Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம்! - 27

மனதின் இயல்பு சத்வகுணமே!பி.என்.பரசுராமன்

ஹோட்டலுக்கு உணவு உண்ணப் போயிருந்தார் ஒருவர். பணியாளரை அழைத்து, ''இரண்டு இட்லி, ஒரு மெதுவடையை ஒரு ஸ்பூனோடு இலையில் வைத்துக் கொண்டு வா, என்ன..?' என்றார். 

பணியாளரும் அப்படியே கொண்டு வைத்துவிட்டு, 'ஏன் இலையில் வைத்துக் கொண்டு வரச் சொன்னீர்கள்?' எனக் கேட்டார்.

''தட்டில் பல பேர் சாப்பிட்டிருப்பார்களே! அதனால்தான் இலையில் கேட்டேன்' என்றார் இவர். பணியாளர் பேசாமல் போயிருந்திருக்கலாம். ஆனால், அவர் உடனே, ''சார், தட்டிலாவது மற்றவர்கள் கையைத்தான் வைத்திருப்பார்கள். ஆனால், நீங்கள் கேட்ட ஸ்பூன் பலரின் வாய்க்குள் ளேயே போய்விட்டு வந்திருக்குமே!' என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிரச்னை மூண்டது. முடிவு என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். அது நமக்கு இப்போது முக்கியமில்லை.

மனிதனும் தெய்வமாகலாம்! - 27

அந்த இருவரும் ஆரம்பத்தில் அமைதியாகத்தானே இருந்தார்கள்? பிரச்னை மூளக் காரணம் என்ன?

ராஜஸ குணம்தான் என்கிறது கைவல்லிய நவநீதம்.

மனது சத்துவ சொரூபம் மற்ற இரண்டும்

வந்து கலந்தன அவற்றை மாற்றினால்போம்

தனது சன்மார்க்கத்தை விடாது இருந்த போது

தாமதமும் இராஜஸமும் சமிக்கும் பின்னைக்

கன பரிணாமம் சலனம் போம் போனக்கால்

களங்கம் அற்றுநின்ற ஆகாயம் போலும்

நினது உளம் அப்படியா (கு)ம் அப்பிரமத்து ஒன்றாய்

நிருவிகற்ப சமாதியிலே நிற்கும்தானே

(சந்தேகம் தெளிதல் படலம் 17)

பாடல் எளிமையானதாக இருந்தாலும், அபூர்வமான பாடல் இது. நமது மனதைப் பற்றியும், அது தன் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பதற்கான காரணத்தையும் கனிவோடு சொல்லும் பாடல்.

இப்படிப்பட்ட அற்புதப் பாடல்களையெல்லாம், இனிமேல் எந்தப் பிறவியில் அனுபவிக்கப் போகிறோம்? வாருங்கள், இப்போதே அனுபவிப்போம்.

மனது, இயற்கையிலேயே சத்துவ குண வடிவமானது. அதில் ஒண்டுக்குடித்தனம் நடத்த வந்தவைதான், ராஜஸமும் தாமசமும். ஆனால், ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த கதையாக, ஒண்டுக் குடித்தனம் புகுந்த ராஜஸமும் தாமசமும் மனதை முழுவதுமாக ஆக்கிரமித்து, சாத்விகத்தை இருந்த இடமே தெரியாமல் ஆக்கிவிட்டன.

ஆனால், இந்த ராஜஸ, தாமச குணங்களை நம்மால் நீக்கிவிட முடியும். நல்வழியான சாத்விகத்தை விடாமல் கடைப்பிடித்தால், ராஜஸமும் தாமசமும் தாமே நசித்துப் போய்விடும். அவை போய் விட்டால், அவற்றின் காரணமாக ஆழப் பதிந்திருந்த பதிவுகளும் சலனங்களும் போய்விடும். அதன்பின், மனது நிர்மலமான (எந்த விதமான மேகக் கூட்டங்களும் இல்லாத) ஆகாயம்போல ஆகிவிடும். பிரம்மத்துடன் நிர்விகல்ப சமாதியில் நிற்கும்.

அவ்வாறு, ஆனந்தமான பிரம்மத்துடன் ஐக்கியமான உள்ளம் தெளிவுற்று இருந்தால், பேதா பேதங்கள் ஏது? சஞ்சலம்தான் ஏது?

மனிதனும் தெய்வமாகலாம்! - 27

குருநாதர் இவ்வாறு சொல்லி நிறுத்தியவுடன், சீடனின் மனதில் வேறொரு சந்தேகம் முளைவிட்டுவிட்டது. அதை உடனே குருநாதரிடம் கேட்டும் விட்டான். அந்தச் சீடன் நம்முடைய பிரதிநிதிதான். அவன் நம் சார்பாகப் பேசுகிறான். மேலும், ஒரு நல்ல குருநாதர் கிடைக்கும்போது, அவரிடம் தெளிவு பெறாமல் வேறு எங்கு பெறுவது?

ஏகமாய் மனம் இறந்தால் சீவன் முத்தர்

இருக்குமட்டும் பிராரத்தம் எதினால் உண்பார்

போகமானது புசித்துத் தொலைப்பதன்றோ?

புசித்தாலும் மனம் தானும் போனதன்றே

சோகமா மனம் இறந்தால் போகம் இல்லை

தோன்றும் எனின் முத்தர் என்று சொலக் கூடாதே

மோகமாம் இது தெளியக் குருவே! நன்றா(ய்)

மொழிந்தருள்வாய் தெளிந்ததன்றோ முக்திதானே

          (சந்தேகம் தெளிதல் படலம் 19)

''குருநாதா! நீங்கள் சொல்வதை அப்படியே ஒப்புக் கொள்கிறேன். மனமானது தெளிவாகவும் எந்த விதமான சலனமும் இல்லாது இருந்தால், மனம் பிரம்மத்திலேயே நிலைபெற்றிருக்கும்; ஜீவன் முக்தர் ஆகலாம் என்று சொன்னீர்கள். மனது எதிலும் பதியாமல், அதாவது மனம் இறந்த நிலையை அடைந்துவிட்டால், ஜீவன் முக்தர்கள் எவ்வாறு வாழ்க்கையை நடத்துவார்கள்? மனதில் தோன்றியதைக் கேட்டுவிட்டேன். தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள் ஸ்வாமி!' என வேண்டினான் சீடன்.

மனதை உலக விவகாரங்கள் எதிலும் செலுத்தாமல், பிரம்ம நிலையிலேயே இருக்கும் ஜீவன் முக்தர்களாக இருந்தாலும், அவர்களும் இவ்வுலகில் வாழ்ந்தாக வேண்டுமல்லவா?

அவர்கள் பழைய வினைகளைக் கழிப்பதற்காகத்தான் வந்திருக்கிறார்கள். என்றாலும், அதற்காக அவர்கள் எதையாவது செய்துதான் ஆகவேண்டும். அப்போதுதான் பிராரப்தம் எனும் பழைய வினைகள் நீங்கும். அவ்வாறு ஏதாவது செய்தால், 'மனம் அதில் ஈடுபடவில்லை. இறந்துபோய்விட்டது; அதாவது, மனதில் சலனம் இல்லை’ என்பது பொய்யாகும்.

மனம் ஈடுபடாமல், யாரும் எந்தக் காரியத்தையும் செய்யமுடியாது. அதே நேரம், மனம் செயலில் ஈடுபட்டால், அவர்களை ஜீவன் முக்தர் என்று சொல்ல முடியாது. பிராரப்தத்தைக் கழிக்க வந்த ஜீவன் முக்தர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் இப்பிறவியில் அவர்கள் செய்யும் வினைகள் பலன் தரக் காத்திருக்கும். அவ்வினைகளைத் தீர்க்க அவர்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும்.

இப்படி இருந்தால், அவர்களை ஜீவன் முக்தர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும் என்பதே சீடனின் கேள்வி.

குருநாதர் பதில் சொல்லத் தொடங்கினார்.

சுத்தமாம் சத்துவமே உண்மையாகும்

துகம் இருள் போனால் மனம் என் சொல்லும் போம் போம்

வர்த்தமானத்தில் வந்த உணவை உண்பார்

வருவதும் போவது(ம்) நினைந்து மகிழார் வாடார்

கர்த்தராம் அகந்தையை விட்டு அகர்த்தராகி

கரண விருத்திகள் அவத்தை காண்பாராகி

முத்தராய் இருக்கலுமாம் புசிப்பும் கூடும்

முட்டியை என்று அறிந்து சங்கை மோசிப்பாயே

          (சந்தேகம் தெளிதல் படலம்21)

தூய்மையான சத்துவ குணம் மேலிட்டால், மற்ற இரு குணங்களான ராஜஸமும் தாமசமும் தாமாகவே போய்விடும் என்று பார்த்தோமல்லவா? அதன்படி, ரஜோகுணமும் தமோகுணமும் நீங்கிவிட்டால், மனம் என்பது ஏது? அது நீங்கிப் போய்விடும்.

அப்படிப்பட்ட நிலை அடைந்தவர்கள், கிடைத்ததை ஏற்பார்கள். சென்றதை நினைத்து வருத்தமோ, வருவதை நினைத்து மகிழ்வோ அடைய மாட்டார்கள்.

நான் எனும் எண்ணம் (அகந்தை) அற்றவர்கள் அவர்கள். சகல காரியங்களுக்கும் அவர்கள் சாட்சியாக மட்டுமே இருப்பார்கள்.

'பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தமே! மனதற்ற பரிசுத்த நிலையை அருள்வாய்’ எனத் தாயுமானவ ஸ்வாமிகள் சொன்னபடி, மனதற்ற பரிசுத்த நிலை அடைந்த ஜீவன் முக்தர்களின் செயல்கள் எதுவுமே அவர்களைப் பாதிக்காது.

'இதை உணர்ந்து தெளிவு பெறு!' என்றார் குருநாதர்.

 - தொடரும்