ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

வாழ்க, வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

'அக்கம் பக்கம் பாக்கணும்!'

##~##

'ஒரு கண்ணில் தூசு விழுந்தால், மறு கண்ணும் கலங்கிப் போகும்’ என்பார்கள். உண்மைதான்! உடலின் வேறு எந்தப் பாகங்களுக்கும் இப்படியான தொடர்பு இருப்பதில்லை.

 'என்னன்னே தெரியலப்பா... ஒரு வாரமா வலது கையை மேலே தூக்கும்போதெல்லாம் வலி உயிர் போகுது. ஒருக்களிச்சபடி, ஒரே மாதிரியே படுத்ததால வந்ததா? அல்லது, டூ வீலர்ல 80 கிலோ மீட்டர் தூரம் போயிட்டு வந்தேனே, அதனாலயா? கம்ப்யூட்டர்ல அதிகம் வேலை பார்க்கவேண்டி இருந்துது. ஒருவேளை, இந்த வலிக்குக் காரணம் அதுதானா? ஒண்ணுமே புரியலப்பா!’ என்று அலுத்துக் கொள்வார்கள் அன்பர்கள் சிலர்.

கால்களில் வலி வந்தாலும் இப்படித்தான். 'அட, ஏம்ப்பா கேக்கறே? பாதி வழியில பெட்ரோல் இல்லாம வண்டி நின்னு போச்சு. பங்க் வரைக்கும் உருட்டிக்கிட்டே வந்ததுல, அன்னிக்கி ராத்திரி இடது கால்ல ஆரம்பிச்ச வலி, இன்னிய வரைக்கும் போகலை. ராத்திரி தூங்கும்போது, சுருக்குன்னு ஏதோ நரம்பு தெறிச்சி வெளியே வர்ற மாதிரி ஒரு உணர்வு; கடுமையான வலி!’ என்று புலம்பும் அன்பர்கள் இருக்கிறார்கள்.

வாழ்க, வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

ஒரு கையில், ஒரு காலில் வலி ஏற்படும்போதெல்லாம் மற்ற கையும் காலும் நடப்பவற்றையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். ஆனால், கண்கள் அப்படியில்லை. விருட்டென்று சின்ன பூச்சி வந்து முகத்தில் மோதி, ஒரு கண்ணில் பட்டு, சட்டென்று கலக்கம் ஏற்பட, உடனே மற்றொரு கண்ணும் கலங்கிவிடும். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல், சகோதரப் பாசத்துடன் அழுது, கொஞ்சம் கண்ணீரைச் சிந்திவிட்டுத்தான் சகஜ நிலைக்கு வரும். பூச்சி பட்ட கண், கலங்கிச் சிவந்து, எரிச்சலைக் கிளப்பி, கண் மூடிக் கிடப்பதே இன்பம் என்பதுபோல், இமைகளால் மூடிக் கொள்ளும். ஆக, உடல் உறுப்புகளில் கண்கள் மிகவும் நுட்பமானவை. ஒற்றைச் சொல்லைக்கூடத் தாங்க முடியாமல் சிலர் பொசுக்கென்று அழுது அரற்றுவார்களே... அதுபோல் சின்ன பிரச்னையைக்கூட தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து மருகுபவை கண்கள்.

அவற்றைப் பேணிக் காப்பது நம்முடைய மிக முக்கியமான கடமை என்பதை மறந்துவிடக் கூடாது.

சரி... கண்களுக்கான பயிற்சியைச் செய்யத் துவங்குவோமா?

வாழ்க, வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

முதலில்... உறுத்தாத, மெல்லிய விரிப்பு ஒன்றைத் தரையில் விரித்துக் கொள்ளுங்கள். வஜ்ராசனம் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். கால்களின் முட்டிப் பகுதிகளைத் தரையில் படும்படி மண்டியிடுங்கள். வீட்டுப் பாடம் எழுதி வரவில்லையென்றால், அல்லது ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது கவனிக்காமல் பக்கத்து இருக்கை நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தால், ஆசிரியர் கோபம் கொண்டு, 'ஏய்... எழுந்திரு! கிளாஸ் வாசல்ல போய் முட்டி போடு!’ என்று அதட்டுவாரே, நினைவிருக்கிறதா? அப்படி முட்டி போடுகிற கொடுமையெல்லாம் தற்காலத்தில் பெரும்பாலும் நடப்பதில்லை என்பது குழந்தைகளுக்கு மிகப் பெரிய விடுதலை.

அப்படி முட்டி போட்டு, அப்படியே குதிகாலை மடக்கிக்கொண்டு, நம்முடைய பின்பக்கத்தை கால்களின் மீது வைத்தபடி அமர்ந்துகொள்வதே வஜ்ராசனம். மிக அழகிய பயிற்சி இது. இப்படி வஜ்ராசனத்தில் தினமும் இருபது நிமிடங்கள் இருந்தால், கால்களிலும் ஆடுகால் தசைப் பகுதிகளிலும் இருக்கிற வலிகளெல்லாம் பறந்தோடிவிடும். இப்போது வஜ்ராசனத்தில் உட்கார்ந்து கொண்டுவிட்டீர்கள்தானே?!

அடுத்து, வாலிபால் விளையாடியிருக்கிறீர்களா? அப்போது இரண்டு கைகளையும் சேர்த்து வைத்துக்கொண்டு, பறந்து வருகிற பந்தை, கைகளால் டப்பென்று அடித்து விளையாடுவோம், இல்லையா? அதேபோல், வஜ்ராசனத்தில் அமர்ந்துகொண்டு, இரண்டு கைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அப்படிச் சேர்த்து வைக்கிற தருணத்தில், இரண்டு கைகளின் கட்டை விரல்களையும் அடுத்தடுத்து தெரிகிறாற்போல், 'எது குட்டை, எது நெட்டை’ என்று ஒப்பிட்டுப் பார்க்கிற பாவனையில் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது, பிணைத்திருக்கிற கைகளை கண்களுக்கு நேரே நீட்டிக் கொள்ளுங்கள். அந்தக் கட்டைவிரல்களின் நகப் பகுதிகளை, உங்களது இரண்டு கண்களும் பார்க்கட்டும். நேரே நீண்டிருக்கும் கைகளை உங்களுக்கு வலப்பக்கமாக மெள்ளக் கொண்டு செல்லுங்கள். கிட்டத்தட்ட தோள் பகுதிக்கு பக்கவாட்டுப் பகுதி வரை, கைகள் செல்லட்டும். கண்களுக்கு நேரே இருக்கும்போது நகங்களில் பதிந்த பார்வை மட்டும் விலகாமல், தொடர்ந்து நகங்களைப் பின்தொடரட்டும். கழுத்தைத் திருப்பாமல், உங்களின் பார்வை மட்டும் நடுவில் இருந்து வலது பக்கத்துக்கு நகர வேண்டும். சில விநாடிகள் அப்படியே இருங்கள். நகங்களின் மீதான பார்வையை எந்தக் காரணம் கொண்டும் எடுத்துவிடாதீர்கள். இப்போது, கைகளை வலது பக்கத்தில் இருந்து மெள்ள இடது பக்கத் தோள்பகுதியின் பக்கவாட்டுப் பகுதிக்குக் கொண்டு வாருங்கள். அப்படிக் கொண்டு வருகிறபோது, மீண்டும் அந்தக் கைகளுடனேயே, நகங்களின்மீது பதிந்தபடி உங்களின் பார்வை பயணம் செய்யட்டும்.

வாழ்க, வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

இதுதான் முதல் நிலைப் பயிற்சி. அதாவது, கண்களுக்கு நேரே கைகளை வைத்துக் கொண்டு, இரண்டு கட்டைவிரல்களின் நகங்களைப் பார்த்தல்; அடுத்து, கைகள் வலது பக்கம் நகரும்போது, அந்த

நகப் பகுதிகளுடனேயே நம்முடைய கண்கள், அதாவது பார்வை மட்டும் பயணித்தல்; பிறகு, வலதில் இருந்து இடது பக்கத்துக்குக் கைகள் பயணிக்க, அந்தக் கைகளுடன், கட்டை விரல் களுடன், விரல்களின் நகங்களுடன் நம் கண்களும் பயணம் செய்யட்டும். இப்படி ஐந்து முறை செய்யுங்கள்.

இந்தப் பயிற்சியை மேற்கொள்வது கடினமாகத் தெரியவில்லைதானே? மிக எளிமையான பயிற்சி இது. கண்களுக்கான பயிற்சி என்றாலும், இது

கண்ணுக்கும் புத்திக்கும், மனசுக்கும் நினைவாற்றலுக்குமான விசேஷப் பயிற்சியும்கூட என்பதை அடுத்தடுத்த நாட்களில், இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுக் கிடைக்கிற பலன்களின் மூலமாக உணர்வீர்கள்.

கண்களை மூடிக்கொண்டு புத்தி ஏதேனும் ஒரு விஷயத்தில் ஒருமுனைப்படுவது என்பது ஒரு வகை. நகங்களின்மீது பார்வையையும் புத்தியையும் செலுத்தச் செலுத்த, உங்களையும் அறியாமல், உள்ளுக்குள் ஒருமித்த நிலைக்கு ஆளாவீர்கள். அதேபோல், கூர்மையான பார்வைப் பயிற்சி, கண்களின் அத்தனை நரம்புகளையும் உசுப்பிவிடும் தன்மை கொண்டது. ரயில் பயணத்தில் நேர்க்கோட்டில் பார்வையைச் செலுத்தினால், ரயில் பெட்டிகளின் உட்பக்கங்களையும் எதிரில் உள்ள மனிதர்களையும் மட்டுமே பார்க்க முடியும். அதே நேரம், நமக்குப் பக்கவாட்டுப் பகுதிகளில் பார்க்க, பக்கத்து இருக்கை மனிதர்கள், ஜன்னல், ஜன்னலுக்கு வெளியே உள்ள மரம், செடி, கொடிகள், ஆடு- மாடுகள், வயல்வெளிகள், டிராக்டர்கள், தட்டாம்பூச்சி பிடிக்கிற குழந்தைகள்... என பார்ப்பதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

பார்வையில் விசாலம் இருப்பின், மனதிலும் விசாலம் பரவும்; மனமே விசாலமாகும்!

- வளம் பெருகும்

தொகுப்பு: ஆர்.கே.பாலா