Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 7

அறிவை விரிவு செய்!யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 7

அறிவை விரிவு செய்!யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

Published:Updated:
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 7

போன தடவை இளைஞர்களைப் பத்தி நான் பெருமையா எழுதியிருந் ததைப் படிச்சுட்டு, சுப்பிரமணியன் என்கிற ஒரு பெரியவர் சென்னை, மடிப்பாக்கத்துலேர்ந்து போன் செஞ்சு, தன் கருத்தைப் பதிவு பண்ணியிருந்தார். “நீங்க சொன்னதெல்லாம் சரிதான் சார்! ஆனா, நீங்க நினைக்கிற அளவுக்கு இன்றைய இளைஞர்கள் அத்தனை வொர்த் கிடையாது! நீங்க சொல்ற மாதிரியான இளைஞர்களை விரல் விட்டு எண்ணிடலாம்...”்னு ஆரம்பிச்சு, சமீபத்திய பாடல் சர்ச்சை, இளம் குற்றவாளி விடுதலைன்னு பல டாப்பிக்குகளில் புகுந்து புறப்பட்டு, கடைசியா டெய்லி பேப்பர்கள்ல வர்ற இளம் குற்றவாளிகள் பத்தின செய்திகளைப் பட்டியலிட்டிருந்தார்.

அவர் நம்பரைக் கூப்பிட்டு நானே பேசினேன். “சுப்பிர மணியன் சார், நீங்க பேசியிருந்ததையெலாம் கேட்டேன். ‘ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு’ தொடரை நீங்க தொடர்ந்து படிச்சுட்டு வரீங்கன்னு தெரிஞ்சு ரொம்ப சந்தோஷம். உங்க கருத்தைப் பத்திப் பேசறதுக்கு முன்னே, ஒரு ஜோக் சொல்லட்டுமா?”ன்னு கேட்டுட்டு, தொடர்ந்து பேசினேன்.

ஒருத்தன் இன்னொருத்தனைப் போட்டுத் தள்ளிட்டான்னு கேஸ். இவனோ “ஜட்ஜய்யா! சத்தியமா நான் அந்தக் கொலையைப் பண்ண லீங்க!”ன்னான்.

“நீ அவனைக் கொலை பண்ணதைப் பார்த்ததுக்கு சாட்சியா ஆறு பேர் வாக்குமூலம் கொடுத்திருக்காங்களே?”ன்னார் ஜட்ஜ். “பார்க்கா ததுக்குச் சாட்சியா என்னால அறுநூறு பேரை இங்கே கொண்டு வந்து நிறுத்த முடியும் எசமான்!”னானாம் இவன். இது எப்படி இருக்கு?

ஜோக்ஸ் அப்பார்ட்! இதையே உல்டாவா யோசிப்போம். சுப்பிரமணியன் சொன்ன மாதிரி இளைஞர்கள் வழி தவறி, நெறி தவறி நடக்குற செய்திகள் அடிக்கடி பேப்பர்ல வருதுதான். ஆனா, தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்கள்ல இப்படித் திசை மாறிப் போறவங்க என்ன அதிகபட்சம் ஒரு நூறு, நூத்தம்பது பேரு இருக்குமா? எல்லாத்துலயுமே விதிவிலக்குகள் உண்டுங்கிற மாதிரி இளைஞர்கள்லயும் உண்டு!

இங்கே, சரஸ்வதி அம்மாள்ங்கிற 60 வயசுப் பெண்மணி சொன்ன ஒரு விஷயத்தைப் பகிர்ந்துக்க விரும்பறேன்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 7

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவங்க இருக்கிறது சைதாப்பேட்டைல, ஒரு அப்பார்ட் மென்ட்டின் கிரவுண்ட் ஃப்ளோர்ல. சென்னைல வெள்ளம் வந்த அன்னிக்கு, அவங்க வீட்டுக்குள்ள தண்ணி வந்து டுச்சு. கண் மூடிக் கண் திறக்கறதுக்குள்ள தண்ணி மட்டம் மளமளன்னு ஏற ஆரம்பிச்சுடுச்சு. அவங்க நடக்க முடியாதவங்க. வீல் சேர்லயே அப்பார்ட்மென்ட்டுக்குள்ள அங்க இங்க போய் வருவாங்க. அன்னிக்குப் பார்த்து அவங்க மகனும் மருமகளும் ஒரு விசேஷத்துக்காக வெளியூர் போயிருந்தாங்க. மத்தபடி, இந்தம்மாவுக்கு அன்னிக்குக் கூடமாட துணைக்கு யாருமில்லே. அதனால, வெள்ளம் வந்ததும் பதறிப்போயி கூச்சல் போட்டிருக்காங்க. அவங்க சத்தம் கேட்டு, மேல் வீட்டுலேர்ந்து ஒரு 20 வயசுப் பையன் இறங்கி வந்து பாத்திருக்கான். இந்த அம்மா வெள்ளத்துல சிக்கித் தவிக்கிறாங்கன்னு தெரிஞ்சதும், சட்டுனு ஓடி வந்து, இந்தம்மாவை வீல் சேர்லேர்ந்து அலாக்கா எடுத்து, மூணாவது மாடி வரைக்கும் தூக்கிட்டுப் போய் விட்டிருக்கான்.

அந்தம்மா சொன்னாங்க... “பாருப்பா! அந்தப் பையனை எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது. ஏன்னா, போக வர என்னை எதுனா கேலியும் கிண்டலும் பண்ணிட்டே இருப்பான். வீல் சேர்ல இடிச்சுட்டு ஓடுவான். ஆனா, அவன்தான் அன்னிக்கு என் உசுரைக் காப்பாத்தினான். நான் எவ்ளோ குண்டுன்னு பார்த்தேயில்லே... இந்த உடம்பைத் தூக்கிக்கிட்டு ஒரு இருபது வயசுப் பையன் மூணு மாடி ஏறணும்னா, அவனுக்குள்ள எத்தனை வைராக்கியம் இருக்கணும் என்னைக் காப்பாத்தணும்னு? அவனுக்கென்னப்பா தலை யெழுத்து! ஆனா, கூப்பிட்ட குரலுக்கு பகவான் கிருஷ்ணர் மாதிரி ஓடி வந்தானே!

அப்பத்தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ் சுச்சு. பசங்களைக் குறை சொல்லிப் பிரயோசன மில்லை. அவங்க வயசு அப்படி. ஓடி ஆடுற வயசு. துள்ளலும் துடிப்புமா திரியுற வயசு. அதுங்களை ஓரிடத்திலே நிக்கச் சொன்னா நிப்பாங்களா? அவங்களோட எனர்ஜியை நாம தான் நல்ல விதத்துல பயன்படுத்திக்கணும். பசங்க கெட்டுப் போறாங்கன்னா அதுக்கு முழுக்க முழுக்கக் காரணம் பெரியவங்களான நாமதான். யாரோ ஒரு முனிவர் எங்கேயோ மனுஷ நடமாட்டமே இல்லாத காட்டுல உட்கார்ந்து தவம் பண்றார், ஞானியாகுறார்ங்கிறதெல்லாம் எனக்குப் பெரிய விஷயமா படலே. இங்கே கெட்டுப்போறதுக்குப் பல விஷயங்கள் இருக்கு; சந்தர்ப்ப சூழல்கள் இருக்கு. நெருப்பு வளையத்துக்குள்ளே இருக்கிற சூடம் மாதிரிதான் இருக்கு இன்னிக்குப் பசங்களோட நிலைமை. இந்த நிலையிலயும் பல பசங்க ரொம்ப கண்ணியமாவும், பொறுப் பாவும்தான் இருக்காங்க.

நேத்திக்கு அந்தப் பையனைப் பார்த்தேன். ‘என் உசுரைக் காப்பாத்திக் கொடுத்துட்டேப்பா! இந்த உதவியை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன்!’னு அவன் கையைப் புடிச்சிக்கிட்டுத் தழுதழுத்தேன். ‘அட, விடுங்க பெரியம்மா! உங்களை வெள்ளம் இழுத்துட்டுப் போயிடுச் சுன்னா, அப்புறம் நான் யாரை நக்கல் பண்றது? அதான் பொழைச்சுப் போவட்டுமேன்னு காப் பாத்தி உட்டேன்’னு சிரிச்சுட்டுப் போகுது அந்தப் புள்ள. இப்பெல்லாம் அது என்னை குண்டம்மா, அது இதுன்னு கேலி பண்ணினாகூட எனக்கு அதும்மேல கோவமே வர்றதில்லை தெரியுமா?”

உண்மைதான்! நாம யாரை, எதை எப்படி எடுத்துக்கறோம்கிறதுலதான் எல்லாமே இருக்கு. கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்பிச்சை சொன்ன கரப்பான்பூச்சி கதையை இங்கே சொன்னா பொருத்தமா இருக்கும்.

சுந்தர்பிச்சை ஒரு ரெஸ்ட்டாரன்ட்டுக்குப் போயிருந்தாராம். அங்கே எல்லாரும் சாப்பிட்டுக் கிட்டு இருந்தப்போ, ஒரு கரப்பான்பூச்சி பறந்து வந்து ஒரு லேடி மேல உட்கார்ந்துதாம். உடனே அந்தம்மா, வீல்...னு கத்திக் கூச்சல் போட்டுக்கிட்டே எழுந்து நின்னு, கையைக் காலை ஆட்டி, கரப்பானை உதற முயற்சி பண்ணுச்சாம். அடுத்ததா, கரப்பான் பறந்து போய் அந்த குரூப்ல இருந்த இன்னொரு லேடி மேல உட்கார்ந்துதாம். அந்தம்மாவும் ஆய்... ஊய்னு அலறி, அமர்க்களம் பண்ண, கரப்பானும் மாறி மாறி வேற வேற ஆளுங்க மேல உட்கார, அங்கே பெரிய கூச்சலும் குழப்பமுமாகி, சந்தைக்கடை மாதிரி ஆயிடுச்சாம்.

அப்புறம் அந்தக் கரப்பான் அங்கே வந்த வெயிட்டர் மேல உட்கார்ந்துது. அவர் கத்தலை; கூச்சல் போடலை. பொறுமையா அது எங்கே உட்கார்ந்திருக்குன்னு பார்த்தாரு. தன் கையில இருந்த காபி டம்ளர்கள் அடங்கிய பிளேட்டை மெதுவா ஒரு டேபிள்ல வெச்சுட்டு, தன் தோள்பட்டைல உட்கார்ந்திருந்த கரப்பானை நிதானமா விரலால பிடிச்சுக்கொண்டு போய், ரெஸ்ட்டாரன்ட்டுக்கு வெளியே போட்டுட்டு வந்தாராம்.

இங்கேதான் சுந்தர்பிச்சை ஒரு கேள்வி கேக்குறாரு. அங்கே நடந்த குழப்பத்துக்கும் கலவரத்துக்கும் அந்தக் கரப்பான் பூச்சிதான் காரணமா? ஆமாம்னா, அது அந்த வெயிட்டர் மேல உட்கார்ந்தப்புறம் எந்தச் சலசலப்பும் அங்கே உண்டாகலையே, ஏன்? ஏன்னா, நடந்த விஷயத்தை அவர் கையாண்ட விதம் அப்படி. அந்தப் பெண்களால அது முடியலை. அவ்வளவுதான்!

