Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 11

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 11
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 11

யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 11

யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

Published:Updated:
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 11
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 11
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 11
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 11

‘‘முன்முடிவுகள் கூடாதுங்கறீங்க. ஆனா, முன்முடிவுகள் எடுக்காம எப்படிங்க இருக்க முடியும்? உதாரணமா, போலீஸ் சொல்லுது... ‘சந்தேகத்துக்குரிய நபர் யாரேனும் உங்க கண்ணில் பட்டால் இந்த நம்பருக்கு போன் செய்யுங்க’ன்னு. அப்போ சந்தேகத்துக்குரிய நபரா, இல்லையாங்கிறதை ஒருத்தரோட தோற்றத்தை, செயல்களை வெச்சுதானே சொல்ல முடியும்? அவர் அப்பிராணியாகவும் இருக்கலாம். ஆனா, நமக்கு அது எப்படித் தெரியும்? அதேபோல, ஒரு நபரின் தோற்றத்தை, நடந்துகொள்ளும் விதத்தை வெச்சுதான் அவர் எப்படிப்பட்டவர்னு கணிக்கிறோம். ‘பாடி லாங்குவேஜ்’னு சொல்வாங்க இதை. இன்டர்வியூக்கள்ல இந்த பாடி லாங்குவேஜுக்கு முக்கிய இடம் உண்டு. அதனால, முன்முடிவுகள் தேவைதான்கிறது என் கருத்து!” என்று குரல் பதிவின் மூலம் கருத்து தெரிவித்திருந்தார் ராஜேஷ் என்கிற ஐ.டி. இளைஞர் ஒருவர்.

உண்மைதான் ப்ரோ! முன்முடிவுகள் எடுக்காத வங்களே இல்லை. இவன் இப்படிப்பட்ட ஆசாமின்னு ஒருத்தரைப் பார்த்ததுமே நம்ம மூளை கணக்குப்போட ஆரம்பிச்சுடும். நமது அனுபவம்தான் முன் முடிவுகளை எடுக்க நமக்குக் கற்றுக்கொடுக்குது; தூண்டுது!

அனுபவ அறிவு அதிகம் இருந்தா, நாம எடுக்கிற முன்முடிவுகள் பல நேரம் சரியாவும் இருக்கும். ஆனா, 100 சதவிகிதம் சரியா இருக்குமாங்கிறது சந்தேகம்தான். சந்தேகத்துக்குரிய நபர்னு ஒருத்தரை நாம போலீஸுக்கு அடையாளம் காட்டலாம். ஆனா, தீர விசாரிச்சு நடவடிக்கை எடுக்க வேண்டியது போலீஸோட வேலைதானே? அவங்க வெறுமே சந்தேகத்தை வெச்சு அரெஸ்ட்தான் பண்ணலாமே ஒழிய, தண்டனை கொடுத்துட முடியாது இல்லியா? அதைத்தான் போன இதழ்ல நான் சொல்லியிருந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 11

முன்முடிவுகள், அதாவது Paradigm (பேரடைம்) என்பது பெரிய சப்ஜெக்ட். பேரடைம் ஷிஃப்ட், பேரடைம் எஃபெக்ட், பேரடைம் பராலிஸிஸ்னு அதுக்குள்ள பல தியரிகள் இருக்கு. ரொம்ப குழப்பிக்காம, சிம்பிளா பார்ப்போம்.

பேரடைம் ஷிஃப்ட் பத்தி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். ஒரு தப்பான முன்முடிவை எடுத்துட்டு, பின்பு தன்னை மாத்திக்கிறது பேரடைம் ஷிஃப்ட்.

‘அனுமான விளைவு’ன்னா (Paradigm Effect) என்ன?

தன்னோட அனுமானத் தைத் தாண்டி வேற ஒண்ணு இருக்க முடியும்கிறதை யாரால யூகிக்க முடியலையோ, அவங்க ‘பேரடைம் எஃபெக்ட்’டுக்கு ஆளானவங்க. ஒரு சின்ன உதாரணம் சொல்றேன்.
இந்த வாக்கியத்தில் ஒரு பிழை இருப்பது தெரிசிறதா?

சூரியன் கிழக்கே உதிப்பதும், மேற்கே மறைவதும் காலங் காலமாக இருந்து வரும் ஓர் பிரபஞ்ச உண்மை!


இதை நீங்க ஒருபக்கம் யோசிச்சிட்டிருங்க. கடைசி யில பார்ப்போம். வேறொரு உதாரணம் சொல்றேன்.

