Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது..! - 30

அறிவற்றவனுக்கு பகைவன்..?சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

பிரீமியம் ஸ்டோரி

லக வாழ்வில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுவது இல்லை. எது இல்லை என்றாலும் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் சரியான அறிவு இல்லையென்றால், வாழ்க்கையே வீணாகிவிடும். அதனால்தான் திருவள்ளுவர்,

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை

இன்மையா வையாது உலகு. (திருக்குறள்: 841)

என்று கூறுகிறார். உலகு என்ற சொல் உயர்ந்தோரைக் குறிக்கிறது. அறிவின் முக்கியத் துவத்தை உணர்த்த, திருவள்ளுவர் வகுத்துள்ள மற்றோர் அதிகாரம்தான், புல்லறிவாண்மை.
வாழ்க்கை நலன்களில் முதன்மையானது அறிவுநலம். அதற்குப் பிறகே மனநலம், சொல் நலம், செயல்நலம், உடல்நலம், உறவுநலம், பொருள்நலம் அனைத்தும். இவை அனைத்துமே அறிவுநலனைச் சார்ந்திருக்கின்றன.

அறிவை ஒளியோடு ஒப்பிடுவது வழக்கம். அறிவொளியைப் போற்றுவதே தீபாவளி, திருக் கார்த்திகை போன்ற பண்டிகைகளின் நோக்கம்.

அறிவில்லாதவன் தன்னைத்தானே அழித்துக் கொள்வான். ‘‘மனிதன் உலகப் பொருட்களைக் குறித்து எண்ணுகிறான். அந்த எண்ணத் திலிருந்து அதன் மீது பற்று பிறக்கிறது. பற்றிலிருந்து ஆசை கிளைத்து எழுகிறது. நிறைவேறாத ஆசை கோபமாக வடிவெடுக்கிறது. கோபத்தினால் மதிமயங்கிப் போகிறான். குழப்பத்தால் தடுமாறி, நல்லறிவை இழப்பதால் அழிந்து போகிறான்’ என்று பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியிருக்கிறார்.

பாதை இனிது... பயணமும் இனிது..! - 30

அறிவில்லாதவன் தனக்குத்தானே துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறான். பகைவர்கள்கூட அவனுக்கு அத்தகைய துன்பத்தைத் தர முடி யாது. அதனால்தான் திருவள்ளுவர்,

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை

செறுவார்க்கும் செய்தல் அரிது. (திருக்குறள்: 843)

என்கிறார்.

புல்லறிவாளர், தான் மிகுந்த அறிவாளி என்ற எண்ணம் கொண்டிருக்கிறார். ‘அறியாமை யோடு இருப்பவருக்குக் கூறி புரியவைப்பது எளிது. ஓரளவுக்கு அறிவு இருப்பவருக்குக் கூறி புரியவைப்பது மேலும் எளிது. அரைகுறை அறிவுடன், தானே உலகில் அறிவாளி என்று கருதுபவருக்கு, படைப்புக் கடவுளால்கூட புரிய வைக்க முடியாது’ என்பார் பர்த்ருஹரி.

வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை

உடையம்யாம் என்னும் செருக்கு. (திருக்குறள்: 844)

புல்லறிவு என்று சொல்லப்படுவது யாதென்றால், யான் அறிவுடையவன் என்று தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்கா கும் என்கிறார் திருவள்ளுவர்.

புல்லறிவாளர், தான் அனைத்தையும் அறிந்ததைப் போல் காட்டிக்கொள்வார். தான் அறியாத விஷயங்களைப் பற்றி அறிந்ததுபோல் பேசுவார். அதனால், அவர் கற்றறிந்த விஷயங் களில்கூட பிறருக்கு ஐயம் ஏற்படுவது இயல்பு.

ஒருவர் தான் அறியாத விஷயங்களைப் பற்றி அதிகமாகப் பேசி அலட்டிக் கொண்டால், அவரது அடிப்படை அறிவைப் பற்றிய பிறரது மதிப்பும் ஆட்டம் கண்டுவிடும்.

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற

வல்லதூஉம் ஐயம் தரும் (திருக்குறள்: 845)

அறிவில்லாதவர், தாம் கற்காத நூல்களைக் கற்றவர்போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுள்ள பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும் என்கிறார் திருவள்ளுவர்.
இறையருளால், நல்வினையால், நல்லார் இணக்கத்தால் பெறுதற்கரிய மறை பொருளை உபதேசம் பெற்றாலும், அதனை உணராத புல்லறிவாளன் தனக்குத் தானே பெரிய தீங்கைச் செய்துகொள்கிறான்.

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு. (திருக்குறள்: 847)

என்கிறார் திருவள்ளுவர். மேலும், தானாகவும் உணர்ந்து கொள்ளாத, பிறர் கூறினாலும் ஏற்றுக்கொள்ளாத புல்லறிவாளனுடைய வாழ்க்கையே ஒரு நோயாகும்.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும் (திருக்குறள்: 850)

உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறும் புல்லறிவாளன், உலகத் தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப் படுவான் என்பதும் திருவள்ளுவர் வாக்கு.

- பயணிப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு