Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம்! - 33

ஸித்திகளை விரும்புவது ஏன்? பி.என்.பரசுராமன்

மனிதனும் தெய்வமாகலாம்! - 33

ஸித்திகளை விரும்புவது ஏன்? பி.என்.பரசுராமன்

Published:Updated:

ல்லவர் ஒருவர் நம் தேவையறிந்து ரூபாய் நோட்டுக்களை அள்ளிக்கொடுத்தார். அவற்றை வைக்கலாம் என்று பர்ஸை எடுத்தால், அதில் ஏராளமான குப்பைத்தாள்கள், பஸ் டிக்கெட் முதலான உபயோகமற்றவை இருந்தன. பணத்தை எப்படி அதில் வைக்க முடியும்? உதவாத குப்பைகளை வெளியே எறிந்தால்தானே, பணத்தை பர்ஸில் வைக்க முடியும்! அதுபோல, சீடனின் மனதில் இருந்த குப்பை களையெல்லாம், தத்துவ விளக்கப் படலத்தின் மூலம் நீக்கிய குருநாதர், சந்தேக விளக்கப் படலத்தின் மூலம் சீடனின் உள்ளத்தில் ஞான விதைகளைத் தூவுகிறார். காமியத்தவம், நிஷ்காமியத்தவம் என இருவிதமான தவங்களைச் சொன்ன குருநாதர், அவற்றை விவரித்துஅதன் தொடர்ச்சியாக ஜனகா் முதலானவர்களைச் சொல்கிறார் எனப் பார்த்தோம். 

அனக மைந்தனே! முக்தி ஞானத்

தையே அடைந்தனர் அல்லாமல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜனகன் மாபலி பகீரதன் முதலினோர்

சித்திகள் படித்தாரா?

இனிய சித்தியை விரும்பினார் சிலர்

சிலர் இரண்டையும் முயன்றார்அம்

முனிவர் சித்திகள் விநோத மாத்திரம் தரும்

முத்தியைத் தாராவே

(சந்தேகம் தெளிதல் படலம் - 46)

மனிதனும் தெய்வமாகலாம்! - 33

சீடனின் தகுதியைச் சொல்லிவிட்டு, அதாவது மனதில் களங்கம் இல்லாதவனே என அழைத்து விவரிக்கும் முகமாக இப்பாடலில் சனகன், மாபலி, பகீரதன் ஆகியோரைச் சொல்கிறார். அது ஏன்? தெரிந்ததை வைத்து, தெரியாதவற்றை உணர்த்த முற்படுகிறார் குருநாதா். ஜனகா் தலைசிறந்த கா்மயோகி; கண்ணனாலேயே கீதையில் பாராட்டப்பட்டவா். எந்தவிதமான பற்றுதலும் இல்லாமல் கடமைகளைச் செய்தவா். அடுத்துச் சொல்லப்பட்ட மகாபலி, உத்தமமான பரம்பரையில் உதித்தவா்; ஹரி பக்தா்களிலேயே தலைசிறந்தவரான பிரகலாதனின் பேரன்; குருபக்தி முதலானவற்றில் சிறந்தவா். ஆனால், மகாபலிக்கு நான்  எனது என்பதில் மிகுந்த ஆணவம் இருந்தது. அதை நீக்கவே, மஹாவிஷ்ணு வாமனாவதாரம் எடுத்து, மகாபலியின் நான்  எனது என்பனவற்றை நீக்கி மகாபலிக்கு அருள்புரிந்தார். மூன்றாவதாகச் சொல்லப்பட்ட பகீரதன், தன் முன்னோர்கள் நற்கதி பெறுவதற்காக சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் செய்து கங்கையை பூமிக்கு வரவழைத்தவா். பற்றில்லாமல் கடமைகளைச் செய்த ஜனகா், நான்எனது என்பனவற்றை நீக்கி இறைவனாலேயே ஆட்கொள்ளப்பட்ட மகாபலி, முன்னோர்கள் நற்கதி பெறுவதற்காகக் கங்கையைப் பூமிக்கு வரவழைத்த பகீரதன்எனும் மூவரும் கடுந்தவம் செய்து, உயா்நிலை பெற்றார்களே தவிர, அத்தவத்தை ஸித்திகள் பெறுவதற்காகவா செய்தார்கள்? இல்லையே! இது நிஷ்காமியத்தவம்.

இவ்வாறு சொல்லியதன் மூலம், அம்மூவரின் செயல்பாடுகளையும் சீடனின் மனதில் பதிய வைத்தார் குருநாதர். அடுத்து, சிலர் ஸித்திகளை விரும்பித்தவம் செய்தார்கள். அதாவது, காற்றில் பறக்கவேண்டும்; தகரத்தைத் தங்கமாக மாற்றவேண்டும் என்றெல்லாம் தவம் செய்தார்கள். அதன்மூலம் அடுத்தவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்றெல்லாம் அவர்கள் விரும்பினார்கள். இது காமியத்தவம்.

இன்னும் சிலர் காமியத்தவம்  நிஷ்காமியத்தவம் எனும் இந்த இரண்டையும் செய்தார்கள். 'என்ன தான் இருந்தாலும், ஸித்திகளை வேண்டித் தவம் செய்து, அவற்றை அடைந்தாலும், அவை யெல்லாம் விநோதமான செயல்களைச் செய்யும் ஆற்றலைத் தருமே தவிர, முக்தியைத் தராது’ எனச்சொல்லி முடித்தார் குருநாதர். அதேசமயம் குருநாதருக்கு மற்றோர் எண்ணமும் தோன்றியது. அதையும் சீடனுக்கு விவரித்து, அவனை மேலும் தெளிவாக்குகிறார்.

'சீடனே! ஸித்திகளை விரும்பிக் காமியத்தவம் செய்தவர்களைச் சொன்னேன். எதையும் விரும்பாமல் நிஷ்காமியத்தவம் செய்தவர்களையும் சொன்னேன். காமியத்தவம்  நிஷ்காமியத்தவம் எனும் இரண்டையும் சேர்த்துச் செய்தவா்களையும் சொன்னேன். ஞான யோகமே முக்தியைத் தருமென்றால், ஜீவன் முக்தா்கள் சிலா் ஸித்திகளை அடையத் தவம் செய்யக் காரணம் என்னவென்றால்...'எனத் தொடங்கி விவரிக்கிறார்.

யோக ஞானமே முத்தியைத் தரும் எ(ன்)னில்

ஒழிந்த ஸித்திகள் வேண்டி

மோகமாய் உடல் வருந்தினார் சில சில

முத்தர்கள் ஏன் என்றால்

போகமாய் வரும் பிராரத்வ கன்மங்கள்

புசித்தன்றோ நசித்து ஏகும்

ஆகையால் அந்தச்ஸித்திகள் பிராரத்வம்

ஆகும் என்று அறிவாயே.

(சந்தேகம் தெளிதல் படலம் - 47)

'நன்கு விவரம் தெரிந்தவா்கள்கூட, ஸித்திகளை அடையவேண்டிக் கடுந்தவம் செய்திருக்கிறார்கள். அதுவும் பலவிதமான வழிகளில்! காட்டுக்குள் போய்த் தவம் செய்வது, மலைமேல் நின்று தவம் செய்வது, ஒரு காலை பூமியில் ஊன்றி மறு காலை ஊன்றிய காலின் தொடையின் மீது வைத்துத் தவம் செய்வது, எதையும் உண்ணாமல் தவம் செய்வது எனப் பலவழிகளிலும் கடுமையாக உடலை வருத்திக் கொண்டவர்களும் உண்டு.

மனிதனும் தெய்வமாகலாம்! - 33

அது அவா்கள் தங்களின் பிராரத்வகர்மங்களைத் தின்றுதானே தீா்த்தாக வேண்டும்! அதற்காகத்தான். யாராக இருந்தாலும் சரி’ முன்வினைப் பயனை அனுபவித்துத்தான் தீர வேண்டும். அவர்களின் முன்வினைப் பயன் அவா்களை உடலை வருத்தித் தவம் செய்யத் தூண்டும். அதனால் அவா்கள் ஸித்திகளை வேண்டித் தவம் செய்தார்கள்.'

குருநாதர் இவ்வாறு சொல்லி முடித்தவுடன், சீடன் குருநாதரைப் புகழ்ந்து துதித்தான். அவன் வார்த்தைகளைப் பார்க்கும்போது, 'ஆஹா! என்ன குருபக்தி! இவனல்லவா சீடன்' என்ற எண்ணம் தோன்றும். அதே சமயம், அவன் வேறு ஒரு சூட்சுமமான விஷயத்தையும் வெளிப்படுத்து கிறான். பாடலைப் பார்த்தால் புரியும் இது.

இலக்கம் ஆயிரம் சுருதியால் ஊகத்தால்

என் மனம் அசையாமல்

பிலக்க வேண்டும் என்று அருள் குருவே! அகப்

பிராந்தி போய்த்தெளிவானேன்

துலக்கமான கண்ணாடியை அடிக்கடி

துலக்கினால் பழுது அன்றே

அலக்கண் மாற்றிய தேவரீர் எனக்குரை

அமிர்தம் தெவிட்டாவே!

(சந்தேகம் தெளிதல் படலம் - 48)

'அளவில்லாத வேதங்களாலும் யுக்திகளாலும், என் மனம் கலங்காமல் உறுதிபெற வேண்டி அருள் செய்த குருநாதரே! என் மனமயக்கம் நீங்கி நான் தெளிவு பெற்றேன்.

தூய்மை செய்யப்பட்ட கண்ணாடியை அடிக்கடி தூய்மை செய்தால் அதில் தவறு இல்லையே! அடியேனின் மனத் துயரங்கள் அனைத்தையும் நீக்கியருளிய குருதேவா! தாங்கள் அடியேனுக்குச் சொல்லிக்கொண்டு வரும் அமுதமயமான அனுபவங்கள் அடியேனுக்குத் திகட்டவில்லை' என்கிறான் சீடன்.

குருநாதா் அருள் உபதேசத்தால், மன மயக்கம் நீங்கியது எனக் கூறிய சீடன், ஒரு கண்ணாடித் தகவலைச் சொல்லி, குரு உபதேசம் திகட்டவில்லை என்றும் கூறுகிறான். இது ஏதோ புள்ளி வைத்தாற் போல் இருக்கிறது. அது என்ன?

- தொடரும்    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism