ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

மனிதம் வளர்ப்போம்! லதானந்த்

ஊதாரித்தனம்

ஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன்;

 கஞ்சன் நிரந்தரப் பிச்சைக்காரன்!

##~##

நியாயமான தேவைகளுக்குக்கூட செலவு செய்யாமல் இருப்பது கருமித்தனம்; தேவையற்ற செலவுகளைச் செய்வது ஊதாரித்தனம்.

பிறரிடம் இல்லாத பொருள் தன்னிடம் இருக்க வேண்டும் என விரும்புவது, வீட்டை அதிக பொருட்செலவில் அலங்கரிப்பது என்பன பலவும் ஊதாரித்தனத்தின் வெளிப்பாடுகள். ஒரு சிலர் எந்தக் காரணமும் இன்றி, பொருட்களை வாங்கித் தள்ளுவார்கள். இதை ஒருவித மனநோயாகவே பார்க்கின்றனர், உளவியல் அறிஞர்கள். வெளியே சென்றுவிட்டு வந்தால், கட்டாயம் ஏதேனும் பொருட்களுடன் வருவதும், அவற்றை ஓரிரு முறை பயன்படுத்திவிட்டுக் கிடப்பில் போடுவதும், ஊதாரியின் குணங்கள்.

கடன் அட்டைகள் (கிரெடிட் கார்டு) மூலமும், தவணை முறையிலும் பணம் செலுத்திப் பொருட் கள் வாங்குவது தங்களது சக்திக்கு மீறியதாக இருந்தாலும், அசராமல் செலவு செய்வதில் நாட்டமுள்ளவர்கள், இவர்கள். எதிர்காலம் குறித்த திட்டமிடுதல் இல்லாதவர்களே நிகழ்காலத்தில் ஊதாரித்தனமாகச் செயல்படுகின்றனர்.

மனிதம் வளர்ப்போம்!  லதானந்த்

ஊதாரித்தனமாகச் செலவழிக்கிறோம் என்பதை ஒருவர் உணர்ந்துவிட்டால், அதுவே அவர் மீள்வதற்கான முதல் படிக்கட்டு. அன்றாடம் செய்கிற செலவுகளை, ஒரு நோட்டில் அல்லது டைரியில் குறித்துக்கொண்டு வந்தாலே, நாம் எவ்வளவு ஊதாரித்தனமாகச் செயல்பட்டிருக் கிறோம் என்பதை உணர முடியும். வரவுக்குமேல் செலவு என்பது குடும்பத்தை மட்டுமின்றி, நாட்டையும் பாதிக்கும். இதற்கு சமீபத்திய அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு

ஓர் உதாரணம்!

தந்தை பெரியார், எப்போதுமே மூன்றாம் வகுப்பில்தான் ரயில் பயணம் மேற்கொள்வார். ஒரு முறை, தொழில் மேதை ஜி.டி.நாயுடு, பெரியார் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, தன் செலவில் அவருக்கு முதல் வகுப்பு டிக்கெட் எடுத்துக் கொடுத்தாராம். பெரியார் உடனே அந்த டிக்கெட்டை கேன்சல் செய்து, பழையபடி மூன்றாம் வகுப்பு டிக்கெட் பெற்றுக்கொண்டு, மீதிப் பணத்தை இதரச் செலவுகளுக்கு வைத்துக் கொண்டாராம். ''இந்தப் பெட்டியும் அந்த ஊருக்குதான் போகுது. அப்படியிருக்க, அதிகப் பணம் செலவழித்து முதல் வகுப்புப் பெட்டியில்தான் போவேன் என்பது ஊதாரித்தனம் இல்லையா?'' என்பது பெரியாரின் வாதம். 'ஏன் எப்போதும் மூன்றாம் வகுப்புப் பெட்டி யிலேயே பயணம் செய்கிறீர்கள்?’ என்று ஒரு நண்பர் கேட்டதற்கு, 'மூன்றாம் வகுப்புக்குக் கீழே வேறு வகுப்பு இல்லையே! அதனால்தான் இதில் பயணம் செய்கிறேன்’ என்றார் பெரியார்.

மைக்கேல் ஜாக்ஸன், ஜாக்குலின் கென்னடி, இமால்டா மார்கோஸ், இளவரசி டயானா ஆகியோர் ஊதாரித்தனத்துக்குப் புகழ்(!)பெற்றவர்கள்.

அமெரிக்கக் கோடீஸ்வரர் ராக்ஃபெல்லர் படுசிக்கனக்காரர். ஆனால், அவரின் மகனோ, ஊதாரித்தனமாகச் செயல்படுபவன். ''நீங்கள் இவ்வளவு சிக்கனமாக இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் மகன் ஊதாரியாக இருக்கிறாரே?'' என்று கேட்டதற்கு, ''என் அப்பா வறுமையில் வாடியவர். ஆகவே, பணத்தின் அருமை எனக்குத் தெரியும். ஆனால், அவனுடைய அப்பா கோடீஸ்வரர்; எனவே, பணத்தின் அருமை அவனுக்குத் தெரிய நியாயமில்லையே?'' என்றாராம் ராக்ஃபெல்லர்.

'ஆகாறு அளவிட்டி தாயினுங்

கேடில்லை

போகாறு அகலாக் கடை’ என்கிறார் திருவள்ளுவர். அதாவது, வீண் செலவுகளே இல்லாமல் இருக்குமானால், குறைவான வருமானம் வந்தாலும் பரவாயில்லை என்று பொருள். மேலும்,

'அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்’ என்றும் சொல்கிறார் வள்ளுவர். அதாவது, வருமானத்தின் அளவுக்கு ஏற்பச் செலவழிக்க வேண்டும் என்பதையும், ஊதாரியாக வாழ்தலின் பயனற்ற நிலையையும் எடுத்துரைக்கிறார்.

ஓஷோ சொன்ன கதை இது.

செல்வந்தர் ஒருவர், மரணப் படுக்கையில் இருந்தார். அவரது படுக்கையைச் சுற்றிலும், அவரின் மூன்று மகன்களும் அமர்ந்திருந்தனர். அவர்களும் கொழுத்த பணக்காரர்கள்தான்.

பெரியவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்போதே, அவர் இறந்துவிட்டால் எப்படி அவரது உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்வது என்பது குறித்த பேச்சு வந்தது. மூத்த மகன், 'ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காரை வாடகைக்கு அமர்த்தி, அதில் உடலை எடுத்துச் செல்லலாம்' என்றான். அடுத்த மகன், ''என்னண்ணா நீ, சொந்தமாகவே அந்தக் காரை வாங்கிடுவோம்'' என்றான். மூன்றாவது மகன், விலையுயர்ந்த வேறொரு காரை வாங்கலாம் என்று பரிந்துரைத்தான். மரணப் படுக்கையில் இருந்த தந்தை, அவற்றையெல்லாம் கேட்டதும், மெள்ள எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டார். மகன்கள் அதிர்ச்சியாகி, ''எங்கேப்பா போறீங்க?'' என்று கேட்க, ''அட, ஊதாரிப் பசங்களா? நான் இப்படியே நடந்து இடுகாட்டுக்குப் போய், அங்குள்ள குழியில் படுத்துக்கறேன். அங்கேயே என் உயிர் பிரியட்டும்'' என்றாராம்.

வறுமையில் இருக்கும்போது சிக்கனமாக இருக்கும் பலர், கையில் கொஞ்சம் காசு- பணம் சரளமாகப் புழக்கத்துக்கு வந்ததும், ஊதாரிகளாக மாறிவிடுகின்றனர். கஞ்சனாகவும் இருக்கவேண்டாம்; ஊதாரியாகவும் செயல்பட வேண்டாம். நடுநிலையாளராக இருப்பதே உத்தமம்!

(தொடரும்)