Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 10

யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

பிரச்னை... பிரச்னை... பிரச்னை... எல்லா வீடுகள்லேயும், எல்லா அலுவலகங்கள்லேயும், எல்லா இடங்கள்லேயும் உறவுக்காரங்க, ஃப்ரெண்ட்ஸுங்களுக்குள்ளே ஏதாவது ஒரு பிரச்னை ஓடிக்கிட்டுதான் இருக்கு. பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம் என்னன்னு பார்த்தோம்னா, யூகங்களாத்தான் இருக்கு. “அவன் போக்கே சரியில்ல சார்! அவன் பார்வையிலேயே ஒரு திமிர் இருக்கு! அவளும் அவ மூஞ்சியும்! தான் என்னவோ பெரிய எலிசபெத் ராணின்னு மனசுக்குள்ளே நினைப்பு!” அப்படின்னெல்லாம், நாமென்னவோ பெரிய உளவியல் நிபுணர் மாதிரி ரொம்ப சுலபமா அடுத்தவரைப் பற்றிய ஒரு கணிப்புக்கு வந்துடறோம்.

நான் முந்தி வேலை செஞ்ச ஒரு கம்பெனில எனக்கு மேலதிகாரியா இருந்தவர் சுப்புராமன்கிற ஒரு பெரியவர். ரொம்ப சீனியர் பெர்சன். முதலாளியே அவர்கிட்டே ஏதாவது விளக்கம் கேக்கணும்னாலும், தானே எழுந்து அவர் அறைக்குப் போய்ப் பேசுவார். அவ்வளவு மரியாதையான மனுஷன் அவர். அவருடைய அனுபவத்துக்கும் திறமைக்கும் முன்னாடி நான் வெறும் தூசுங்கிற நினைப்பு எனக்கு உண்டு.

காரிடார்ல சிங்கம் போல கம்பீரமா அவர் நடந்து வரும்போது எதிரே செல்லவே எனக்குத் தயக்கமா இருக்கும். சட்டுனு பக்கத்துல இருக்கிற ஒரு டேபிள்ல உட்கார்ந்து வேலை செஞ்சுட்டிருக் கிற நண்பன்கிட்டே ஏதாவது சந்தேகம் கேட்கிற மாதிரி திரும்பி நின்னுடுவேன். அவர் போனதும் நான் என் வழியே போவேன்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 10

ஒருநாள் வசமா அவர்கிட்டே சிக்கிட்டேன். எதிரே அவர் வர்றதைப் பார்த்து, வழக்கம்போல் நான் திரும்பி நிக்கவும், அவர் என் அருகில் வந்து, “என்ன பிரச்னை உனக்கு? கெட்டிக்காரன், புத்திசாலி, சுறுசுறுப்பானவன், வேலையில சின்ஸியரா இருக்கிறவன்னு முதலாளி உன்னைப் பத்தி ஆஹா, ஓஹோன்னு சொல்றாரு. எனக்கும் அதுல சந்தேகம் இல்லை. ஆனா, உனக்கேத்த மரியாதையும் இடமும் இங்கே கிடைக்கலைன்னு ஃபீல் பண்றியா? இல்ல, சீனியர்ங்கிற  என்னை மாதிரி சில கிழங்கள் ஒதுங்கி இடம் விடாம, நம்ம வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையா இருக்குதுங்களேன்னு நினைக்கிறியா? என் தலையைக் கண்டபோதெல்லாம் என்னை இன்சல்ட் பண்ற மாதிரி முகத் தைத் திருப்பிக்கிறியே, ஏன்? அத்தனை வெறுப்பா உனக்கு என் மேல?”ன்னு நிறுத்தி நிதானமா அவர் கேட்டதும் எனக்கு பக்குனு ஆயிருச்சு.

“ஐயா...”ன்னு பதறிட்டேன். “சொல்லுப்பா... பதறாம சொல்லு! நான் உன்னை ரொம்ப நாளா கவனிச்சிட்டு தான் வரேன். நானா உன்னைப் பத்தின முன்முடிவுக்கு வந்துடக் கூடாதுன்னுதான் உங்கிட்டேயே கேக்கறேன். தைரியமா சொல்லு!”ன்னார்.

“இல்லை சார்! நீங்க ரொம்பப் பெரியவங்க. உங்க முன்னே நிக்கக்கூட எனக்குத் தகுதியில்லை. உங்க மேல எனக்கு இருக்கிறது ஒரு மரியாதை கலந்த பயம். அதனாலதான் ஒதுங்கி நிக்கறேன்”னு பவ்வியமா சொன்னேன்.

சிரிச்சார். “மரியாதை மனசுல இருந்தா போதும்!

இங்கே நீயும் வேலைக்காரன்; நானும் வேலைக் காரன். யாரும் உசத்தி தாழ்த்தி இல்லே. என்ன, உன்னைவிட எனக்கொரு பத்துப் பன்னிரண்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கலாம். ஆனா, உனக்குத் தெரிஞ்ச பல விஷயங்கள் எனக்குத் தெரியாது. நீ அசால்ட்டா செய்து முடிக்கிற பல விஷயங்களை என்னால செய்ய முடியாது. திணறுவேன். யங் ப்ளட்டோடு இந்த ஓல்ட் ப்ளட் போட்டி போட முடியாது. புரியுதா? இந்த கம்பெனி என்ன, நாளைக்கு இந்த உலகத்தையே யங்ஸ்டர்தான் ஆளப் போறீங்க. காட் ப்ளெஸ் யூ, மை பாய்!”னு முதுகுல தட்டிக் கொடுத்துட்டு நகர்ந்து போனார்.

என்ன ஒரு மனுஷன்! என்னைப் பத்தி தானாவே தப்புக் கணக்கு போடாம, என்கிட்டே மனம் விட்டுப் பேசிப் புரிஞ்சுக்கிற அந்தத் தன்மை எல்லாருக்கும் இருந்துட்டா எவ்ளோ நல்லாருக்கும்!
நாமா ஒண்ணை யூகம் பண்ணிக்கிறதோ, முன் முடிவுகள் எடுக் கிறதோ பிரச்னையை மேலும் வளர்க்கத்தான் செய்யும்னு எனக்கு அவர் கத்துக்கொடுத்தார். கூடவே, அன்னிக்கு சாயந்திரம் அவர் என்னைத் தன் கேபினுக்கு அழைச்சு, ஒரு புத்தகத்தைக் கொடுத்து, “இதை நீ அவசியம் படிக்கணும்”னார். கல்வியாளர், நூலாசிரியர், தொழிலதிபர்னு பல முகங்களைக் கொண்ட ‘ஸ்டீபன் ரிச்சர்ட்ஸ் கோவே’ எழுதின ‘The 7 habits of highly effective people’-ங்கிற புத்தகம்தான் அது.

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு-ங்கிறார் வள்ளுவர். இதே போலவே இன்னொரு குறளும் இருக்கு. எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு! யார் சொன்னாலும் சரி, எந்த விஷயமானாலும் சரி... அதில் உள்ள அடிப்படை உண்மை என்னன்னு ஆராய்ந்து பார்க்கிறதுதான் அறிவு! இதைத் தான் ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்’னு ஒரு பழமொழியில சுலபமா சொல்லி வெச்சுட்டுப் போயிருக்காங்க நம்ம முன்னோர்கள்.

இங்கிலீஷ்ல ‘Paradigm’-ன்னு ஒரு வார்த்தை இருக்கு. நீ என்னைப் பார்க்கும்போதெல்லாம் முகத்தைத் திருப்பிக்கிட்டதை வெச்சு, நீ திமிர் பிடிச்சவன், பெரியவங்களை மதிக்கத் தெரியாதவன்னு நானா ஒரு முன்முடிவுக்கு வந்திருந்தா அதுதான் ‘Paradigm’. இந்தப் புத்தகத்துல - 30, 31 பக்கங்கள்லனு நினைக்கிறேன் - இந்தப் ‘பேரடைம்’ பத்தியும், ‘பேரடைம் ஷிஃப்ட்’ன்னா என்னங்கிறதைப் பத்தியும் தன் அனுபவத்துலேர்ந்து ஒரு அருமையான உதாரணம் கொடுத்து விளக்கியிருக்கார் ஸ்டீபன் ஆர்.கோவே. ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்!

நியூயார்க்ல, ஒரு சப்வே ஸ்டேஷன்ல உட்கார்ந்திருக்கார் ஸ்டீபன். சூழ்நிலையே ரொம்ப அமைதியா இருக்கு. சிலர் பேப்பர் படிச்சிட்டிருக்காங்க. சிலர் கண் மூடி அமைதியா பிரார்த்தனை பண்ணிட்டிருக்காங்க.

அப்போ ஒருத்தர் தன் குழந்தைகளோடு அங்கே வந்து ஸ்டீபன் பக்கத்துல உட்கார்ந்துக்கறார். அந்தக் குழந்தைகள் அங்கே இங்கே ஓடுதுங்க. கத்திக் கூச்சல்போடுதுங்க. ஒண்ணு ஏதோ ஒரு பொருளைத் தூக்கி எறியுது. இன்னொண்ணு, ஒருத்தர் படிச்சிட்டிருந்த பேப்பரைப் புடிச்சு இழுக்குது. காச் மூச்னு ஒரே ரகளை! அங்கிருந்தவங்க டென்ஷன் ஆகுறாங்க. அத்தனைக்கும் அசராம அந்த மனுஷன் எதுவுமே நடக்காத மாதிரி கண்களை மூடி உட்கார்ந்திருக்கார்.

ஸ்டீபனுக்குக் ரொம்ப கடுப்பு. அவரைத் தொட்டுக் கூப்பிட்டு, “என்ன சார், உங்க பிள்ளைங்க இத்தனை சேட்டை பண்றாங்க. அதுங்களை கண்டிக்க மாட்டீங்களா?”ன்னு கோபத்தோடு கேக்கறார். அவர் திடுக்கிட்ட மாதிரி கண் விழிச்சு, “ஆமாம்... பசங்க ரொம்ப அமர்க்களம் பண்ணுதுங்க. நான் ஏதாவது பண்ணணுமில்லே? ஆனா, என்ன பண்றது, இதுங்களை எப்படி அடக்கறதுன்னு எனக்கு எதுவும் தெரியலே! நாங்க இப்போ நேரா ஆஸ்பத்திரியிலேர்ந்துதான் வரோம். ஒரு மணி நேரத்துக்கு முன்னாடிதான் அங்கே என் மனைவி, இதுங்களோட அம்மா செத்துப் போயிட்டா...”ன்னார்.

அவ்வளவுதான்... உலுக்கிப் போட்ட மாதிரி ஆயிடுச்சு ஸ்டீபனுக்கு. இவ்வளவு நேரமும் அந்த மனுஷர் மேல இருந்த கோபம் சட்டுனு மறைஞ்சு, அவர் மனைவி எதனால இறந்தாங்க, அவருக்கு ஏதாவது தன்னால உதவ முடியுமாங்கிற எண்ணம் உண்டாச்சு. அவருக்கு மட்டுமில்லே, அங்கிருந்த அத்தனை பேருக்குமே அந்த மனுஷன் மேல இருந்த எரிச்சல் சடார்னு காணாமப் போய், ஒரு பரிதாபம் உண்டாச்சு.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 10

அவரோட சூழ்நிலையின் பின்னணி தெரியாதபோது அவங்களுக்குள்ளே இருந்தது ‘Paradigm’; விஷயம் தெரிஞ்சப்புறம் அவங்களோட மனோபாவம் அடியோடு மாறிடுச்சே, அதுதான் ‘Paradigm shift’.

நல்லா யோசிச்சுப் பாரு... ஸ்டீபன் மட்டும் அவர்கிட்டே தன் மனதில் உள்ளதை உடைச் சுப் பேசலைன்னா, கடைசி வரைக்கும் அவரைப் பற்றிய தவறான அபிப்ராயம்தானே இவர் மனசுல பதிஞ்சிருக்கும்! இப்படித்தான், நாமளும் அடுத்தவரைப் பற்றி எதுவும் தெரிஞ்சுக்காம ஒரு முன்முடிவுக்கு வந்துடறோம். அதனால உறவுகள் பாதிக்கப்படுது.

நீ வளர்ற பையன். இதையெல்லாம் நீ தெரிஞ்சுக்கணும்கிறதுக்காகச் சொல்றேன். இந்தப் புத்தகத்தை முழுசாப் படி. உனக்கு உபயோக மாயிருக்கும்!”னார் சீனியர் சுப்புராமன்.

உலகம் முழுக்க ரெண்டரைக் கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ள புத்தகம் இது. நீங்களும் அவசியம் படிக்கணும்.

ஒருத்தரை ஒருத்தர் முழுசா புரிஞ்சுக்கிட்டாலே, பாதி பிரச்னைகள் காணாமப் போயிடும், பாஸ்!

- இன்னும் பேசலாம்

கல்வியாளர் ஸ்டீபன் ஆர்.கோவே, இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே…

1) ஒரு பிரச்னையை நாம் எப்படிப்பார்க்கிறோம் என்பதுதான் பிரச்னை!

2) முதலில் மற்றவரைப் புரிந்துகொள்ள முயலுங்கள்; பின்னர் அவருக்கு உங்களைப் புரியவைக்க முயலலாம்.

3) அறியாமையை ஒப்புக்கொள்வதே, கற்றலின் முதல் படியாகும்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 10

4) நிறைய விஷயங்களை வேகமாகச் செய்துமுடிப்பது, சரியான விஷயங்களைச் செய்வதற்கு ஈடானதல்ல!

5) ஊக்கமெனும் நெருப்பு உங்கள் உள்ளத்திலிருந்து உருவாக வேண்டும்; பிறர் அந்த நெருப்பைப் பற்றவைக்க முயன்றால், சீக்கிரமே அணைந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

பரிசு யாருக்கு?

சென்ற இதழில் நான்கு வரிசை எண்களைக் கொடுத்து, அவை என்ன ஒழுங்குமுறையில் அமைந்துள்ளன என்றும் சொல்லியிருந்தேன். அதே ஒழுங்கில் அடுத்தடுத்த எண்களை எழுதிக்கொண்டு போனால்,
13-வதாக அமையும் எண்ணுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு என்றும், அந்த எண் என்ன, அதன் தனிச்சிறப்பு என்ன என்றும் கேட்டிருந்தேன். இனி, அந்த வரிசை எண்களைப் பார்ப்போம்.

1
11
21
1112
3112
211213
312213
212223
114213
31121314
41122314
31221324
21322314

இது 13-வது வரிசை. இதற்கு மேல் இதைத் தொடர முடியாது. ஏனெனில், மீண்டும் இதே எண்தான் அமையும். இதுவே இதன் தனிச்சிறப்பு.

இந்தச் சரியான விடையை குரல் பதிவாகவும் எஸ்.எம்.எஸ். வழியாகவும் அனுப்பி இருந்தவர்களில் சென்னை, பல்லாவரத்தை சேர்ந்த கே.குமாரசுப்ரமணியன் என்ற வாசகருக்கு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய ‘மேலே, உயரே, உச்சியிலே’ புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 10

சவால்!

இரண்டு பேர் தண்டனைக் கைதிகளாக அரசன் முன் நிறுத்தப்பட்டார்கள். “நீங்கள் மிகவும் புத்திசாலிகள் என்று கேள்விப்பட்டுள்ளேன். எனவே, இதுவே உங்களின் முதலும் கடைசியுமான குற்றமாக இருக்கட்டும் என்று எச்சரித்து, தண்டனையின்றி உங்களை விடுதலை செய்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. நான் வைக்கும் சோதனையில் நீங்கள் வெற்றி பெற வேண்டும்!” என்றான் அரசன்.

அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாதவாறு எதிரெதிர் பக்கம் திரும்பி நிற்கச் செய்து, இருவரிடமும் ஆளுக்கொரு துண்டுச் சீட்டில் ஒரு எண்ணை எழுதிக் கொடுத்தான்.

“1 முதல் 6 வரையிலான எண்களில் அடுத்தடுத்து உள்ள இரண்டு எண்களைத்தான் உங்களிடம் ஆளுக்கொன்றாகத் தந்துள்ளேன். இருவரும் அடுத்தவரிடம் உள்ள எண் என்ன என்று யூகித்துச் சரியாகச் சொல்லவேண்டும். கவனம்… யாரும் தங்கள் எண்ணைச் சொல்லக்கூடாது. ‘தெரியவில்லை’ என்று வேண்டுமானால் சொல்லலாம். மற்றபடி, யாரும் எதுவும் பேசக்கூடாது!” என்றான் அரசன்.

அவர்கள் இருவருமே மற்றவரிடம் உள்ள எண்ணைக் கச்சிதமாக யூகித்துச் சொல்லி, தண்டனையிலிருந்து தப்பிவிட்டார்கள். எப்படி யூகித்தார்கள் என்று சொல்லமுடியுமா உங்களால்? 

044-66802923 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, ‘ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு’ என்று சொல்லிவிட்டு, உங்கள் குரலிலேயே உங்கள் பதிலைப் பதிவு செய்யுங்கள். அல்லது, 98406 67184 என்ற எண்ணுக்கு மெஸேஜ் தட்டிவிடுங்கள்; அல்லது வாட்ஸப்புங்கள்! குரல் பதிவாகக்கூட வாட்ஸப்பில் அனுப்பலாம். பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு