Published:Updated:

வழிப்படுத்துவதே வழிபாடு!

வழிப்படுத்துவதே வழிபாடு!

ழிபடுவது என்றால், ஏதோ பூக்களைத் தூவி நைவேத்தியம் செய்து, தீபாராதனை காட்டுவது என்று பொருள் அல்ல.  நம்மை வழிப்படுத்துவதே வழிபாடு! ஆகையால், ஜீவன் முக்தர்களைத் தரிசிப்பதோடு நில்லாமல், அவர்கள் நடந்து காட்டிய நல்வழியைப் பின்பற்றி நடக்கவும் வேண்டும். அவ்வாறு செய்து பக்குவம் பெறப் பெற, நாமும் அந்த ஜீவன் முக்தர்களின் நிலையை அடையலாம்.

ஜீவன் முக்தர்களின் நிலையை மேலும் விளக்குகிறார் குருநாதர்.

பஞ்சினை ஊழித் தீப்போல்
பல சன்ம விவித வித்தாம்
சஞ்சிதம் எல்லா ஞானத்
தழல் சுட்டி வெண்ணீறாக்கும்
கிஞ்சில் ஆகாமியம் தான்
கிட்டாமல் விட்டுப் போகும்
விஞ்சின பிராரப்தத்தின்
வினையது பவத்துத் தீரும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

(கைவல்லிய நவநீதம்  96)

இந்தப் பாடலுக்கான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்னால், இதில் சொல்லப்பட்ட மூன்று தகவல்களைப் பார்ப்போம். அவை...

சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம்.

வழிப்படுத்துவதே வழிபாடு!

சஞ்சிதம்: கடந்த பிறவிகளில் செய்யப்பட்டு, பலன் அளித்தது போக, மீதிப்பலனை அளிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் நல்வினை, தீவினைகள் சஞ்சிதம் எனப்படும்.

பிராரப்தம்: சென்ற பிறவிகளில் செய்யப்பட்ட, பிறவிக்குக் காரணமான நல்வினை, தீவினைகள் பிராரப்தம் எனப்படும்.

ஆகாமியம்: இப்போதைய பிறவியில் செய்யப்பட்டு, அடுத்த பிறவிக்குக் காரணமாக விருக்கும் நல்வினை, தீவினைகள் ஆகாமியம் எனப்படும்.

இந்தப் பாடலில் வரும், 'பல சன்ம விவித வித்தாம்’ என்பது, நடுங்க வைக்கும் சொற்றொடர்.

'விவித’ என்பதற்குப் 'பலவிதமான’ என்பது பொருள்.

பற்பல பிறவிகளில், பற்பல விதங்களிலும் நாம் செய்தவற்றுக்குப் பிரதிபலனாக நாம் அனுபவித்தது போக மீதி உள்ளவை, நம்மைத் தாக்குவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் (அவையே சஞ்சிதம் எனப்படும் என்று பார்த்தோம்). கண்ணால் செய்தவை, காதால் செய்தவை, கையால் செய்தவை, காலால் செய்தவை, வாயால் செய்தவை, உடம்பால் செய்தவை, மனதால் செய்தவை என அனைத்திலும் மீது உள்ளவை நம்மைத் திருப்பி அடிக்கத் தயாராக இருக்கும்.

அவையெல்லாம் ஒரே பிறவியில் நம்மை ஒட்டுமொத்தமாகத் தாக்கிவிட்டுத் தீர்ந்து போகாதா என்றால், முடியாது. அதாவது, அப்படிச் செய்தால் நம்மால் அதைத் தாங்க முடியாது. போன வருடக் கணக்கு வழக்குகளை இந்த வருடம் அனுசரிக்கிறோம் அல்லவா? திருப்பிக் கொடுத்த கடன் போக, பாக்கி வைத்த கடனையும் இந்த வருடக் கணக்கில் கொண்டு வருகிறோமல்லவா? அது போல, நாம் அனுபவித்தது போக மீதி உள்ள வினைகள் இப்பிறவியில் தொடரும். அதுவே சஞ்சிதம் எனப்படும்.

இந்த சஞ்சித வினைகளே நம்மைப் பயமுறுத்தும்போது, இப்பிறவியில் ஆகாமியம் வேறு சேர்வதை நினைத்தால், நெஞ்சம் நடுங்காதா?

ஆனால், ஜீவன் முக்தர்களின் சஞ்சித வினைகளை அவர்களின் ஞானாக்கினி, பஞ்சை தீ எரிப்பதுபோல எரித்துவிடும். ஆகாமியம் அவர்களின் அருகிலேயே நெருங் காது. மீதம் இருக்கும் பிராரப்த வினைகளை அவர்களே அனுபவித்துத் தீர்த்துவிடுவார்கள்.

பொறுமையால் பிராரப்தத்தைப்
புசிக்கும் நாள் செய்த கன்மம்
மறுமையில் தொடர்ந்திடாமல்
மாண்டுபோம் வழி ஏது என்னின்
சிறியவர் இகழ்ந்து ஞானி
செய்த பாவத்தைக் கொள்வர்
அறிபவர் அறிந்து பூசித்து
அறம் எலாம் பறித்து உண்பாரே!

(கைவல்லிய நவநீதம் 97)

கைவல்லிய நவநீதத்தின் அபூர்வமான பாடல்களில் இதுவும் ஒன்று.

ஜீவன் முக்தர்கள், மிகவும் பொறுமையோடு தங்கள் பிராரப்த கர்மத்தை அனுபவித்துத் தீர்ப்பார்கள். உதாரணமாக...

ரமண மஹரிஷி, காஞ்சி மஹா ஸ்வாமிகள், பாம்பன் ஸ்வாமிகள் முதலா னோர் எல்லாம் பொறுமையோடு இருந்து, வந்தவற்றை எதிர்கொண்டார்கள்.

வழிப்படுத்துவதே வழிபாடு!

'ஒப்புக்கொள்கிறோம். ஆனால், அந்த ஜீவன் முக்தர்கள் இப்பிறவியில் செய்த நல்வினை, தீவினைகள் காரணமாக அவர்களுக்குப் பிறவி தொடராதா?' என்றால், தொடராது. அது எப்படி?

உணர்ந்து அனுபவிக்கலாம், வாருங்கள்.

மனிதனாகப் பிறவியெடுத்த நாம், தெய்வ நிலைக்கு உயர்கிறோமோ இல்லையோ... கீழ்நிலையை அடையாமல், மனிதர்களா கவாவது வாழ வேண்டுமென்றால், கைவல்லிய நவநீதத்தில் உள்ள இந்த ஒரு பாடல்... ஊஹூம்! முழுப் பாடல்கூட வேண்டாம்; இப்பாடலின் பிற்பகுதியான அரைப் பாடல் மட்டுமே போதும்.

சிறியவர் இகழ்ந்து ஞானி
செய்த பாவத்தைக் கொள்வர்
அறிபவர் அறிந்து பூசித்து
அறம் எலாம் பதித்து உண்பாரே!

உத்தமர்களை, நல்லவர்களை, ஜீவன் முக்தர்களை இகழ்ந்து பேசும் மூடர்கள், அந்த ஞானவான்கள் செய்த பாவங்களைப் பெற்றுக் கொள்வார்கள். அதன் மூலம், அந்த ஜீவன்முக்தர்களின் பாவங்கள் எல்லாம் நீங்கிப் போய்விடும். பாவங்கள் தொலைந்தாலும், அந்த உத்தமர்கள் செய்த நல்வினைகள்  புண்ணியம் இருக்குமே; அவற்றின் மூலம் அந்த உத்தமர்களுக்கு  ஜீவன் முக்தர்களுக்கு மறுபிறவி வாய்க்க வழி உண்டே?

கைவல்லிய நவநீதம் அதற்கும் பதில் சொல்கிறது. 'அறிபவர் அறிந்து பூசித்து அறம் எலாம் பறித்து உண்பாரே’ என்கிறது. அதாவது, உத்தமர்களான அந்த ஜீவன் முக்தர்களை அறிந்து, அவர்களை வழிபடுபவர்கள், அந்த ஜீவன் முக்தர்களின் அறங்களை எல்லாம் கவர்ந்துகொள்வார்கள்.

இவ்வாறு அனைத்தும் நீங்கிய பிறகு, ஜீவன் முக்தர்களுக்கு மறுபிறவி என்பது ஏது?

நல்லவர்களைப் போற்றி, அவர்களின் புண்ணியத்தை அடையாவிட்டால்கூடப் பரவாயில்லை; அவர்களை இகழ்ந்து பேசி, பாவ மூட்டையைப் பெரிதாக்கிக் கொள்ளா மலாவது இருக்க வேண்டும்.

மஹான் ஒருவரைத் தரிசிப்பதற்காகப் போயிருந்த சிலர், அவரிடம் ஒருவரைப் பற்றிய பொல்லாங்குகளைக் கொட்டிக் குவித்துக்

கூறுபோட்டு அடுக்கினார்கள்.

அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மஹான் இறுதியில் சொன்னார்... 'அவன் புண்களை உங்கள் நாவால் நீவி, உங்களுக்கு நீங்களே ஏன் நோயை வரவழைத்துக் கொள்கிறீர்கள்? அடுத்தவர் பாவங்களை நாவால் பேசி அலசி ஆராயாதீர்கள். மாறாக, அடுத்தவர்களிடம் இருக்கும் நல்லனவற்றைப் பேசி, ஆனந்தமாக வாழுங்கள்!'

ஜீவன் முக்தர்களின் நிலையை, இயல்பை விவரித்துச் சொன்ன குருநாதர், பிரம்ம நிலையை அறிவதில் ஆர்வமுள்ள சீடனுக்கு, அதுவரை தான் சொல்லியவற்றைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறுவதான மூன்று பாடல்களுடன், கைவல்லிய நவநீதத்தின் தத்துவ விளக்கப் படலம் நிறைவு பெறுகிறது. அதன்பின் 'சந்தேகம் தெளிதல்’ படலம் தொடங்குகிறது.

தொடரும்
பி.என்.பரசுராமன்
ஓவியம்: மு.ராஜ்குமார்