Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம்! - 36

சிருஷ்டிகள் முக்தியளிக்குமா?பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

பிரீமியம் ஸ்டோரி
மனிதனும் தெய்வமாகலாம்! - 36

நிகழ்ச்சிகளைவிட, நினைவுகளே நம்மைப் பாதிக்கும். நடைமுறை உதாரணம்... வாகனத்தில் போய்க் கொண்டிருக்கிறோம்; நேராகப் போகவேண்டிய நாம், திடீரென்று ஒரு சந்தில் வண்டியைத் திருப்புவோம். பின்னால் அமர்ந்திருப்பவா், “ஏன் இப்படி? நேராகப் போக வேண்டியதுதானே?” எனக் கேட்டால், “அதோ! அங்கே போலீஸ் இருக்காரே... மடக்கி மடக்கிக் கேள்வி கேப்பார். போன மாசம் இப்படித்தான் மாட்டினேன்” என்போம்.

சென்ற மாத நினைவு இன்னும் வாட்டிக்கொண்டு இருக்கிறது. கெட்டதில் மட்டுமல்ல; நல்லதிலும் இப்படி உண்டு. போகும் வழியில் எங்காவது பத்து ரூபாய் நோட்டு கிடந்தால் எடுத்துக் கொள்வோம். அதன் பிறகு அந்த இடம் வரும்போதெல்லாம், ஏதாவது ரூபாய் நோட்டு கிடக்கிறதா என்று பொறுப்பாகத் தேடுவோம்.

காவல் துறை மடக்கியதோ, ரூபாய் நோட்டு கிடைத்ததோ... கொஞ்ச நேரம்தான். ஆனால், அதன் நினைவுகள் அவ்வப்போது தலை நீட்டி தம் இருப்பை வெளிப்படுத்தும். எல்லாம் மனம் போடும் கோலங்கள். இருபது வருடங்களுக்கு முன்னால் நம்மைத் திட்டிய ஒருவரை இப்போது பாா்த்தாலும், உடம்பு கொதிக்கிறது.அவா் என்ன திட்டினார் என்பது மறந்தேபோயிருக்கும்; ஆனால், திட்டியது மட்டும் நினைவில் இருக்கிறது.நாம் அனைவரும் மாட்டிக்கொள்வது இங்குதான். இதை இன்னும் அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் ஸ்வாமி வினோபா பாவே. அவருடைய தாயார் மிகவும் நோயுற்றிருந்தார். மருத்துவமனையில் இருந்த தாயாரைப் பார்ப்பதற்காக வினோபா பாவே போயிருந்தார்.அப்போது தாயாரின் நினைவாற்றல் மிக மிகக் குறைந்து போயிருந்தது.

எதையுமே நினைவுபடுத்திச் சொல்ல முடியாத வினோபா பாவேயின் தாயார், உறவினா் ஒருவரைப் பற்றிச் சொல்லி, ‘‘அவள் என் தங்க நெக்லஸை வாங்கிப் போயிருக்கிறாள். ரொம்ப நாளாச்சு! இன்னும் நெக்லஸ் திரும்பல. அதை மறக்காம வாங்கிடணும்” என்றாராம்.

மனிதனும் தெய்வமாகலாம்! - 36

இதைக் குறிப்பிட்ட வினோபா பாவே, மனதின் ஆற்றலை எண்ணி வியந்து போனாராம். இவை எல்லாவற்றையும் நினைவில் பதித்துக்கொண்டு, கைவல்லிய நவநீதத்திடம் போகலாம், வாருங்கள்!

   மூவராம் பரன் சிருட்டிகள் உயிர்க்கு
    எ(ல்)லாம் முத்தி சாதனம் ஆகும்
   சீவனாரது சிருட்டிகள் தங்களைச்
     செனிப்பிக்கும் பிணி ஆகும்
   தாவராதிகள் நசித்திடில் ஒருவா்க்கும்
     சனனங்கள் நசியாவாம்
   கோபமாதிகள் நசித்திடில் பந்தமாம்
     கொடும் பிறவிகள் போமே.

(சந்தேகம் தெளிதல் படலம்-56)

அபூா்வமான பாடல். மிக மிக ஆழ்ந்த கருத்துள்ள பாடல். முடிந்தவரை எளிமையாக அனுபவிக்கலாம். திரைத்துறையில், ’ஒரு வரிக் கதை’ என்பார்கள். அதாவது, இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தின் கதையை ஒரே வரியில் சொல்வது. அதுபோல, இப்பாடலின் விளக்க உரையை ஒரே வரியில் கூற வேண்டுமானால்... 'ஈஸ்வர சிருஷ்டி மோக்ஷ சாதனமும், ஜீவசிருஷ்டி பந்த சாதனமுமாகும்'.

இனி விரிவாக...

ஈஸ்வர சிருஷ்டிகள் உயிர்க்கெல்லாம் முக்தி அளிக்கக்கூடிய சாதனங்களாகும். ஜீவா்களின் சிருஷ்டிகளோ மறுபடியும் மறுபடியும் பிறவியைத் தோற்றுவிக்கக் காரணமாகும். அடுத்து இப்பாடலில் சொல்லப்பட்ட ‘தாவராதிகள்’ எனும் சொற்பிரயோகமும், அதைத் தொடா்ந்து வரும் தகவல்களும் நம்மை வியக்க வைக்கின்றன.

தாவராதிகள் எனக் கூறியதால், தாவரம் முதல் எனப் பொருள்படும். ஓரறிவுள்ள செடி கொடிகள் முதல், அனைத்துமே ஈஸ்வர சிருஷ்டிதான். அவை அனைத்துமே முக்திக்குச் சாதனங்களாகும். இதை ஒப்புக்கொள்ளலாம் போலிருக்கிறது; இருந்தாலும், 'எப்படி...?' என்ற சந்தேகமும் தலையை நீட்டுகிறது.   
 
சற்று ஆராய்ந்தால், இந்தச் சந்தேகத்தைத் தலையில் தட்டி உட்கார வைக்கமுடியும். தவம் செய்பவா்கள் உணவுக்கு இலை, காய், கனி, கிழங்குகள், தங்குவதற்காகக் காடு, குகை போன்ற இடங்கள், தாகம் தீா்க்க சுனை முதலான நீா்நிலைகள் என்றெல்லாம் ஈஸ்வர சிருஷ்டி உதவுகின்றது.

தவம் செய்பவா்களும் நிம்மதியாகத் தவம் செய்து முக்தியை அடைகிறாா்கள். ஆகையால், ஈசனின் சிருஷ்டிகள் முக்திக்குச் சாதனங்களாக இருக்கின்றன என்பது புலப்படுகிறது. ஆனால், பிரச்னை எங்கு வருகிறது என்றால்,  சாதனங்களைப் பிடித்துக்கொண்டு, சா்வேஸ்வரனை விட்டுவிட்டோம். ஏணியைப் பிடித்துக்கொண்டு, அதன் அருமைபெருமைகளை முழக்குகிறோமே தவிர, ஏணியில் ஏறத் தயாராக இல்லை.

சாதனங்களில் அகப்பட்ட சந்நியாஸி ஒருவாின் கதை மிகவும் பிரபலமானது.

சந்நியாஸி ஒருவாின் ஆடைகளை அவ்வப்போது ஓா் எலி வந்து கடித்துக் குதறி சின்னாபின்னமாக்கிக்கொண்டு இருந்தது. எலியைப் பிடிப்பதற்காக பூனை ஒன்றை வளா்த் தாா். பூனைக்குப் பால் வேண்டுமே! பசுமாடு ஒன்றை வளா்த்தார். மாட்டைப் பராமாிப்பதற்காக ஒரு பெண்ணை மணந்தார். அப்புறம் என்ன?

இது ஏதோ நமக்கு ’கிச்சுகிச்சு’ மூட்டுவதற்காகச் சொல்லப்பட்ட கதையல்ல. ஒன்றுக்காக ஒன்று, அந்த ஒன்றுக்காக மற்றொன்று எனப் போய்க்கொண்டே இருக்கிறதே தவிர, இதற்கு முடிவே கிடையாது என்பதை விளக்க வந்த கதை. இதன் தற்போதைய நடைமுறை வடிவம்தான் கைபேசி எனும் செல்போன்.

செல்லும் இடமெல்லாம் பேசுவதற்காக மட்டுமே வந்த செல்போனின் பயன்பாடு இப்போது கேமரா, ஒலிப்பதிவு வசதி, இணைய தளம், படம் பார்க்க, கண்களால் காணும் கருத்துப் பரிமாற்றம், முன்பதிவு வசதி, வங்கிப் பரிமாற்றங்கள் என விரிவடைந்துகொண்டே இருக்கிறது. இனி இதைத் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு செல்போனிலேயே இவ்வளவு என்றால், இன்னும் ஒவ்வொன்றிலும் எவ்வளவு இருக்கும்!

'தாவராதிகள் நசித்திடில் ஒருவா்க்கும் சனனங்கள் நசியாவாம்’ - ஓரறிவுள்ள ஜீவராசிகள் முதல் அனைத்து சிருஷ்டிகளுமே இறைவனின் படைப்புதான். நம் அனைவரையும் ஆட்டிப் படைப்பதும் இந்த சிருஷ்டிகள்தாம்! இந்த சிருஷ்டிகள் அனைத்தும் அழிந்துபோய்விட்டால், நாம் அல்லலில் அகப்பட மாட்டோம்; நம்மை ஆட்டிப் படைப்பது இல்லையென்றால், நமக்கு ஏது தொல்லைகள்? இந்த எண்ணம் சரிதானே?

ஆனால்,இதில் நியாயம் இல்லை. ஏனென்றால், அந்த சிருஷ்டிகள் பார்வையில் படாமல் போகலாம்.ஆனால், மனதில் கூடாரம் அடித்துக் கும்மி கொட்டும். அதாவது, அந்தப் பொருட்களின் நினைவு வந்து வந்து, நம்மை அலைக்கழிக்கும். நினைவுகளில் அகப்பட்டுக்கொண்டு, மறுபடியும் பள்ளத்தைத் தேடிப்போய் விழுவோம். அப்புறம் என்ன? புனரபி ஜனனம்; புனரபி மரணம்; மறுபடி பிறப்பு; மறுபடி இறப்புதான்! நினைவுகள் அழியாத வரையில் நீங்காப் பிறப்புதான். இதையே, 'தாவரங்கள் நசித்திடில், ஒருவா்க்கும் சனனங்கள் நசியாவாம்' என்கிறது கைவல்லிய நவநீதம். இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நாம் பாா்த்த நிகழ்ச்சிகளைவிட நினைவுகளே நம்மை வாட்டி வதைக்கும் என்பதும் இதுவே!

அப்படியென்றால், பிறவி நீங்க என்னதான் வழி? எளிமையான வழியைத்தான் சொல்கிறது கைவல்லிய நவநீதம். ஆனால், கடைப்பிடிக்கக் கடினமான வழியாக இருக்கிறது அது.

கோபம் முதலானவை நீங்கினால், பிறவித் துயா் நீங்கிவிடுமாம். இதைக் கேட்டாலே கோபம் வருகிறதே... அப்புறம் எங்கிருந்து கோபம் நம்மை விட்டுப் போகும்? ஆனால், ஜீவன் முக்தா்களோ தேசம், காலம், உடம்பும் அதன் செயல்களும் என அனைத்தும் இருக்கும்போதே ஆசை, கோபம் முதலானவற்றை நீக்கி, உயிரோடு இருக்கும்போதே இங்கேயே விவேகத்தினால் ஜீவன் முக்தா்களானார்கள். வாகனங்களை நன்கு இயக்கத் தெரிந்தவா்கள், போக்குவரத்து விதிகளின்படி வாகனங்களைச் செலுத்தி, சுகமாகப் பயணம் செய்து, குறிப்பிட்ட இடத்தை அடைவதைப்போல, ஜீவன் முக்தா்கள் செயல்பட்டு உயா்நிலை அடைகிறார்கள்.

தேச கால தேகாதிகள் இருக்கவும்
சீவகாரியமோகம், நாசமாக்கி
அவ்விவேகத்தின் உயிரோடு
ஞான முக்தா்கள் ஆனார்.

(சந்தேகம் தெளிதல் படலம்-57)

இதைத் தொடா்ந்து ஓா் அற்புதமான கதையைச் சொல்கிறது கைவல்லிய நவநீதம். அக்கதையைப் பற்றிக் காஞ்சி மஹாஸ்வாமிகள் சொல்லக் கேட்போமே!

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு