Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது..! - 27

நட்பில் தேவை கவனம்!சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

பாதை இனிது... பயணமும் இனிது..! - 27

‘சின்னஞ்சிறு நீர்த்துளி சூடான இரும்பின்மீது விழுந்தால் ஆவியாகிக் காணாமல் போகிறது. அதுவே, ஒரு தாமரை இலை மீது விழுந்தால், முத்தைப் போன்ற தோற்றம் பெறுகிறது. அதே நீர்த்துளி, ஸ்வாதி நக்ஷத்திரத்தன்று கடலில் ஒரு சிப்பிக்குள் விழுந்தால், அசல் நல்முத்தாக விளைகிறது. அனைத்தும் சேருமிடத்தைப் பொறுத்தது!’ என்கிறார் பர்த்ருஹரி.

திருக்குறளில் திருவள்ளுவர் பல்வேறு ஒழுக்கங்களை, வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளைப் போதித்து வருகிறார். மிக நுணுக்கமான பல கருத்துக்களைக் கூறி, தர்மத்தின் ஆழத்தை உணர்த்தி அருளுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொதுவாக, ஒவ்வோர் அதிகாரத்திலும், ஒரு நற்பண்பைக் கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தையும், அதன் மேன்மையையும் கூறி, அதைக் கடைப்பிடிக்காததால் ஏற்படும் தீமையையும் எடுத்துக் கூறி வருகிறார்.

வாழ்க்கையில் நட்புதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. சார்தலின் வண்ணமாவது மனம். யாரோடு பழகுகிறோமோ, அவர்களின் இயல்புகளே நம்மையும் அறியாமல் நமது ஆளுமையில் ஆழப் பதிந்துவிடும்.

எனவே, நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஒருவர் வாழ்க்கையில் மேன்மை அடைவதும், கீழ்மை அடைவதும் நட்பைப் பொறுத்த விஷயம்.

நல்லாரிணக்கத்தில் கூடியிருந்து, தனக்கும் சமூகத்துக்கும் நலம் பயக்கும் செயல்களில் ஒருவர் ஈடுபடுகிறார். வேறொருவர், சமூகத்துக்குத் தீங்கு விளைவிப்பவர்களோடு இணைந்து, தவறான செயல்களில் ஈடுபடுகிறார்.

பாதை இனிது... பயணமும் இனிது..! - 27

நட்பைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி மிக முக்கியம் என்பதை அறிந்த தெய்வப் புலவர், இதற்கெனப் பல அதிகாரங்களைக் கூறியுள்ளார்.

‘தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்’

என்று கூறிய திருவள்ளுவர், தீநட்பு என்ற அதிகாரத்தில், எத்தகைய நட்பை மனிதன் தவிர்க்கவேண்டும் என்பதை அழகுறக் கூறுகிறார்.

‘பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.’
(திருக்குறள்: 811)

நற்பண்பு இல்லாதவரின் நட்பானது, அன்பு மிகுதியால் வளர்வதுபோலத் தோன்றினாலும், அது தேய்ந்து குறைவதே நல்லது.

நட்பைக் காட்டிலும் முக்கியம் நற்பண்பு. பண்பற்றவர்கள் மிகுந்த அன்போடு, இனிமையாகப் பழகினாலும், அத்தகைய நட்பிலிருந்து விலகுதலே இனிது என்கிறார் வள்ளுவர்.

இன்றைய காலகட்டத்தில், வெறுமனே சேர்ந்திருந்து பொழுதைக் கழிப்பதற்கென்று நட்பை நாடுகிறார்கள் பலர். நல்ல பழக்கங்களைக் காட்டிலும், தீய பழக்கங்கள் எளிதாகப் பற்றிக் கொள்ளும் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

சாலைச் சந்திப்புகளில் ஒரு சிறு புள்ளியில் தான் பாதைகள் பிரிகின்றன. வாழ்க்கைப் பாதையைத் தெளிவாக அறிந்தவர்கள், தவறான பாதையில் செல்லமாட்டார்கள்.

இறைவன் இந்த உலகில் நேசிப்பதற்கு மனிதர்களையும், பயன்படுத்துவதற்குப் பொருட்களையும் படைத்திருக் கிறார். ஆனால் முட்டாள் மனிதனோ, பொருட்களை நேசிக்கிறான்; மனிதர்களைப் பயன்படுத்திக்கொள்கிறான்.

பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன்தான் பலர் நட்பு கொள்கிறார்கள். ஒருவரால் பயன் இல்லாதபோது, அவரை விட்டு நீங்கிவிடவும் செய்கிறார்கள். அத்தகைய நட்பு இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன என்று கேட்கிறார் திருவள்ளுவர்.

‘உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்?’
(திருக்குறள்: 812)

‘இப்படி நாம் ஆராய்ச்சி செய்துகொண்டே போனால், நண்பர்களே இல்லாமல் நாம் தனிமைப்படுத்தப்படுவோம் அல்லவா? உலகில் எல்லோருடன் பழகித்தானே ஆக வேண்டும்?’ என்ற கேள்வி எல்லோர் உள்ளத்திலும் எழுவது இயல்பு.

‘இனிது இனிது ஏகாந்தம் இனிது’ என்பார் ஔவையார். தீய நட்பைக் காட்டிலும் தனிமையே சிறந்தது. நமக்கு எது தேவை - நட்பா, நிம்மதியா என்று அலசிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

‘போர்க்களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் நட்பைக் காட்டிலும், ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது’ என்கிறார் திருவள்ளுவர்.

‘அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.’
(திருக்குறள்: 814)

நிம்மதிதான் வேண்டு மென்றால், அறத்தால் வரும் இன்பத்தை உணர வேண்டு மென்றால், வள்ளுவரின் வார்த்தைகளை உணர்ந்து கடைப்பிடிப்பது அவசியம்!

- பயணிப்போம்