“என்னுடைய பாஸோ, என் அப்பாவோ, வொய்ஃபோ... யாராவது சத்தம் போட்டா, அந்தச் சத்தம் என்னைத் தொல்லை பண்றதில்லை; அவங்க சத்தத்துனால ஏற்படற அந்தச் சூழலை சரியான விதத்தில் என்னால ஹேண்டில் பண்ணமுடியாம இருக்கிறதுதான் என்னைத் தொல்லை பண்ணுதுங்கிற உண்மையை இந்தக் கரப்பான்பூச்சி நிகழ்ச்சி மூலம் தெரிஞ்சுக்கிட் டேன்”கிறார் சுந்தர்பிச்சை.

“ஒரு பிரச்னையைவிட, அந்தப் பிரச்னைக்கு நாம காட்டுற எதிர்வினைதான் நம்ம வாழ்க்கையில பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும்”ன்னு அவர் சொல்றது யோசிக்கவேண்டிய விஷயம்தான்.
இதைத்தான் ப்ரோ, புறநானூற்றுக் காலத்தி லேயே கணியன் பூங்குன்றனார்ங்கிற புலவர் ரொம்ப சிம்பிளா சொல்லிட்டுப் போயிட்டார்… ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ன்னு!

இந்தக் கரப்பான்பூச்சி நிகழ்வு மூலமா, சுந்தர்பிச்சை சொல்ல வர்ற பாயின்ட் இதுதான்... ‘எது ஒண்ணு நடந்தாலும், உடனே எதிர்வினையாற்றாதீங்க! யோசிச்சு செயல்படுங்க! கரப்பான்பூச்சி உட்கார்ந்ததும், அந்தப் பெண்கள் எதிர்வினையாற்றினாங்க. ஆனா, அந்த வெயிட்டர் சூழலுக்கு ஏத்த மாதிரி யோசிச்சு செயல்பட்டார்.  எனவே, ரீயாக்ட் பண்ணாதீங்க; ரெஸ்பாண்ட் பண்ணுங்க. ரீயாக்ட்டுங்கிறது (எதிர்வினை) எப்போதுமே சட்டுனு அனிச்சை செயலா நடக்கிறது. ஆனா, ரெஸ்பாண்டுங்கிறது யோசிச்சு செயல்படுறது!’

சரி, இந்தக் கட்டுரைக்கு நீங்க ரீயாக்ட் பண்ணப்போறீங்களா, ரெஸ்பாண்ட் பண்ணப்போறீங் களா?

- இன்னும் பேசலாம்

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 7

இளைஞர்களுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்பிச்சை சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே…

1. உங்கள் மனம் என்ன சொல்கிறதோ, எதைச் செய்ய வேண்டும் என்று உங்கள் உள்ளம் துடிக்கிறதோ அதைச் செய்யுங்கள். உங்களால் நிச்சயம் அதை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும்.

2. ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றால், அவரது வாழ்க்கையில் எல்லாமே சரியாக நடக்கிறது என்று அர்த்தமில்லை. நடப்பது அனைத்தையும் அவர் சரியாக எடுத்துக்கொள்கிறார் என்றே பொருள்.

3. எது சரி, எது தவறு என்பதை முடிவு செய்ய நீங்கள் அதிக சிரமப்படத் தேவையில்லை. உங்கள் வாடிக்கையாளர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதுவே சரி!

4. எதையும் பரவசத்தோடு அணுகுங்கள். அது உங்களை ஆர்வத்தோடு செயல்பட வைக்கும். கூகுள் அலுவலகத்துக்குள் முதன்முதல் சென்றபோது, மிட்டாய்க்கடைக்குள் சென்ற குழந்தையைப்போல என்னை உணர்ந்தேன்.

5. சவாலான முயற்சிகளில் ஈடு படுகிறவர்கள் சில நேரம் தோல்வியுற்றாலும், அவர்களை நாம் தட்டிக்கொடுக்க வேண்டுமே தவிர, தண்டிக்கக்கூடாது.!

சவால்!

ஆரம்ப அத்தியாயத்தில் இரண்டு எண்களைக் கொடுத்து, அவற்றின் சிறப்புத் தன்மை என்ன என்று கேட்டிருந்தேனே, நினைவிருக்கிறதா? அதேபோன்று இப்போதும் ஒரு ஸ்பெஷல் எண் பற்றிக் கேட்கலாம் என்றிருக்கிறேன்.

அந்த எண் 1089.

மூன்று இலக்க எண் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்.. முதல் இலக்கத்துக்கும் மூன்றாம் இலக்கத்துக்கும் வித்தியாசம் குறைந்தபட்சம் 2-ஆவது இருக்கவேண்டும்.

அந்த மூன்று இலக்க எண்ணை அப்படியே ரிவர்ஸ் செய்யுங்கள். இப்போது எது பெரிய எண்ணோ அதிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள். ஆயிற்றா?

விடையாக வருகிற மூன்று இலக்க எண்ணை மீண்டும் ரிவர்ஸ் செய்து, கூட்டுங்கள். விடை 1089 வரும்.

நீங்கள் எந்த மூன்று இலக்க எண்ணைக் கொண்டு இதைச் செய்து பார்த்தாலும், விடையாக வருவது என்ற 1089 எண் மட்டுமே!

ஓர் உதாரணம்: 341-143=198+891= 1089

சரி, உங்களுக்கான கேள்வி என்ன?

நான்கு இலக்க எண்களிலேயே இந்த 1089 என்ற எண்ணுக்கு ஒரு முக்கியமான சிறப்பு இருக்கிறது. அந்தச் சிறப்புத் தன்மை இன்னொரு நான்கு இலக்க எண்ணுக்கும் உண்டு. அந்த எண் என்ன? அது என்ன சிறப்புத் தன்மை?

044-6680 2923 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, ‘ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு’ என்று சொல்லிவிட்டு, உங்கள் குரலிலேயே உங்கள் பதிலைப் பதிவு செய்யுங்கள். அல்லது, 98406 67184 என்ற எண்ணுக்கு மெஸேஜ் தட்டிவிடுங்கள்; அல்லது வாட்ஸப்புங்கள்! குரல் பதிவாகக்கூட வாட்ஸப்பில் அனுப்பலாம். பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 7

பரிசு யாருக்கு?

சென்ற இதழ் சவால் கேள்விக்கான விடை:

சிஸ்டத்தைத் தள்ளி உடைத்தவர் சத்யராஜ்தான். எப்படி என்று பார்ப்போம்.

கதிர்வேலன் சொன்னதில் ஒரு உண்மையும், ஒரு பொய்யும் இருக்கிறது என்றால், சிஸ்டத்தை உடைத்தது சத்யராஜ், பசுபதி இருவரில் ஒருவர்தான் என்றாகிறது. அதேபோல், தமிழ்ச்செல்வன் சொன்னதிலும் ஒரு உண்மை, ஒரு பொய் இருக்கிறது என்னும்போது, சத்யராஜ், கதிர்வேலன் இருவரில் ஒருவர்தான் அதை உடைத்தார் என்று தெரிகிறது. எனவே, இருவரின் வாக்குமூலத்தையும் வைத்துப் பார்க்கும்போது, சந்தேகமில்லாமல் சத்யராஜ்தான் உடைத்தார் என்பது தெளிவாகிறது. இந்த விடையைக் கொண்டு, மற்றவரின் வாக்குமூலங்களையும் பாருங்கள். அனைவரும் ஒரு உண்மை, ஒரு பொய் சொல்லியிருப்பது தெரியும்.

இந்தச் சரியான விடையை குரல் பதிவாகவும் எஸ்.எம்.எஸ். வழியாகவும் அனுப்பி இருந்தவர்களில் சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த இந்திரா சுரேஷ் என்ற வாசகிக்கு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய ‘மேலே, உயரே, உச்சியிலே’ புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism