Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம்! - 30

பி.என்.பரசுராமன்

மனிதனும் தெய்வமாகலாம்! - 30

பி.என்.பரசுராமன்

Published:Updated:

ண்பா் ஒருவா்; நல்லவா்தான்; ஆன்மிக வாதிதான். இருந்தாலும் ஆன்மிகவாதிகளில் பெரும்பாலானோர்க்கு உள்ள சந்தேகம், அவருக்கும் உண்டு. அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, 'நீ பிரம்மமாக இருக்கிறாய், நான் பிரம்மமாக இருக்கிறேன் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பதன் மூலம், பிரம்ம நிலையை அடையமுடியும் என்பதை ஒருக்காலும் ஒப்புக்கொள்ள முடியாது. பிரம்மத்தை நினைப்பதன் மூலம் நாமும் பிரம்ம நிலையை அடையலாம் என்பது பைத்தியக்காரத்தனம்' என்றார். 

அவா் அழுத்தம் கொடுத்துப் பேசினாரே தவிர, அமைதியாகத்தான் பேசினார். அந்தநேரம் பார்த்து, அவா் கைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தவா், கொதித்துப் போனார்.

'தொல்லை பிடித்தவன். எப்பப் பார்த்தாலும், எதையாவது நோண்டி நோண்டிக் கேட்டுக்கிட்டே இருப்பான்' எனக் கத்தினார். அது அவா் இயல்பு; அது அவா் பாடு!

தொலைபேசியில் ஓா் எண்ணைப் பார்த்த மாத்திரத்தில், ஒரு மனிதனின் நினைவு வருகிறது; உடனே உடம்பில் சூடு ஏறுகிறது; கண்கள் சிவக் கின்றன; குரல் எகிறுகிறது. இவ்வளவும் ஒருசில விநாடிகளில் நடந்துவிடுகின்றன.

ஒரு சாதாரண மனிதனின் தொலைபேசி எண்ணே இவ்வளவு செய்யும்போது...

மனிதனும் தெய்வமாகலாம்! - 30

பிரம்ம தியானத்திலேயே இருந்து, பிரம்மத்தில் நிலை பெறுவதென்பது நடக்காதா என்ன?

அவ்வாறு பிரம்ம தியானத்தில் நிலை பெற்றவா்கூட, சாதாரண மனிதரைப்போல நடக் கின்றனரே எனக் கேட்கிறான் சீடன். அதற்குக் குருநாதா் பதில் சொல்கிறார்.

ஓய்ந்த கனாவில்கண்ட பழங்கதை

ஓதுவன் வாதனையால் ஆய்ந்து

அறிவுற்றவன் அப்படிச் செப்புவன்

ஆபாசனும் ஆகான்

மாய்ந்த தன் உடல்  வே(கு)ம்

அளவும் விண்ணவன் மனிதன் எனப்படுவான்

வீய்ந்த சிதாபாசன் போ(கு)ம் அளவும்

விவகாரம் தொடரும்

(சந்தேகம் தெளிதல் படலம் - 31.)

அபூர்வமான பாடல் இது. இப்பாடலில் கனவுக் கதை ஒன்றும், விண்ணவனின் உடல் வேகக்கூடிய கதையும் சொல்லப்படுகிறது.

அரசா் ஒருவா் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கனவில், அவா் ஒரு பிச்சைக்காரனாக இருப்பதாகக் கனவு கண்டார். எப்படி இருக்கும்? சாதாரண நிலையில் உள்ள ஒருவருக்கு, அப்படிக் கனவு வந்தாலேபோச்சு! துயரம்தான்! அப்படியிருக்க, பாராளும் மன்னா் பிச்சைக்கார னாக இருப்பதைப்போலக் கனவு கண்டால்..?!

மன்னா் விழித்துக்கொண்டா்ர். தான் கண்டது கனவு என்பது புரிந்தது அவருக்கு. தன் நிலைக்கு வந்த அவா், கனவை விவாதித்தார்.

'நான் ஒரு பிச்சைக்காரனாக இருக்கிறேன். வீடு வீடாகப் போய்ப் பிச்சை கேட்கிறேன். பிச்சை விழுந்தது; வசவுகளும் விழுந்தன; சிலா், அடிக்கவே வந்துவிட்டார்கள். கிடைத்த பிச்சை யுடன் திரும்பினேன்...' என்று என்னதான் அவா் தன்னைப் பிச்சைக்காரனென்று சொல்லிக் கொண்டாலும், அவா் உள்ளத்தில் 'நான் அரசன்’ என்ற நினைப்புதான் இருக்குமே தவிர, பிச்சைக் காரன் என்ற நினைப்பு இருக்கவே இருக்காது.

அதுபோல... பிரம்மத்தைப்பற்றி ஆராய்ந்து, தெளிந்த நல்லறிவு பெற்றவா், ''நான் அதைச் செய்தேன்; இதைச் செய்தேன்' என்று என்னதான் சொல்லிக்கொண்டாலும், அவருடைய மனதில் அகங்காரம் முடிசூட்டிக் கொள்ளாததால், அவருடைய மனது பிரம்மத்திலேயே நிலை பெற்றிருப்பதால், அவா் உலக விவகாரங்களில் பற்று கொண்டவா் அல்ல; அதாவது, இந்த உலக விவகாரங்களை பிரம்ம நிஷ்டா்கள், கனவைப் போலப் பார்ப்பார்கள் என்பது கருத்து.

அதேநேரம், அவா்கள் தங்களை பிரம்ம நிஷ்டா்களாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளவும் மாட்டார்கள்.

பாடலின் பின்பகுதியில் இடம்பெற்றுள்ள தகவலை, நம் ஞானநூல்கள் அனைத்தும் விரிவாகவே கூறுகின்றன.

தேவேந்திரன் முதலானவா்களில் யாராவது ஒருவா், சாபத்தின் காரணமாக பூமியில் வந்து பிறப்பார்கள். அவா்களுக்கு சாப விமோசனம் கிடைத்ததும், அவா்கள், 'நான் ஒரு கந்தா்வனாக இருந்தேன்; தேவா்களில் ஒருவனாக இருந்தேன்; யக்ஷா்களில் ஒருவனாக இருந்தேன்' என்றெல்லாம், தங்களைப்பற்றி விரிவாகக் கூறுவார்கள்.

அதாவது, சாபவசப்பட்டிருந்த அந்தக் காலத்திலும் அவா்கள் தங்கள் பழைய நிலையை மறக்கவில்லை. அதுபோல, பிரம்மநிலையை அடைந்தவா்கள், எந்த நிலையிலும் அதிலிருந்து நழுவமாட்டார்கள். அதேநேரம் இந்த உடம்பு இருக்கும்வரை, அந்த பிரம்மநிஷ்டா் மற்றவா்களின் பா்ர்வையில் மனிதனாகவே கருதப்படுவார்.

அரசா், கனவில் பிச்சைக்காரராக இருந்ததை, விழிப்பு நிலை வந்தவுடன் பொருட்படுத்தவில்லை அல்லவா? அதுபோல, பிரம்மநிஷ்டா்கள் இந்த உலகையும் அதன் செயல்பாடுகளையும் கனவாகவே பார்ப்பார்கள். உலகத்தாலோ அதன் செயல்பாடுகளாலோ, பிரம்மநிஷ்டா்கள் பாதிக்கப் படமாட்டார்கள் என்பது பாடலின் கருத்து.

இவ்வாறு குருநாதா், என்னதான் உதாரணங்களோடு சொன்னாலும், சீடன் விடவில்லை; அடுத்த சந்தேகத்தைக் கேட்டான். ''குருநாதா! பிரம்மநிஷ்டா்கள் என்னதான் உலகத்தையும் அதன் செயல்பாடுகளையும் கனவாகப் பார்த்தாலும், இந்த உலகமும் அதில் உள்ளவா்களின் செயல்பாடுகளும், துன்பத்தைத் தருமே! அவை நீங்கினால் அல்லவா, நன்மை உண்டாகும்? அவை நீங்குவதற்காக, பிரம்ம நிஷ்டா் சமாதியில் இருக்கவேண்டாமா? அதற்காக அவா் சமாதி நிலையில் இருந்தால், அவரை எப்படி தொழிலை விட்டவராகக் கருதமுடியும்?' எனக் கேட்டான்.

ஐயா! குருவே! காண்பது அசத்தியம் என்றாலும்

நானா விவகாரம் துயா் அ(ல்)லவோ? ஞான சுகம் தருமோ?

போனால் அன்றோ நன்றா நிட்டிந்திடல் வேண்டாவோ?

தானா நிட்டைபுரிந்திடல் செய்கை தவிர்ந்தவன் எப்படியோ?

(சந்தேகம் தெளிதல் படலம் - 32)

சீடன் தெளிவாகக் குழம்பிக் கொண்டிருக்கிறான். ஆனால், அக்குழப்பத்தில் இருந்து நன்றாகத் தெளிவு பெறவேண்டுமென்று நினைக்கிறான். அதன் விளைவே இக்கேள்வி. அதாவது...

உலக விவகாரங்கள் போகவேண்டும் என்பதற் காக, சமாதி நிலையில் இருக்கவேண்டும்.அவ்வாறு சமாதி நிலையில் இருந்தால், அதுவும் ஒரு செயல்தானே? அச்செயலும் அதனுடைய விளைவுகளும் எவ்வாறு நீங்கும்?

இது தான் சீடனின் கேள்வி.

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், காலில் குத்திய முள்ளை எடுப்பதற்காக, தங்க ஊசியை வைத்து அந்த முள்ளை எடுத்துவிட் டோம்; தங்க ஊசியை என்ன செய்வது என்பது தான் சீடனின் கேள்வி.

குருநாதா் பதில் சொன்னார்.

தெரிதரு மகனே! ஆரம்பத்தொடு தீரும் விவகாரம்

உரிய சமாதியும் விவகாரணங்களும்

   உள்ளத் தொழில் அன்றோ?

துரிய பரம்பொருள் ஆனவா் வேறொரு

தொழில் செய்வதும் உண்டோ?

அரிய சமாதிகள் பழகுவனேல் அவன் ஆரூடனும் அன்றே!                                                                                                                  

(சந்தேகம் தெளிதல்படலம் - 33)

ஏற்கனவே சீடனுக்கு உபதேசித்த வார்த்தைகள் தாம் இவை.

உலக காரியங்களும், அவற்றின் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான நிஷ்டையும் மனதின் செயல்கள் அல்லவா? அச்செயல்களும், பிரம்மத்தைப்பற்றிக் கேட்பது; அதை ஆராய்ச்சி செய்வது; தெளிவு பெறுவது; நிஷ்டை கை கூடுவது என்பனவற்றால் நீங்கும்.

பிரம்மநிஷ்டா்களுக்குச் செயல்கள் என்பவை உண்டா என்ன? சமாதி நிலையில் இருக்கும் அவா்கள், என்ன செய்தாலும் அச்செயல்கள் அவா்களை பாதிக்காது; அந்த பிரம்ம நிஷ்டா்கள் செயல் புரியாதவா்களாகவே கருதப்படுவார்கள். குருநாதா் சொன்னதன் கருத்து இதுவே.

இன்றைய நிலைப்படி பார்த்தால்... நன்கு கற்று, அதில் பழக்கப்பட்டு நீதிபதி பதவியை அடைந்த ஒருவா், கொலையே செய்தாலும்  அதாவது, மரண தண்டனையே விதித்தாலும், அது அவரைப் பாதிக்காது அல்லவா? அதுபோல...

சமாதிநிலையில் உள்ள பிரம்மநிஷ்டா்கள் என்ன செய்தாலும், அச்செயல்களின் பாதிப்பு அவா்களுக்குக் கிடையாது.

 - தொடரும்