தொடர்கள்
Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது..! - 38

பாதை இனிது... பயணமும் இனிது..! - 38
பிரீமியம் ஸ்டோரி
News
பாதை இனிது... பயணமும் இனிது..! - 38

பெரியோரின் பண்புசுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

பெருமை எனப்படும் உயர்ந்த பண்புடையவர்களே, செயற்கரிய செயல்களைச் செய்து முடிப்பார்கள் என்பது திருவள்ளுவப் பெருந்தகையின் கருத்து.

பெரியோர்கள் குணமென்னும் குன்றேறி நிற்பவர்கள். அத்தகைய சான்றோர் பெருமக்களுக்கு இயல்பாக இருக்கும் அருங்குணங்களை, நாம் அறிந்து கடைப்பிடித்தால், வாழ்வில் அமைதியையும் ஆனந்தத்தையும் உணர்வது திண்ணம்.

உயர்ந்த பண்புகளைப் பற்றி அறிவுறுத்தும்போது, அதற்கு மாறான தாழ்ந்த நிலைகளைச் சுட்டிக்காட்டுவது திருக்குறளில் பரவலாக காணப்படும் ஒரு மரபாகும். உயர்ந்த பண்பைக் கடைப்பிடிக்காவிட்டால் ஏற்படும் தீமைகளை, குற்றங்களை எடுத்துக் கூறுவதன் வாயிலாக, உயர்ந்த பண்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதே இதன் நோக்கம்.

பெருமை என்ற அதிகாரத்தில், வாழ்க்கைத் தரத்தின் ஏற்றத்தாழ்வுகளால் பாதிப்படையாது, உயர்ந்த பண்புகளை இடைவிடாமல் கடைப்பிடிக்கும் மேன்மைப் பண்பு மிக்க பெரியோர்களைப் பற்றிக் கூறிய திருவள்ளுவர், அந்தப்பண்பின் முக்கியத்துவத்தை மேலும் சில கோணங்களில் அறிவுறுத்துகிறார்.

பாதை இனிது... பயணமும் இனிது..! - 38

பெரியோர் யார்? சிறியோர் யார்? இந்தக் கேள்வி அடிக்கடி எழும். திருவள்ளுவர் தெள்ளத் தெளிவாக பதில் அளிக்கிறார்.

பெரியோரை விரும்பிப் போற்ற வேண்டும் என்ற நோக்கம் உடையவர் பெரியவர். அத்தகைய உயர்ந்த நோக்கம் இல்லாதவர் சிறியவர். எங்கு எச்சிறப்பு காணப்படினும், காழ்ப்பு உணர்ச்சி இன்றி, அதனைப் பாராட்டுவது பெரியோர் பண்பு.

உயர்ந்த கருத்தை, ஒரு சிறிய குழந்தை கூறினாலும் ஏற்றுக்கொள்ளும் திறந்த மனமும், பரந்த பண்பும் உடையவர்கள் பெரியோர்கள். இதற்கு மாறான பண்புடையோர் சிறியோர்.

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு (திருக்குறள்: 976)


பெரியோரைப் போற்றுவது பெரியோர் இயல்பு. அவ்வாறு செய்யாமலிருப்பது சிறியோர் இயல்பு. மேலும், பண்பில்லாத மக்களிடம்

சில தருணங்களில் சில உயர்ந்த தன்மைகள் காணப்படும். அவற்றை வரம்பு மீறிய ஒன்றாகத்தான் உலகம் பார்க்கும்.

பண்பில்லாதவர் பெற்ற கல்வி, செல்வம், பதவி, ஆற்றல்கள் அனைத்தும் தவறான வழியிலே செலுத்தப்படும் என்பதால், அவனை பொருந்தாத ஒன்றாகவே வள்ளுவர் கூறுகிறார்.

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின். (திருக்குறள்: 977)


பண்பற்ற ஒருவர், உயர்குடிப் பிறப்பு, கல்வி, செல்வம் ஆகியவற்றை உடையவராக இருப்பின், அது கர்வத்தையே வளர்க்கும். கர்வத்தின் காரணமாக, அவர்கள் வரம்பு மீறி நடந்து கொள்வர்.

பெரியோர்களை அடையாளப்படுத்திக் காட்டுவது பணிவு என்ற மிகச் சிறந்த பண்பு. அறிவின் நிறைவில் அமைதியுற்று இருப்பவர் கள் இயல்பாகவே பணிவாக இருப்பர். இறைமையின் பெருமையையும், பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தையும் உணர்ந்தவர்களுக்குப் பணிவு ஏற்படுவது மிக இயல்பு.

தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவம் மிக்கவர்களே தன்னை வியந்துகொள்வார்கள்.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. (திருக்குறள்: 978)


பெரியோர்கள் ஒருபோதும் தம்முடைய சாதனைகளை எண்ணி வியந்து கொண்டிருக்க மாட்டார்கள். `உலகில் எங்கு எச்சிறப்பு காணப்படினும் அது எனது மகிமையின் சிறு கீற்று என்று
அறிந்துகொள்’ என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதையில் கூறியிருக்கிறார்.

புகழ்ச்சியில் மயங்கி, அதிலேயே நின்றுவிடுவது சிறியோர் இயல்பு. அனைத்தையும் இறைமயமாகக் காண்பது பெரியோர் இயல்பு. அவர்கள் செயலிலேயே முனைந்திருக்கிறார்கள். செயலின் பலனைக் குறித்து அலட்டிக்கொள்வதில்லை. அதனால் செயலால் பெருமிதமோ, வருத்தமோ அவர்கள் அடைவதில்லை.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல் (திருக்குறள்: 979)


என்பது திருவள்ளுவர் வாக்கு.

நிறைவாக, பெரியோர்கள் பிறர் குறையைப் பெரிதுபடுத்த மாட்டார்கள். சிறியோர்கள், பிறரது குறையையே பெரிதுபடுத்திக் காண்பார்கள் என்ற கருத்தையும் திருவள்ளுவர் பின்வரும் குறளில் கூறியருளியிருக்கிறார்.

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். (திருக்குறள்: 980)


- பயணிப்போம்