கவுத்து வெச்ச சீட்டுக் கட்டுலேர்ந்து ஒவ்வொரு சீட்டா நிமித்திப் போட்டுட்டி ருந்தார் ஒருத்தர். இவர் போடப்போட, அது என்ன சீட்டுன்னு நண்பர் கரெக்டா படிக்கணும். டைமண்ட் நைன், கிளாவர் டூ, ஸ்பேட் ஃபைவ், ஆட்டின் குயின், டைமண்ட் டென், கிளாவர் செவன், ஸ்பேட் த்ரீ...ன்னு அவர் போடப் போட அது என்ன சீட்டுன்னு உடனுக்குடன் சொல்லிட்டிருந்தார் நண்பர். இங்கே நிறுத்தி, நண்பரைப் பார்த்துச் சிரிச்சார் அவர். “மறுபடியும் பார்த்து சரியா சொல்லுங்க, அது ஸ்பேட் த்ரீதானா?”ன்னு கேட்டார்.

இல்லை. அங்கே இருந்தது ‘ஆட்டின் த்ரீ’. அந்த 3-ம் எண் சீட்டில் இருந்த வடிவம் ஆட்டின்தான். பின்ன ஏன் ஸ்பேட் த்ரீன்னு சொன்னார் நண்பர்?

அந்த ஆட்டின் இருந்தது கறுப்பு நிறத்துல. சீட்டுக்கட்டில் ‘ஆட்டின்’ சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். கறுப்பு நிறத்தில் கிளாவரும் ஸ்பேடும் மட்டும்தான் இருக்கும். அதனால இந்த நண்பருக்கு அது சட்டுனு ஸ்பேட் த்ரீயா தோணியிருக்கு. இதை அவர் எதிர்பார்க்கலை. இப்படியும் இருக்க முடியும்னு அவர் அனுமானிக்கலை.

இதுதான் ‘பேரடைம் எஃபெக்ட்’! இந்த எஃபெக்ட் பெரும்பாலும் எல்லோருக்குமே இருக்கும். இதனால பாதகமில்லை. ‘பேரடைம் பராலிஸிஸ்’னு ஒண்ணு சொல்றோம் பாருங்க, அதுதான் யாருக்கும் இருக்கக் கூடாது.

தான் எடுத்த முன்முடிவுகளுக்கு, தனது அனுமானங்களுக்கு, தான் கொண்ட நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு விஷயம் இருப்பதை இவங்களால ஏத்துக்கவே முடியாது. தனது கருத்துக்களே சரின்னு மனசளவில் இறுகிப் போயிருப்பாங்க அவங்க. அதுதான் தப்பு!

கையில் சிலம்போடு பரிதாபமா நின்னுட்டிருந்த கோவலனைப் பார்த்ததும், பொற்கொல்லன் சொன்னது உண்மைதான்னு உறுதியா நம்பி, வேண்மாளின் கால் சிலம்பைத் திருடியவன் இவன்தான்னு முடிவு கட்டி, கோவலனைக் கொல்ல உத்தரவிட்டுட்டான் பாண்டிய மன்னன். அவனுக்கு இருந்தது ‘பேரடைம் பராலிஸிஸ்’.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 11

சூரியன்தான் பூமியைச் சுத்தி வருதுன்னு நினைச்சுட்டிருந்தவங்களும், பூமி தட்டையா தான் இருக்குன்னு நம்பிட்டிருந்தவங்களும் அதிகம் இருந்த காலத்துல, ‘அப்படியெல்லாம் இல்லை. பூமிதான் சூரியனைச் சுத்தி வருது; பூமி உருண்டையானது’ன்னு மாற்றுக் கருத்து சொன்னார் கலீலியோ. அவங்களால இவர் சொன்னதை ஏத்துக்க முடியலை; கல்லால் அடிச்சுத் துன்புறுத்தினாங்கன்னு படிச்சிருக்கோம். அவங்களுக்கு இருந்தது ‘பேரடைம் பராலிஸிஸ்’.

சரி, இந்த பாதிப்பிலிருந்து எப்படி மீள்றது?

‘எந்த ஒண்ணையும் திறந்த மனசோடு அணுகுங்க’ங்கறாங்க நிபுணர்கள். ‘(Think outside of the box) பெட்டிக்கு வெளியே சிந்தி’னு சொல்றாங்க.

அதெப்படி பெட்டிக்கு வெளியே சிந்திக்கிற துன்னு அடுத்த இதழ்ல பார்ப்போம். அதுக்கு முன்னே...

மேலே ஒரு வாக்கியத்தில் பிழை இருக்குன்னு சொல்லியிருந்தேனே, கண்டுபிடிச்சீங்களா? சிலர் கண்டுபிடிச்சிருக்கலாம்; சிலரால் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கலாம். அதனால பரவாயில்லை.

பலர், கொட்டை எழுத்துல கொடுக் கப்பட்டிருந்த வாக்கியத்துல என்ன பிழை இருக்குன்னு மண்டையை உடைச்சிட்டி ருந்திருப்பீங்க. ‘இந்த வாக்கியத்தில்...’னு ஆரம்பிக்கிற அந்த வாக்கியத்தில்தான் பிழை இருக்கு. தெரிசிறதா? தெரிகிறதா?

இப்போ சொல்லுங்க, உங்களுக்கு ‘பேரடைம் எஃபெக்ட்’ இருக்கா, இல்லையா?

- இன்னும் பேசலாம்

காவியக் கவிஞர் வாலி, இளைஞர் களுக்குச் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே…

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 11

1) அமிழ்தம் அனையது தமிழ்; அதில் நீ அமிழ்; அமிழ்ந்து இமிழ்; இமிழ்ந்து குமிழ்; ‘ஆங்கிலம் அளவு சோறு போடாது தமிழ்’ எனச் சொல்வோர் முகத்தில் உமிழ்!

2) நம்பிக்கை மனிதனை நகர்த்தும், அவன் முடமாக இருந்தாலும்; அது மூடமாக இருந்தாலும்!

3) தோல்விகள் இன்றி வெற்றிகள் இல்லை; இரவுகள் இல்லையென்றால் பகலுக்கு மரியாதை இல்லை. எனவே, தோல்விகளைப் பற்றி யாரும் அச்சப்படவோ, வெட்கப்படவோ தேவை இல்லை.

4) உசேன்போல்ட்டைப் போல் நில்லாமல் ஓடு, கோல்டு தேடி வரும்; உந்தன் வாழ்வும் ஓர் ஒலிம்பிக்கைப் போல வேர்வை வெற்றி தரும்!

5) ஊக்குவிக்க ஆள் இருந்தால், ஊக்கு விற்பவன்கூட தேக்கு விற்பான்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 11

சவால்!

‘‘கடந்த இரண்டு இதழ்களாக கடினமான புதிர்களையே தருகிறீர்கள். கொஞ்சம் சுலபமான புதிர்களைக் கொடுங்கள்’’ என்று சில வாசகர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இந்த இதழில் மிகச் சுலபமான புதிரையே கொடுத்துள்ளேன். ஓகேவா?

அரசனைக் குறித்து கேலி பேசியதாக ஒருவனை இழுத்து வந்து அரசன் முன் நிறுத்தினார்கள். கோபமுற்ற மன்னன், ‘‘இப்போது நீ ஒரு வாக்கியம் சொல். நீ சொல்வது மட்டும் பொய்யாக இருந்தால், உன்னைத் தூக்கிலிட ஆணையிடுவேன். நீ சொல்வது உண்மையாக இருந்தால், உன் தலையை வாளால் வெட்டியெறிய ஆணை பிறப்பிப்பேன்’’ என்றான். அந்த புத்திசாலிக் கைதி ஒரு வாக்கியம் சொன்னான். நீதி, நேர்மை தவறாத அரசன் சற்று யோசித்து, பின்பு ஒரு புன்னகையுடன், “நீ தப்பித்தாய்! உன்னை விடுதலை செய்கிறேன்’’ என்றான்.

அப்படி என்ன வாக்கியம் சொல்லியிருப்பான் அந்தக் கைதி? 044-66802923 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, ‘ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு’ என்று சொல்லிவிட்டு, உங்கள் குரலிலேயே உங்கள் பதிலைப் பதிவு செய்யுங்கள். அல்லது, 98406 67184 என்ற எண்ணுக்கு மெஸேஜ் தட்டிவிடுங்கள்; அல்லது வாட்ஸப்புங்கள்! குரல் பதிவாகக்கூட வாட்ஸப்பில் அனுப்பலாம். பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

பரிசு யாருக்கு?

சென்ற இதழ் புதிர் நினைவிருக்கிறதல்லவா?

இருவரிடமும் 1 முதல் 6 வரையிலான எண்களில், அடுத்தடுத்துள்ள இரண்டு எண்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. ஆகையால், இருவரில் யாராவது ஒருவரிடம் எண் 1 அல்லது 6 கொடுக்கப்பட்டிருந்தால், அவர் உடனே அடுத்தவரிடம் 2 அல்லது 5 கொடுக்கப் பட்டிருக்கவேண்டும் என்பதைச் சுலபமாக யூகித்துச் சொல்லிவிடுவார். அவர் அப்படி உடனடியாகத் தன்னிடம் உள்ள எண்ணைச் சரியாகவும் உறுதியாகவும் சொன்னதை வைத்து, அவரிடம் உள்ள எண் ஒன்றா, ஆறா என்பதை இவரும் சரியாகச் சொல்லிவிட முடியும்.

சரி, எண் ஒன்றோ, ஆறோ யாருக்கும் கொடுக்கப்பட வில்லை; மாறாக, இருவரில் யாராவது ஒருவரிடம் எண் 2 அல்லது 5 கொடுக்கப்பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். இவரிடம் 2 இருந்தால், மற்றவரிடம் 1 அல்லது 3 கொடுக்கப்பட்டிருக்கலாம்; அல்லது இவரிடம் 5 இருந்தால், மற்றவரிடம் 4 அல்லது 6 கொடுக்கப்பட்டிருக்கலாம். எனவே, அடுத்தவரிடம் உள்ள எண் என்ன என்று உறுதியாகத் தெரியாத நிலையில், இவர் சற்று அமைதி காக்கிறார். அதே நேரம் மற்றவரும் அமைதியாக இருக்கிறார். அவரிடம் எண் ஒன்றோ, ஆறோ கொடுக்கப்பட்டிருந்தால், அவர் இவரிடம் உள்ள எண் இரண்டா, ஐந்தா என்பதைச் சுலபமாகச் சொல்லியிருப்பார் அல்லவா? அவராலும் சொல்ல இயலவில்லை என்பதை வைத்துப் பார்க்கும்போது, அவரிடம் 1, 6 ஆகிய எண்கள் கொடுக்கப்படவில்லை என இவர் யூகிக்கிறார். ஆக, இவரிடம் 2 இருந்தால் அவரிடம் உள்ள எண் 3 என்றும், இவரிடம் 5 இருந்தால் அவரிடம் உள்ளது 4 என்றும் இவரால் சுலபமாக யூகித்துச் சொல்ல முடியும். அதே அடிப்படையில் அவரும் இவரிடம் உள்ளது இரண்டா, ஐந்தா என யூகிக்க முடியும்தானே?

இனி, இறுதிக் கட்டம். இருவரிடமும் 3, 4 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதாக வைத்துக் கொள்வோம். இருவராலும் மற்றவரிடம் உள்ள எண்ணை எந்த விதத்திலும் யூகிக்க முடியாத நிலை. இருவருமே அமைதியாக இருக்கிறார்கள். மற்றவர் யூகிப்பதற்கு நேரம் கொடுத்துப் பொறுமையாகக் காத்திருக்கிறார்கள். ம்ஹூம்... யாராலும் எதையும் யூகிக்க முடியவில்லை. பின்னர், இருவரில் ஒருவர் ‘எனக்குத் தெரியவில்லை’ என்கிறார். அடுத்து மற்றவரும் ‘எனக்கும் தெரியவில்லை’ என்கிறார். இந்நிலையில் இருவரிடமும் 3, 4 ஆகிய எண்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை இருவராலுமே யூகிக்க முடியும். எனவே, முதலாமவர் தன்னிடம் 3 இருந்தால், மற்றவரிடம் உள்ளது 4 என்றும், தன்னிடம் இருப்பது 4 என்றால், மற்றவரிடம் இருப்பது 3 என்றும் சொல்லிவிடுகிறார். அப்புறம் என்ன, அதே விதிப்படி அவரும் இவரிடம் உள்ள எண்ணைச் சொல்லிவிடுவார்தானே?

இந்தச் சரியான விடையை குரல் பதிவாகவும் எஸ்.எம்.எஸ். வழியாகவும் அனுப்பி இருந்தவர்களில் சென்னையைச் சேர்ந்த பிரசன்னா என்ற வாசகருக்கு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய ‘மேலே, உயரே, உச்சியிலே’ புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism