Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு!

யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு!

யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

Published:Updated:
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு!

போன இதழ்ல, என்னோட கம்ப்யூட்டர் பணி அனுபவத்தைப் படிச்ச மனோபாலா என்கிற வாசகர் (நீங்க வேற… டைரக்டர் மனோபாலா இல்லீங்க!) தன்னோட செல்போன் நம்பரை அனுப்பி, ‘சிட்டிசன்பாபுவோடு பேச முடியுமா?’ன்னு கேட்டிருந்தார். ‘ஆஹா… சிக்கிட்டானா கைப்புள்ள?’ன்னு மனசுல நினைச்சுக்கிட்டே, அவரோடு தொடர்பு கொண்டு பேசினேன்.

நானே கூச்சப்படுற அளவுக்கு அந்தக் கட்டுரையை அப்படி இப்படின்னு ரொம்பப் பாராட்டிப் பேசினார். நிஜ அனுபவத்தை உதாரணமா காட்டி விளக்கும்போது, சொல்ல வந்த கருத்து மேலும் அழுத்தமா மண்டைல ஏறுதுன்னார். அவரும் இப்போ சாஃப்ட்வேர் இன்ஜினீயராதான் ஒரு கம்பெனியில வேலை பார்த்துட்டிருக்காராம். தனக்கும் இந்த மாதிரி சில அனுபவங்கள் இருக்குன்னார். ஹெச்.ஆர். புரொகிராம், பர்சனாலிட்டி டெவலப்மென்ட் புரொகிராம்கள்ல இந்த மாதிரியான அனுபவங்களை உதாரணமா காட்டித்தான் கிளாஸ் எடுப்பாங்கன்னும் சொன்னார்.

அவரோடு பேசிட்டிருந்தது ஒரு சுவாரஸ்யமான அனுபவம்!

எதிராளியை கேலி பண்றது பத்திப் போன முறை பேசிட்டிருந்தோமில்லையா, அதுபத்தி மனோபாலா சொல்லும் போது, “எதிராளியை நக்கல் பண்ணிட்டா, தான் ஏதோ பெரிய புத்திசாலின்னு பல பேர் நினைச்சுக்கிறாங்க. அதுவும் பலர் முன்னிலையில எதிராளியை மடக்கிட்டா தன்னை எல்லாரும் பாராட்டுவாங்கன்னும் நினைக்கிறாங்க. அதான் கிடை யாது. உண்மையில் மனசுக்குள்ள அவனவன் ‘ஆமா, இவன் பெரிய லார்டு லபக்குதாஸு! இவன் அடுத்தவனைச் சொல்ல வந்துட்டான்’னுதான் கடுப்பாவான்”னார்.

“சரியா சொன்னீங்க ப்ரோ!”ன்னேன். அவர் அடுத்துச் சொன்ன ஒரு விஷயம் ரொம்பப் புதுசா இருந்துது.

எதிராளியை மடக்குறது பத்திப் பேச்சாளர்கள் மேடையில பேசும்போது, மறக்காம பாரதி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்டிப் பேசுறது வழக்கம். 

மகாகவி பாரதி ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தப் போவே பாட்டெல்லாம் எழுதிட்டிருந்தாராம். ஆனா, அவரை மட்டம் தட்ட நினைச்ச காந்திமதிநாதன்கிற ஒரு வாத்தியார், “ ‘பாரதி சின்னப் பயல்’னு முடியுற மாதிரி ஒரு பாட்டு எழுது, பார்க்கலாம்!”னாராம். பாரதி உடனே, “காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப் பயல்”னு முடியுற மாதிரி பாட்டெழுதி, வாத்தியாரை மூக்குடைச்சாராம்.

“எதிராளியை மடக்குற எல்லாருமே தங்களை ஏதோ பாரதி ரேஞ்சுக்கு கற்பனை பண்ணிக்கிட்டு, மெதப்புல திரியுறாங்க, சார்! எனக்கும்கூட மொதல்ல பாரதி மேல ஒரு சின்ன வருத்தம் இருந்தது… ‘என்னடா, அந்த வாத்தியார் இவரை மட்டம் தட்ட நினைச்சது தப்புதான்னாலும், பதிலுக்கு இவரும் அவரைப் பெரியவர்னுகூடப் பார்க்காம இப்படி மட்டம் தட்டிப் பாடினது சரியா?’ன்னு ஒரு கேள்வி உள்ளுக்குள்ளே ஓடிக்கிட்டே இருந்தது.

என் அப்பாவோட நண்பர், அவர் ஒரு தமிழாசிரியர், சில மாதங்களுக்கு முன்னால எங்க வீட்டுக்கு வந்திருந்தார் அப்பாவைப் பார்க்க. அவர்கிட்டே பேசிட்டிருந்தப்போ நான் இந்தக்
கேள்வியைக் கேட்டேன். அவர் சொன்ன விளக்கம் ஆச்சரியமா இருந்துது.

‘தம்பி… மேடைப் பேச்சாளர்கள் எல்லாரும் தங்களுக்கு வசதியா பாரதியின் ஒரு பக்கத்தை மட்டுமே பேசறாங்க. அல்லது, அவங்களுக்கு முழு விவரம் தெரியாமலும் இருக்கலாம். என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு!

காந்திமதி நாதன்கிற ஆசிரியரை மடக்க ஒரு கோபத்துல பாரதி அப்படிப் பாட்டு எழுதினது உண்மைதான். ஆனா, அந்தக் கடைசி வரி மட்டும்தான் பலருக்குத் தெரியுமே தவிர, முழுப்பாட்டு எத்தனை பேருக்குத் தெரியும்கிறது சந்தேகம்தான்.

‘ஆண்டில் இளையவன் என்ற‌ந்தோ அகந்தையினால்  

ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் மாண்பற்ற‌  

காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்  

பாரதி சின்னப் பயல்’ என்பதுதான் அந்தப் பாட்டு.

ஆனா, குரு ஸ்தானத்தில் இருப்பவரை, வயதில் மூத்தவரை இப்படி ஏளனம் செய்வது தகாது என்று பாரதி உடனே தன் தப்பை உணர்ந்து, ‘அன்போடு என்னை நேசிக்கும் மாண்புமிகு காந்திமதி நாதனின் முன் பாரதி சின்னப் பயல்’ என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்துப் பாடினார். அதுதான் பண்பாடு.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு!

அந்தப் பாடல்…

‘ஆண்டில் இளையவன் என்றுஐய அருமையினால்  

ஈண்டின்று என்றன்தன்னை நீயேந்தினையால் மாண்புற்ற‌

காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்கு  

பாரதி சின்னப் பயல்.’

‘பாரதியின் புலமையைப் பாராட்டுற விதமா அவர் தன் ஆசிரியரை மட்டம் தட்டிப் பாடிய தைச் சொல்றவங்க, வயதில் மூத்தோரை மதிக்கும் விதமா அவர் தன் பாடலை உடனே மாற்றிப் பாடியதையும் சொன்னால் இளைஞர்களுக்குப் பயனுள்ளதா இருக்கும்!’னு அந்தத் தமிழாசிரியர் சொன்னது என் மனசுல ஆணியடிச்சாப்ல இறங்கிருச்சு. இதை நீங்க உங்க கட்டுரை மூலமா சொன்னா, இன்னும் பல பேர் பயனடைவாங்க, சார்!’னு மனோபாலா சொன்னார்.

அதுக்குதானே இருக்கோம், பாஸ்! நல்ல விஷயத்தை உடனடியா ஷேர் பண்ணிட்டோம்ல?!

- இன்னும் பேசலாம்…

இளைஞர்களுக்கு சகாயம் ஐ.ஏ.எஸ். சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே…

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு!

• நீங்கள் மட்டும் அல்ல; உங்களைச் சுற்றியிருப்பவர்களும் நேர்மை யாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

• அடிப்படையில் நேர்மை இல்லையெனில், உங்களின் அதிரடி நடவடிக்கைகள் யாவும் அர்த்தமற்றவை ஆகிவிடும்!

•  பணமிருந்தால் எவரும் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், உங்களிடத்தில் இருக்க வேண்டியது சத்தியமும், நீதியும், இந்தச் சமூகத்தின் மீதான பரிவும் மட்டுமே!

•  லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!

•  சமூக அவலங்களை அறுத்தெறிகின்ற ஆவேசமும், நெடுங்கால நேர்மையும் இன்றி, எந்தச் சரித்திரச் சாதனையும் சாத்தியமில்லை! 

பரிசு யாருக்கு?

சென்ற இதழ் சவால் கேள்விக்கான சரியான விடையை அனுப்பியிருந்தவர்களில் மதுரையைச் சேர்ந்த வெங்கடசுப்ரமணியன் என்ற வாசகருக்கு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய ‘மேலே, உயரே, உச்சியிலே’ புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

சரி, அந்தச் சரியான விடை என்ன?

வரிசையாக நிற்கும் மூவரில் நடுவில் உள்ளவரே தன் தலையில் என்ன நிறத் தொப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதைச் சரியாகச் சொல்ல முடியும். எப்படி?
மொத்தம் நான்கு தொப்பிகள். இரண்டு கறுப்பு; இரண்டு வெள்ளை. இந்த நான்கில் ஏதோ ஒன்றை நேர்முகத் தேர்வு அதிகாரி எடுத்து வைத்துக்கொண்டுவிட்டார். எனில், மீதமுள்ள மூன்று தொப்பிகளில் இரண்டு ஒரே நிறமாகவும், மற்றது வேறு நிறமாகவும் இருக்கும் அல்லவா?

வரிசையின் முதலில் நிற்பவருக்கு எந்த க்ளூவும் இல்லையாதலால், அவரால் தன் தலையில் வைக்கப்பட்டுள்ள தொப்பியின் நிறத்தைச் சொல்லவே முடியாது. இரண்டாவதாக நிற்பவருக்குத் தன் முன்னால் நிற்பவரின் தலையில் வைக்கப்பட்டுள்ள தொப்பியின் நிறம் என்னவென்று தெரியும். ஆனால், அவராலும் தன் தலையில் உள்ள தொப்பியின் நிறத்தைச் சொல்ல முடியாது. உதாரணமாக, முன்னால் நிற்பவரின் தலையில் வெள்ளைத் தொப்பி வைக்கப்பட்டிருந்தால், தன் தலையில் உள்ளது கறுப்புத் தொப்பிதான் என்று அவரால் உறுதியாகச் சொல்ல முடியாது. காரணம், தன் தலையிலும் வெள்ளைத் தொப்பி இருக்க வாய்ப்பு உண்டல்லவா?

இனி, மூன்றாவதாக நிற்பவரைப் பார்ப்போம். தன் முன்னால் நிற்கும் இருவரின் தலையிலும் ஒரே நிறத் தொப்பி இருந்தால் மட்டுமே, தன் தலையில் உள்ளது வேறு நிறத் தொப்பி என்று அவரால் சரியாகச் சொல்ல முடியும். மாறாக, தன் முன் நிற்பவர்களில் ஒருவரின் தலையில் கறுப்பு நிறத் தொப்பியும், மற்றவரின் தலையில் வெள்ளை நிறத் தொப்பியும் இருந்தால், தன் தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் கறுப்பா, வெள்ளையா என்பதை அவரால் உறுதியாகச் சொல்ல முடியாமல் போகும், அல்லவா?

இந்தக் குழப்பத்தில் மூன்றாவதாக நிற்பவர் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும், இரண்டாவதாக நிற்பவர் சட்டென யூகித்துவிட்டார், தன் முன்னால் நிற்பவரின் தலையில் வைக்கப்பட்டுள்ள தொப்பியின் நிறமும், தன் தலைத் தொப்பியின் நிறமும் வேறு வேறு என்று.

ஆக, இரண்டாவதாக நிற்பவரால் தன் தலைத் தொப்பியின் நிறத்தைச் சரியாகச் சொல்லிவிட முடியும் அல்லவா?

சவால்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு!

ஓர் அரசன் விசித்திரமான கனவு ஒன்றைக் கண்டான். கனவில் அவன் ஒரு பெரிய ஏரியின் கரையில் அமர்ந்திருக்கிறான். அவன் பக்கத்தில் பெரிய பெரிய நீர்த் தொட்டிகள் இரண்டு இருக்கின்றன. இரண்டிலும் விளிம்பு வரை, தளும்பத் தளும்ப நீர் நிரம்பியுள்ளது.

அரசன் அந்த ஏரியில் தூண்டில் போட்டுப் பெரிய மீன் ஒன்றைப் பிடித்து, அதை அருகில் உள்ள தொட்டி ஒன்றில் உயிரோடு விடுகிறான். அந்த மீன் அந்தத் தொட்டியில் சல்லென்று நீந்திச் செல்கிறது. ஒரு சொட்டு நீர் கூட வெளியில் சிந்தவில்லை.

அரசன் இன்னொரு மீனைப் பிடிக்கிறான். இதுவும் முன்னர் பிடிபட்ட மீனின் அதே பருமன், எடை கொண்டது. அரசன் அந்த மீனை தரையில் விடுகிறான். அது துடிதுடித்து இறக்கிறது. பின்பு அரசன் அதை எடுத்து இன்னொரு தொட்டியில் விடுகிறான். உடனே மீனின் பருமனுக்கு நிகரான தண்ணீர் வெளியே வழிகிறது.

அரசனுக்குக் காரணம் புரியவில்லை.

அவன் மறுநாள் தன் அவையில் இந்த கனவைச் சொல்லி, ஒரே எடை, பருமன் கொண்ட இரு மீன்களை நீர்த் தொட்டியில் விடும்போது, ஒன்றில் நீர் வழியாததற்கும், மற்றதில் நீர் வழிந்ததற்குமான காரணத்தைக் கேட்டான். கற்றோரும் மற்றோரும் கணித விற்பன்னர்களும் தர்க்கவியலாளர்களும் ஆளுக்கொரு காரணத்தைச் சொன்னார்கள். ஆனால், அவை எதுவும் அரசனுக்குத் திருப்தியான பதிலாக இல்லை. எனவே, அவன் நாட்டில் முரசறைந்து, தன் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவருக்குப் பொன்னும் பொருளும் பரிசளிப்பதாக அறிவித்தான்.

அரசனின் சந்தேகம் தீர்ந்ததா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். உங்களால் அரசனின் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க முடியுமா?

எனில், 044-66802923 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, ‘ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு’ என்று சொல்லிவிட்டு, உங்கள் குரலிலேயே உங்கள் பதிலைப் பதிவு செய்யுங்கள். அல்லது,  98406 67184 என்ற எண்ணுக்கு மெஸேஜ் தட்டிவிடுங்கள்; அல்லது வாட்ஸப்புங்கள்! குரல் பதிவாகக்கூட வாட்ஸப்பில் அனுப்பலாம். பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.