Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது..! - 31

இகல் நீக்கி அகம் மலர்வோம்!சுவாமி ஓங்காராநந்தர்

பாதை இனிது... பயணமும் இனிது..! - 31

இகல் நீக்கி அகம் மலர்வோம்!சுவாமி ஓங்காராநந்தர்

Published:Updated:

திருவள்ளுவப் பெருமான், மனித இயல்புகளின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிக் கூறியருளியிருக்கிறார். பல்வேறு சூழல்களில், மனநிலைகளில் செய்யத்தக்கவை எவை, செய்யத் தகாதவை எவை என மிகத் தெளிவாக அவரது குறட்பாக்கள் உணர்த்துகின்றன.

அதிநவீனமயமான உலகில், தகவல் தொழில்நுட்பம் கோலோச்சும் இன்றைய கால கட்டத்தில்கூட, மனிதன் சந்திக்கும் பிரச்னைகள் பொதுவாகத்தான் இருக்கின்றன. பிரச்னைகளுக்கு உரிய காரணங்கள்தாம் வேறாக இருக்கின்றனவே தவிர, மனிதன் சந்திக்கும் சவால்கள் அன்றும் இன்றும் ஒரேவிதமாகத்தான் இருக்கின்றன. அதனால்தான் திருக்குறள் அன்றும், இன்றும், என்றும் நம் வாழ்க்கையின் கலங்கரை விளக்கமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

‘சிறுமை கண்டு பொங்குவாய்’ என்றார் மகாகவி பாரதியார். சமூகச் சூழல்களில் நாம் காணும் பலவிதமான தவறுகளைக் கண்டு சீறுவதில் தவறில்லை. நம்மால் முடிந்த அளவு சூழ்நிலையைச் சரிசெய்ய முயற்சிக்கத்தான் வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், உலக வாழ்க்கை என்பது குறைகளும் நிறைகளும் ஒருங்கே உடையது. நூறு சதவிகிதம் தவறே செய்யாத மனிதன், சூழ்நிலை, அமைப்பு எதுவும் உலகில் இல்லை. ஒருவரின் பார்வையில் மிக நல்லவராகத் தென்படும் மனிதர், வேறொருவரின் பார்வையில் தவறானவராகத் தெரிகிறார்.

மிகச் சிறந்த மனிதர்களிடம்கூட சிறுசிறு குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. குணத்தையும் குறையையும் சீர்தூக்கிப் பார்த்து, அதில் மிகையாக உள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பாதை இனிது... பயணமும் இனிது..! - 31

உலகில் மிகவும் எளிதான செயல், குறை கூறுவதுதான். ஒரு குறிப்பிட்ட செயலைக் குறித்த செய்திகள் பதிவாவதற்கு முன்பே, அதுகுறித்த விமர்சனங்கள் வலைத்தளங்களில் பதிவாகத் தொடங்கிவிடுகின்றன.

உலகில் என்ன நிகழ்ந்தாலும், யார் எதைச் செய்தாலும், அதில் உள்ள குறையை மட்டும் மிகைப்படுத்திப் பார்த்துக் குறைகூறுவது ஒரு கீழான பண்பு. எதிர்த்துப் பேசினால்தான் பெரிய ஆள் என்ற எண்ணம் பரவலாகப் பலரிடம் இருக்கிறது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதைப் பலர் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்கிறது தொல்காப்பியம். பெரியோர்கள் எவ்வாறு வாழ்கிறார்களோ, அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பது கருத்து.

காலத்தின் வழித்தடத்தில் எத்தனையோ மகான்களின் பாதச்சுவடுகள் பதிந்திருக் கின்றன. அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் எத்தனையோ விதமான அச்சுறுத்தல்கள், போராட்டங்கள் இருந்தன. ஆனால், அவற்றையெல்லாம் மீறி அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்தார்கள்.
 
திருவள்ளுவர், இகல் என்றோர் அதிகாரம் இயற்றியிருக்கிறார். இகல் என்றால் மாறுபாடு, எதிர்ப்பு என்று பொருள். இதனை ஒரு நோயாகவே கூறுகிறார்.

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்றும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
(திருக்குறள்: 851)

பிற உயிர்களோடு பொருந்தாமல் வேறு படுத லாகிய தீய பண்பை வளர்க்கும் நோய் இகல் எனப்படும். ஒருவர் அத்தகைய மாறுபாட்டோடு நடந்துகொண்டு பிறரை வெறுத்தாலும், அத்தகையவரை பதிலுக்கு நாமும் வெறுத்து ஒதுக்கி அவருக்குத் துன்பம் தரக்கூடாது என்கிறார் திருவள்ளுவர்.

உலகில் ஒவ்வொருவரும் தன் மனம் போன போக்கில் வாழத் தொடங்கிவிட்டால், வாழ்வில் குழப்பமே மிஞ்சும். பெரியோர்கள் காட்டிய அறவழியில், முறையான பாதையில் செல்வதே சிறந்தது.

ஒருவனுக்கு நிலையான புகழ் வேண்டுமாயின், அவன் இகல் எனப்படும் தீய பண்பை விட்டுவிட வேண்டும் என்பது திருவள்ளுவர் கூற்று.

இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.
(திருக்குறள்: 853)

இகல் என்ற ஒரு பண்பினால், தனக்கும் நிம்மதியின்றி, பிறருக்கும் நிம்மதியின்றி ஒருவன் தவிக்க நேரிடும். அதனை விட்டுவிட்டாலோ, தனக்கும் பிறருக்கும் சிறந்த இன்பத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இன்பத்துள் இன்பம் பயக்கும்
  இகலென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் 
  (திருக்குறள்: 854)

இகல் என்ற தீய பண்பு பேராசையைப் போன்று இழிவானது, தவிர்க்கப்பட வேண்டியது. திருக்குறளின் அவா அறுத்தல் அதிகாரத்திலும் இதே சொல்லாட்சி இருப்பதை இங்கு ஒப்பு நோக்கலாம்.

இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்
(திருக்குறள்: 369)

விருப்பு, வெறுப்பு ஆகிய இரண்டையும் கவனமாகக் கையாளக் கற்றுக்கொள்வதே மனித குலத்தின் மாபெரும் சவால். விருப்பு, வெறுப்பு இரண்டையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். அவை இரண்டும், மனிதனின் நிம்மதியைப் பறிக்கும் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் என்றே பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் கூறியிருக்கிறார்.

- பயணிப்போம்

பாதை இனிது... பயணமும் இனிது..! - 31
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism