Published:Updated:

அவை அஞ்சாமை!

அவை அஞ்சாமை!

முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன், தனது குழந்தை பிறக்கும் நேரத்தை வைத்து, அதன் ஜாதகத்தைத் துல்லியமாகக் கணித்துத் தருமாறு பல ஜோதிடர்களுக்கு ஆணையிட்டான். அதன்படியே, ஜோதிடர்கள் அனைவரும் அரண்மனையில் திரண்டனர். குழந்தை பிறந்தவுடன், அறையில் இருந்து அரசன் எலுமிச்சம்பழம் ஒன்றை உருட்டிவிட, அந்த நேரத்தை வைத்து ஜோதிடர்கள் குழந்தையின் வருங்காலத்தைக் கணித்தனர். அனைவரும் குழந்தை நீண்ட ஆயுளுடன், நல்லாட்சி புரிந்து, புகழோடு வாழ்வான் என்று கூற, ஒரே ஒரு ஜோதிடர் மட்டும், 'அரசே! உங்கள் மகன் தனது 16வது வயதில் பன்றியால் தாக்கப்பட்டு, உயிரிழப்பான்’ என்று கூறினார்.

அவை அஞ்சாமை!

ஜோதிடரின் சொற்களைக் கேட்ட அரசன் வெகுண்டான். அவரைச் சிறையிலிட்டான். தனது மகனை கண்ணின் மணியாய்ப் பாதுகாத்து வளர்த்தான். 16வது வயது தொடங்குவதற்குச் சில நாட்களே மிச்சமிருக்க, மகனை உயர்ந்த மாளிகையின் உப்பரிகையில் வைத்துக் காவல் இருந்தான். குறிப்பிட்ட நாளும் வந்தது. அனைவரும் உப்பரிகையின் மேலே சென்று பார்த்தபோது, உலோகக் கம்பக் கொடியால் தாக்குற்று, இறந்து கிடந்தான் இளவரசன். அவனது உடல் மீது பன்றிக்கொடி கிடந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மகன் இறந்த துக்கம் ஒருபுறம் இருந்தாலும், மிகச் சரியாக, துணிச்சலுடன் உண்மையைக் கூறிய ஜோதிடரின் அறிவுத் திறனும் அவையஞ்சாமையும் அரசனை வெகுவாகக் கவர்ந்தன. மற்ற ஜோதிடர்கள் அனைவரும் பழம் உருண்டு வெளியே வந்த நேரத்தை வைத்துக் கணக்கிட, வராஹமிஹிரர் என்ற அந்த ஜோதிட சாஸ்திர நிபுணர் மட்டும், குழந்தை பிறந்த நேரத்தை அதற்கு இரண்டு மணித்துளிகள் முன்பாகக் கணக்கிட்டு துல்லியமாக ஜாதகத்தைக் கணித்திருந்தார்.

சரியானவற்றை, உண்மையை அவையில் உரைக்கும் மனோதிடம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. 'தனக்கு ஏன் வீண் வம்பு?’ என்ற எண்ணமே பலரிடம் மேலோங்கியிருக்கும்.

போர்க்களத்தில் இறக்கக்கூடத் துணிந்துவிடுவார்கள். ஆனால், கற்றோர் கூடியிருக்கும் அவையில் அஞ்சாமல் ஒரு கருத்தைக் கூறுவதற்குப் பலருக்கும் துணிச்சல் வருவதில்லை.

அவை அஞ்சாமை!

அவையஞ்சாமை என்னும் அதிகாரத்தில்,
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர் (திருக்குறள்: 723)

என்று கூறியிருக்கிறார் திருவள்ளுவர்.

அவை அஞ்சாமை!

பொதுவாக, கற்றோர் நிறைந்த சபையில் பேசுவதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும். எவ்வளவு அறிந்திருந்தாலும், சொல்வன்மை இருந்தாலும், பெரியோர் முன்னிலையில் பேசும்போது, அச்சம் ஏற்படுவது இயல்பு. எனினும், அந்த அச்சத்தைப் போக்கிக் கொள்ள, தெளிந்த கல்வியறிவைப் பெறுதல் இன்றியமையாதது. அவையினர் எத்தகைய கேள்விக் கணைகளைத் தொடுத்தாலும், அதற்குப் பதில் கூறும் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டால் அச்சப்படத் தேவையில்லை.

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு (திருக்குறள்: 725)

அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு), அஞ்சாது விடை கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும். கசடறக் கற்றதன் பயன், அதன்படி நின்று, அதனை பிறர்க்கும் மொழிதலே ஆகும். நிறையக் கற்றுவிட்டால் மட்டும் போதாது; அதனை அவையில் எல்லோருடைய மனதிலும் எளிதில் பதியுமாறு கூறும் ஆற்றலைப் பெறுதல் வேண்டும். இல்லையெனில், கற்ற கல்வியால் பயனில்லை.

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்

நன்கு செலச்சொல்லா தவர். (திருக்குறள்: 728)

அது மட்டுமல்ல, நூல்களைக் கற்றிருந்த போதும், நல்லறிஞரின் அவைக்கு அஞ்சுபவர், கல்லாதவரைக் காட்டிலும் கடைப்பட்டவர் ஆவார்; அவர் உயிரோடு வாழ்தலே வீண் என்பது வள்ளுவர் வாக்கு.

அறிதல், வாழ்தல், தெளிதல், மொழிதல் ஆகிய நான்கும் அவையஞ்சா அறிஞரிடம் ஒருங்கே இருக்கவேண்டிய பண்புகள்.

கற்பவை கற்று அறிவைப் பெறுதல் வேண்டும்; அதன்படி வாழ்ந்து பார்க்க வேண்டும்; நூலறிவும் பட்டறிவும் இணைந்து நுண்ணறிவைப் பெற்றுத் தெளிய வேண்டும்; தான் வாழ்க்கையில் கண்டுணர்ந்த அறிவுச் செல்வத்தைப் பிறருக்கும் வாரி வழங்க வேண்டும்.

பயணிப்போம்
சுவாமி ஓங்காராநந்தர்