Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம்! - 29

முக்தர்கள் மூன்று வகை!பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

மனிதனும் தெய்வமாகலாம்! - 29

முக்தர்கள் மூன்று வகை!பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

Published:Updated:

னைத்துக்கும் சாட்சியாக இருப்பது மனச்சாட்சி! 

'ஹூக்கும்... மனசாவது, சாட்சியாவது! அந்த மனசுதான, நாம செய்யற எல்லா தப்புக்கும் அடிப்படையா இருந்து, அண்டர்கிரௌண்டு வேலையைச் செய்யுது! அப்படியிருக்க, அந்த மனசை எப்படிய்யா சாட்சியா ஏத்துக்க முடியும்? 'என் மனச்சாட்சி அறிய நான் பொய் சொல்லலை’ அப்படின்னு சொல்லித்தான் நாம எல்லாரும் தப்பு செய்யவே ஆரம்பிக்கிறோம்.  

ரெண்டு பக்கமும் நியாயம் பார்த்து, எதனாலயும் பாதிக்கப்படாம இருக்கிறதுதானே உண்மையான, சரியான சாட்சி? அப்படியிருக்கும்போது, எல்லா தப்பையும் செய்யறதுக்குத் தூண்டுகோலா இருந்துட்டு, தானும் கஷ்டப்பட்டு நம்மையும் கஷ்டப்படுத்தற மனசைப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போய் எப்படிங்க சாட்சியா ஏத்துக்கமுடியும்?'

ஒரு சாதாரண மனிதன், நல்ல மனிதனின் மனதில் எழும் நியாயமான கேள்வி இது. இதற்குண்டான பதிலைப் பார்ப்பதற்கு முன், ஒரு சிறு விளையாட்டைப் பார்க்கலாம்.

பத்து சீட்டுக் கட்டுகளை மடக்கி, அடுக்கி வைத்து வீடு கட்டி, பேரனுக்கு விளையாட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தார் ஒருவர். எல்லாம் அடுக்கி முடித்ததும், வியர்க்கிறதே என்று மின்விசிறியின் ஸ்விட்சைப் போட்டார்.

மனிதனும் தெய்வமாகலாம்! - 29

அப்புறம் நடந்ததைச் சொல்லவேண்டுமா என்ன? அவர் அரும்பாடுபட்டுப் பொறுமையாகவும் அழகாகவும் உருவாக்கிய சீட்டுக்கட்டு வீடு கலைந்து, காற்றில் பறந்தது. மின்விசிறியைச் சுழலவிடவில்லை என்றாலும்கூட, சீட்டுக்கட்டு வீடுகள் காலாகாலத்துக்கும் நிலைத்து இருக்க முடியாது அல்லவா? அதுபோலத்தான், ஆரம்பத்தில் நாம் பார்த்த மனச்சாட்சி பற்றிய வாதமும்.

நாம் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் நம்மைத் தூண்டிவிட்டது மனம்தான் என்றாலும், எது நல்லது, எது கெட்டது என்று நமக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும், நாமே ஆசைவசப்பட்டுத் தவறு செய்துவிட்டு, மனச்சாட்சியைக் குற்றம் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்?

மேலும், மனது தூண்டுவதாகவே வைத்துக் கொண்டாலும், பின்னால் துயரப்படும்போது, எந்தவொரு தீயவனின் மனமும், ''நான் அப்போதே சொன்னேன். வேண்டாம் என்று எச்சரித்தேன்.கேட்டாயா? இனியாவது தப்புத் தண்டாவுக்குப் போகாதே!' என்று அறிவுரை வழங்கிவிட்டு, அமைதியாக வேடிக்கை பார்க்கும். அதாவது, மனம் ஒரு சாட்சியாக மட்டுமே இருக்கும். ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ, இதுதான் முடிந்த முடிவு.

இது புரிந்தாலும், நமக்குச் சரிப்பட்டு வரமாட்டேன் என்கிறது. ஏனென்றால், சிறு வயதிலிருந்தே எல்லாவற்றிலும் விழுந்து கிடக்கும் நம்மால், அவற்றை விட்டு எழுந்திருந்து வெளியில் வரமுடியவில்லை.

அப்படி எழுந்திருந்து, வெளியில் வந்து, தன்னை உணர்ந்து மேல்நிலை அடைவதோடு, அடுத்தவரையும் தம்மை உணரச் செய்பவரே ஜீவன் முக்தர். அப்படிப்பட்ட ஜீவன் முக்தர்களைத்தான்...

மாகர்த்தன் மாபோகி மாத்தியாகி வகை

மூன்றாய் அவரிருக்கும் மகிமை கேளாய்

எனக் கூறுகிறது கைவல்லிய நவநீதம்.

இவ்வாறு ஜீவன்முக்தர்களை மூன்று வகையாக விவரித்ததோடு, அவர்களின் இயல்புகளையும் இந்நூல் விவரிக்கிறது.

மாகர்த்தன்: உலக இயக்கம் அனைத்துமே, சூரியனின் சந்நிதியில்தான் நடந்துகொண்டிருக்கிறது. நல்லதோ கெட்டதோ, எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கும் சூரியனுக்கு, அதனால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. அனைத்தும் இயங்கக் காரணமாக இருந்தாலும், ஒரு பார்வையாளனாக மட்டுமே இருக்கிறது சூரியன். அது போல, தான் இயங்கினாலும், அனைத்தையும் ஒரு பார்வையாளனைப் போலப் பார்த்து, எதனாலும் தன்னளவில் பாதிப் படையாமல் இருப்பவனே மாகர்த்தன்.

மாபோகி: சுவை உள்ளது, சுவை இல்லாதது எனப் பார்க்காமல், யாவற்றையும் உண்பவனே மாபோகி; அதாவது, நாக்கின் ருசியை வென்றவன் மாபோகி.

மாத்தியாகி: தனக்கு அந்நியமானவை எது வந்து சேர்ந்தாலும், அவற்றால் தான் பாதிக்கப்படாமல் ஸ்படிகம் (பளிங்கு) போன்று தெளிவாக இருப்பவனே மாத்தியாகி. அதாவது, முன்வினை காரணமாகத் தன்னிடம் வந்து சேர்ந்தவை, நல்லவையோ கெட்டவையோ... அவற்றால் தான் பாதிக்கப்படாமல் இருப்பவனே மாத்தியாகி. தன்னிடம் வந்து சேர்பவர்கள் நல்லவர்களோகெட்டவர்களோ, அவர்களால், அவர்களின் குணங்களால் தான் பாதிப்படையாமல் இருப்பவனே மாத்தியாகி. குருநாதர் தெள்ளத்தெளிவாக விவரித்தாலும், சீடனின் மனதில் அடுத்த சந்தேகம் முளைத்தது. அதைக் கேட்டான்.

ஐயா கேளீர்! தத்துவஞானியும்

அஞ்ஞானிகள் போலச்

செய்யா நின்றேன் கண்டேன் உண்டேன்

சென்றேன் எனலாமோ ?

பொய்யாம் விபரீதங்கள் அவர்க்குப்

போயின என்றீரே !

மெய்யாம் பிர(ம்)ம விசாரம் இது

அன்றே வெளியாய் உரையீரே

           (சந்தேகம்தெளிதல் படலம் - 30)

'குருநாதரே! நீங்கள் சொன்ன தத்துவஞானியும், அறியாமை வசப்பட்ட அஞ்ஞானிகளைப்போல, 'இதைச் செய்கிறேன்; அதைப் பார்த்தேன்; இதைச் சாப்பிட்டேன்; இப்படிச் சென்றேன்’ என்றெல்லாம் சொல்லலாமா? ஜீவன்முக்தர் களிடம் பேத பாவனைகள் இருக்காது என்று சொன்னீர்கள். பிரம்ம விசாரம் இதுவல்லவே! தயவுசெய்து, விளங்கும்படி கூறி அருளுங்கள்!' என வேண்டினான் சீடன்.

அதாவது, பிரம்ம நிஷ்டர்களுக்கும், ஜீவன் முக்தர்களுக்கும்கூடப் பேச்சும் செயலும் அறியாமை நிறைந்த சாதாரண மனிதர்களைப் போலவே இருக்கின்றன. அது ஏன்? இதுதான் சீடனின் கேள்வி.

இது சீடனின் கேள்வி மட்டுமல்ல; நாமும்கூட, இதே கேள்வியை மனதுக்குள் கேட்டுக்கொண்டிருப்போம்.

அதற்குக் குருநாதர் என்ன பதில் சொன்னார்?

 - தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism