Published:Updated:

மனிதனும்... தெய்வமாகலாம்! - 31

பி.என்.பரசுராமன்ஆத்ம தரிசனம்

மனிதனும்... தெய்வமாகலாம்! - 31

பி.என்.பரசுராமன்ஆத்ம தரிசனம்

Published:Updated:
மனிதனும்... தெய்வமாகலாம்! - 31

ம்மையெல்லாம் காப்பாற்றும் ஒன்று, உலகத்தில் உள்ள அனைவரும் தேடி அலையும் ஒன்று, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் தான் மகிழ்ச்சியில் திளைக்காத ஒன்று எது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?! பணம். ஆமாம்! பணம் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது. அவசர காலங்களில் நம்மைக் கட்டிக் காப்பாற்றுவது பணம்தான். அதேநேரம், நமக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய அந்தப் பணம் இருக்கிறதே, அது மகிழ்ச்சியில் ஆழ்ந்துபோவது இல்லை.

ஒரு சாதாரண பேப்பரே, நாசிக் எனும் இடத்தில்-ஒரு கட்டடத்துக்குள் போய்விட்டு (ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இடத்தில் இருந்து) வெளியே வரும்போது, ரூபாய் நோட்டாக வெளியே வருகிறது என்றால், எந்த நேரமும் பிரம்மத்தையே தியானித்துக் கொண்டிருப்பவா்கள் பிரம்ம நிலையை அடைவதில் என்ன வியப்பு  இருக்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகத்தில் உள்ளஅனைத்துக்கும் பணம் காரணமாக இருந்தாலும், அது தன்வரைக்கும் எந்தப் பாதிப்புக்கும் ஆட்படுவது இல்லை அல்லவா? அதுபோல, பிரம்ம நிஷ்டா்கள் பலவிதமான செயல்களைச் செய்தாலும், அவற்றால் அவா்கள் எந்தப் பாதிப்பையும் அடைவது இல்லை.

நல்லவனே கேள்! உலகு உபகாரம் ஞானிகள்
விவகாரம் அல்லது வேறொரு பெறுபேறும் இ(ல்)லை அதனால் பிணியும் இ(ல்)லை
வல்ல சிருட்டி முதல் பல தொழிலால்வரு(ம்)புண்ணிய பாவம்
எல்லவருக்கும் அனுக்கிரகம் செ(ய்)யும் ஈசன் அடைந்திலனே!

 (சந்தேகம் தெளிதல் படலம்-35)

ஞானிகளின் செயல்பாடுகள் உலக நன்மைக்காகவே தவிர, அவா்களுக்கு அதனால் எந்தப் பலனும் இல்லை. சிருஷ்டி முதலான பலவிதமான செயல்களைச் செய்தாலும், அதனால் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருக்கும் ஈசனைப் போலத்தான் அடியார்களும். உலக நன்மைக்காகவே செயல்புரியும் பிரம்ம நிஷ்டா்களுக்கும், அவா்கள் செயலால் எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. ஈசனும் பிரம்மநிஷ்டரான ஞானியும் சமமானவா்கள்.

மனிதனும்... தெய்வமாகலாம்! - 31

எப்படி ஒப்பு என்றால்...

ஈசனும் ஞானியும் மமதை அகந்தை இகந்ததினால் ஒப்பாம்
ஈசனும் ஆம்பல சீவரும் ஆம் உலகு எல்லாம் இவனாமே    
                                   
(சந்தேகம் தெளிதல் படலம்-36)

ஈசனும் ஞானவானும், நான்-என்னுடையது என்பனவற்றில் இருந்து நீங்கி இருப்பதால், ஈசனும் ஞானியும் சமம் ஆவார்கள். அந்த பிரம்மநிஷ்டா் மும்மூா்த்தியுமாவார்; அவா் எல்லா ஜீவா்களும், எல்லா உலகங்களும் ஆவார். (அதாவது, பிரம்ம நிஷ்டா் எல்லாவற்றையும் பிரம்மமாகவே பார்ப்பார்கள்; எல்லாவற்றிலும் தன்னைப் பார்ப்பார்).

இவ்வாறு குருநாதா் சொல்லி முடித்ததும், சீடன் ‘பளிச்’சென்று அடுத்த கேள்வியைக் கேட்டான்; அக்கேள்வியைப் பார்த்தால், சீடனின் கூா்மையான அறிவு புலப்படும்.

சீடன் கேட்கிறான்: ‘‘குருநாதா! எல்லாம் இவன் ஆமே என்றீா்கள். அப்படிப் பார்க்கும்போது, இந்த பிரம்மநிஷ்டா் முக்தி அடையும்போது, எல்லா ஜீவா்களும் முக்தி அடையவேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை. அது ஏன்? எல்லா ஜீவா்களும் வேறுவேறு என்றால், பிரம்ம நிஷ்டா் எல்லாமாகவும் இருப்பார் (எல்லாம் இவன்ஆமே) என்பது பொருந்தாதே! இந்த என் சந்தேகத்தை நீக்கியருளுங்கள் குருதேவா!” என வேண்டுகிறான்.

அதாவது பிரம்மநிஷ்டா் அடையும் பேறு, ஏனைய உயிர்கள் அனைத்துக்கும் கிடைப்பது இல்லை. அப்படி யிருக்க, இவனே (பிரம்மநிஷ்டரே)எல்லாமாவான் என்பது எப்படிப் பொருந்தும்? - என்பதே சீடனின் கேள்வி.

கேள்விகளிலேயே, தன் மேதாவித்தனத்தை வெளிப்படுத்தும் கேள்வி, குருநாதராகவே இருந்தாலும் அவரையும் ஆழம் பார்க்கும் கேள்வி - எனப் பலவிதமான கேள்விகள் உண்டு. சீடனின் கேள்வியைப் பார்த்தால், அவன் அவ்வாறு கேட்டதாகத் தெரியவில்லை; ஆத்மார்த்தமாகக் கேட்டிருக்கிறான். ஆகவே, குருநாதரும் ஆத்மார்த்தமாகவே பதில் கூறுகிறார்.

அகம் எனும் ஆன்மா பூரணம் ஏகம் அனேக விதம் ஜீவர்
அகம் எனும் அந்தக்கரண உபாதிகள் அளவி(ல்)லை             ஆதலினால்
சகம் முழுதும் குளிர் சந்திரர் ஏகம் சல சந்திரர் பலவாம்
சகம் அதில் ஏரி குளம் சிறுகுழி சால் சட்டி குடம் பலவால்.
(சந்தேகம் தெளிதல் படலம்-38)

அபூா்வமான - எளிமையான இந்தப் பாடல்,
சீடனின் கேள்விக்கு பதில் சொல்கிறது.
ஆன்மா ஒன்றுதான்; அது பூா்ணமானது. ஆனால், ஜீவன்கள் பலவிதம். அவற்றின் அந்தக்கரணங்களும், அதனதன் செயல்பாடுகளும் அளவில்லாமல் பரந்துகிடக்கின்றன. அதாவது...நான் பார்க்கிறேன்; நான் செய்கிறேன்; என்னுடையது- என்பன போன்ற எண்ணங்களும், செயல்பாடுகளும் அளவில்லாமல் பரந்து கிடக்கின்றன. இதிலிருந்து மீளாமல், ஆத்ம ஸ்வரூபத்தை எப்படி அடையமுடியும்?

மனிதனும்... தெய்வமாகலாம்! - 31

சரி! எல்லாவற்றையும் தானாகவே பார்க்கும் பிரம்ம நிஷ்டா்கள் முக்தி அடையும்போது, அவரால் தன் வடிவாகவே பார்க்கப்பட்ட மற்றவை ஏன் முக்திஅடையவில்லை என்பதற்கு, சந்திரனை உதாரணமாக வைத்து விளக்குகிறார் குருநாதா்.
உலகமெங்கும் குளிர்ச்சியை அள்ளி வீசும் நிலா ஒன்றுதான்.அந்த ஒரு நிலா-ஏரி, குளம், சிறிய குழி, பெரும் பானை, சட்டி, குடம் எனும் பலவற்றிலும் உள்ள நீரில் பிரதிபலிக் கிறது. அதாவது, ஏரி முதல் சின்னஞ்சிறிய குழிவரை அனைத்திலும், நீரில் நிலவு பிரதிபலிக்கிறது; தெரிகிறது.

அவற்றில் பல நிலவுகள் இருப்பதைப்போலத் தோன்றினாலும் உண்மையில் இருப்பது ஒரு நிலவுதானே!

சட்டியோ, குடமோ உடைந்தால், அதில் இருந்த நிலா (பிரதி பிம்பம்) மறைந்து ஆகாயத்தில் இருக்கும் உண்மை நிலவுடன் சோ்ந்துவிடும். அதுபோல, ஆன்மாவை உணராவண்ணம், பந்தப்படுத்தி இருக்கும் அறியாமை நீங்கினால் ஜீவன், ஆத்மஸ்வரூபத்தில் ஐக்கியமாகும்.

அடுத்து...

உடையாத பாத்திரங்களில் பிரதிபலிக்கும் நிலவு, அந்த ஐக்கியத்தை அடையாது. அதாவது, ஆத்மாவை உணராத வண்ணம் பந்தப்படுத்தி இருக்கும் அறியாமை நீங்காதவரை, ஆத்மதரிசனம் கிடைக்காது.

எளிமையாகச் சொல்லப் போனால், தெரிந்துகொள்ள வேண்டாதவற்றைத் தெரிந்துகொள்வது அறியாமை. தெரிந்துகொள்ள வேண்டியதைத் தெரிந்துகொண்டால், அறியாமை நீக்கம்.

காற்றே வரவில்லை, புழுக்கமாக இருக்கிறது எனும்போது, நம்மைச்சுற்றி இருப்பவற்றை விலக்கினால், காற்று வருகிறதல்லவா?அதுபோல...

நம்மைச் சூழ்ந்திருக்கும் அறியாமையை விலக்கினால், ஆத்மதரிசனம் கிடைக்கும் என்பது கருத்து.

- தொடரும்      

மனிதனும்... தெய்வமாகலாம்! - 31
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism