Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம்! - 35

மனிதனும் தெய்வமாகலாம்! - 35
பிரீமியம் ஸ்டோரி
மனிதனும் தெய்வமாகலாம்! - 35

நீயும் பிரம்மம்... நானும் பிரம்மம்!பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

மனிதனும் தெய்வமாகலாம்! - 35

நீயும் பிரம்மம்... நானும் பிரம்மம்!பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

Published:Updated:
மனிதனும் தெய்வமாகலாம்! - 35
பிரீமியம் ஸ்டோரி
மனிதனும் தெய்வமாகலாம்! - 35

னிதனின் மனம் மிகவும் விசித்திரமானது. அது ஒரு சமயம் இருந்ததைப் போல, அடுத்த விநாடி இருப்பது இல்லை.

ஒருவன் நடந்துபோய்க் கொண்டிருந்தான். கைகளில் காசு எதுவும் இல்லை.இவன் வறுமையைத் தீா்ப்பதைப்போல, இவனுக்கு முன்னால் ஐம்பதடி தூரத்தில் ஒரு பண மூட்டை இருந்தது. ஆனால்...
அது தெரியாத அந்த மனிதனோ, ‘வீதியோ இப்போது காலியாக இருக்கிறது. ஒரு ஐம்பதடி தூரம் நாம் கண்ணை மூடிக்கொண்டு நடந்து பார்க்கவேண்டும். கண்ணை மூடிக் கொண்டு வீதியில் நடந்தேன் என்று நண்பா்களிடம் பெருமையாகச் சொல்லலாம்’ எனத் தீா்மானித்து, கண்ணை மூடிக்கொண்டு நடந்தான். பணமூட்டை இருந்த இடத்தைத் தாண்டி சற்று தூரம் போனதும் கண் ணைத் திறந்தான். மகிழ்ச்சி தாங்கவில்லை அவனுக்கு. ‘ஹ! கண்ணை மூடிக்கொண்டு வீதியில் நடப்பேனாக்கும்’ என்று தற்பெருமை பேசியபடியே போய்விட்டான்.

இது கதையில்லை. நடப்பு உண்மை இது. இதைச் சொல்கிறது கைவல்லிய நவநீதம்.

“வினைகள் அனைத்தையும் வேரோடு வீழ்த்தும் ஞான வழியிருந்தும், தேவா்கள் உட்பட அனைவரும் படுகுழியில் விழுந்து மறைகின்றாா்களே. இது ஏன்?” எனச் சீடன் கேட்கிறான். குரு பதில் சொல்கிறார்.

அழிவிலாத தற்பதந்தனை மைந்தனே!
    அக முகத்தவர் சேர்வார்
வழி நடப்பவர் பராமுகம் ஆகினால்
    மலர்ந்த கண் இருந்தாலும்
குழியில் வீழ்வர் காண் அப்படி வெளிமுகம்
    கொண்டு காமிகள் ஆனோர்
பழி தரும் பிறவிக்கடல் உழலுவார்
    பரகதி அடையாரே!

(சந்தேகம் தெளிதல் படலம்-53)


அகக்கண் கொண்டு பார்ப்பவா் பரப்பிரம்ம நிலை அடைவார்; அது இல்லாதவா்கள், கண்கள் திறந்து இருந்தாலும் குழியில்தான் விழுவா். அவ்வாறு புறக்கண்களால் உலகத்தைப் பார்த்து, உலகத்தில் உள்ள பொருட்களை அனுபவிப்பதே வாழ்க்கை என்ற நோக்கம் உடையவா்கள், மறுபடியும் மறுபடி யும் பிறந்துதான் ஆகவேண்டும். பழிபாவங்களை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்கிறார் குருநாதா்.

மனிதனும் தெய்வமாகலாம்! - 35

இப்பாடலில் ‘வெளிமுகம் கொண்டு காமிகள் ஆனோர்’ எனும் வார்த்தைகள் மிகவும் பொருள் பொதிந்தவை. அதாவது... பலவற்றையும் பார்ப்பது தவறு இல்லை. அவை அனைத்தின் மீதும் விருப்பம் கொண்டு, எப்படியாவது அவற்றை அடைந்தே தீருவது என வெறிபிடித்து அலைவதுதான் தவறு.

துயரங்களில் இருந்து தப்பிப் பிழைக்கமுடியாது என எச்சரிக்கிறது கைவல்லியநவநீதம். ‘காமிகள்’என்ற சொல்லின் பொருள் இதுவே.

‘பளிச்’சென்று சொல்வதானால், பழங்களை விட்டுப் பாஷாணத்தை விரும்பி ஓடிக் கொண்டிருக்கிறோம். அதாவது, பழங்களின் இனிமையைப் பாஷாணத்தில்-விஷத்தில் தேடிக்கொண்டிருக்கிறோம். கண்களைத் திறந்து கொண்டே குழியில் விழுகிறோம்.

பாா்ப்பது எல்லாம் பரமனின் வடிவம் என்று, எவ்வளவுதான் படித்தாலும்-கேட்டாலும் பக்கு வம் முளைக்கமாட்டேன் என்கிறது.

இதற்காக வருந்த வேண்டாம்! ‘எத்தனை விதங் களில் கற்கினும் கேட்கினும் என் இதயம்தான் ஒடுங்கவில்லையே’ எனத் தாயுமான ஸ்வாமிகளே கதறியிருக்கும்போது, நாம் எந்த மூலை?
“அதெல்லாம் சாரி ஸார்! நல்லது கெட்டது எல்லாம் கடவுள் படைப்புதானே? அந்த சாமி ஏன் அப்படிப் படைத்தது?” - தலைசிறந்த அறிவாளி களாக நம்மை நினைத்துக் கொண்டிருக்கும் நாம் அனைவரும் அகப்பட்டுக் கொள்வது இந்த இடத்தில்தான்.

நல்லது-கெட்டது என்று தெரிகிறது. இதன் மூலம் பகுத்தறியும் உண்மை புலப்படுகிறது. அடுத்தது, அவை எல்லாம் கடவுள் சிருஷ்டி என்றும் தெரிகிறது. இதன்மூலம் வேதாந்தம் தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதும் வெளிப் படுகிறது. இவ்வளவு தெரிந்திருந்தும், பிரச்னை ஏன் வருகிறது? விளக்கும் இருக்கிறது; மின்சாரமும் இருக்கிறது. பிறகு ஏன் வெளிச்சம் வரவில்லை? ஸ்விட்சைப் போடவில்லை. அதுதான் காரணம். அதுபோல...

நல்லது-கெட்டது தெரிகிறது. அவையெல்லாம் கடவுளின் சிருஷ்டி என்றும் தொிகிறது. ஆனால், அனுபவத்தில் வரமாட்டேன் என்கிறது. கடவுளைப் பற்றிய அடிப்படை உண்மையை உணா்ந்துகொள்ள இயலவில்லை.

ஸ்வாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸா் இதற்கு ஓா்அற்புதமான உதாரணக் கதை சொல்லுவார்.

அனைத்தும் பிரம்மம் என்று பாடம் படித்த ஒரு மாணவன் வீதியில் போய்க்கொண்டிருந்தான். எதிரில் பட்டத்து யானை மதம்பிடித்து சீறியபடி வந்துகொண்டிருந்தது.

யானையின் மேலிருந்த மாவுத்தன், வீதியின் நடுவில் போய்க்கொண்டிருந்த சிறுவனைப் பார்த்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ஏய்! ஏய்! யானைக்கு மதம் பிடித்து விட்டது. ஓடு! ஓடு! ஓரமாக ஓடு!” எனக் கத்தினார்.

பிரம்மத்தைப் பற்றிப் பாடம் படித்திருந்த மாணவனோ, ‘நானும் பிரம்மம். யானையும் பிரம்மம். நான் ஏன் பயந்து ஓடவேண்டும்?’ என எண்ணி ஓடாமல் இருந்தான். ஆனால், யானை; சிறுவனை நெருங்கி, துதிக்கையால் பிடித்துத் தூர வீசி எறிந்தது.

கீழே விழுந்த சிறுவன் ஒருவழியாகச் சமாளித்து, குருநாதரிடம் போய், ‘‘பிரம்மம் பிரம்மத்தைத் தாக்கியது ஏன்?” என விரிவாகக் கூறி முறை யிட்டான். குருநாதரோ, ‘‘சரியப்பா! பாகன் என்ற பிரம்மம் உன்னை விலகச் சொல்லி எச்சாித்தது அல்லவா?அந்தப் பிரம்மத்தின் வார்த்தையை நீ ஏன் கேட்கவில்லை?”என்றார்.

பிரம்ம தத்துவத்தை அந்த மாணவன் விபரீதமாகப் புரிந்துகொண்டு, ஞானம் போதித்த குருநாதரிடமே விபரீதமாக வாதம் செய்ததைப் போலத்தான், நாமும் ஏதோ படித்துவிட்டு, யார் என்ன நல்லது சொன்னாலும் வாதம் செய்வதில் முனைகிறோமே தவிர, அடிப்படை உண்மையை உணரவில்லை. அறியாமை என்கின்ற யானை, நம்மைத் தூக்கிப் போட்டுவிடுகிறது.

ஆகையால், `நல்லது-கெட்டது எல்லாமே கடவுளின் சிருஷ்டிதானே' என்ற வாதம், வாதத்துக்கு வேண்டுமானால் பயன்படுமே தவிர,  வாழ்க்கைக்கு உதவாது. இத்தகவலை அடுத்த பாடலில் சொல்கிறது கைவல்லிய நவநீதம்.

சிறந்த நன்மையும் தீமையும் ஈசனார்
    செய்விக்கும் செயல் அன்றோ?
பிறந்த சீவர்கள் என் செய்வார்?அவர்கள் மேல்
    பிழை சொலும் வகை ஏதோ?
துறந்த தேசிக மூர்த்தியே என்றிடில்
    சுருதி நூல் பொருள் மார்க்கம்
மறந்த மூடா்கள் வசனிக்கும் பிராந்தி காண்!
    மைந்தனே! அது கேளாய்!

(சந்தேகம் தெளிதல் படலம்-54)


நன்மையும் தீமையும் இறைவன் படைப்பு அல்லவா? அப்படியிருக்க ஜீவா்கள் செய்யும் செயல்களுக்காக, அவா்களைக் குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? - எனும் கேள்விக்குக் குருநாதா் பதில் சொல்லத் தொடங்குகிறார்.

திகழ்ந்த ஈசனார் சிருட்டியும் சீவனார்
    சிருட்டியும் வெவ்வேறே
சகந்தனில் பொது ஈசனார் சிருட்டிகள்
    சராசரப் பொருள் எல்லாம்
அகந்தையாம் அபிமானங்கள் கோபங்கள்
    ஆசைகள் இவை எல்லா(ம்)
நிகழ்ந்த சீவனார் சிருட்டிகள் ஆகும் காண்!
    நிமலனார் செயல் அன்றே.

    (சந்தேகம் தெளிதல் படலம்-55)


ஈசனுக்கு விருப்பு-வெறுப்பு என்று எதுவும் கிடையாது. ஆனால், நமக்கோ அகந்தை, வெறுப்பு-விருப்பு, கோபம் - என அனைத்துமே மண்டிக் கிடக்கின்றன.  அதாவது... தெய்வமாகத் திகழவேண்டிய நாம், அகந்தை முதலான தீய குணங்களால், கீழான நிலைக்குப் போய் விட்டோம் என்பது பொருள்.

தீமையை விளக்கி நன்மையை உணா்த்து வதற்காக உண்டானவற்றை, முறையில்லாமல் உபயோகித்துக்கொண்டு, முட்டி மோதிக் கொண்டிருக்கிறோம்!

விளக்கை வைத்துக்கொண்டு இருளில் தேடிக் கொண்டிருக்கிறோம். இதில் விசேஷம்... எதைத் தேடுகிறோம் என்பதே தொியாமல் தேடிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான்.

இதையும்விட வருத்தப்பட வேண்டிய விஷயம், நினைவுகளே மனிதனைக் கொல்லும். நமக்குப் புரிகிறதோ இல்லையோ இதுதான் உண்மை! 

- தொடரும்     

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism