Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது! - 10

சுவாமி ஓங்காராநந்தர்

பாதை இனிது... பயணமும் இனிது! - 10

சுவாமி ஓங்காராநந்தர்

Published:Updated:

அது மிகக் கடுமையான யுத்தம். போரிட்டது அண்ணன் தம்பியாகிய இரண்டே பேர்தான். அவர்களில் தம்பிக்கு தெய்விகம் பொருந்திய இருவரின் உதவி கிட்டியது. எனவே, அண்ணனைக் கொன்று, வெற்றி வாகை சூடினான். 

வெற்றிக் களிப்பில் மிதந்தவன், காலத்தை மறந்தான். தனக்கு உதவிய அந்த இருவருக்கும் தான் பிரதியுபகாரம் செய்ய வேண்டும் என்பதையும் மறந்தான். இருவரில், இளையவர் பொறுமையிழந்து, கோபம் கொண்டு, அவன்மீது போரிடவே துவங்கிவிட்டார்.

அவன் வேறு யாருமல்ல, சுக்ரீவன்தான். ராம லட்சுமணர்களின் உதவியோடு, அண்ணன் வாலியை வதம் செய்து, கிஷ்கிந்தாவுக்குத் தலைவன் ஆனவன், தன்னை மறந்து போதையில் ஆழ்ந்தான். லட்சுமணர் அவன் மீது போரிடத் துவங்க, தாரை இடைமறித்துச் சமாதானம் செய்த சம்பவத்தை ராமாயணம் விவரிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலைமைப் பண்புகளில் மிக முக்கியமானவையாகக் கருதப்படுபவை நீடித்த உற்சாகமும், அயராத உழைப்புமே ஆகும். ஒரு நல்ல தலைவன், தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் ஒவ்வொரு வரின் தனித் திறமையையும் அடையாளம் காணுவான். அவர்களுக்கு உரிய பணியைப் பிரித்துக் கொடுத்து, திறமையாக வழிநடத்துவான். அப்படிச் செய்தால், வெற்றி என்பது நிச்சயம் கிட்டும்.

பாதை இனிது... பயணமும் இனிது! - 10

அவ்வாறு ஏற்படும் வெற்றிகள் மிகுந்த பெருமிதத்தைக் கொடுக்கலாம். ஆனால், வெற்றியால் உண்டாகும் புகழ், ஒருவனை போதை மயக்கத்தில் ஆழ்த்துமானால், அடைய வேண்டியவற்றையெல்லாம் அடைந்துவிட்டதைப் போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துமானால், அது மீண்டும் தோல்வியில் கொண்டு தள்ளிவிடும்.

'உழைப்பை உதாசீனப்படுத்தி, மறதியிலும் சோர்விலும் ஆழ்ந்திருக்கும் மனநிலை வெகு நிச்சயமாக ஒருவனுடைய புகழை அழித்துவிடும்’ என்பது சான்றோர் வாக்கு.

முயல் ஆமை கதையில்கூட, முன்னேறிச் சென்ற முயல், மிதமிஞ்சிய களிப்பில் உறங்கி, வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டு, மறதிக்கும் சோர்வுக்கும் இன்றும் எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றைய இளைஞர்கள் பலரின் பிரச்னை இதுதான். கடுமையாக உழைப்பதில் இவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. ஆனால், அதனை ஈடுகட்டுவதற்கு நேரம் காலம் தெரியாமல் பொழுதுபோக்கில் ஈடுபடுகின்றனர். அயராத உழைப்புக்குப் பிறகு, இளைப்பாறுதல் என்பது வேறு; வீண் களியாட்டங்களில் ஈடுபட்டு, உடம்பை மேலும் வருத்திக் கொள்வது என்பது வேறு. தனது நிறுவனத்தின், தனது தனிப்பட்ட வாழ்க்கையின் குறிக்கோளை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

ஒரு நல்ல தலைவன், மறதி என்னும் மாய வலைக்குள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதும் அவசியம். இதற்குத் திருவள்ளுவர் கொடுக்கும் பெயர் 'பொச்சாவாமை’.

இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. (திருக்குறள்: 531)

பாதை இனிது... பயணமும் இனிது! - 10

'பெரிய மகிழ்ச்சியில் லயித்திருக்கும்போது உண்டாகும் மறதியால் ஏற்படும் சோர்வானது, எல்லை மீறிய கோபத்தைக் காட்டிலும் பெரிய தீங்கை விளைவிக்கக்கூடியது’ என்கிறார் திருவள்ளுவர். நீடித்த வறுமை ஒருவனது அறிவைக் கொல்லும்; அதுபோல, இத்தகைய மறதி ஒருவனுடைய புகழைக் கொன்றுவிடும்!

ஒரு சிறந்த தலைவன், வெற்றிக் களிப்பில் தடுமாற மாட்டான். சிறு புன்னகையோடு விலகிவிடுவான். சின்னதொரு ஓய்வுக்குப் பிறகு, அடுத்த வேலையை உற்சாகத்துடன் தொடங்குவான். எப்போதும் விழிப்பு உணர்வுடன், கவனத்துடன் செயல்படுவான். அத்தகைய மறதியற்ற மனநிலையைப் போன்று நன்மை பயப்பது வேறு எதுவும் இல்லை. பல நேரம், நமது அலட்சியப்போக்கால், செய்யவேண்டிய முக்கியமான கடமைகளை மறந்துவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு மறந்துவிடுபவர்க்கு இப்பிறவியில் மட்டுமல்ல, ஏழு பிறவிகளிலும் நன்மை ஏற்படாது என்று எச்சரிக்கை செய்கிறார் திருவள்ளுவர்.

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். (திருக்குறள்:538)

எந்த ஒரு நிறுவனத்திலும், வெற்றிக்குப் பின்னர், தொடர்ந்து அடைய வேண்டிய இலக்குகள் இருக்கின்றன. அடைந்து விட்ட உயரத்தைத் தக்க வைத்தலும், தனது எல்லைகளை விரிவாக்கலும் மிக முக்கியமானவை! மறதியையும் சோர்வையும் தவிர்த்து, தொடர்ந்த நீடித்த உற்சாகத்துடன், குறிக்கோளை நோக்கி நாம் நடைபோடுவோம், வாருங்கள்!

பயணிப்போம்