Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது..! - 29

பேதையர் இயல்புசுவாமி ஓங்காராநந்தர்

பாதை இனிது... பயணமும் இனிது..! - 29

பேதையர் இயல்புசுவாமி ஓங்காராநந்தர்

Published:Updated:

சுவாமி விவேகானந்தரிடம் ஒருமுறை, 'மனிதன் துன்பப் படுவதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டார்கள். 'மாயை’ என்று பதில் கூறினார் சுவாமிஜி. 'மாயை என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு, 'அறியாமை, அறியாமை, அறியாமையே!’ என்று விடையளித்தார்.

சற்று சிந்தித்துப் பார்த்தால், சுவாமிஜி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பது விளங்கும். உலகில் எதற்காகப் பிறந்திருக்கிறோம், இவ்வுலகில் எவ்விதம் வாழ வேண்டும் என்பன போன்ற அடிப்படைக் கேள்விகள் பலருக்கும் இருக்கத்தான் செய்கின்றன.

ஒரு நல்ல தலைவன் அறியாமை அற்றவனாக இருக்க வேண்டும். வாழ்க்கையின் குறிக்கோளையும், அதற்கான வழிமுறையையும் தெளிவாக அறிந்து, பிறரையும் அந்தப் பாதையில் வழி நடத்தும் உறுதி அவனிடம் இருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவள்ளுவர் அறிவின் முக்கியத்துவத்தைப் பல அதிகாரங்களில் உணர்த்தி வருகிறார். 'பேதைமை’ என்ற அதிகாரத்தில், அறியாமையால் ஏற்படும் விளைவுகளைக் கூறி, மறைமுகமாக அறிவின் பெருமையை எடுத்துக் கூறுகிறார்.

பேதைமை என்றால் என்ன?

பாதை இனிது... பயணமும் இனிது..! - 29

'தனக்கு நலம் பயப்பனவற்றை விடுத்து, கேடு பயப்பனவற்றைக் கைக்கொள்ளுதல்’ என்கிறார் திருவள்ளுவர்.

பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதங்கொண்டு

ஊதியம் போக விடல் (திருக்குறள்: 831)

நிலைத்த புகழ், செல்வம், புண்ணியம் இவற்றைத் தரும் அறச் செயல்களை விடுத்து, பழி, வறுமை, பாவத்தைத் தரும் தீய செயல்களில் ஈடுபடுதல் பேதைமை. அதாவது, சரி எது, தவறு எது என்பதைப் பிரித்து அறிந்துகொள்ளாமல், குழப்பத்தில் மாற்றிப் புரிந்துகொள்வது.

ஒருவன் பேதைமையுடன் இருக்கிறான் என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது? அவன் தகாத செயல்களில் ஈடுபடுவதை வைத்து அறிந்துகொள்ளலாம்.

'விநாசகாலே விபரீத புத்தி’  ராமாயணத்தில், மாரீசன் ராவணனிடம் கூறும் வசனம் இது.

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில். (திருக்குறள்: 833)

என்று பேதைக்கு இலக்கணம் கூறுகிறார் வள்ளுவர்.

பழிபாவங்களைச் செய்ய நாண மாட்டான்; செய்யவேண்டிய செயல்களை நாடமாட்டான்; அவனது சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இருக்காது; குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலியவற்றைப் பேணமாட்டான். அதாவது, மனம் போனபடி வாழ்பவன் பேதை. அவனுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை; யாரைப் பற்றியும் அக்கறை இல்லை. பேதை என்றால், படிப்பறிவற்றவர் என்று எண்ண வேண்டிய தில்லை. படித்தவர்களிலும் கூட பேதை உண்டு.

ஓதிஉணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தானடங்காப்

பேதையில் பேதையார் இல். (திருக்குறள்: 834)

நூல்களை ஓதியும், அவற்றின் பயனை உணர்ந்தும், அதனைப் பிறர்க்கு அறிய உரைத்தும், தான் அடங்கி ஒழுகாத பேதைபோல் ஒரு பேதை இந்த உலகத்திலேயே இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

கற்றலைக் காட்டிலும் முக்கியம், அதன்படி நிற்றல். பேதையிடம் சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருக்கிறது. அவனது எண்ணம், சொல், செயல் மூன்றும் நேர்க்கோட்டில் இல்லை. எனவே, அவன் தன் புத்திக்குப் புரிந்ததைப் பிறர்க்கு உரைத்தாலும், தன்சொந்த வாழ்வில் அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை.

பேதையிடம் சேரும் செல்வம் ஆபத்தானது. பேதையிடம் உடைமைப் பொருள் கிடைத்தல், ஏற்கெனவே பித்துப் பிடித்த ஒருவன் மது உட்கொள்வதற்கு ஒப்பானது.

அறிஞர் அவையில் பேதை ஒருவன் நுழைவதற்கு அழகான உவமை ஒன்றைக் கொடுக்கிறார் திருவள்ளுவர். சான்றோர் அவையில் பேதை புகுதல், தூய்மையல்லாதவற்றை மிதித்துக் கழுவாத காலை, தூய பஞ்சணை மீது வைத்தல் போன்றது என்கிறார்.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்

குழாஅத்துப் பேதை புகல் (திருக்குறள்: 840)

 - பயணிப்போம் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism