தும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு நிறுவனத்தின் தலைவனாக இருப்பவன், எல்லாவற்றையும் பரீட்சை செய்து பார்ப்பது மிகக் கடினம். எதிர்பாராத திடீர் வெற்றிகள் தரும் மகிழ்ச்சியை அனுபவிப்பதுபோல், அதிர்ச்சியூட்டும் தோல்வியின் அடிகளையும் வலிகளையும் ஏற்றுக்கொள்வது என்பது எளிதல்ல!

கல்வி கற்றுவிடலாம்; பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராக வெற்றிப் படிகளில்

பாதை இனிது... பயணமும் இனிது! - 6

ஏறிவிடலாம். ஆனால், வாழ்க்கைத் தேர்வில் வெற்றி பெறுவது மிகக் கடினம்.

வருங்காலத்தின் இருண்ட பாதைகளில் ஒளி பாய்ச்ச, கற்ற கல்வி மட்டும் போதாது; பெற்ற அனுபவங்களும் முக்கியம். அதிலும், பெரியோரின் வழிகாட்டுதல் மிக முக்கியம். ஒரு நல்ல தலைவன், நம்பிக்கைக்கு உகந்த மனிதர்களைச் சார்ந்திருக்க வேண்டும்.

தைத்ரீய உபநிஷத்தில், வேதம் கற்க வந்த மாணவன் தனது கல்வியை முடித்து வீடு திரும்புவதற்கு முன்னர், ஆசிரியர் அவனுக்கு நிறைவாக சில உபதேசங்களை அளிக்கிறார். உண்மை பேசு, அறவழியில் நட  முதலான பல அறிவுரைகளைக் கூறிய பிறகு, பின்வருமாறு போதிக்கிறார்...

''ஒருவேளை, உனக்குக் கடமையைப் பற்றிய சந்தேகமோ, நடத்தை யைப் பற்றிய ஐயப்பாடோ தோன்றினால், அறிவார்ந்த, அனுபவம்மிக்கவர்களும், நடுநிலையில் உள்ளவர்களும், அறத்தில் நிலைபெற்றவர் களுமான சான்றோர்கள் அந்தச் சூழ்நிலையில் எவ்விதம் நடந்து கொள்வார்களோ, அவ்விதமே நீயும் நடந்துகொள். இதுவே, வேதத்தின் கட்டளை; இறைவனின் கட்டளை. இவ்விதத்தில்தான் வாழ்க்கை நடத்தப்பட வேண்டும்.''

பேசுவது குறைவாகவும், கேட்பது அதிகமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இறைவன் ஒரு வாயையும், இரண்டு காதுகளையும் கொடுத்திருக்கிறார்.''காதுகளால் நல்லவற்றையே கேட்போமாக'' என்று பிரார்த்தனை செய்கிறது வேதம். நல்ல தலைவன் ஆண்டாண்டு காலமாக இருக்கிற சாஸ்திரங்கள், மற்றும் அறவழியில் வாழ்கின்ற பெரியோர்களின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்வான்.

ஒரு தலைவனுக்கு, மனித புத்தியின் குறைபாடுகளை உணர்ந்து, திறந்த மனதுடன் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் தேவை.

காதுகளுக்கு அழகு சேர்ப்பது விதவிதமான அணிகலன்கள் அல்ல. கேள்வி ஞானமே காதுகளுக்கு உண்மையான அணிகலன் ஆகும். 'கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள் உண்மையில் கேட்காத தன்மையுடையவையே’ என்கிறார் திருவள்ளுவர்.

கண்ணொளியும் விளக்கொளியும் இணைந்து பார்வை உண்டாவதைப்போல, சுய அறிவும் நூலறிவும் இணைந்து நுண்ணறிவு ஏற்படுகிறது. அவ்வாறு, வாழ்நாள் முழுவதும் நல்ல விஷயங்களை நிறைவாகக் கேட்டவர்களின் வாயிலிருந்து வெளிப்படுகின்ற சொற்கள் நற்சொற்களாகவே விளங்கும்.

'செவியுணவாகிய கேள்வியின் பெருமையை உணராதவர்கள் இருந்தால் என்ன, இறந்தால் என்ன?’ என்று கேட்கும் திருவள்ளுவர், ஒழுக்கம் உடைய பெரியவர்களின் வாய்ச்சொற்களை, வழுக்கலான வாழ்க்கைப் பாதையில் ஊன்றுகோலாக உருவகப்படுத்துகிறார்.

செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்? (திருக்குறள்: 420)

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல். (திருக்குறள்: 415)

- பயணிப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism