Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது..! - 36

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாதை இனிது... பயணமும் இனிது..! - 36
பாதை இனிது... பயணமும் இனிது..! - 36

இயல்பை மாற்றாதே!சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

பிரீமியம் ஸ்டோரி

ல்வேறுவிதமான சவால்களும், சிக்கல்களும், இடையூறுகளும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்தது தான் நமது வாழ்க்கைப் பாதை. வாழ்வில் செல்வம் வரும்; போகும். ஆனால், உறுதியான அறிவு படைத்த தீரர்கள், தங்களது பாதையிலிருந்து சிறிதளவுகூட பிறழமாட்டார்கள்; தங்களுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.

வாழ்வின் உயரங்களை எட்டினாலும், கீழ்நிலை அடைந்தாலும் தனது சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் வாழ்வது ஓர் உயர்ந்த பண்பு. உயிரைக் காட்டிலும் மானத்தைப் பெரிதாகக் கருதுவது பெரியோர் இயல்பு.

அவையில் கண்ணகியின் கூற்றிலிருந்த உண்மையை அறிந்து, தனது தவற்றை உணர்ந்த மாத்திரத்தில் உயிர் துறந்தான் பாண்டிய மன்னன்.

ஈயென இரத்தல் இழிந்தன்று
ஈயேன் என மறுத்தல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று
கொள்ளேன் என மறுத்தல் அதனினும் உயர்ந்தன்று

‘கொடு என்று ஒருவரிடம் சென்று கேட்பது இழிந்தது; கொடுக்க மாட்டேன் என்று மறுத்தல் அதைவிட இழிவானது. எடுத்துக்கொள் என்று கூறுவது உயர்ந்தது. கொடுத்தாலும் பெற மாட்டேன் என மறுத்தல் அதைவிட உயர்ந்தது’ என்கிறது புறநானூறு. முற்காலங்களில், பொதுவாக மக்கள் தவறு செய்ய அஞ்சுவார்கள். தவறு செய்பவர்களைச் சமூகம் தனிமைப்படுத்திவிடும் என்ற பயம் பரவலாக இருந்தது. இன்றைய காலகட்டத்திலோ, படித்தவர் - படிக்காதவர், செல்வந்தர் - ஏழை என்று எந்தவிதப் பாகுபாடுமின்றி, பலரும் எவ்விதச் செயல்களில் வேண்டுமானாலும் ஈடுபடலாம் என்று எண்ணுகின்றனர். சமூகத்தின் பார்வையைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. சமூகமும் பெரும்பாலான தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்ட காலகட்டம் இது.
ஆனால், காலம் எத்தனை மாறினாலும், விஞ்ஞான வளர்ச்சி எத்தனை உயரங்களை எட்டினாலும், வாழ்வில் எத்தனை நெருக்கடிகள் சூழ்ந்தாலும் சான்றோர் பெருமக்கள் தங்களது உண்மையான இயல்பை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.

பாதை இனிது... பயணமும் இனிது..! - 36

திருவள்ளுவர், மானம் என்ற அதிகாரத்தை அருளியிருக்கிறார்.

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். (திருக்குறள்: 961)


இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும், குடிப்பெருமை தாழும்படியான செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும். செல்வ வளம் அதிகமாகச் சேரும்போது பண்பு நலனும் அதிகம் சேர வேண்டும். பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம், பசுவின் பாலானது பாத்திரத்தின் குற்றத்தால் பாழாகிவிடுவது போலப் பாழாகிவிடும் என்று ‘பண்புடைமை’ அதிகாரத்தில் கூறியிருக்கிறார் திருவள்ளுவர்.

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று. (திருக்குறள்: 1000)


‘செல்வம் சேர்ந்த காலத்தில் பணிவு வேண்டும். செல்வம் குன்றி, வறுமை மிகும் காலத்தில், பணியாத உயர்வு வேண்டும்’ என்கிறார் திருவள்ளுவர்.

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு. (திருக்குறள்: 963)


வாழ்வில் செல்வத்தை வைத்து அனைத்தையும் எடைபோட்டு விட முடியாது. செல்வம் வரும்; போகும்! ஆனால், எத்தனை துன்பம் வந்தாலும், மானத்தை இழக்கச் செய்கின்ற இழிவான செயல்களை ஒரு சிறிதளவும் ஒருவர் செய்துவிடக் கூடாது.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின் (திருக்குறள்: 965)


குன்றைப் போன்ற உயர்ந்த நிலையில் இருப்பவர்களும், தாழ்வுக்குக் காரணமான செயல்களை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும், தாழ்ந்து போய்விடுவர். எனவே,

அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்


என்று ‘மூதுரை’யில் ஔவையார் சொன்னது போல், வாழ்வில் நாம் எந்த நிலையில் இருந்தாலும், நம்முடைய இயல்பை, உயர்ந்த பண்பை ஒருபோதும் கைவிடாமல், மேன்மக்களாகத் திகழ வேண்டியது நம் கடமை!

- பயணிப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு