பிரீமியம் ஸ்டோரி
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
##~##
ண்களுக்கான அடுத்த நிலைப் பயிற்சியைப் பார்ப்பதற்கு முன்னதாக... நம் சான்றோர்கள், கண்களின் அவசியத்தை உணர்த்துவதற்குப் பல விஷயங்களிலும் உதாரணமாகக் கண்களைச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.  

ஒரு விஷயத்தை, ஆணித்தரமாகவும் உறுதியாகவும் பளிச்சென்று சொல்வதற்கு, பூடகமாகச் சொல்கிற உத்தியைக் கையாண்டனர், ரசனை மிக்க நம்முடைய முன்னோர்கள். அதாவது, நேரடியாகச் சொல்லாமல், உதாரணத்தின் மூலம் விளக்குவது. புறக்கணிப்பையும், அதனால் ஏற்படுகிற அவமதிப்பையும், அந்த அவமரியாதையால் விளைகிற மன வேதனையையும், அந்த வேதனை தருகிற வலியையும் சொல்லி மாளாது! இப்படிப் புறக்கணிக்கிறவர்களை, பாகுபாடு பார்த்துப் பழகுபவர்களை, 'அவருக்கு ஒரு கண்ணுல வெண்ணெய்; ஒரு கண்ணுல சுண்ணாம்பு!’ என்று ஒரு சின்ன உவமையின் மூலம், மிகச் சுலபமாகச் சுட்டிக் காட்டிவிடுவார்கள்.

இந்தப் புறக்கணிப்புக்கும் கண்களுக்கும் என்ன சம்பந்தம்?! இந்த உலகில் எவரேனும் கண்ணில் வெண்ணெய் தடவிக் கொள்கிறார்களா, என்ன? அல்லது, ஆள்காட்டி விரலால் சுண்ணாம்பை எடுத்து, வெற்றிலையில் மெள்ளத் தடவுவதுபோல, கண்ணுக்குள் தடவிக் கொள்கிறார்களா? இல்லைதானே!

கண்களில் வலது, இடது இருக்கலாம். ஆனால், அவற்றைப் பகுத்துப் பிரித்துப் பார்க்கிறோமா? 'எனக்கு என்னுடைய இடது கண்ணைத்தான் ரொம்பப் பிடிக்கும்; வலது கண்ணை ஓரளவுக்குதான் பிடிக்கும்’ என்று யாராவது சொல்வதுண்டா? அதாவது, கண்களில் பாகுபாடுகள் கிடையாது. அதனால்தான், மகனையும் மகளையும் சமமாகப் பாவிக்கும் தகப்பன், ''எனக்கு என் பையனும் பெண்ணும் என் இரண்டு கண்கள் மாதிரி!'' என்று சொல்லிச் சிலாகிப்பான்.

கண்களின் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் அறிந்துகொண்டால், அந்தக் கண்களை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம்; பராமரிக்கலாம் என்கிற வழிமுறையைத் தேடுவதில் ஆர்வம் காட்டத் துவங்கிவிடுவோம், இல்லையா?

சரி... கண்களின் அடுத்த நிலைப் பயிற்சியைப் பார்ப்போமா?

வழக்கம்போல், வஜ்ராசன நிலையில் அமர்ந்து கொள்ளுங்கள். கடந்த முறை, இரண்டு கைகளையும் சேர்த்து, கட்டைவிரல்களையும் இணைத்துக் கொண்டு, பக்கவாட்டுப் பகுதிகளில் நகர்த்தி, கண்களை மட்டும் அதனுடன் பயணிக்கச் செய்தோம். அதே போல், நகங்களை இணைத்துக்கொண்டு, தொடையில் இருந்து மேற்பகுதிக்கும், மேலிருந்து தொடைப் பகுதிக்குமாகக் கைகளைக் கொண்டு செல்ல, கண்களை அதன்பின்னேயே ஓடவிட்டோம்.

வாழ்க வளமுடன்!

இனி... தொடைக்குக் கீழே இரண்டு கைகளையும் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு கைகளின் கட்டைவிரல்களையும் இணைத்து வைத்து, அதன் மேல் உங்களின் பார்வையைச் செலுத்துங்கள். இடது தொடையில் இருந்து மெள்ள வலது கையின் தோள்பட்டைக்குக் கைகளைக் கொண்டு செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது, உங்கள் பார்வையும் அந்த நகங்களுக்குப் பின்னேயே செல்லவேண்டும் என்பது முக்கியம். வலது தோள்பட்டைக்கும் மேலே கொண்டு சென்று, பிறகு... மீண்டும் தொடைப் பகுதிக்கு கைகளைக் கொண்டு வரவேண்டும். இப்படியாக ஐந்து முறை செய்துவிட்டு, வலது தொடையில் இருந்து இடது கையின் தோள்பட்டைக்கும் மேலே கொண்டு சென்று, தொடைப் பகுதிக்கு வந்து செல்வதை ஐந்து முறை செய்யுங்கள்.

இந்த நிலைப் பயிற்சிகளின் பெருக்கல் குறியை நினைவில் வைத்துக் கொண்டால், எப்படிப் பயிற்சி செய்வது என்பதை மனதில் பதித்துக் கொள்வது சுலபமாகிவிடும். இந்த இரண்டு நிலைப் பயிற்சிகளிலும் கழுத்து மட்டும் லேசாக அசையலாம். மற்றபடி, உடலின் எந்தப் பாகத்தையும் அசைக்காமல் இருப்பதே உத்தமம்.  

வாழ்க வளமுடன்!

'ஆனந்தா, என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன். இதுல எப்பவுமே ஆனந்தக் கண்ணீரைத்தான் நான் பார்க்கணும்’ என்கிற வசனத்தை, வெறும் திரைப்பட வசனமாக, வெளிச்சம் விரியும் காட்சியாக மட்டுமே பார்க்கவில்லை நாம். இதைச் சகோதர- சகோதரியின் பாசத்தின் மிகப் பெரிய அடையாளமாக, ஆழ்ந்த அன்பின் உணர்ச்சிக் குவியலாக, அடர்த்தியான பாசத்தின் மெல்லிய பகிர்தலாகத்தானே பார்த்தோம்; உணர்ந்தோம்?!

உணர்தலே தெளிதலின் முதல் படி! கண்களின் அவசியத்தையும் அது தருகிற பேரொளியின் அழகையும் உணர்ந்துகொண்டால், கண்களைப் பாதுகாக்கிற காவலனாக நாம் இருப்போம்.

'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்றொரு உவமை, நம் தேசத்தில் உண்டு.

மரியாதையையும் உரிய அன்பையும் சக மனிதர்களுக்கு உரிய நேரத்தில் வழங்குவது அவசியம். அதேபோல், அந்த மரியாதையையும் அன்பையும் அக்கறையையும் நம் கண்களுக்கும் வழங்க வேண்டியது முக்கியம். சூரியனைத் தரிசித்துச் செய்கிற நமஸ்காரம்கூட, ஒருவிதத்தில் கண்ணுக்கு மிகச் சத்தாக, அதிக பலம் சேர்ப்பதாக அமையும்; நம் கண்களைப் பேரொளியுடன் திகழச் செய்யும்.

ஆகவே, கண்ணுக்கான பயிற்சியைக் கண்ணும் கருத்துமாக கவனித்துச் செய்யவேண்டும், அன்பர்களே!

- வளம் பெருகும்
தொகுப்பு: ஆர்.கே.பாலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு