Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது..! - 26

சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

பாதை இனிது... பயணமும் இனிது..! - 26

சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

Published:Updated:
பாதை இனிது... பயணமும் இனிது..! - 26

'உன் நண்பன் யார் எனச் சொல்; நீ யார் என நான் சொல்கிறேன்’ என்கிறது புகழ்பெற்ற ஆங்கிலப் பழமொழி ஒன்று. 

இதிகாசங்களில் நட்புக்கு இலக்கணமாகத் திகழும் பல பாத்திரங்கள் உண்டு. ராமாயணத்தில் ராமருடன் நட்பு பூண்ட குகன், சுக்ரீவன், விபீஷணன், மகாபாரதத்தில் கிருஷ்ணர்அர்ஜுனன், துரியோதனன் கர்ணன் எனப் பலரும் உள்ளார்ந்த நட்பின் வெளிப்பாடாகத் திகழ்ந்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவாரம் பாடிய மூவருள், இறைவனுடன் தோழமை பூண்டு, அவரை பாடிப் பணிந்தும், சில நேரம் கடிந்தும் கூடத் தனது பேரன்பை வெளிப்படுத்தியவர் சுந்தரமூர்த்தி நாயனார்.

நட்பு கொள்வதற்கு முன்னால், நண்பரைப் பற்றிய ஆராய்ச்சி இன்றியமையாதது. சுக்ரீவனும் விபீஷணனும் ராமருடன் பூண்ட நட்பு, அவர்கள் இழந்த சாம்ராஜ்ஜியத்தைப் பெற்றுத் தந்தன. அர்ஜுனனுக்கோ கீதை எனும் அழியாப் பொக்கிஷம் கிடைத்தது.

நட்பில் கண்மூடித்தனமாக இறங்கி, நெறி தவறிப் போய்விடக் கூடாது என்பதை நம் முன்னோர் மிகவும் வலியுறுத்துகின்றனர். நண்பனுக்காக உயிரையும் கொடுப்பேன், நண்பன் என்ன செய்தாலும் அதுவே சரி போன்றவையெல்லாம் வெறும் மேடைப்பேச்சுக்கு அழகாக இருக்கலாம்.

ஆனால், வாழ்க்கையில் உண்மையான நிம்மதியைப் பெற வேண்டுமானால், விருப்பு வெறுப்பை ஒதுக்கிவிட்டு, அறத்துக்கே முக்கியத்துவம் கொடுக்க ஒவ்வொரு தனி மனிதனும் கடமைப்பட்டிருக்கிறான். அவ்வாறு அறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, அறவழியில் செல்வதற்கு உதவும் நட்பையே கைக்கொள்வது இன்றியமையாததாகிறது,

பாதை இனிது... பயணமும் இனிது..! - 26

அறமே முக்கியம். தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் தீங்கை விளைவிக்கின்ற எத்தகைய நட்பையும் வளர்ப்பது மிகத் தவறான செயல். இன்றைய இளைஞர்கள் பலர், நண்பனுக்குத் துணை நிற்பதற்காகத் தாங்கள் படுகுழியில் விழுகின்றனர்.

திருவள்ளுவர், நட்பாராய்தல் என்றோர் அதிகாரம் வகுத்திருக்கிறார். நட்பு என்பது ஒருவகை உடன்படிக்கை. அதில் ஈடுபட்ட பிறகு, அதிலிருந்து வெளிவருவது அத்தனை எளிதல்ல. நட்பு செய்த பிறகு, நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை. ஆகையால், ஆராயாமல் நட்பு செய்வதைப் போல் கெடுதியானது வேறில்லை.

'நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு’ (திருக்குறள்:791) என்கிறார் திருவள்ளுவர்.

அது மட்டுமல்ல, ஆராய்ந்து மேற்கொள்ளாத நட்பு, இறப்புக்குக் காரணமான துயரத்தைத் தரும் என்பதும் உண்மையே ஆகும். இரும்புச் சங்கிலி ஒன்று அறுந்துவிட்டால், அதனை எறிந்துவிடுவோம். ஆனால், தங்கச் சங்கிலி அறுந்துவிட்டால், அதனை எப்படியாவது சரி செய்து, வேறு உருவத்துக்கு மாற்றி வைத்துக்கொள்வது மனித இயல்பு.

அதுபோல, மிகப் பெரியோருடன் நட்புகொள்ளும்போது, அதில் ஏதேனும் கருத்து வேறுபாடு, மனக்கசப்பு ஏற்பட்டால், எப்பாடுபட்டாவது நட்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். உயர்ந்தோர் நட்பு, நம்மை உயர்த்தும். உயர்ந்த பண்புடைய குலத்தில் பிறந்து, தான் செய்த பழிக்கு நாணுகின்ற உத்தமமான குணம் வாய்ந்தவரின் நட்பை, பொருள் கொடுத்தாவது பெற வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு (திருக்குறள்: 794)

பாதை இனிது... பயணமும் இனிது..! - 26

ஒத்த இயல்புடையோரால்தான் எளிதில் கலந்து நட்புறவாட முடியும் என்பது உண்மைதான். பெரும்பாலானவர்கள் தங்களுடைய கருத்தை ஆமோதிக்கின்ற, தலையாட்டுகின்ற நட்பையே பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால், அத்தகைய நட்பு, ஒருவர் தவறான பாதையில் சென்றால் தட்டிக் கேட்கத் தயங்கும். எங்கே தன்னுடைய நட்பு முறிந்துவிடுமோ என்ற அச்சத்தில் வாயை மூடிக்கொள்ளும்.

அத்தகைய நட்பு என்பது நட்பே அல்ல. நட்பு என்பது மனச்சாட்சி போன்றது. நண்பன் தவறு செய்யும்போது, அதனைச் சுட்டிக்காட்டத் தயங்காத நட்பே சிறந்தது; உயர்ந்தது. மனம் வருந்தும்படி இடித்துக் கூறி அழ வைத்தாவது, உள்ளதை உள்ளபடி உணர்த்துபவரின் நட்பை தேடிப் பெறவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

வல்லார்நட்பு ஆய்ந்து கொளல். (திருக்குறள்: 795)

- பயணிப்போம்