Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது! - 9

சுவாமி ஓங்காராநந்தர்

பாதை இனிது... பயணமும் இனிது! - 9

சுவாமி ஓங்காராநந்தர்

Published:Updated:
பாதை இனிது... பயணமும் இனிது! - 9

சிங்கம் ஒன்று தனது குகைக்கு வெளியே இளைப்பாறிக் கொண்டிருந்தது. அந்த வழியே வந்த நரி, தனது கைக்கடிகாரம் வேலை செய்யவில்லை என்று இதனிடம் குறைப்பட்டுக் கொண்டது. 'என்னிடம் கொடு! நான் சரிசெய்து கொடுக்கிறேன்’ என்றது சிங்கம். 

நரிக்குத் தயக்கம். 'இல்லை. உன் கூரிய நகங்களைக் கொண்டு, எனது சின்னஞ்சிறிய கடிகாரத்தை உடைத்துவிடுவாய். எனவே, தரமாட்டேன்’ என்று மறுத்தது நரி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'என்னை நம்பிக் கொடு! உனது கடிகாரத்தை நான் சரிசெய்து கொடுக்கி றேன்’ என்று வாக்குறுதி அளித்தது சிங்கம்.

நரி தயங்கியவாறு தன் கைக்கடி காரத்தைக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு தனது குகைக்குள்ளே சென்ற சிங்கம், சிறிது நேரத்தில் சரிசெய்யப்பட்ட கடிகாரத்துடன் வெளியே வந்து, நரியிடம் ஒப்படைத்தது.

நரிக்கு ஆச்சரியமான ஆச்சரியம்!

அடுத்த நாள்,  நரி தனது தொலைக் காட்சிப் பெட்டி பழுதாகிவிட்டதென்று வந்து முறையிட, அதையும் சிங்கம் குகைக் குள் சென்று சரிசெய்து வந்து கொடுத்தது.

'இது எப்படிச் சாத்தியம்!’ என்று வியந்த நரி, சிங்கத்தின் குகைக்குள் நைஸாக எட்டிப் பார்த்தது. அங்கே நான்கைந்து முயல்கள் அமைதியாக உட்கார்ந்து வேலை செய்துகொண்டு இருந்தன.

மேலாண்மை வகுப்புகளில் வேடிக்கை யாகச் சொல்லப்படும் கதை இது.

சரியான நபரை, சரியான வேலையில் ஈடுபடுத்துதல் ஒரு மாபெரும் கலை! மிகுந்த அறிவாற்றலும் தொலைநோக்குப் பார்வையும் உடைய தலைவன், தன்கீழ் வேலை செய்பவர்களைச் சரியாகத் தேர்ந்தெடுப்பான். அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் திறமைகளைக் கண்டறிவான். அதற்கேற்ப அவர்களுக்குப் பணிகளைப் பிரித்துக் கொடுப்பான்.

ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது அதன் பணியாளர்களைச் சார்ந்திருக்கிறது. எப்பேர்ப் பட்ட சிறந்த தலைவனுக்கும் குறிப்பறிந்து செயலாற்றுபவர்களின் ஒத்துழைப்பு தேவை.

பணிபுரிபவர்களிடம் நேர்மையின்மை, பொறுப்பின்மை, காலம் தாழ்த்திச் செய்தல், செயல்திறனை வளர்த்துக்கொள்ளாமல் இருத்தல், கால மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஏற்ப தன்னை மேம்படுத்திக் கொள்ளாமல் இருத்தல் முதலிய குறைபாடுகள் இருந்தால், அது நிறுவனத்தின் வளர்ச்சியைப் பெருமளவில் பாதிக்கும்.

பாதை இனிது... பயணமும் இனிது! - 9

சரியான நபரை சரியான வேலையில் அமர்த்துதல், நிறுவனத்தின் வளர்ச்சி மிகச் சீரான வேகத்தில் இயங்குவதற்குத் துணைபுரியும்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல் (திருக்குறள்: 517)

இந்தத் தொழிலை, இந்தக் கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பின்னரே, அந்தத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

சரியான நபரை எப்படித் தேர்ந்தெடுப்பது? கல்வித் தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாமா? இல்லை. இவற்றைத் தாண்டி பல்வேறு அம்சங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு. (திருக்குறள்: 513)

அன்பு, அறிவு, சந்தேகமறத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல், ஆசையின்மை ஆகிய இந்த நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

சிலரிடம் நன்கு செயலாற்றும் திறமை இருக்கும். ஆர்வமும் இருக்கும். ஆனால், குறித்த காலத்தில் செயலாற்ற மாட்டார்கள். எதையும் தள்ளிப்போடுவதே அவர்களின் வழக்கமாக இருக்கும். அப்படியின்றி, குறித்த நேரத்துக்குள் செயலைச் செய்துமுடிப்பது மிக இன்றியமையாதது.

இத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று காலத்தை நிர்ணயிக்காமல் தொடங்கப்படும் திட்டங்கள் பெரும்பாலும் செயல்வடிவம் பெறுவதில்லை.

பல உயர்ந்த கோட்பாடுகள், சிந்தனைகளைப் பற்றியெல்லாம் மணிக்கணக்காகப் பேசினாலும், குறித்த காலத்தில் அதனை முறையாகச் செயல் படுத்தத் தெரியவில்லையென்றால் பயனில்லை.

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல் (திருக்குறள்: 516)

செயல்புரிபவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, உரிய காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு.

வழிகாட்டுதல் என்பது வேறு; தலையிடுதல் என்பது வேறு. ஒருவனது செயல்புரியும் தன்மையை, திறனை ஆராய்ந்து, அவனிடம் ஒரு செயலை ஒப்படைத்த பிறகு, அதனை அவன் முழுமையாகச் செய்து முடிப்பதற்கு உரிய சுதந்திரத்தைக் கொடுத்துவிட வேண்டும். அப்படிச் செய்யாமல், அவன்மீது நம்பிக்கையின்றி, ஒவ்வொரு நிலையிலும் தன் சொந்தக் கருத்துக்களைத் திணித்துக்கொண்டே இருப்பது நல்ல தலைவனுக்கு அழகல்ல!

குழந்தைகளுக்குக்கூட சிறு சிறு பொறுப்பு கள் கொடுத்து, அதற்கு உரிய உரிமையையும் கொடுக்கும்போது, அவர்கள் உற்சாகத்தோடு செயல்புரிவதைக் காண முடியும்.

ஒரு தலைவன் முழு உரிமையையும் தன்னிடம் வைத்துக்கொண்டு, தன் கீழ் வேலை பார்ப்பவர்களைச் செயல்புரியுமாறு கூறினால், நாளடைவில் அவர்களது செயலில் இயந்திரத்தனமே மிஞ்சும்.

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல் (திருக்குறள்: 518)

ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு திறமை மிகுந்தவனாக இருக்கிறானா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகு, அவனை அத்தொழிலுக்கு உரியவனாகும்படி உயர்த்துவதே ஒரு நல்ல தலைவனுக்கு அழகு என்பது வள்ளுவர் கருத்து.

பயணிப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism