Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது - 20 ..!

எங்கே பேசவேண்டும்? எப்படிப் பேசவேண்டும்?சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

பாதை இனிது... பயணமும் இனிது - 20 ..!

விழா ஒன்றில் சிறப்புரை ஆற்றுவதற்காக பேச்சாளர் ஒருவரை அணுகினார்கள். 

'நான் எத்தனை நேரம் பேச வேண்டும்?’ என்று கேட்டார் பேச்சாளர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'நீங்கள் எத்தனை நேரம் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், வந்தவர்கள் ஒரு மணி நேரம் தான் இருப்பார்கள்!’ என்றனர் விழாக் குழுவினர்.

பேசுவது என்பது ஒரு கலை. பெரிய விழாவாக இருந்தாலும் சரி, அலுவலகத் திட்டப் பணிகளுக் கான கூட்டமாக இருந்தாலும் சரி... பிறரது நேரத்தை மதித்துப் பேசுவது இன்றியமையாதது.

கூடியிருப்பவர்கள் யார்? கூட்டத்தின் நோக்கம் என்ன? அவையினரின் மனநிலை என்ன? தனக்குக் கொடுக்கப்பட்ட கால அளவு எவ்வளவு?  இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பேசுபவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.

தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் கூறிவிட வேண்டும் என்ற துடிப்பு சிலரது கண்களில் தெறிக்கும். சிலரது பேச்சோ சொல்ல வேண்டிய கருத்தை விடுத்து, வேறு பல திசைகளில் இலக்கின்றிப் பயணிக்கும். வெறும் கைத்தட்டல் பெறுவதற்காகவே உணர்ச்சிகரமாகப் பேசுவார்கள் சிலர்.

அவையில் கூடியிருப்போரின் தன்மை அறிந்து, கூற வேண்டிய கருத்துக்களைத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்கு மிகுந்த திட்டமிடலும் முயற்சியும் வேண்டும்.

'அவையறிதல்’ என்னும் அதிகாரத்தில், இந்தக் கருத்தை ஆணித்தரமாகப் பதித்துள்ளார் திருவள்ளுவர்.

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர் (திருக்குறள்: 711)

சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து, ஏற்ற சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

பாதை இனிது... பயணமும் இனிது - 20 ..!

குழந்தைகளுக்குப் பேச வேண்டியது வேறு, பெரியோர்களுக்குப் பேச வேண்டியது வேறு, மாணவர்களுக்கு உரைக்க வேண்டியது வேறு, வாழ்க்கையில் தனது கடமைகளை நிறைவேற்றி விட்ட முதியோருக்கு உரைக்க வேண்டியது வேறு. அவையறிந்து சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும். சொற்களைக் கையாளுகையில் மிகுந்த கவனம் தேவை. கண்ணியமும் தேவை.

'தூய்மையில் இருந்தும் மௌனத்தில் இருந்தும் ஆற்றல்மிகு சொற்கள் பிறக்கின்றன' என்பார் சுவாமி விவேகானந்தர். எத்தகைய வாசகம்!

உண்மையில், எத்தனையோ பேர் தம் வாழ்நாள் முழுவதும் பேசித் தீர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் சரியான இடத்தில், சரியான காலத்தில், அவையறிந்து சுவாமி விவேகானந்தர் கூறிய, 'அமெரிக்க நாட்டு சகோதரிகளே! சகோதரர்களே!’ என்ற அன்பு ததும்பிய வார்த்தைகள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தன.

அவையின் தன்மையை ஆராயாமல் பேசுவது வீண் பேச்சு என்பதும் வள்ளுவர் வாக்கு. பாரதப் பண்பாடு, சபையை இறைமயமாகக் கண்டு போற்றுகிறது. சபையில் கூடியிருக்கும் ஒவ்வொருவரையும் தெய்வமாக வழிபடுகிறது.

அறிவாளிகளின் சபையில் அறிவார்ந்த கருத்துக் களைப் பகிர்ந்துகொள்ளும் அதேவேளையில், முட்டாள்களின் கூட்டத்தில் அமைதியோடு இருக்கும் கலையையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒளியார்முன் ஒள்ளிய ஆதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணம் கொளல். (திருக்குறள்: 714)

அறிவிற் சிறந்தவரின்முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்துகொள்ள வேண்டும். அறிவில்லாதவர்முன் தானும் வெண்சுண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

நல்லறிஞர்கள் கூடியுள்ள அவையில் நல்ல பொருளை மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்கிறார் திருவள்ளுவர்.

அறிவிற் சிறந்த பெரியோர்களின் முன்னிலையில் அவர்களின் அனுமதியின்றி

பேசக் கூடாது. 'மேலான சான்றோர்களின் முன்னிலையில் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று கட்டளையிடுகிறது தைத்திரீய உபநிஷதம். வள்ளுவப் பெருந்தகையும்,

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்

முந்து கிளவாச் செறிவு  (திருக்குறள்: 715)

அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கமானது, ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும் நல்லது.

அவையறிந்து பேசும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல், நல்ல தலைவனுக்கு மிக முக்கியமானதாகும்.

பயணிப்போம்