Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது..! - 39

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாதை இனிது... பயணமும் இனிது..! - 39
பாதை இனிது... பயணமும் இனிது..! - 39

அன்பு எனும் அடையாளம்!சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

பிரீமியம் ஸ்டோரி

னிதன் அறிந்து கடைப்பிடிக்க வேண்டிய பல நற்பண்புகள் இருக்கின்றன. பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்கின்ற உதாரண புருஷர்களிடம் இருந்தே, அப்பண்புகளின் முக்கியத்துவத்தை அறிந்து கடைப்பிடிப்பதற்குத் தேவையான ஊக்கம் பிறக்கிறது.

ஒவ்வொரு துறையிலும் முழுமையான மனிதர்கள் சிலரைக் காண்கிறோம். அவர்கள் தாங்கள் பெற்ற அறிவோடு, அனுபவங்களையும் உளிகளாக்கி, தங்களது உள்ளத்தைச் செதுக்கிக் கொண்ட உத்தமர்கள்.

அத்தகையோரின் இருப்பே இந்த உலகுக்கு மிகப் பெரிய வரமாக அமைகிறது.

சான்றோர்கள் எந்தெந்த குணங்களைக் கடைப்பிடிப்பார்கள் என்று பட்டியலிடச் சொன்னால், பொதுவாக எவை நல்லவையோ அவை அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிப்பார்கள் என்றுதான் சொல்லவேண்டும். நற்பண்புகள், நன்னடத்தை முதலானவை பன்முகத்தன்மை கொண்டவை.

ஆதிசங்கரர் தமது பகவத்கீதையின் உரையில், சான்றோர்களுக்கு இயல்பாக அமைந்துள்ள நற்பண்புகளை, பேரின்பத்தை விரும்புபவன் அறிந்து கடைப்பிடிக்கவேண்டும் என்று கூறுகிறார்.

பாதை இனிது... பயணமும் இனிது..! - 39

சமூகத்தில் வாழ்பவர்களுக்குச் சான்றாக, உதாரணமாக வாழ்கின்ற பெரியோர்களின் சிறப்பு இயல்புகளை ‘சான்றாண்மை' என்ற அதிகாரத்தில் எடுத்தியம்புகிறார் திருவள்ளுவர்.

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு (திருக்குறள்: 981)


தனது கடமைகளை அறிந்து, அவற்றை முறையாக ஆற்றுகின்ற சான்றோர்களிடத்தில், அனைத்து நற்பண்புகளும் இயல்பாக அமைந்திருக்கும். இன்றைய சமூகத்தில் யாரோ ஒருவர் தவறான வழியில் செல்லாமல், நேர்மையுடன் செயலாற்றுவது பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. வேறு எந்த எதிர்பார்ப்புமின்றி, கடமையைச் செய்வதே பெரிய செய்தியாகி விடுகிறது. ஆனால், சான்றோர்களிடத்தில் நல்லியல்புகள் அனைத்தும் இயல்பாக இருக்கின்றன.

ஒருவர் அதிகம் கல்வி கற்பதால் மட்டும் சான்றோர் ஆகிவிட முடியாது; உயர்குடிப் பிறப்பால் மட்டும் சான்றாண்மை வருவதில்லை;

செல்வம் இருப்பதால் மட்டும் ஒருவர் சான்றோர் ஆக மாட்டார். பண்பு என்ற நிறைசெல்வமே ஒருவரைச் சான்றோனாக்குகிறது. அதனால்தான் தந்தையின் கடமையைப் பற்றிக் கூறும்போது, நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதல்ல, நிறையப் பணம் சம்பாதித்து வைப்பதல்ல, சான்றோனாக் குதல் தந்தைக்குக் கடனே என்று தமிழ் முதுமொழி பகிர்கிறது.

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று (திருக்குறள்: 982)


சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவருடைய பண்புகளின் நலமே ஆகும். அதுவன்றி, பிற நலன்களை நலனாகக் கருத முடியாது என்கிறார் திருவள்ளுவர்.

மகான்களாகிய சான்றோர் பெருமக்கள் எக்காலத்திலும் சமூகத்தில் வாழ்ந்து, நம் வாழ்க்கைப் பாதையில் வெளிச்சம் பாய்ச்சி வழிகாட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் குணமென்னும் குன்றேறி நிற்பவர்கள் எனினும், ஒருசில முக்கியமான குணங்கள், அவர்களது அடையாளங்களாக விளங்குகின்றன.

முதலாவது, அன்பு. அன்பில்லாதவர் சான்றோராக முடியாது. இரண்டாவது, நாணம். பழிக்கு அஞ்சுதலாகிய நாணம் என்பது சான்றோர்களிடம் காணப்படும் ஓர் அருங் குணமாகும். மூன்றாவது ஒப்புரவு. எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், சமூகத்துக்குத் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை மழைபோல ஆற்றிக் கொண்டிருப்பார்கள். நான்காவது, கண்ணோட்டம். கருணையே வடிவெடுத்தவர்களாக இருப்பார்கள். இந்த நான்கு குணங்களோடு முக்கியமாக வாய்மை எனப்படும் பண்பையும் உடையவர்களாக இருப்பார்கள்.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால் ஊன்றிய தூண் (திருக்குறள்: 983)


அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து பண்புகளும், சான்றாண்மையைத் தாங்குகின்ற ஐந்து தூண் களாக விளங்குகின்றன. மேலும், சான்றாண் மையைத் தவத்தோடு ஒப்பிட்டு, திருவள்ளுவர் மிக அழகாக ஒரு கருத்தைக் கூறுகிறார்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. (திருக்குறள்: 984)


தவம் செய்பவர்கள் எவ்வுயிரையும் கொல்ல மாட்டார்கள். அதேபோல் சான்றோர்கள், பிறரது தீமையை வெளியே எடுத்துக் கூற மாட்டார்கள். இந்தப் பண்பே மாபெரும் தவம் அல்லவா!
அன்பர்களே! இதுவரையிலும், வள்ளுவன் வகுத்த அறப்பாதையில் இனிதே பயணித்தோம். அந்த பயணம் கற்பித்த பாடத்தை, வள்ளுவம் காட்டிய புதிய பாதையை நம்மைச் சார்ந்தோருக் கும், நம் சந்ததிக்கும் எடுத்துச் சொல்வோம்; அதன் வழியில் அவர்களின் சிருஷ்டியில் உன்னதம் அடையட்டும் இவ்வுலகம். இறையருள் அதற்குத் துணை நிற்கும்!

 - (நிறைவுற்றது)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு