Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 9

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 9

‘சாதிகள் இல்லையடி...’யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 9

‘சாதிகள் இல்லையடி...’யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

Published:Updated:
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 9
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 9

நாட்டைப் பிடிச்ச பீடை இந்த சாதித் துவேஷம்னு சொல்லு வேன். ‘நம்ம நாட்டுல மட்டும்தானா? அமெரிக்காவுல இல்லியா, ஐரோப்பாவுல இல்லியா?’ன்னு சிலர் கேக்கலாம். எங்கே இருந்தாலும் தப்பு தப்புதான், பாஸ்! ஆனா, ஊரைச் சுத்தம் செய்யறதுக்கு முந்தி உங்க தெருவைச் சுத்தம் பண்ணுங்க, தெருவைச் சுத்தம் செய்யறதுக்கு முந்தி உங்க வீட்டைச் சுத்தம் பண்ணுங்கன்னு சொல்றேன்.

சயின்ஸும் டெக்னாலஜியும் வளர்ந்தா பத்தாது பிரதர்! சக மனிதனைக் கைதூக்கி விடுறதுக்கு இந்த சயின்ஸையும், அன்பைப் பரிமாறிக்க தகவல் தொழில்நுட்பத்தையும் நாம பயன்படுத்தாத வரைக்கும்... கம்ப்யூட்டர், இன்டர்நெட்னு தகவல் தொழில்நுட்பத்துல நாமதான் கில்லாடி, உலகத்துலேயே ஸ்மார்ட் போன் உபயோகிக்கிறவங்கள்ல நமக்குத்தான் ரெண்டாவது இடம்னெல்லாம் பீத்திக்கிறதுல அர்த்தமே இல்லை.

ஆன்மிகத்துல சாதித் துவேஷத்துக்கு இடம் இல்லை. திருப் பாணாழ்வாரின் சரிதமும், நந்தனாரின் திருக்கதையும் அதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள். புல், பூண்டு உள்பட உலகில் உள்ள அத்தனை
ஜீவராசிகளும் ஆண்டவனின் படைப்புகள்தான்கிறப்போ, மனிதர்கள்ல ஒரு சில பிரிவினர் மட்டும் அவனுக்கு வேண்டாதவங் களா ஆயிடுவாங்களா என்ன?

மகான்ஸ்ரீராகவேந்திரர், பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்னு அத்தனை பேரும் சாதித் துவேஷத்துக்கு எதிரானவங்கதான். அதனாலதான் அவங்க மகான்கள் நிலைக்கு உயர்ந்திருக்காங்க. சகல மனிதர்களுக்கும் தன்னை ஊழியனாக் கிக்கணும்னு ஆசைப்பட்டார் பகவான்ஸ்ரீராமகிருஷ்ணர். அதுக்காக ஒருமுறை,  அப்போது தீண்டத்தகாதவனாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அன்பர் ஒருவருடைய  வீட்டைச் சுத்தம் செய்யக் கிளம்பினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 9

‘ஐயோ சாமி, நீங்க எவ்ளோ பெரிய மகான்! நீங்க போய் என் வீட்டைச் சுத்தம் பண்ற தாவது!’ன்னு மறுத்துட்டார்் அவர். அதனால, நடுராத்திரி அவருக்கே தெரியாம அவரோட வீட்டுக்குப் போய், வீட்டை மட்டுமில்லாம, கக்கூஸையும் சேர்த்துச் சுத்தம் பண்ணிட்டு வந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

வேத காலத்துல சாதிப் பிரிவினைகள் இல்லை. பின்னாளில்தான் ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனை பயமுறுத்தி அடிமைப்படுத்த இந்த மாதிரி சாஸ்திர சம்பிரதாயங்கள், சாதிப் பிரிவினைகளையெல்லாம் உருவாக்கி, தனக்குச் சாதகமா பயன்படுத்திக்கிட்டான்.

“சென்ற அறுநூறு எழுநூறு வருஷ காலமாக நாம் வீழ்ச்சி அடைந்துவிட்டோம். தண்ணீரை வலது கையால் குடிக்க வேண்டுமா, இடது கையால் குடிக்க வேண்டுமா, கையை மூன்று தரம் அலம்ப வேண்டுமா, நான்கு முறை அலம்ப வேண்டுமா, ஐந்து தடவை வாய் கொப்பளிக்க வேண்டுமா, ஆறு தடவையா என்பது போன்ற முக்கியமான(!) விஷயங்களைப் பற்றி வருஷக்கணக்காக விவாதம் செய்து வந்திருக்கிறோம். தற்போது நாம் வேதாந்திகளுமல்ல; பௌராணிகர் களுமல்ல; தாந்திரிகர்களுமல்ல. நாம் ‘தொடாதே’ மதத்தினர். சமையலறைதான் நம் மதம்; சமையல் பானையே நம் கடவுள். ‘நான் பரிசுத்தன். என்னைத் தொடாதே!’ என்பதுதான் நமது கோட்பாடு. இன்னும் நூறு வருஷம் இப்படியே போய்க்கொண்டிருந்தோமானால், நமது சமூகம் முழுவதும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியதுதான்!”

சாஸ்திர சம்பிரதாயங்களையும் மூடப் பழக்க வழக்கங்களையும் இப்படிக் காட்டமாகச் சாடினவர் யாருன்னு யோசிங்க.

“தேசம் அமிழ்ந்து வருகிறது. கோடிக்கணக்கான ஜனங்களின் சாபம் நம் தலை மீது இருக்கிறது. பக்கத்தில் ஜீவநதி ஓடிக்கொண்டிருக்கையில், அவர்கள் தாகமென்று கேட்கும்போதெல்லாம் சாக்கடைத் தண்ணீரைக் கொடுத்து வந்திருக் கிறோம். ஏராளமான தானியங்களுக்கு மத்தியில் அவர்களைப் பட்டினி போட்டு வந்திருக்கிறோம். அவர்களுக்கென்று லோகாசாரம் என்னும் கொடுமையை சிருஷ்டித்திருக்கிறோம். இந்தக் கறையைத் துடைத்துவிடுங்கள்!” என்று சொன்னவரும் அவரேதான்.

“பகவானை ஆராதிப்பதிலேகூட எனக்கு முதன்மை, எனக்கு முதன்மை என்று போராடு கிறோம். இத்தகைய அடிமை வாழ்வில் அமிழ்ந்து விட்டோம்!” என்று வருந்தியவரும் அவர்தான்.
கால நடைமுறைக்கு ஒத்து வராத மூடத்தன மான சமூக பழக்க வழக்கங்களை எதிர்த்து இப்படியெல்லாம் குரல் கொடுத்தவர் வேறு யாருமல்ல; சுவாமி விவேகானந்தர்தான்!

‘‘இன்னும் நூறு வருஷம் இப்படியே போய்க் கொண்டிருந்தோமானால், நமது சமூகம் முழுவதும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியது தான்!”னு அவர் சொல்லி நூறு வருஷத்துக் கும் மேல ஆயிடுச்சு. இன்னும் நாம திருந்தலைங்கிறப்போ, நாமெல்லாம் புத்திஸ்வாதீனமுள்ள சமூகம்தானான்னு நம்மையே கேட்டுக்க வேண்டியதாயிருக்கு.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 9

‘சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’னார் மகாகவி பாரதி. பெரியவங்க காதுல எந்த அறிவுரையும் ஏறாது, வருங்கால சமூகமான குழந்தைகளையாவது திருத்தப் பார்ப்போம்னுதான் பாப்பாவுக்குப் பாடினார். என்னவோ போங்க... நாட்டு நடப்புகளையெல்லாம் கேள்விப்படறப்போ வேதனைதான் மிஞ்சுது. போதும் பாஸ், நீ பெரியவனா, நான் பெரியவனா, உன் சாதி பெரிசா, என் சாதி பெரிசாங்கிற வெட்டிப் பேச்செல்லாம் போன தலைமுறையோடு போகட்டும். நமக்கு அது வேணாம். நாம உருப்புடற வழியைப் பார்ப்போம். நாட்டின் வளர்ச்சிக்கு உபயோகமா நம்மாலானதைச் செய்வோம்.

பல விஷயங்கள்ல இன்னிக்கு இளை ஞர்கள்தான் சரியான பாதையில போயிட் டிருக்காங்க. இந்தச் சாதி விஷயத்துலயும் அவங்க சரியான ரூட்டைத்தான் தேர்ந்தெடுப்பாங்கங்கிறதுல எனக்குச் சந்தேகமே இல்லை!

- இன்னும் பேசலாம்

நகைச்சுவை மேதை சார்லி சாப்ளின், இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே…

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 9

1) தோல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்; அது உங்களின் தைரியத்தைப் போக்கி, உங்களையே முட்டாளாய் உணரச் செய்துவிடும்.

2) முதலில் உங்களை நேசியுங்கள். என்னை நான் நேசிக்கத் தொடங்கியபோது, எந்தச் சூழ்நிலையிலும் நான் சரியான இடத்தில், சரியான நேரத்தில் இருக்கிறேன் என்பதையும், எல்லாமே சரியான தருணத்தில் துல்லியமாக நடப்பதையும் உணர்ந்தேன். அதைத்தான் மற்றவர்கள் என் தன்னம்பிக்கை என்கிறார்கள்.

3) யாருக்கேனும், ஏதேனும் கெடுதல் செய்ய விரும்பினால்தான் உங்களுக்குச் சக்தி தேவை. மற்றபடி, நல்லதாக எதைச் செய்து முடிக்கவும் அன்பு ஒன்றே போதுமானது!

4) இந்தப் பொல்லாத உலகத்தில் எதுவுமே நிரந்தரமில்லை; நம் துயரங்களும்கூட!

5) கீழேயே பார்த்துக்கொண்டிருந்தால், அழகான வானவில் உங்கள் கண்களுக்குப் புலப்படாது!

பரிசு யாருக்கு?

பத்து இலக்கங்கள் கொண்ட எண் ஒன்றில், எத்தனை பூஜ்யங்கள் இருக்கிறதோ, அந்த எண்ணிக்கைதான் அந்த எண்ணின் முதல் இலக்கம்; எத்தனை 1 உள்ளதோ, அந்த எண்ணிக்கைதான் அந்த எண்ணின் இரண்டாம் இலக்கம்; இப்படியே தொடர்ந்து… எத்தனை 9 உள்ளதோ, அந்த எண்ணிக்கையே பத்தாம் இலக்கம் என்பதாக அமைந்துள்ளது. எனில், அந்தப் பத்து இலக்க எண் என்ன?

சென்ற இதழ் சவால் கேள்வி இதுதான். இதன் சரியான விடை: 6210001000.

இந்தச் சரியான விடையை குரல் பதிவாகவும் எஸ்.எம்.எஸ். வழியாகவும் அனுப்பி இருந்தவர்களில் கோவை - செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த, ப்ளஸ்டூ மாணவரான வசுமனன் என்ற வாசகருக்கு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய ‘மேலே, உயரே, உச்சியிலே’ புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

சவால்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 9கீழே, ஒன்றின் கீழ் ஒன்றாக நான்கு வரிசைகளில் கொடுக்கப்பட்டுள்ள எண்களைக் கவனியுங்கள். அவை என்ன ஒழுங்குமுறையில் அமைந்துள்ளன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?

1

11

21

1112


சிரமம் வேண்டாம். நானே சொல்லிவிடுகிறேன். முதலில் ஒரு ஒன்று உள்ளது. இதையே வார்த்தைகளில் சொல்வதற்குப் பதிலாக 11 (ஒன்று ஒன்று) என அடுத்த வரியில் கொடுத்துள்ளோம். இந்த வரியில் இரண்டு ஒன்று உள்ளதல்லவா? எனவே, அதை 21 (இரண்டு ஒன்று) என மூன்றாவது வரியில் தந்துள்ளோம். இதில் ஒரு ஒன்றும், ஒரு இரண்டும் உள்ளது. அதைத்தான் அடுத்த வரியில் எண்களாக 1-1, 1-2 எனத் தந்துள்ளோம். இப்படியே தொடர்ந்து எண்களை (1, 2, 3 என ஏறு வரிசையில்) அவற்றுக்கான எண்ணிக்கையோடு சேர்த்து எழுதிக்கொண்டே போங்கள். பன்னிரண்டு வரிசை முடிந்ததும், 13-வதாக நீங்கள் எழுதப்போகும் எண், தனிச்சிறப்பு வாய்ந்த ஓர் எண்ணாக அமையும். அந்த எண் என்ன?

அதன் தனிச் சிறப்பு என்ன?

044-66802923 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, ‘ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு’ என்று சொல்லிவிட்டு, உங்கள் குரலிலேயே உங்கள் பதிலைப் பதிவு செய்யுங்கள். அல்லது, 98406 67184 என்ற எண்ணுக்கு மெஸேஜ் தட்டிவிடுங்கள்; அல்லது வாட்ஸப்புங்கள்! குரல் பதிவாகக்கூட வாட்ஸப்பில் அனுப்பலாம். பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism