Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 6

வையத் தலைமை கொள்!யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 6

வையத் தலைமை கொள்!யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

Published:Updated:
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 6

ன்ன ப்ரோ... இந்த முறை மழை ஒரு காட்டு காட்டிடுச் சில்லே! எத்தனை உயிர் பலிகள்...! எவ்வளவு நாசம்..! உடைமைகளை இழந்து தவிக்கிறவங்க, வாழ்வாதாரங்களை இழந்து வீதிக்கு வந்தவங்க, அட்டைப்பூச்சி, பூரான், பெருச் சாளின்னு சகல ஜீவராசிகளோடும் வீட்டுக்குள் சுவாதீனமா வெள்ளம் புகுந்து நிரப்பிய கழிவுநீர், சகதி, சேறு இதையெல்லாம் இன்னும் வெளியேத்தமுடியாம திண்டாடுறவங்கன்னு ஜனங்க படுற கஷ்டத்தைப் பார்க்கிறப்போ ரொம்ப வருத்தமா இருக்கு.

எங்கேயோ பீகார்ல வெள்ளம், குஜராத்ல பூகம்பம்னு கேள்விப்பட்டபோதெல்லாம் துடிதுடிச்சுப்போய், ஓடி ஓடி உதவிக்கரம் நீட்டினவன் தமிழன்; அந்த நிவாரண நிதிகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தவன். அவனே இன்னிக்கு நிர்க்கதியா நிற்கிறதைப் பார்க்கிறப்போ மனசுக்கு ரொம்பவே வேதனையா இருக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இத்தனை துயரங்களுக்கிடையிலும், ஆறுதலான சில விஷயங்களும் உண்டு. நமக்கே தெரியாம நமக்குள்ளே பொதிஞ்சு கிடக்கிற உன்னதமான குணங்களையும், ஆற்றலையும் இந்த மழை நமக்குப் புரிய வெச்சிருக்கு.

மும்பையில வெள்ளம் வந்தப்போ, அடுத்த சில நாட்கள் லயே அவங்க அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதை நாம பிரமிப்பா பார்த்த காலம் உண்டு. அப்படி ஒரு பேரிடர் நமக்கு ஏற்பட்டுச்சுன்னா, அவங் களைப் போல ஒத்துமையா அதை எதிர்கொண்டு, நிமிர்ந்து நிக்க நம்மால முடியுமான்னும் நமக்குள்ளே ஒரு சந்தேகம் இருந்தது. அந்தச் சந்தேகத்தைப் போக்கி, நமக்கும் அந்த ஆற்றல் உண்டுன்னு தெளிவுபடுத்தியிருக்கு இந்த மழை.

சாக்கடை ஆறாக ஓடி, சென்னையையே நாறடிச் சிட்டிருந்த கூவத்தைத் தூய்மைப்படுத்த பல லட்சம் கோடி ரூபாய் செலவாகும்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. ஆனா, பைசா செலவில்லாம தூய்மைப்படுத்தியிருக்கு இந்தப் பெரு மழை. இதை இனிமே சீர்கெடாம வெச்சுக் காப்பாத்தறது நம்ம கையிலதாங்க இருக்கு.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 6

பக்கத்துல அண்டையில வசிக்கிறவர் பெயர்கூடத் தெரியாத அளவுக்கு தான் உண்டு தன் வேலை உண்டுன்னு ஒரு குறுகிய வட்டத்துக்குள் உழன்றுகொண்டிருந்தவங்களை இந்த மழை ஒரு குடும்பமா ஆக்கியிருக்கு.அப்பார்ட்மென்ட்வாசிகள் கூட்டுக்குடும்பமா ஆனாங்க. பிள்ளைங்க வெளிநாடுகளில் இருக்க, இங்கே தனிமையில் தவிச்ச  முதியவர்களை, தங்களின் பெற்றோர்களாகவே தத்தெடுத்துக்கிட்டாங்க சில பேர். அதுமட்டுமா?

சாதி, மதங்களைக் கடந்து பலரும் ஒருத்தருக்கொருத்தர் உதவி பண்ணிக்கிட்டதைப் பார்த்தோம். கோயில்களும், சர்ச்சுகளும், பள்ளிவாசல் களும் பாதிக்கப்பட்ட ஜனங்களுக்குப் புகலிடம் கொடுத் ததைக் கண்டு நெகிழ்ந்தோம்.

இன்னும்... தங்கள் வாகனங்களைக் கொடுத்து உதவினவங்க, அடுத்தவர் தங்கிக்கொள்ளத் தங்கள் வீட்டில் இடம் தந்து உதவினவங்க, இலவசமா வைத்தியம் செய்ய முன்வந்த டாக்டர்கள், நிவாரணப் பொருள் களோடு வெள்ளத்தில் மிதந்து சென்று வேண்டியவர்களுக்குச் சேர்ப்பித்த தன்னார்வத் தொண்டர்கள், களத்தில் இறங்கிச் சேவை செய்த நமது திரைப்பட நட்சத்திரங்கள், நிவாரண நிதியை தாராளமா வழங்கி உதவிய அந்நிய மாநில நட்சத்திரங்கள், வெள்ளத்தால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க நேரிட்டாலும், யாருக்கு என்ன உதவி தேவைன்னு சமூக வலைதளங்கள் மூலம் உடனுக்குடன் தகவல் பரிமாறி, உதவிகளை உரிய நேரத்தில் கிடைக்கச் செய்த நெட்டிசன்கள்னு அத்தனை பேருமே கைகோத்து இந்த இயற்கைச் சீற்றத்தை எதிர் கொண்டிருக்காங்க.

“அன்புள்ள சென்னை, உன்னை ஒருபோதும் எளிதில் தோற்கடிக்க முடியாது! இப்போது இயற்கைக்கும் அது தெரியும்!” என மும்பை இண்டியன் ரசிகர் ஒருத்தர் வாட்ஸப்பில் அனுப்பிய வாழ்த்துத் தகவல் நூறு சதவிகிதம் நிஜம்!

மொத்தத்தில் கூவம் நதியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதத்தையும் பளிங்குபோல சுத்தமாக்கியிருக்கு இந்தப் பெருமழை. இதை இப்படியே வீர்யம் குறையாம பார்த்துக்கிறது நம்ம கடமை.

எல்லாத்துக்கும் மேல, இந்தப் பெருமழையின் போது நான் கண்டு சிலிர்த்த ஒரு விஷயம் உண்டு. இளைஞர்கள்னாலே வெட்டிப் பேச்சும் வீண் அரட்டையும்தான், கல்லூரி மாணவர்கள்னாலே கலவரமும் கலாட்டாவும்தான்னு பல பேரின் மனசுக்குள்ளே அழுத்தமா பதிஞ்சிருந்த ஒரு மோசமான பிம்பத்தையும் இந்த மழை உடைச்சு எறிஞ்சிருச்சு. இந்த வெள்ளத்தில் இறங்கி நின்னு பம்பரமா வேலை பார்த்தது நம்ம பசங்கதான்!

தன்னைப் பத்திக் கவலைப்படாம, ஒரு லாரி டியூப் கிடைச்சாலும் காத்து நிரப்பி, அதுல மிதந்து போயாவது நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொண்டு சேர்த்த அவங்களோட சேவையைப் பாராட்ட வார்த்தையே வரலை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம, ஜனங்களுக்கு எப்படியாவது உதவி பண்ணியே ஆகணும்னு ஓடி ஓடி உழைச்ச நம்ம இளைஞர்களைப் பத்தி நினைக்கிறப்போ எனக்கு அழுகையே வந்திருச்சு, ப்ரோ! இது ஆனந்த அழுகை! ‘நம்ம பசங்க’ன்னு காலரைத் தூக்கி விட்டுக்கிற ஒரு பெருமித அழுகை!

“நூறு தகுதியான இளைஞர்களை என்னிடம் கொடுங்கள். நான் இந்த உலகத்தை மாற்றிக் காட்டுகிறேன்”னு சொன்னார் விவேகானந்தர். அன்னிக்கு இல்லையோ என்னவோ... இன்னிக் குத் துடிப்பான இளைஞர்கள் நூறு என்ன, அதற்கும் மேலேயே ஏராளமா இருக்காங்க, சுவாமிஜி!

“இளையபார தத்தினாய் வா வா வா

எதிரிலா வலத்தினாய் வா வா வா

ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்

உதயஞாயி றொப்பவே வா வா வா

களையிழந்த நாட்டிலே முன்போலே

களைசிறக்க வந்தனை வா வா வா

விளையுமாண்பு யாவையும் பார்த்தன்போல்

விழியினால் விளக்குவாய் வா வா வா”-ன்னு கூப்பிட்டீங்களே, மகாகவி பாரதி! இதோ, நீங்க விரும்பி அழைச்ச இளைஞர் பட்டாளம் இன்னிக்கு ரெடி!

மதுவுக்கு எதிரான போராட்டத்தில் குதிச்சப்பவே நம்ம இளைஞர்கள் மேல எனக்குத் தனி மரியாதையும் நம்பிக்கையும் வந்துச்சு.

இந்தப் பெருவெள்ளம், இளைஞர்கள் மீதான என் அபிமானத்தையும் மதிப்பையும் இன்னும் பலமடங்கு பெருக்கிடுச்சு. இனி, இந்தியாவின் எதிர்காலத்தை தைரியமா நம்பி இவங்க கையில ஒப்படைக்கலாம், இல்லையா ப்ரோ?

சந்தோஷக் கூச்சலோடு சொல்றேன்...

ஹேட்ஸ் ஆஃப் இளைஞர் சமுதாயம்!

- இன்னும் பேசலாம்

இளைஞர்களுக்கு கவியரசு கண்ணதாசன் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே…

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 6

•  ஒருவர் உன்னைப் புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு; இகழ்ந்து பேசும்போது ஊமையாய் இரு. வாழ்க்கையில் வெற்றி பெற இதுவே எளிய சூத்திரம்.

•  வெற்றி என்பது நிரந்தரமல்ல, தோல்வி என்பது முடிவுமல்ல! எனவே, வெற்றியில் துள்ளாதே; தோல்வியில் துவளாதே!

•  ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்; அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்!

•  தனிமையில் அழு; நண்பர்களோடு சிரி! கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்; தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்!

•  யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே! ஒருவேளை நீ மாற நினைத்தால், ஒவ்வொருவருக்காகவும் நீ மாறிக்கொண்டே இருக்கவேண்டும்.

பரிசு யாருக்கு?

சென்ற இதழ் சவால் கேள்விக்கான விடை:

முதலில் பேரனும், பேத்தியும் பாலத்தைக் கடக்கிறார்கள். அதற்கு ஆகும் நேரம் 3 நிமிடம். டார்ச்சை எடுத்துக்கொண்டு பேரன் திரும்ப இந்தப் பக்கம் வருகிறான். அதற்கு ஆகும் நேரம் 1 நிமிடம். பின்னர் பெரியவரும் அவரின் மகனும் பாலத்தைக் கடக்கிறார்கள். அவர்களுக்கு ஆகும் நேரம் 12 நிமிடம். பின்னர் அங்கிருந்து டார்ச்சை எடுத்துக்கொண்டு பேத்தி வருகிறாள். அவளுக்கு ஆகும் நேரம் 3 நிமிடம். பின்னர் மருமகளும் பேரனும் பாலத்தைக் கடக்கிறார்கள். அவர்களுக்கு ஆகும் நேரம் 6 நிமிடம். பேரன் திரும்ப இந்தப் பக்கம் வருகிறான். அதற்கு 1 நிமிடம். கடைசியாக பேரனும், பேத்தியும் பாலத்தைக் கடக்கிறார்கள். அவர்களுக்கு ஆகும் நேரம் 3 நிமிடம்.

ஆக, 29 நிமிடத்தில் அனைவரும் பாலத்தைக் கடக்கிறார்கள்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 6

இந்தச் சரியான விடையை குரல் பதிவாகவும் எஸ்.எம்.எஸ். வழியாகவும் அனுப்பி இருந்தவர்களில் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஆ.ஜெயஸ்ரீ என்கிற வாசகிக்கு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய ‘மேலே, உயரே, உச்சியிலே’ புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

சவால்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 6

ஒரு கல்லூரியில் சில மாணவர்களிடையே அடிதடி ஏற்பட்டபோது, அவர்களில் ஒருவரின் கை பட்டு, மேஜை மேலிருந்த சிஸ்டம் மானிட்டர் கீழே விழுந்து, உடைந்துவிட்டது. காலேஜ் டீன், சம்பந்தப்பட்ட ஐந்து மாணவர்களை அழைத்து, அதை உடைத்தது யாரென்று விசாரித்தார். அவர்கள் சொன்ன பதில்கள் கீழே :

அன்பழகன்: சார், அதை பசுபதி உடைக்கலை; கதிர்வேலன்தான் உடைச்சான்.

கதிர்வேலன்: அதை சத்யராஜும் உடைக்கலை; பசுபதியும் உடைக்கலை.

சத்யராஜ்: அதை அன்பழகன் உடைக்கலை, சார்; பசுபதிதான் உடைச்சான்.

தமிழ்ச்செல்வன்: அதை கதிர்வேலன் உடைச்சான்; சத்யராஜும் உடைச்சான்.

பசுபதி: சார், அதை அன்பழகன் உடைக்கலை; தமிழ்ச் செல்வன்தான் உடைச்சான்.

இவர்கள் அத்தனை பேரும் சொன்னதிலும் ஓர் உண்மை இருக்கிறது; ஒரு பொய்யும் இருக்கிறது.

எனில், சிஸ்டத்தை உடைத்தவர் யார்?

044-6680 2923 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, ‘ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு’ என்று சொல்லிவிட்டு, உங்கள் குரலிலேயே உங்கள் பதிலைப் பதிவு செய்யுங்கள். அல்லது, 98406 67184 என்ற எண்ணுக்கு மெஸேஜ் தட்டிவிடுங்கள்; அல்லது வாட்ஸப்புங்கள்! குரல் பதிவாகக் கூட வாட்ஸப்பில் அனுப்பலாம். பரிசு பெறும் வாய்ப்பு உண்டு. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism