Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம் - 20 !

பிரம்மத்துக்கு இணையான சம ஆதி நிலை !பி.என்.பரசுராமன், ஓவியம்: மு.ராஜ்குமார்

ம்முடைய காலம் வரை எத்தனையோ ஆசார்ய புருஷர்கள், மஹான்கள், ஜீவன் முக்தர்கள் கோயில் கோயிலாகச் சுற்றியிருக் கிறார்கள். அவர்கள் தங்களுக்கு உண்டான ஆசார  அனுஷ்டானங்களை விடாமலும் தவறாமலும் கடைப்பிடித்து இருக்கிறார்கள். 

எந்தவிதமான நிர்பந்தமும் இல்லாத ஜீவன் முக்தர்களான அவர்கள்

ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவர்கள் செய்வதைப் பார்த்துப் பலர் செய்வார்கள்; நல் வழியில் நடப்பார்கள் அல்லவா? அந்த வகையில், அடுத்தவர் களுக்கு உபகாரமாக நல்வழி காட்டுவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்வார்களே தவிர, தங்கள் ஜீவன் முக்த நிலையில் இருந்து அவர்கள் ஒருபோதும் நழுவவே மாட்டார்கள். அதிலேயே நிலையாய் இருப்பார்கள்.

ஓர் உதாரணம்...

நன்கு படித்துப் பட்டதாரியான ஒருவர், ஆறாம் வகுப்புக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருப்பதைப் பார்த்து, 'சார் ரொம்பப் பாவம்! பட்டதாரியான இவர், அதையெல்லாம் மறந்து, இப்ப ஆறாங்கிளாஸ் ஆயிட்டாரு!’ என்று சொல்வோமா என்ன? அதுபோலத்தான், பிரம்ம வித்துக்களான ஜீவன் முக்தர்கள் மற்றவர்களின் மேன்மைக்காகக் காரியங்களை ஆற்றுவார்களே தவிர, ஜீவன் முக்த நிலையில் இருந்து கொஞ்சமும் நழுவவே மாட்டார்கள்.  அவர்களைக் காமம் முதலானவை தீண்டினாலும், அந்த விநாடியே, அவர்களின் முயற்சி தேவைப்படாமலே அதுவாகவே நீங்கிப் போய்விடும்; மனதில் பதியாது.

மனிதனும் தெய்வமாகலாம் - 20 !

பிரம்ம வித்துக்கள் உலகத்தாருடன் சேர்ந்து இருந்தாலும், தாமரை இலைத் தண்ணீர்போல ஒட்டாமல்தான் இருப்பார்கள்.

அவர்கள் அஞ்ஞானிகளைப் போலத் தோன்றுவார்கள். தங்கள் திறமையை வெளிப்படுத்த மாட்டார்கள். உள்ளத்தில் ஆனந்தம் நிறைந்த அந்தப் பிரம்ம வித்துக்கள் மௌனமாக இருப்பார்கள்.

பிரம்ம வித்தானவர்கள் தங்கள் பழைய வாசனை (பிராரப்த கன்மம் முதலானவை)களின் காரணமாக, பெரும் தவம் செய்தாலும்

செய்வார்கள்; வியாபாரம் செய்யக்கூடும்; அரசராக இருந்து அரசாட்சியும் செய்யலாம்; சிலர், பிச்சை எடுத்து உண்டாலும் உண்பார்கள்.

மாதவம் செயினும் செய்வர்

வாணிபம் செயினும் செய்வர்

பூதலம் புரப்பர் ஐயம்

புகுந்து (உ)ண்பர் சீவன் முத்தர்.

பிரம்ம வித்துக்களான ஜீவன் முக்தர்கள், போனதை நினைத்து வருந்தமாட்டார்கள்; எதிர்காலத்தில் வரப்போவதை நினைத்து மகிழ மாட்டார்கள். கிடைத்ததை அமைதியாக அனுபவிப்பார்கள்.

கொதிக்கும் சூரியக் கதிர்கள் குளுமையாகி 'ஜிலுஜிலு’வென அமிர்தமயமாகக் கொட்டினா லும் சரி, இறந்தவன் உயிருடன் எழுந்தாலும் சரி... பிரம்ம வித்துக்கள் ஆச்சரியப்பட மாட்டார்கள்.

இது நல்லது, இது கெட்டது எனக் கூற மாட்டார்கள். அனைத்துக்கும் சாட்சியாக மட்டுமே இருப்பார்கள் பிரம்மவித்துக்கள். மொத்தத்தில், அவர்கள் எதனாலும் பாதிக்கப் பட மாட்டார்கள்.

ஜீவன் முக்தர்கள் பிரம்மவித்து, பிரம்மவரன், பிரம்மவரியான், பிரம்மவரிட்டன் என நான்கு வகைப்படுவர் எனச் சொல்லி, பிரம்ம வித்து என்பவரின் நிலை என்ன என்பதையும் குருநாதர் சீடனுக்கு விரிவாகச் சொல்லி முடித்ததாகப் பார்த்தோம்.

பிரம்மவித்து என்பவரின் நிலையைப் பற்றி நீள நெடுக விவரித்த குருநாதர், மற்ற மூவரைப் பற்றியும் விவரிக்கவில்லை. சுருக்கமாகவே சொல்லி முடித்துவிட்டார்.

பின்னை மூவரில் இரண்டு

பேர்களும் சமாதியோகம்

தன்னை உற்றிருப்பார் தேக

சஞ்சார நிமித்தம் தானாய்

உன்னுவோன் வரன் வேற்றோரால்

உணர்பவன் வரியானாகும்

அன்னியர் தம்மால் தன்னால்

அறியாதோன் வரிட்டனாமே

               (கைவல்லிய நவநீதம்  92)

(பிரம்ம வித்தைத் தவிர) மற்ற மூவரில் பிரம்மவரன், பிரம்ம வரியான் எனும் இரு ஜீவன் முக்தர்களும் சமாதி யோகத்தை அடைந்திருப்பார்கள். (இருந்தாலும்) இந்த இருவருக்குள்ளும் வித்தியாசம் உண்டு.

உடம்பின் நிமித்தம், தானாகவே (உணவு முதலானவற்றை) நினைப்பவன் பிரம்மவரன்; சீடன் முதலான மற்றவர்களால் (உணவு முதலானவற்றைக் கொள்ள) அறிபவன் பிரம்ம

வரியான்.

இந்த இரண்டு நிலைகளையும் கடந்து, சமாதியில் மேம்பட்ட நிலையில் இருப்பவனே பிரம்ம

மனிதனும் தெய்வமாகலாம் - 20 !

வரிட்டன்.

சமாதி நிலையை அடைந்த பிரம்ம வரனுக்கும் பிரம்ம வரியானுக்கும் இடையில் உள்ள சிறு வேறுபாட்டைப் பார்க்கலாம். அதற்கு முன்...

சமாதி நிலை என்றால் என்ன?

சமாதி நிலை என்றால், இன்று நாம் நினைக்கும் சாதாரண அர்த்தத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.

'அவர் சமாதியில் ஆழ்ந்துவிட்டார்' என யாராவது சொன்னால், உடனே 'அவரை எரிப்பார்களா? புதைப்பார்களா?' என்று கேட்பதுதான் வழக்கமாக இருக்கிறது.

அதாவது, 'சமாதி நிலை’ என்றால், இறந்து போய்விட்டார், இறந்த நிலை என்றுதான் பொருள் கொள்கிறோம். ஆனால், உண்மைப் பொருள் அதுவல்ல.

'சமாதி நிலை’ என்றால், சம ஆதி நிலை என்பது பொருள்.

பிரம்மத்துக்கு இணையான நிலை. அதாவது...

இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாமல், உலகில் எதனாலும் பாதிக்கப்படாத நிலையில் இருப்பதே சமாதி நிலை ஆகும்.

இப்படிப்பட்ட சமாதி நிலையில் இருந்தாலும், உடம்பு செயல்பட்டாக வேண்டுமல்லவா?

அதற்காக, சமாதி நிலையில் இருந்து (உணவு முதலியவற்றின் மூலமாக தேக யாத்திரைக்காக) தானே வெளிப்படுபவன் பிரம்ம வரன். அதையே, சீடர் முதலானோர் உணர்த்த உணர்பவன் பிரம்ம வரியான்.

இந்த இரண்டு நிலைகளையும் கடந்த, உன்னதமான நிலையில் இருப்பவனே பிரம்ம வரிட்டன்.

இவ்வாறு, ஜீவன் முக்தர்களான இவர்கள் நால்வரின் செயல்பாடுகளில் வேறுபாடுகள் தோன்றினாலும், இவர்கள் அடையும் பிரம்மானந்த நிலையில் வேறுபாடு கிடையாது.

இப்படிப்பட்ட ஜீவன் முக்தர்களைத் தரிசித்து வணங்கியவர்கள், சிவன்  பிரம்மா  விஷ்ணு எனும் மும்மூர்த்திகளும் மகிழும்படியாக, தவங்கள் அனைத்தையும் செய்து பிறவிப்பயனை அடைந்தவர்களாக ஆவார்கள் என, வேதங்கள் முழங்குகின்றன.

'ஹுக்கும்! ஜீவன் முக்தர்களை எங்கே யென்று போய் தேடித் தரிசிக்க? வழிபாடு வேற! இதுக்கெல்லாம் எங்க சார் நேரம் இருக்கு?’ என்ற அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டால்...

ஏற்பட்டால் என்று இழுப்பானேன்! அப்படியான எண்ணம் ஏற்படத்தான் செய் யும். ஆனால், ஏற்படக்கூடாது. ஏற்படாமல் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நமக்கு ஏதாவது தேவை என்றால், அதைப் பற்றி அங்கே இங்கே விசாரித்து, கூகுளில் தேடி, உரியவர்களைப் போய்ப் பார்த்து, அதை அடைவதற்கு உண்டான வழிவகைகளை அரும்பாடுபட்டாவது செய்து, நம் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறோம் அல்லவா?

அனைவருக்கும் இப்போதைய தேவை, அவசிய தேவை, அவசரத் தேவை... அமைதியும் நிம்மதியும்!

இவை இப்போதைய தேவை மட்டுமல்ல, நமக்கு என்றென்றும் வேண்டும் தேவைகளும்கூட!

அவை வேண்டுமென்றால், இப்படிப்பட்ட 'உத்தமர்’களை 'ஜீவன் முக்தர்’களைச் சென்று தரிசித்து வழிபட வேண்டும்.

எப்படி வழிபடவேண்டும்..?

தொடரும்