Published:Updated:

சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே!

Published:Updated:
சிந்தனை செய் மனமே!
சிந்தனை செய் மனமே!
சிந்தனை செய் மனமே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'துளசி’ என்றால் ஒப்பற்றவள் என்று அர்த்தம். ''முதலில் துளசியைக் கண்டனர்; பிறகு, துளசியுடன் ஒப்பிடுவதற்கு இணையான விஷயத்தைத் தேடினர்; எதுவும் அகப்படவில்லை. எனவே, 'ஒப்பற்றவள்’ என உரைத்தனர்'' என்கிறது புராணம். 'தனக்கு நிகரான பொருளே இல்லாமல் செய்தவள்’ என துளசிக்கு விளக்கம் அளிக்கிறது இலக்கண சாஸ்திரம்.

துளசி தளத்தைப் பறித்துப் பல நாட்களானாலும் பொலிவு இழக்காமல் இருக் கும். துளசி காய்ந்து பொடியாக மாறினாலும் பூஜைக்கு உகந்தது என்கிறது தர்ம சாஸ்திரம். ஸ்ரீகிருஷ்ண துலாபாரத்தில், செல்வத்தை அள்ளி அள்ளித் தட்டில் வைத்தபோதும், நிறைவடையவில்லை; பிறகு, துளசி தளத்தைத் தட்டில் வைக்க... நிறைவுற்றதாகச் சொல்கிறது புராணம். கொடை வழங்கும்போது, கொடையின் குறைவை நிறைவு செய்ய, துளசி தளத்தை இணைத்து வழங்கச் சொல்லி வலி யுறுத்துகிறது தர்மசாஸ்திரம். உயிர் பிரியும் தருணத்தில், தண்ணீருடன் கலந்து துளசியைத் தர... அந்த ஆத்மா பரந்தாமனுடன் இணைகிறது என்கிறது அது.  

உப்புடன் கலந்த கரும்துளசி, தொடுபுலனில் உண்டாகிற அரிப்பை அகற்றும்; கபத்தை விலக்கும்; வாதத்தை அடக்கும்; கண்ணுக்குத் தென்படாத புழு- பூச்சிகளையும் அழிக்கும். அது, பிணியை அகற்றும் மருந்து; உணவுப் பொரு ளுக்குச் சுவையூட்டும் என்கிறது ஆயுர்வேதம். பிறந்த குழந்தையின் கபத்தை அகற்ற, துளசிச்சாறு பயன்படும் என்கிறார், குழந்தைகள் நல மருத்துவர் காச்யபர்! வெள்ளை, கறுப்பு மற்றும் சிவப்பு நிறங்களில், வாசனையுடன் திகழும் துளசி, வழிபாட்டில் முதலிடம் பெறுகிறது. வழக்கமாக, விநாயகர் பூஜையில் சேர்க்கப்படாத துளசியை, விநாயக சதுர்த்தியின் போது சிறப்பு வழிபாட்டில், பூஜையின் நிறைவுக்காக, 'துளஸீ பத்ரம் ஸமர்ப்பயாமி’ என்று சொல்லிச் சேர்க்கச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.

##~##
துளசியின் நடுவே- ஸ்ரீநாராயணன்; நுனியில் ஸ்ரீபிரம்மன்; அடியில் ஈசன் ஆகியோர் குடிகொண்டுள்ளதாகச் சொல்வர். அலைமகள், கலைமகள், மலைமகள் மற்றும் ஸ்ரீகாயத்ரி ஆகியோர் அதன் புஷ்பத்தில் உறைந்திருப்பதாகப் பத்மபுராணம் தெரிவிக்கிறது. மாடம் அமைத்து, அதில் துளசிச் செடியை வைத்து,கோமயத்தால் செடியின் தண்டுப் பகுதியைத் தடவிப் பூசி, அதனடியில் நீர் இறைத்து, துளசி தளங்களில் சந்தன- குங்குமம் இட்டு, மாடத்தில் விளக்கேற்றி வலம் வந்து, தினமும் பணிவிடை செய்யவேண்டும். இத னைத் தொடர்ந்து செய்ய, பாவங்கள் அழிந்து பரம்பொருளுடன் இரண்ட றக் கலக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். பெண்கள், அதிகாலையில் நீராடி, துளசி பூஜை செய்யும் மரபு இன்றும் தொடர்கிறது.

விருந்தாவனம் அமைத்து அருகில் குடியிருப்பவருக்கு, யம பயம் இருக்காது. விருந்தாவனத்தில் உள்ள வாசனை துளசியுடன் இணையும் காற்று, சுற்றுச் சூழலை சுத்தமாக்கி, ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் என்கிறது ஆயுர்வேதம்.

பிருந்தாவன துவாதசியில், துளசி பூஜை செய்து, பாயசம் நைவேத்தியம் செய்து, தானமாக வழங்குவது சிறப்பு. துளசி சந்நிதியில், தீப தானம் செய்வது கூடுதல் பலனைத் தரும்! வாழ்வில் இன்பத்தையும் இறுதியில் மோட்சத்தையும் அளிப்பாள் துளசி என விருதகோசம் தெரிவிக்கிறது.

பறிப்பதற்கு முன்னதாக, 'ஸ்ரீமந் நாராயணனின் பூஜைக்காக, இந்தத் தளத்தைப் பறிக்கிறேன். இதனால் ஏற்படும் துயரத்தைப் பொறுத்துக் கொள்வாயாக!’ என்று வேண்டிக் கொண்டு, ஒவ்வொரு தளமாகப் பறிக்கவேண்டும். அறத்தை அறிந்த வர்கள், துவாதசி திதியில் துளசியைப் பறிக்கமாட்டார்கள். ஒருவேளை துளசி தேவையெனில், செடியை உலுக்கி, உதிர்ந்து விழும் துளசியை ஏற்கவேண்டும். அல்லது, முதல் நாளே துளசியைப் பறித்துவைத்துக் கொள்ள வேண்டும்.

செடி-கொடிகளுக்கும் உயிர்- உணர்வு உண்டு என்கிறது வானஸ்பத்ய சாஸ்திரம். பூஜை அல்லது மருந்துக்காக துளசி யைப் பறிக்கலாம். அழகுபடுத்துகிற நோக்கில் துளசியை வெட்டுவதை தர்மசாஸ்திரம் ஏற்கவில்லை. தலை, செவிகள், முகம் ஆகியவற்றில் துளசியை ஏந்தி, அதனைப் பெருமைப் படுத்தவேண்டும். இதனால் அறிவுப் புலன்களில் சுறுசுறுப்பு ஏற்படும். துளசி இருக்குமிடத்தில் விஷக்கிருமிகள் அண்டாது. துளசி மாலையைக் கழுத்தில் அணிந்துகொண்டு, பூஜிப்பதை பத்மபுராணம் வரவேற்கிறது. கையில் துளசி மாலையை வைத்து, விரல்களால் துளசி மணியை உருட்டியபடி, ஸ்ரீமந் நாராயண நாமத்தை உச்சரித்து வழிபடுவது, சிறப்பு. படித்த வர்கள், பாமரர்கள், வேதம் அறிந்தவர், அறியாதவர் என அனைவரும் எளிமையாக வழிபடும் அற்புத வழி இது.

சிந்தனை செய் மனமே!

மாடத்திலோ, பிருந்தாவனம் அமைத்தோ துளசிச் செடியை வளர்த்து, வணங்கி வந்து, மூன்று வருடங்களாகிவிட்டால், துளசிக்கும் ஸ்ரீமந் நாராயணனுக்கும் திருமணோத்ஸவம் நிகழ்த்தச் சொல்கிறது புராணம். தற்போது நடைபெறுகிற கல்யாண உத்ஸவங்களுக்கு அடிப்படையே, துளசி கல்யா ணம்தான்! குரு சுக்கிரோதயம் அல்லது கார்த்திகை பௌர் ணமி அல்லது ஜோதிட பரிந்துரையுடன் இணைந்த முகூர்த்த வேளையில், விருந்தாலட்சுமிக்கும் ஸ்ரீமந் நாராயணனுக்கும் திருமணம் செய்யவேண்டும் என்கிறது பாஞ்சராத்ரம்.

விருப்பம் ஈடேற, மும்மூர்த்திகள் உறைந்திருக்கும் அரச மரத்துக்குத் திருமணம் செய்து வைத்து மகிழ்வர். அதேபோல், துளசி கல்யாணமும் விருப்பத்தை ஈடேற்றும். தேவி பாகவ தம், பத்மபுராணம், சிவபுராணம், பிரம்ம வைவர்த்த புராணம் ஆகியவை துளசி கல்யாணத்தை எடுத்துரைக்கின்றன. இவ்வளவு சிறப்பு மிக்க துளசி என்பவள் யார்? ஆவல் எழத்தானே செய்யும்!

கோலோகத்தில் உதித்தவள்; கோபியரில் உயர்ந்தவள்; ஸ்ரீகண்ணனுக்குப் பிரியமானவள்... துளசி! ஸ்ரீகிருஷ்ணனுடன் துளசி விளையாடியதைக் கண்ட ராதை, பொறாமையால் புழுங்கினாள்; கலங்கினாள்; ஒருகட்டத்தில் ஆவேசமாகி, 'பூலோகத்தில் மனிதப் பிறவியாக மாறுவாய்’ என துளசியைச் சபித்தாள். இதையடுத்து, துயரத்தில் ஆழ்ந்தாள் துளசி. 'கவலை வேண்டாம், பாரதத்தில் தோன்றி, தவமிருந்து, எனது அம்சமான நாராயணனை அடைவாய்; மகிழ்வாய்’ என ஆறுதலும் ஆசீர்வாதமும் அளித்தார் கண்ணபிரான்.  

சிந்தனை செய் மனமே!

தர்மத்வஜன்- மாதவி எனும் அரச தம்பதிக்கு மகளாக, கார்த்திகை பௌர்ணமியில் தோன்றினாள். அவளுக்குத் துளசி எனப் பெயரிட்டனர். உரிய வயதை அடைந்ததும், நாராயணனை நினைத்துத் தவத்தில் ஆழ்ந்தாள். அதேநேரம், ஸுதாம கோபாலன், ராதையின் சாபத்தால் அசுரகுலத்தில் பிறந்து, சங்கசூடன் எனும் பெயரில் வளர்ந்தான். பிறகு தவமிருந்து, நிபந்தனையுடன் அழியா வரத்தினை இறைவனிடம் பெற்றான். அவனுடைய மனைவி கற்பை இழந்து விட்டால், அவன் இறந்துவிடுவான் என்பதே அந்த நிபந்தனை!  

அதையடுத்து, சங்கசூடனுக்கும் துளசிக்கும் திருமணம் நடந்தது. தேவர்களின் அதிகாரத்தைப் பறித்து, கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தான் சங்கசூடன். தேவர்கள், ஸ்ரீபிரம்மனிடம் முறையிட... பிரம்மா, சிவனாரை அணுகினார். பிறகு அனை வரும் வைகுந்தத்துக்குச் சென்று, மகாவிஷ்ணுவைச் சந்தித்தனர். காப்பாற்றுவதாக உறுதியளித்தார் திருமால்; சூலத்துடன் சென்று ஈசன் போர் புரிய, சங்கசூடனைப் போல் உருவெடுத்துச் சென்ற திருமால், துளசியை அணுகி, அவளை பங்கப் படுத்தினார். வந்திருப்பது கணவனில்லை என அறிந்தவள், 'கல்லாகக் கடவது’ என சபித்தாள்; சங்கசூடனின் உருவம் கலைந்து, ஸ்ரீமந் நாராய ணனின் தோற்றத்தைக் கண்டவள், கதறி அழுதாள். உடனே மகாவிஷ்ணு, ''இந்த உடலைத் துறந்து, மகாலட்சுமி போல் திகழ்வாய்; என்னுடன் இணைவாய். உனது இப்போதைய உடல், கண்டகி நதியாக உருவெடுக்கும்; உனது கேசம், துளசி விருட்சமாக வளர்ந்தோங்கும்'' என அருளினார். பதிவிரதையான பிருந்தா, துளசி விருட்சமாக இருந்து, தன்னை நாடுவோருக்கு அருள் தருகிறாள். கண்டகி நதியில் பாஷாண மாக, அதாவது சாளக்ராம வடிவில் தோன்றி அருள் பாலிக்கிறார், திருமால். துளசி, பிருந்தா லக்ஷ்மியாக வடிவெடுத்து, ஸ்ரீமந் நாராயணனுடன் இணைந்தாள் என்கிறது புராணம்.

கோலோகத்தில் கண்ணனுடன் இணைந்த துளசி, சாபத்தால் பூலோகத்தில் தோன்றினாள்; சங்கசூடனுடன் இணைந்தாள்; அவனை அழிக்க, ஸ்ரீமந் நாராயணனுக்கு மறைமுகமாக உதவி னாள். தனது பிரேம பாத்திரமான துளசியை, சங்கசூடனின் சேர்க்கையில் இணைந்த வடிவைத் துறக்கச் செய்து, புதிய உருவெடுக்க வைத்து, தனக்குரியவளாக அரவணைத்துக் கொண்டார் ஸ்ரீமந் நாராயணன்.

'எல்லாப் பிறவியிலும் இவனே எனக்குக் கண வனாக வரவேண்டும்’ என வேண்டுவர் பதிவிரதை கள். பாரதத்தின் இந்தப் பண்பாடு, துளசி சரிதம் மூலமாக வெளிப்படுகிறது. உலகத்தவர் போற்றும் விதமான சிறப்புக்கு உரியவள் துளசி. நாராயணனுடன் இணைந்தவள் மட்டுமில்லை; தன்னை நாடி வருபவர்களை ஸ்ரீமந் நாராயணனிடம் இணைப்பவளும் இவளே!

( இன்னும் சிந்திப்போம் )

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism