Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 5

யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 5

யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

Published:Updated:
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 5

நாம பெரிய புத்திசாலின்னு காட்டிக்கிறதுக்காக அடுத்தவரை கேலி செய்யறதும், நக்கல் பண்றதும் எவ்வளவு பெரிய தப்புங்கிறது பத்திப் பேசிட்டிருந்தோம்.

‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து’ என்கிற திருக்குறளை ஞாபகப் படுத்தி, தன் கருத்துக்களை இ-மெயில் பண்ணியிருந்தார் சுரேஷ். நானோடெக்னாலஜி மூன்றாம் வருடம் படிக்கிறாராம். (நானோ டெக் மாணவர் திருக்குறளை உதாரணம் காட்டுறது ஒரு சுவாரஸ்ய பொருத்தம்தானே?!)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அச்சாணி ஒரு சாண்தான். ஆனா, அதுதான் அவ்ளோ பெரிய தேர் ஓடுறதுக்குத் துணை புரியுது. ஒரு பெரிய இயந்திரத்துல இருக்கிற ஒரு சின்ன நட்டு கழண்டு போனாலும், இயந்திரம் மக்கர் பண்ணும். ஒரு சின்ன ‘சிப்’புக்குள் ஆயிரம் ஆயிரம் தகவல்களைப் பதிஞ்சு வைக்க முடியுற கணினி யுகத்துல இப்ப நாம வாழ்ந்துட்டிருக்கோம்!

ஆக, யாரையும் எதையும் உருவத்தைப் பார்த்துக் கேலி செய்யறதுக்கோ, இவனுக்கு இவ்வளவுதான் தெரியும்னு ஜட்ஜ் பண்றதுக்கோ நமக்கு யோக்கியதை உண்டா?

சுரேஷ் சொன்ன ஒரு தகவல் சுவாரஸ்யமானது. அவங்க ஃபேமிலி யோடு ஏதோ ஒரு ஃபங்ஷனுக்குப் போறதுக்காக ஏஜென்ஸிக்கு போன் பண்ணி, ‘கால் டிரைவரை’ வரவழைச்சிருக்காங்க. வழக்கம்போல சுரேஷோட அப்பா முன் சீட்டுல, டிரைவருக்குப் பக்கத்துல உட்கார்ந்து, பேச்சுக் கொடுத்துட்டே வந்திருக்கார். வேலை, படிப்பு பத்தியெல்லாம் பேசும்போது, “ஏதோ படிச்சேன், மாஸ்டர் டிகிரி முடிச்சேன்; கிடைச்ச வேலையைச் செய்துட்டு வரேன். என்னையெல்லாம் பெரிய படிப்பாளின்னு சொல்லிக்கவே முடியாது. கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு!”ன்னு சொல்லியிருக்கார்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 5

உடனே சிரிச்சுட்டாராம் அந்த டிரைவர். “ஏம்ப்பா, இப்ப நான் என்ன சொல்லிட் டேன்னு நீ சிரிக்கிறே?”ன்னு கேட்டதுக்கு, “இல்லே… இந்த வசனத்தை நீங்களோ, நானோ, வேறு யாருமோகூட சொல்லத் தகுதியுண்டான்னு யோசிச்சுப் பார்த்தேன்”ன்னாராம். “ஏன், தன்னடக்கமாதானே சொன்னேன்? அதுக்குமா தகுதி வேணும்?”னு சுரேஷ் அப்பா கேட்டிருக்கார்.

“கண்டிப்பா! ‘அறிவாகிய மாபெரும் கடலில் கிளிஞ்சல் பொறுக்கும் சிறுவன் நான்’னு சொன்னார் விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன். ‘பாராட்டுற அளவுக்கு நான் எதுவும் சாதிச்சுடலை. ஆயிரம் படத்துக்கு இசை அமைச்சாலும் (இளையராஜாவின் இசையில் ஆயிரமாவது படம் ‘தாரை தப்பட்டை’) முதல் படத்தில் எந்த இடத்தில் நின்னேனோ, அதே இடத்தில்தான் இப்போதும் நின்னுட்டிருக்கேன்’னு சொன்னார் இசைஞானி இளையராஜா. அது தன்னடக்கம். அதுக்காக, கொட்டாங்கச்சி வயலினைக் காது கிழிய வாசிச்சுட்டு வரும் குடுகுடுப்பைக்காரர், ‘இசை என்னும் கடல்ல நான் வெறுமே காலை மட்டும்தான் நனைச்சிருக்கேன்’னு சொன்னா காமெடியா இருக்குமா இல்லையா? அது மாதிரிதான் இதுவும்!”னாராம் டிரைவர்.

“புரியலையே?”ன்னு சுரேஷ் அப்பா குழம்ப, “ஐயா! கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவுன்னு சொன்னது யார்?”னு கேட்டாராம் டிரைவர். “இப்ப நான்தான் சொன்னேன்!”னு சுரேஷ் அப்பா சொல்லவும், “அதில்ல சார், இந்த வசனத்தை முதல்ல சொன்னது யார்னு கேக்கறேன்?”னு மறுபடியும் கேட்டார் டிரைவர்.

யாருக்கும் எதுவும் தெரியலை. டிரைவரே தொடர்ந்து சொன்னாராம்…

“கற்றதுகைம் மண்ணளவு கல்லாத துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்!

ஔவையார் பாடல் இது. இதுலதான் நீங்க சொன்ன வசனம் வருது. அதாவது, ‘கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவுன்னு அந்தக் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியே நினைச்சு, இன்னமும் படிச்சுட்டிருக்காளாம்! அப்படியிருக்கிறப்போ நாமெல்லாம் எந்த மூலைங்க ஐயா?”ன்னு அந்த டிரைவர் கேட்கவும், ‘தெய்வமே, நீங்க எங்கியோ போயிட்டீங்க!’னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டாராம் சுரேஷ்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 5

“அப்புறம் விசாரிப்பதான் தெரிஞ்சுது, அந்த டிரைவர் ஸ்கூல் படிக்கிறப்ப நம்பர் ஒன் ஸ்டூடன்ட்டா இருந்தவராம். வறுமை காரணமா மேலே படிக்க வசதியில்லாம டிரைவர் வேலைக்கு வந்துட்டாராம். ஆனாலும், ஆர்வம் காரணமா நாலடியார், பாரதியார் பாடல்கள்னு வாங்கிப் படிச்சிருக்கார். ‘இப்பவும் படிக்கிற ஆர்வத்தை விடாம ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா கதைகளையெல்லாம் தேடித் தேடிப் படிச்சுட்டிருக்கேன்’னு அவர் சொன்னப்போ, பிரமிப்பா இருந்ததோட, அவர் மேல பெரிய மரியாதையே வந்துச்சு எனக்கு”ன்னு சுரேஷ் எழுதியிருந்ததைப் படிச்சதும், அந்த டிரைவருக்கு மானசிகமா ஒரு சல்யூட் வெச்சு வணங்கத் தோணிச்சு எனக்கு.

- இன்னும் பேசலாம்…

இளைஞர்களுக்கு கிரிக்கெட் புயல் சச்சின் டெண்டுல்கர் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே…

* பாசிட்டிவ் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். தோல்விகள் தரும் கசப்பையும் அயர்ச்சியையும் அவற்றால் மட்டுமே விரட்ட முடியும்! பாசிட்டிவ் சிந்தனைகள் என்னில் தோன்றியிருக்காவிட்டால், இந்த வெற்றிகளை நான் எட்டிப் பிடித்திருக்க மாட்டேன்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 5

* வேறு யாருடனும் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். அவர் ஒன்றில் திறமைசாலியாக இருந்தால், நீங்கள் வேறு ஒன்றில் திறமை மிக்கவராக இருப்பீர்கள். உங்களுக்கு எதில் அதிக ஆர்வமும் திறமையும் இருக்கிறது என்று அறிந்து, அதில் உங்களை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

* கிடைக்கும் வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ளுங் கள்; இறுதிவரை போராடுங்கள். வெற்றிக்கான ரகசியம் இவ்வளவுதான்!

*  தீய பழக்கங்களையும் பெருமையாகக் கருதும் போக்கு ஆபத்தானது. என்னுடைய ரசிகர்கள் பெரும்பாலும் இளைஞர்கள், குழந்தைகள் என்பதால், அவர்களைத் தீய பழக்கங்களுக்கு இட்டுச் செல்லும் எந்த விளம்பரத்திலும் நான் நடிப்பதில்லை.

*  பந்தை அடிக்கும்போது அடி எவ்வளவு பலமாக விழுந்தது, பந்து எந்தத் திசையில், எவ்வளவு தூரம் ஓடும் என்பதெல்லாம் எனக்குத்தான் தெரியும். எனவேதான், பொதுவாக நான் ‘பை-ரன்னர்’ வைத்துக்கொண்டது இல்லை. நானே ஓடி ரன் எடுக்கிறேன். இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல; எல்லாவற்றுக்கும் பொருந்தும். நீங்களே அடியுங்கள்; நீங்களே ஓடுங்கள்!

பரிசு யாருக்கு?

சென்ற இதழ் சவால் கேள்வி நினைவிருக்கிறதா?

அரசன் தான் கண்ட கனவைச் சொல்லி, அது தொடர்பாக ஒரு கேள்வியைக் கேட்கிறான். தர்க்கரீதியாக அந்தக் கேள்வியே தப்பு. கனவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கெல்லாம் விளக்கம் சொல்ல இயலாது. அரசன் கண்ட கனவை நிஜமாகவே நடைமுறைப்படுத்திப் பார்த்துதான் விடை காண இயலும்.

உயிருள்ள மீனோ, உயிரற்ற மீனோ… எந்த ஒரு பொருளும் தன் பருமனுக்கு நிகரான தண்ணீரை வெளியேற்றும் என்பதே ஆர்க்கிமிடிஸ் விதி!

இந்தச் சரியான விடையை அனுப்பி இருந்தவர் களில் சேலத்தைச் சேர்ந்த ப.ரகுராமன் என்ற வாசகருக்கு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய ‘மேலே, உயரே, உச்சியிலே’ புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

சவால்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 5

ஒரு குறுகிய பாலம். பலவீனமான பாலம். ஒரே நேரத்தில் இரண்டு பேர் மட்டுமே அதன் வழியாகப் போக முடியும். நல்ல இருளான நேரம். ஒரே ஒரு டார்ச் லைட் உள்ளது. அதன் துணையோடுதான், பாலத்தின் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்துக்கு ஒரு பெரியவர், அவரின் மகன், மருமகள், பேத்தி, பேரன் என ஐந்து பேர் கொண்ட குடும்பம் போகவேண்டும்.

பாலத்தைக் கடக்க பெரியவருக்கு 12 நிமிடம் ஆகும்; அவரின் மகனுக்கு 8 நிமிடம்; மருமகளுக்கு 6 நிமிடம்; பேத்தி 3 நிமிடத்தில் கடப்பாள்; பேரனுக்கு ஒரே ஒரு நிமிடம் போதும்!

ஒரே நேரத்தில் இருவர் கடக்கும்போது, இருவரில் யார் அதிக நேரம் எடுப்பார்களோ அதையே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, பெரியவரும் பேரனும் சேர்ந்து பாலத்தைக் கடப்பதாக இருந்தால், கடக்கும் நேரம் 12 நிமிடம்.

கவனத்தில் கொள்ளுங்கள்… பாலம் 30 நிமிடத்தில் இடிந்து விழுந்துவிடும் நிலையில் உள்ளது. எனில், எவ்வளவு குறைந்த நிமிடத்தில் மொத்தக் குடும்பமும் அந்தப் பாலத்தைக் கடக்க முடியும்? வழிமுறை என்ன?

044-6680 2923 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, ‘ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு’ என்று சொல்லிவிட்டு, உங்கள் குரலிலேயே உங்கள் பதிலைப் பதிவு செய்யுங்கள். அல்லது,
98406 67184 என்ற எண்ணுக்கு மெஸேஜ் தட்டிவிடுங்கள்; அல்லது வாட்ஸப்புங்கள்! குரல் பதிவாகக்கூட வாட்ஸப்பில் அனுப்பலாம். பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism