Published:Updated:

வள்ளுவரின் ஆணை..!

பாதை இனிது... பயணமும் இனிது..!சுவாமி ஓங்காராநந்தர்

ர் அரசர் சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தார். அவருக்கு வாரிசு இல்லாததால், தனக்கு அடுத்தபடியாக நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்யக்கூடிய அரசரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு புதிய வழியைப் பின்பற்றினார். தன்னிடம் இருந்த அமைச்சர்களிடம்  சில விதைகளைக் கொடுத்து, அதனை வளர்த்து வருமாறு ஆணையிட்டார். ஆறு மாத காலத்துக்குப் பிறகு, தாம் அந்தச் செடிகளைப் பார்வையிட விரும்புவதாகக் கூறினார். 

அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வளர்த்த செடிகளுடன் வந்தனர். ஒவ்வொரு செடியும் பூத்துக் குலுங்குவதைப் பார்வையிட்டவாறே அரசர் வந்தார். ஓர் அமைச்சர் மட்டும் தலைகுனிந்தவாறு நின்றிருந்தார். அவர் கையில் செடி ஏதும் இல்லை. அரசர் புருவத்தை உயர்த்திப் பார்க்க, 'மன்னிக்கவும் அரசே! தாங்கள் தந்த விதைகள் முளைக்கவில்லை' என்று தயக்கத்துடன் கூறினார் அவர். அவரே அரச பதவிக்கு உரியவர் என்று அறிவித்தார் அரசர். மற்ற அமைச்சர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தனர்.

''ஓர் அரசருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்புகள், நேர்மையும் நம்பகத்தன்மையும்தான். உங்கள் ஒவ்வொருவரிடமும் பல்வேறு திறமைகள் இருக்கலாம். ஞானம் இருக்கலாம்; வீரமும் இருக்கலாம். ஆனால், நம்பகத்தன்மை இல்லையென்றால், ஒருநாளும் நீங்கள் அரசராக முடியாது!'' என்ற அரசர், தாம் அவர்களுக்கு வேக வைத்த விதைகளையே கொடுத்த உண்மையை வெளிப்படுத்தினார். அமைச்சர்கள் வெட்கித் தலைகுனிந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வள்ளுவரின் ஆணை..!

கடைப்பிடிப்பதற்குக் கடினமான பண்புபோல் தோன்றினாலும், நேர்மை என்பது மிகத் தேவையான ஒரு பண்பு.

''நடைமுறை வாழ்வில் இவையெல்லாம் சாத்தியம் இல்லை.'

''நான் ஒருவன் மட்டும் நேர்மையாக இருந்து என்ன ஆகப் போகிறது?'

''இந்தச் சமூகம்தான் என்னைக் குற்றவாளியாக மாற்றிவிட்டது.'

''நான் ஒரு சூழ்நிலைக் கைதி. என்ன செய்வது?'

வள்ளுவரின் ஆணை..!

இவ்வாறு நான்கல்ல, நான்காயிரம் காரணங்களை, தான் நேர்மை தவறியதற்கான நியாயங்களை ஒருவர் எடுத்துக் கூறலாம். ஆனால், நேர்மையாக வாழ்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் எவரும் அவ்வாறு கூறமாட்டார்.

நேர்மையான அதிகாரிகள் என்று பெயரெடுத்த சில துருவ நட்சத்திரங்களை நம் வாழ்க்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். எத்தனையோ இன்னல்களுக்கு இடையில், அச்சுறுத்தல்களுக்கு இடையில், நெருக்கடிகளுக்கு மத்தியில் அஞ்சாமல் செயல்படும் வீரர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

நாம் செய்கின்ற செயல் நல்ல செயலாக இருக்க வேண்டும்; களங்கத் துடன் கூடியதாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தவே திருவள்ளுவர் 'வினைத்தூய்மை’ என்றொரு அதிகாரத்தை அருளியிருக்கிறார்.

தவறான வழியில் செய்யப்படும் செயல்கள் புகழைத் தருவதில்லை; புண்ணியத்தையும் தருவதில்லை; எனவே, அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது வள்ளுவரின் வாக்கு.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை. (திருக்குறள்: 652)

'நான் இந்தத் தவறான செயலில் ஈடுபடாவிட்டால், மிகுந்த துன்பத்துக்கு ஆளாக நேரிடும். எனவேதான்...’ என்று இழுப்பவர்களுக்கு, திருவள்ளுவர் கூறும் அறிவுரை இதுதான்:

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர். (திருக்குறள்: 654)

அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும், (அத்துன்பத்தைத் தீர்ப்பதற்காகக்கூட) இழிவான செயல்களில் ஈடுபட மாட்டார்.

'அதெல்லாம் சரி அய்யா, வறுமை தாள முடியவில்லையே! பட்டினி கிடக்க நேர்ந்தால், என்ன செய்வது? பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும் என்றுதானே சொல்வார்கள். என் குடும்பத்தினரின் பசியைப் போக்க வேண்டுமானால், தவறான செயலில் ஈடுபடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை’ என்று சிலர் சொல்லக்கூடும்.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை. (திருக்குறள்: 656)

என்கிறார் வள்ளுவர். 'பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுள்ள செயல்களை ஒருவன் செய்யக் கூடாது’ என்பது திருவள்ளுவரின் திட்டவட்டமான ஆணை.

'தவறான செயல்களில் ஈடுபட்டுக் குறுக்கு வழியில் செல்வதால் என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது? வாழ்க்கையில் கொள்ளை அடித்தவன், பெரும் பாதகங்களில் ஈடுபட்டவன் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறான்?’ என்றும் சிலர் கேட்கலாம்.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை. (திருக்குறள்: 659)

'பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்துவிட்டுப் போய்விடும். நல்வழியில் வந்தவை இழக்கப் பட்டாலும், பிறகு பயன் தரும்’ என்பது திருவள்ளுவரின் திருமறை.

தெய்வம் நின்று கொன்று, நின்று அருளும் பாங்கிற்கும், விடை காணமுடியாத பல கேள்விகளுக்குக் காலம் அளிக்கும் பதில்களுக்கும் இந்த பூமியே சாட்சி!

தூய எண்ணங்கள், தூய சொற்கள், தூய செயல்கள்  இவையே தேவை. பாரதத் தூய்மைத் திட்டம் என்பது புறத்தூய்மையை மட்டும் குறிப்பதல்ல. நம் தேசத்தில் புரையோடிக் கிடக்கும் லஞ்ச, ஊழல் கரையான்களை அடியோடு அழித்து ஒழிப்பதையும் அது மறைமுகமாகக் குறிப்பிடுகிறது.

பயணிப்போம்