Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது! - 8

அந்த 6 விஷயங்கள்! சுவாமி ஓங்காராநந்தர் ஓவியம்: அனந்த பத்மநாபன்

பாதை இனிது... பயணமும் இனிது! - 8

அந்த 6 விஷயங்கள்! சுவாமி ஓங்காராநந்தர் ஓவியம்: அனந்த பத்மநாபன்

Published:Updated:
பாதை இனிது... பயணமும் இனிது! - 8

ங்கு செல்கிறோம் என்பதே தெரியாமல் பயணித்தால், விரைவில் காணாமல் போவதற்கான வாய்ப்புகளே அதிகம். குறிக்கோள் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதை அடைவதற்கு உரிய வழிமுறையும்! 

கடிகாரம் ஒன்று பெரிய நெற்குதிருக்குள் கைதவறி விழுந்துவிட்டது. குதிருக்குள் இறங்கி அதனைத் தேடச் சென்ற பத்துப் பன்னிரண்டு சிறுவர்களின் கைகளில் அது அகப்படவில்லை. அனைவரையும் வெளியேறச் சொல்லிவிட்டு, ஒரே ஒரு சிறுவன் மட்டும் தனியாக இறங்கி, அந்தக் கடிகாரத்தை மிக எளிதாகக் கண்டுபிடித்துவிட்டான்.

அவனுக்கு மட்டும் எப்படி இது சாத்திய மாயிற்று? பல சிறுவர்களின் பேரிரைச்சலில் தட்டுப்படாத கடிகாரம், ஒரே ஒரு சிறுவனின் அமைதியான தேடலில் கிடைத்ததற்குக் காரணம், கடிகாரத்தின் மெல்லிய டிக்டிக் துடிப்பை அவன் ஊன்றிக் கவனித்துக் கேட்டதுதான்.

இன்றைய சூழலில் பலர் பரபரப்பாக இயங்குகின்றனர். ஆனால், செயல்பாடுகளில் சரியான திட்டமிடல் இல்லை. ஆழ்ந்த கவனம் இல்லை. எங்கு செல்கிறோம் என்பதே தெரியாமல் பயணித்தால், விரைவில் காணாமல் போவதற்கான வாய்ப்புகளே அதிகம். குறிக்கோள் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அந்தக் குறிக்கோளை அடைவதற்கு உரிய வழிமுறையும் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஏதோ ஓர் ஆர்வத்தில் உணர்ச்சிவசப்பட்டுக் களத்தில் குதிப்பது பெரும்பாலும் பயனளிப்பது இல்லை. அது ஆபத்தானதும்கூட! சரியான திட்டமிடல் இன்றி, கனவுக் கோட்டைகளின் பின்னே சென்ற பலர் தங்களது கைப்பொருளை இழந்திருக்கிறார்கள்.

பாதை இனிது... பயணமும் இனிது! - 8

எந்த தேசத்தில் இருக்கிறோம்?

நமது நண்பர்கள் எத்தகையவர்கள்?

நாம் எக்காலத்தில் வாழ்கிறோம்?

நமது வரவுசெலவு எத்தகையது?

நமது தகுதி யாது?

நமது வலிமை எவ்வளவு?

இந்த ஆறு விஷயங்களையும் ஒரு மனிதன் சிந்தித்துச் செயல் பட வேண்டும் என்கிறார் சாணக்கியர். இதைக் கவனத்தில் கொள்ளாமல், காலத்துக்கு ஒத்துவராத, இடத்துக்குப் பொருந்தாத தொழில்களில் ஈடுபட்டு நலிவடைவோர் உண்டு.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு (திருக்குறள்: 467) என்கிறார் திருவள்ளுவர்..

ஒரு மனிதன் சிறந்த கல்வி அறிவைப் பெற்றிருக்கலாம்; கேள்வி ஞானம் கொண்ட வராகத் திகழலாம்; இருப்பினும், ஒரு செயலில் இறங்குவதற்குமுன் சிந்திக்காமல், ஆராயாமல் இறங்கிவிடக் கூடாது. குறிப்பிட்ட துறை சார்ந்த அனைத்து விஷயங்களையும் தெளிவாக அறிந்துகொண்ட பிறகே செயலில் இறங்கவேண்டும். இதை உணர்த்தவே திருவள்ளுவர், 'தெரிந்து செயல்வகை’ என்ற அதிகாரத்தை அருளியுள்ளார்.

தனியொரு மனிதனின் தவறு என்றால், அது ஒரு குடும்பத்தை மட்டுமே பாதிக்கும். ஆனால், ஒரு நிறுவனத்தின் தலைவர் சிந்திக்காமல் மனம் போன போக்கில் செயல்பட்டால், அது ஒட்டுமொத்த நிறுவனத்தின் வளர்ச்சியையும், அதில் பணியாற்றுபவர்களையும் மிகக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், எப்போதும் நன்கு சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார் (திருக்குறள்: 463)

வரப்போகின்ற லாபத்தை மட்டும் கணக் கிட்டு, இப்போது உள்ள முதலை இழந்துவிடக் காரணமான செயலை அறிவுடையவர் மேற் கொள்ள மாட்டார் என்கிறார் திருவள்ளுவர்.

உணர்ச்சிவசப்படாமல், அறிவுபூர்வமாக நன்கு திட்டமிட்டு, உரியவர்களிடம் முறையாக ஆலோசனை செய்து, பிறகு செயலில் இறங்குபவர்களே வெற்றிக்கனியை எட்டிப் பறிப்பார்கள்.

இவ்வாறு முறையாகச் செயலாற்றுபவர்களால் சாதிக்க முடியா தது எதுவுமே இல்லை. தனது சாம்பலில் இருந்து உயிர்த்து எழும் ஃபீனிக்ஸ் பறவையைப்போல, இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டுத் தாக்குதலால் தரைமட்டமாகிய பின்னரும், இன்று உலகின் மிகச் சிறந்த நாடுகளுள் ஒன்றாக உயர்ந்து நின்று, ஒளி வீசும் ஜப்பான் இதற்கு உதாரணம். அறிவாளிகள் ஆராயாமல், திட்டமிடாமல் எந்த ஒரு செயலிலும் இறங்குவதில்லை. மிகுந்த அறிவாற்றல் உடையவராக இருந்தாலும், உலகின் நடைமுறைக்குப் பொருந்தி வாழத் தெரியாதவராக இருப்பின், பின்னுக்குத் தள்ளப்படுவார்.

ஒரு மனிதனுக்கு அல்லது நிறுவனத்துக்குத் தீமை என்பது இரண்டு விதங்களில் வரும். ஒன்று, செய்யக்கூடாததைச் செய்வதால். மற்றொன்று, செய்ய வேண்டியதைச் செய்யாமல் விடுவதால். எனவே, இவை இரண்டிலும் மனிதன் மிகுந்த விழிப்பு உணர்வுடன் இருந்தாக வேண்டும். தவறானதைச் செய்தல், சரியானதைச் செய்யாமல் விடுதல் ஆகிய இரண்டுமே பிரச்னைக்கு உரியவைதான். எல்லாம் நடந்து முடிந்த பிறகு, 'நான் அப்படிச் செய்திருக்க வேண்டும்,  இப்படிச் செய்திருக்க வேண்டும்’ என்ற பெருமூச்சு விடுவதில் பயன் இல்லை.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும். (திருக்குறள்: 466)

ஆஹா... எத்தனை அருமையான குறள்! இத்தனை அற்புதமான மேலாண்மை நுணுக்கத் தத்துவத்தை 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே நமது திருவள்ளுவர் எழுதிச் சென்றிருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை!

- பயணிப்போம்