Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது..! - 33

அறிவும் மயங்கும்!சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

பாதை இனிது... பயணமும் இனிது..! - 33

அறிவும் மயங்கும்!சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

Published:Updated:

விலங்குகளிடமிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுவது அவனது பகுத்தறிவு. உணவுக்கான தேடல், உறக்கம், இனப்பெருக்கம் செய்தல், பயம் ஆகிய நான்கும் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பொதுவானவை.

மனிதனை விலங்கினத்திடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவனது சிந்திக்கும் திறனே ஆகும்.

மனிதனால் மட்டுமே சிந்தித்து தன் வாழ்வைச் செம்மைப்படுத்திக்கொள்ள முடியும். மனிதப் பிறவியின் குறிக்கோள், பிறவித்தளைகளிலிருந்து விடுபட்டு, பேரின்பத்தை உணர்வதே ஆகும்.
இத்தகைய குறிக்கோளை விலங்குகளால் அடைய முடியாது; மனிதனால் மட்டுமே இதற்கு முயற்சிக்கவும், சாதிக்கவும் முடியும்.

விலங்குகளுக்குத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை. ஒரு செயலைக் குறிப்பிட்ட விதமாக மட்டுமே விலங்குகளால் செய்ய முடியும். ஆனால், மனிதனுக்கு அறிவையும் கொடுத்து, தேர்ந்தெடுக்கும் ஆற்றலையும் இறைவன் அருளியிருக்கிறார்.

அதனால், மனிதன் தன் வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சுதந்திரத்தைப் பெற்றிருக் கிறான். அந்த சுதந்திரத்தைப் பொறுப்பு உணர்வோடு பயன்படுத்துவதே அறிவுடைமையாகும்.

பாதை இனிது... பயணமும் இனிது..! - 33

மனித இயல்புகளில் பல்வேறுவிதமான பலவீனங்கள் இருக்கின்றன. தீய பழக்கங் களுக்கு ஆளாகி, பலர் தங்கள் வாழ்க்கையையே அழித்துக்கொள்கின்றனர். பெறுவதற்கு அரிய மனிதப்பிறவியைப் பெற்றும், விலங்குகளைக் காட்டிலும் கீழான வாழ்க்கையை வாழ்கின்றனர். தீய பழக்கங்களுக்கு அடிமையாதல் என்பது ஒரு மனிதனின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய முட்டுக் கட்டையாகும்.
குடிப்பழக்கம் உடல் நலத்தை மட்டுமல்ல, எத்தனையோ குடும்பங்களை அழித்து, சீர்குலைத்து வருகிறது. இளைஞர்கள் பலர் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவது தேசத்துக்குப் பெருங்கேடாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு என்ற வாசகத்தைப் பார்த்தபடியே அதனை உட்கொள்வதைப் போன்ற மடமை வேறு இருக்க முடியுமா? கேட்டை விரும்பி நாடுபவரைப் போன்ற முட்டாள் உலகில் வேறு எவரேனும் இருக்க முடியுமா?

குடிப்பழக்கத்தின் தீவிரத்தை உணராமல், இளைய தலைமுறை மிக வேகமாக இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதும், அதனால் நாட்டில் குற்றங்கள் பெருகுவதும் கண்கூடு.

குடிப்பழக்கத்தின் தீமையை உணர்த்தவே வள்ளுவப் பெருந்தகை ‘கள்ளுண்ணாமை’ என்னும் அதிகாரத்தை அருளியிருக்கிறார்.

பிறரிடம்  நன்மதிப்பைப் பெற வேண்டும் என்று விரும்பாதவர் யார்? சான்றோரின் நன்மதிப்பைப் பெற விரும்பாதவர், கள்ளை உண்ண விரும்பினால் உண்ணட்டும் என்கிறார் திருவள்ளுவர்.

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார். (திருக்குறள்: 922)

கையில் உள்ள பணத்தையெல்லாம் குடிப்பதற்குச் செலவழித்து, தங்களுடைய உடல் நலத்தையும் மனநலத்தையும் அழித்துக் கொள்வதைப் போன்ற அறியாமை வேறு இல்லை.

கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்அறி யாமை கொளல் (திருக்குறள்: 925)


உணவு, உடற்பயிற்சி, உழைப்பு, ஓய்வு, உறக்கம்... இந்த ஐந்தும் உடல்நலத்துக்கு மிக முக்கியமானவை.

அதேபோல் மன நலத்துக்கு இன்றியமை யாதவை என்னென்ன தெரியுமா?

நல்லாரிணக்கம், நல்ல நூல்களை வாசித்தல், நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளுதல், நற்செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை மன நலனுக்கு மிக இன்றியமையாதவை.

தெளிந்த அறிவைப் பெற்றால்தான், வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் பெற்று இன்பமாக வாழ முடியும். எப்பொழுதும் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கும் மனதைக் கொண்டு எதையும் சாதிக்க முடியாது.

அதுமட்டுமல்ல, அடைந்தவற்றை எல்லாம் கூட குடிப்பழக்கத்தால் இழக்க நேரிடும் என்பதே நிஜம்.

உறக்கத்தில் ஆழ்ந்துள்ளவர், புறவுலகுக்கு இறந்தவராகவே கருதப்படுவார். அதுபோல, கள்ளுண்பவர் அறிவு மயங்குதலால் நஞ்சை உண்பவரே ஆவர் என்கிறார் திருவள்ளுவர்.
விஷம் என்று தெரிந்தே குடிப்பது எத்தகைய அறிவீனம்!

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர் (திருக்குறள்: 926)


எப்பொழுதும் நல்லாரிணக்கத்தையே நாடியிருக்க வேண்டும். தற்சோதனை, சுயபரிசீலனை மிக முக்கியம்.

மிகுந்த விழிப்பு உணர்வோடு தீயவற்றை விலக்கி, நல்ல பழக்கங்களையே நாட வேண்டும். அவ்வாறு செய்வதே வீட்டுக்கும் நாட்டுக்கும் மிகுந்த நன்மை பயக்கும்.

- பயணிப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism