Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம்! - 26

அச்சம் தரும் ஞானச் செருக்கு!பி.என்.பரசுராமன், ஓவியம்: மு.ராஜ்குமார்

மனிதனும் தெய்வமாகலாம்! - 26

அச்சம் தரும் ஞானச் செருக்கு!பி.என்.பரசுராமன், ஓவியம்: மு.ராஜ்குமார்

Published:Updated:

ருவர் நம் செயலைப் புகழ்ந்தால், ஒன்பது பேர் நம்மை இகழ்வார்கள். ஏனென்றால், ஒருவருக்குப் பிடித்தது மற்றவருக்குப் பிடிக்காது. அவருக்குப் பிடித்தது இன்னொருவருக்குப் பிடிக்காது. அதற்காக, நாம் இப்படி அடுத்தவரின் புகழ்ச்சிக்காகவே செயல்பட்டுக்கொண்டிருந்தால் என்ன ஆவது? 

உலக வாசனை என்னும் இந்தப் புகழ் வலையில் இருந்து, நம்மால் விடுபட முடியாது. ஒரு வாதத்திற்காக, இந்த உலக வாசனையில் இருந்து நாம் விடுபடுவதாகவே வைத்துக் கொள்வோம் அடுத்ததாகப் பெரும் பள்ளம் ஒன்று இருக்கிறது. அதைத் தாண்டுவது, ஆகிற காரியமில்லை.

அது... தேக வாசனை. அதாவது, உடம்பைப் பற்றியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓர் உதாரணம்... தலை கலைந்துவிடக்கூடாது; எண்ணெய் போட்டுப் படியப் படிய வாரினாலும், பிசுபிசுவென்று இருக்கிறது தலை. அதனால் பிசுபிசுப்பு இல்லாத க்ரீம் தேவை. என்னதான் க்ரீம் போட்டாலும், நாளாவட்டத்தில் முடி வெளுத்துப் போகிறது. அதற்குச் சாயம் பூச வேண்டும். அதுவும் எடுப்பாக, மற்றவருக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும். அப்புறம், கொஞ்சம் கொஞ்சமாக முடி கொட்டிப் போய், தலை பளபளக்கும். விக் வைத்து மறைக்க வேண்டும். அதுவும் ஒவ்வாமை (அலர்ஜி) இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கென்று தனியாகப் பராமரிப்பு வேறு!

தலைமுடியைப் பற்றி மட்டும் பார்க்கும்போதே, தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளலாம்போல் இருக்கிறது. இன்னும் கை அழகு, காலழகு, பல்லழகு, கண் அழகு, மூக்கழகு, முக அழகு எல்லாம் இருக்கின்றன. இதற்கும் மேலாக, இந்த உடம்பை வைத்து வரும் உறவுமுறைகள் எனும் தேக வாசனைகள் வேறு இருக்கின்றன.

சரி, அதையும் தாண்டிவிடுவதாக வைத்துக் கொள்வோம்.

மனிதனும் தெய்வமாகலாம்! - 26

அதற்கடுத்ததாக உள்ளதைத் தாண்டவே முடியாது. அது சாஸ்திர வாசனை. அதாவது, கல்வி அறிவு. அதிலும், ஞானக் கல்வியினால் உண்டாகும் அறிவு. இந்த வாசனைதான் நம் அனைவரையும் இன்று ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறது. தெளிவை உண்டாக்கும் ஞான நூல்களைப் படித்துவிட்டு ஆனந்தம் அடைவதே முறை. ஆனால், ஞான நூல்களின், சாஸ்திர நூல்களின் இன்றைய நிலை?

ஏதோ ஒரு சில ஞான நூல்களைப் படிக்கிறோம். அவற்றுக்கு ஏராளமான விளக்க உரை நூல்கள். அதேபோல், சாஸ்திர நூல்கள். அவற்றிலும் பல விதங்கள். அவற்றில் ஒன்றிரண்டைப் படித்து இருக்கிறோம்.

விளைவு..?

'இந்த ஞான நூல்தான் உயர்ந்தது. அதிலும், இவர் எழுதிய உரைதான் சிறந்தது. நான் கடைபிடிக்கும் இந்த சாஸ்திரம்தான் சரி; மற்றதெல்லாம் குப்பை என்கிற எண்ணம் உண்டாகிறது.

வழிகாட்டும் சாஸ்திர நூல்களில் இருந்தும், தெளிவைத் தரும் ஞான நூல்களில் இருந்தும் 'எனக்குத் தெரியும் இது. நான் சொல்வதுதான் சரி. அடுத்தவன் சொல்வதெல்லாம் தவறு’ எனும் ஆணவத்தைதான் பெற்றிருக்கிறோமே தவிர, அமைதியையோ, ஆத்ம சந்தோஷத்தையோ அடையவில்லை.

உடல் வலிமையைப் பற்றிய செருக்கும், செல்வத்தைப் பற்றிய செருக்கும் ஒருநாள் நீங்கி விடும். ஆனால், கல்விச் செருக்கு மட்டும் நீங்கவே நீங்காது. ஆட்டிப் படைக்கும். ராஜஸ குணம் படுத்தும் பாடு இது. ஆகவே, கல்விச் செருக்கு, அதிலும் ஞானக் கல்விச் செருக்கு என்பது, பெருமைப்படவேண்டிய ஒன்றல்ல; பயப்பட வேண்டிய ஒன்று.

உலக வாசனை, தேக வாசனை, சாஸ்திர வாசனை எனும் மூன்றும் ராஜஸ குணத்தால் விளைபவை. உயர்ந்த ஜீவனான மனிதனை மிகவும் உயரத்தில் தூக்கிப் போய், அங்கிருந்து வீசிக் கீழே போட்டு, அப்போதும் நம் மேல் ஏறி நின்று ஆட்டம் போடுபவை இந்த ராஜஸ குணத்தின் விளைவுகளே! இதை நமக்கு உணர்த்தி அறிவுறுத்தவே சாத்விக, தாமச குணங்களுக்குச் சொல்லாத அளவுக்கு ராஜஸ குணத்துக்கு மட்டும்...

'மருவும் இராசதமாகில்

உலக  தேக வாதனையாம்;

சாத்திர வாதனையுமாகும்’ என விரிவாகவே சொல்கிறார், கைவல்லிய நவநீத ஆசிரியர்.

ஒரு தாய் தன் குழந்தையைக் கைப்பிடித்துத் தெருவில் அழைத்துச் செல்லும்போது, இரு பக்கங்களிலும் உள்ள கடை முதலானவற்றைக் காட்டுவாள். கூடவே, அதைவிட அதிகமாக, 'இங்கே பார் பள்ளம், அங்கே கண்ணாடி ஓடு, முள்ளு கெடக்குது பார், ஜாக்கிரதை, வண்டி வருது கண்ணா’ என்று எச்சரிக்கை செய்வாள். காரணம், தாய்ப் பாசம்.

அதே போல, சாத்விகத்தையும் தாமஸத்தையும் சுருக்கமாகச் சொன்ன ஸ்ரீ தாண்டவராய ஸ்வாமி கள், ஒரு தாயுள்ளத்தோடு ராஜஸ குணத்தின் கேடுகளைச் சொல்லி, நமக்கு அறிவுறுத்துகிறார்.

- தொடரும்