Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம்! - 23

நிழல் தரும் நிஜம் !பி.என்.பரசுராமன், ஓவியம்: மு.ராஜ்குமார்

மனிதனும் தெய்வமாகலாம்! - 23

நிழல் தரும் நிஜம் !பி.என்.பரசுராமன், ஓவியம்: மு.ராஜ்குமார்

Published:Updated:

ரு பெண்மணியிடம், 'இவன் உன் கணவனா? இவன் உன் கணவனா?' என்று, யாரைக் காட்டிக் கேட்டாலும், 'இல்லை. இல்லை' என்றே சொல்வாள். அதேநேரம், கணவனைக் காட்டி, 'இவன் உன் கணவனா?' என்று கேட் டால், வெட்கத்தோடு தலை குனிவாள்; பதில் பேச மாட்டாள். 

அதுபோல, இதுவல்ல... இதுவல்ல என்று சொல்லும் வேதம், பிரம்மத்தைச் சொல்லும்போது மௌனம் காக்கிறது. அதாவது, சொல்லாமல் சொல்கிறது; பேசாமல் பேசுகிறது.

'தன் பதி அல்லாப் பேர்கள்

தமை அல்லன் அல்லன் என்றாள்

அன்பனைக் கேட்ட நேரம்

அவள் வெட்கி மௌனம் ஆனாள்

என்பது போல நீக்கி

இது அன்று இது அன்று எனச் சேடித்த

பின்பரப் பிரமம் தன்னைப்

பேசாமல் பேசும் வேதம்.’

(சந்தேகம் தெளிதல் படலம்  9)

இவ்வாறு சொன்ன குரு, அடுத்த சந்தேகத்துக்கும் பதில் சொல்லத் தொடங்கினார்.

ஜோதி மயமான பிரம்மத்தை மனதால் உணரவேண்டும்; அந்த சுயம்பிரகாச ஜோதி, சோகமான மனதால் எட்ட முடியாதது. இது எப்படி என்பதற்குப் பதில் சொல்லத் தொடங்குகிறார் குரு.

கண், காது முதலான இந்திரியங்களுக்கு எல்லாம், இதயமே அரச னாக இருக்கிறது. புத்தி என்றும், மனம் என்றும் வெளியிலும் உள்ளு மாக எண்ணங்கள் உலாவிக்கொண்டு இருக்கின்றன என்கிறார்.

மனிதனும் தெய்வமாகலாம்! - 23

அவர் குருநாதர்; மகான்; அவர் தமது நிலைக்கேற்ப, உலாவிக் கொண்டிருக்கின்றன என்று சொல்லிவிட்டார். பளிச்சென்று புரியும்படி சொல்வதானால், ஐம்புலன்களும் புத்தியின் மூலமாகவும், மனதின் மூலமாகவும் கூட்டணி அமைத்து வேட்டையாடி வருகின்றன எனலாம்.

சரி, இந்த வேட்டையில் இருந்து தப்பிப் பிழைப்பது எப்படி? அல் லது, இந்த வேட்டையையே நல்ல வேட்டையாக மாற்றிக்கொள்ள இயலுமா? இயலும் எனில், அது எப்படி?

ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் வீட்டைச் சுற்றி நடந்து கொண் டிருந்தார். அப்போது, வீட்டின் வெளிப்புறத்தில் பதிக்கப்பட்டிருந்த ஆள் உயரக் கண்ணாடியில், நாயின் உருவம் பிரதிபலித்தது. அதைப் பார்த்ததும் நாய், தன்னைப் போலவே இன்னொரு நாய் இருப்பதாக நினைத்துக் குரைத்தபடி கண்ணாடியில் பாய்ந்தது. அப்புறம் என்ன? அதன் முகத்தில், மூக்கில், உடம்பில் என ஆங்காங்கே வீரத் தழும்புகள்தான்!

கடைசியில், ஒரு வழியாக நாயைப் பிடித்திருந்த எஜமான், அதை மிரட்டி, தாஜா செய்து விலக்கிக் கூட்டிக்கொண்டு போனார்.

இதைப் படிக்கும்போது, 'ஐந்தறிவு ஜீவன் நாய், அதுக்கு அவ்வளவுதான் சார்!' என்று ஓர் இகழ்ச்சிச் சிரிப்பு உங்கள் இதழ் களில் உருவாகிறதா?

சரி, இந்த நிகழ்ச்சியை அப்படியே உள்வாங்கிக்கொண்டு, நம்ம கதையைப் பார்க்கலாம், வாருங்கள்.

நமக்கும் பிடித்தமானது கண்ணாடிதானே! கண்ணாடியில் நம்மைப் பார்க்கிறோம். நாம் என்றால், கண்ணாடி பிரதிபலிப்பது நம் நிழலைத்தான். ஆனால் நாமோ, 'கண்ணாடியில பாரு! ஐயா எவ்வளவு சூப்பரா இருக்கேன்னு' என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், திருப்பித் திருப்பிக் கண்ணாடியில் நம்மையே அப்படியும் இப்படியுமாகப் பார்த்துக் கொள்கிறோம்.

அப்படியும் ஆசை அடங்கவில்லை. புகைப் படம், வீடியோ என எடுத்து, அதிலும் நம் பரிதாபம்தான். இது போதாதென்று, சமீபகால கண்டுபிடிப்பான செல்போனிலும், இதே கூத்துதான்! எப்போதும் செல்ஃபாகவே (ஷிமீறீயீ) நினைத்துக் கொண்டிருப்பதாலேயே, நம்மை நாமே எடுக்கும் புகைப்படத்துக்குக் கூட 'செல்ஃபி’ எனப் பெயர் வைத்துவிட்டோம்!

கண்ணாடி எப்படி நம் வடிவத்தைக் காட்டி, நம்மை இழுத்துப் போடுகிறதோ, அது போல நமது புத்தி ஒவ்வொன்றிலும் பதிந்து நம்மைக் காட்டுகிறது; இழுத்துப் போடுகிறது. இதைக் கைவல்லிய நவநீதம் அற்புதமான உதாரணத்தின் மூலம் நமக்குப் புரிய வைக்கிறது.

'உருக்கிய தரா நீர் நானா

உருவங்கள் ஆனாற் போல

விருத்திகள் கடபடாதி

விடயமாய்ப் பரிணமிக்கும்

அரும்பல விடயம் எல்லாம்

ஆபாசன் தோற்றுவிக்கும்

இருட்டினில் விளக்கும் கண்ணும்

இல்லாமல் பொருள் காணாதே’

(சந்தேகம் தெளிதல் படலம்12)

வார்ப்பு உலைகளில் எல்லாம், பலவிதமான வார்ப்புகள் இருக்கும். இரும்பு, செம்பு, பஞ்ச லோகம் முதலானவற்றில் (தேவைப்படும்) ஏதாவது ஒன்றின் உரு(வா)க்கிய குழம்பை வார்ப்படங் களில் ஊற்றுவார்கள். வார்ப்படங்கள் சூடு ஆறிக் குளிர்ந்த பிறகு, வார்ப்படத்தைப் பிரிப்பார்கள்.

அதில் வார்ப்படத்துக்குத் தகுந்தாற்போல், வடிவங்கள் உருவாகி இருக்கும். வெண்ணெய் ஏந்திய கண்ணன், புல்லாங்குழல் ஊதும் கண்ணன், நடராஜர், முருகன் எனப் பலவிதமான வார்ப்படங்கள் இருக்கும்; அதற்கு ஏற்றாற்போல, வடிவங்களும் வெவ்வேறாக வெளிப்படும்.

உலோகக் குழம்பு ஒன்றாக இருந்தாலும், வார்ப்படங்களுக்குத் தகுந்தாற்போல வடிவங்கள் மாறுபடுகின்றன அல்லவா? அதுபோல காது, கண், மூக்கு, வாய் வழியாகவெல்லாம் புத்தி செயல்படும்போது, அதனதன் தன்மைக்கேற்ப எண்ணங்கள் உருவாகின்றன.

கண்கள் பார்க்கின்றன; காதுகள் கேட்கின்றன; நாசி நுகர்கிறது; வாய்  உண்பதும் பேசுவதும்; உடம்பு  ஸ்பரிச (தொடு) உணர்ச்சி என அந்தந்த அவயங்களுக்கு ஏற்றவாறு புத்தி செயல்படுகிறது.

இதுதான் முறை. ஆனால் பார்த்ததில், கேட்டதில், உண்டதில், பேசியதில் எல்லாம் பாய்ந்து பாய்ந்து அனுபவிக்கத் துடிக்கிறது உடம்பு. இந்த நிலையில், பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தமே பிரம்மம் என்கிற எண்ணம் எங்கிருந்து வரும்?

பகட்டும் படாடோபமும் பணமும் பதவியும் பல்லிளித்து வலைகளை வீசும்போது, அந்த வலை களில் வீழ்ந்து சிக்குவதைத் தவிர, அவற்றில் இருந்து, சிக்கல்களில் இருந்து விடுபடும் எண்ணம் வர மறுக்கிறதே! இந்த நிலையில், பரப்பிரம்மமாவது ஒன்றாவது? அந்த எண்ணம்கூடத் தோன்றாது.

ராவணன் கதை ஒன்று போதுமே இதை விளக்க! அவன் என்ன சீதையைப் பார்த்தானா? பேசினானா?

சீதையைப் பற்றி சூர்ப்பநகை வர்ணித்துச் சொன்னதைக் கேட்டான். அவ்வளவுதான்! வேதங்களில் கரை கண்டவன், தவம் செய்வதில் சிறந்தவன் எனப் பலவிதமான பெருமைகளும் பெற்ற ராவணனே கெட்டுக் குட்டிச்சுவராகப் போனான் என்றால், நாமெல்லாம் எந்த மூலை?

மிகுந்த திறமைசாலியான ராவணனே, காதால் கேட்டதால் மட்டுமே வீழ்ந்து போனான் என்றால், ஏதோ துரும்பளவு திறமையை வைத்துக்கொண்டு கண், காது, மூக்கு, நாக்கு, உடம்பு என ஐந்திலும் அகப்பட்டுக்கொண்டு, அகப்பட்டிருப்பதுகூடத் தெரியாமல் இருக்கும் நம் நிலையை நினைத்தாலே நடுக்கம் வரவில்லையா?

இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் நம்மைப் பார்த்து, ஞானிகளுக்குக் கோபம் வரவில்லை. மாறாக, கழிவிரக்கம்தான் வருகிறது. அதனால் அவர்கள் சற்றும் கோபப்படாமல், வார்த்தைகளிலும் கடுமை காட்டாமல், எளிமை யான, இதமான வார்த்தைகளில், தெளிவாக அறிவுரையும் அறவுரையும் சொல்கிறார்கள்.

- தொடரும்