Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது..! - 32

விதுர நீதியும் வள்ளுவமும்!சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

பாதை இனிது... பயணமும் இனிது..! - 32

விதுர நீதியும் வள்ளுவமும்!சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

Published:Updated:

வாழ்க்கைப் பயணத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய பல நுணுக்கமான பண்புகளை திருவள்ளுவப் பெருந்தகை எடுத்துக் கூறி வருகிறார்.

இன்றையச் சூழலில், இத்தகைய பண்புகளைப் பாடத்திட்டங்கள் கற்றுத் தருவதில்லை. அவசர யுகத்தில் பெரியோர்களிடம் இருந்து கேட்டு அறிந்துகொள்ளவும் பலருக்கு அவகாசம் இருப்பது இல்லை. ஆனால், சில முக்கியமான பண்புகளை வாழ்க்கைப் பாடம் நமக்குக் கற்றுத் தரும். வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக நாம் பெறும் அத்தகைய பாடங்கள், சில தருணங்களில் நமக்கு மிகுந்த துன்பத்தையும் வலியையும் தரக்கூடும். வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில், இதனை நான் செய்யாமல் இருந்திருக்கலாம், இப்படிப் பேசாமல் இருந்திருக்கலாம் என்று உள்ளத்துக்குள் வருந்தி, குற்ற உணர்ச்சியில் தவிப்போர் பலர்.

நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய ஒரு பண்பைத் திருவள்ளுவர் எடுத்துக் கூறுகிறார். பெரியோரைப் பிழையாமை.சில அமைப்புகளைச் சார்ந்த பெரியவர்களை, அவர்கள் கடந்து வந்த பாதையை, அவர்களது உண்மையான நோக்கத்தை அறிந்து கொள்ளாமல் வெறுமனே விமர்சித்தல் தவறு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொல்லடக்கம் தேவை என்பதைத் திருவள்ளுவர் அறத்துப் பாலிலேயே நன்கு அறிவுறுத்தியிருக்கிறார். எனினும் குறிப்பாக, பெரியவர்களைக் குறித்து இவ்வாறு பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த அதிகாரம் எழுந்துள்ளது.

பாதை இனிது... பயணமும் இனிது..! - 32

ஒருவர் தன்னை எவ்வளவு உயர்ந்தவராக வேண்டுமானாலும் கருதிக்கொள்ளலாம்; ஆனால், பிறரைத் தாழ்வாக எண்ணுவதற்கு எவருக்கும் எந்தத் தகுதியும் இல்லை. இறைவனின் படைப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான ஆற்றல்களோடு படைக்கப் பட்டிருக்கிறோம். வெளிப்படும் திறமை, செயலாற்றல் அனைத்தும் இறையாற்றலின் சிறு கீற்றே என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஒருவர் ஒரு செயலில் முயற்சித்து இறங்கும்போது, அவரை இகழ்ந்து பேசுதல் மிகத் தவறு.

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலுள் எல்லாம் தலை. (திருக்குறள்: 891)

மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருத்தல், காப்பவர் செய்துகொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது என்கிறார் திருவள்ளுவர்.
பெரியோர்களின் கோபத்துக்கு ஆளாகாமல் நடந்துகொள்ள வேண்டியதும் மிக முக்கியமாகும்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது. (திருக்குறள்: 29)

- என நீத்தார் பெருமையில் வள்ளுவர் கூறியிருப்பது, இங்கு நினைவுகூரத்தக்கது.

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்

பேரா இடும்பை தரும். (திருக்குறள்: 892)

ஆற்றல் மிகுந்த பெரியோரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப்பெரியோரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

உயர்ந்த மனிதர்களையும், சாதுக்களையும் பகைத்துக் கொண்டால் மரணம் நேரிடும் என்கிறது சாணக்கிய நீதி. சான்றோர்களைப் பழிப்பவனின் நற்செயல்கள் யாவும் வீணாகிவிடுகின்றன என்கிறது ஸ்ரீமத்பாகவதம்.

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார் (திருக்குறள்: 896)

தீயால் சுடப்பட்டாலும், ஒருக்கால் உயிர் பிழைத்து வாழ முடியும்; ஆனால், ஆற்றல் மிகுந்த பெரியோரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பிப் பிழைக்க முடியாது என்கிறார் வள்ளுவர்.
நற்குலத்தில் உதித்த நல்லோர்களிடம், மரக்கட்டையில் நெருப்பு மறைந்திருப்பதுபோல சக்தி மறைந்திருக்கும். அவருக்குத் தீங்கு செய்பவருக்கு அந்தச் சக்தி துன்பத்தைத் தரும். அது மட்டுமல்ல, அரசர், கடவுள், பெரியோர் இவர்களிடம் கொண்ட கோபத்தை அடக்கிவிட வேண்டும்; இல்லையெனில், தப்பிப் பிழைக்க இயலாது என்கிறது விதுர நீதி.

நியாயமான கோபத்தைத் தவறு என்று நம் அறநூல்கள் கூற வில்லை. ஆனால், கோபத்தை வெளிப்படுத்தும் முறை சரியாக இருக்கவேண்டும்.

பெரியோரின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்ற முக்கிய மான பண்பைத் திருவள்ளுவர் இந்த அதிகாரத்தின் வாயிலாக உணர்த்தி அருளியிருக்கிறார்.

- பயணிப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism