தொடர்கள்
Published:Updated:

பூச்சரம்!

பூச்சரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பூச்சரம்!

பூச்சரம்!

பூச்சரம்!

டந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம், எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம், இந்த தருணத்தை மனதில் பதித்திருங்கள்.

- புத்தர்

சாதிக்க வேண்டுமா?

பூச்சரம்!

• தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்துக்குத் தேவைப்படுகிறார்கள்.

• உனக்குத் தேவையான எல்லா வலிமை யும், உதவிகளும் உனக்குள்ளேயே உள்ளன.

• உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

• உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

•   பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

- சுவாமி விவேகானந்தர்!

அன்பின் உச்சம்!

சிவபெருமானிடம் திருமூலருக்கு அளவுகடந்த அன்பு. அந்த அன்பு மேன்மேலும் அதிகமாகி, தான் என்ன சொல்கிறோம் என்பதே தெரியாமல் போகிறது அவருக்கு. சிவபெருமானையே கடித்துத் தின்றுவிடுவேன், அரிவாள்மணையில் வைத்து நறுக்கிவிடுவேன் என்றெல்லாம் சொல்கிறார்.

பூச்சரம்!

அன்புள் உருகி அழுவன், அரற்றுவன்;
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்;
என் பொன்மணியை, இறைவனை, ஈசனை
தின்பன், கடிப்பன், திருத்துவன் தானே!
(திருத்துவன்-அரிவாள்மணையில் வைத்து நறுக்குவேன்)


- ‘வாட்ஸ் அப்'-பில் வந்தது

உண்மையைப் பேசு!

மஹான் பர்த்ருஹரி அருளிய சதகங்கள் மூன்று. அவை: நீதி சதகம், வைராக்கிய சதகம், சிருங்கார சதகம். இவற்றில் முதலாவது சதகத்தில் வரும் ஸ்லோகம் ஒன்று.

பூச்சரம்!

‘ஸத்யம் ப்ரூயாத்!
ப்ரியம் ப்ரூயாத்!
ந ப்ரூயாத் ஸத்யமப்ரியம்!
ப்ரியஞ்ச நான்ருதம் ப்ரூயாத்!
ஏஷே தர்ம சனாதன:’

இதன் கருத்து: ‘உண்மையைப் பேசு! கேட்பவருக்கு இனிமையாக உள்ளதைப் பேசு! கேட்பவருக்கு இனிமையாக இல்லாத உண்மையைப் பேசாதே! கேட்பவருக்கு இனிமையாக இருக்கும் என்பதற்காக உண்மை அற்றதையும் பேசாதே! இதுவே தர்ம நியதி!”

- சி.சரஸ்வதி, தூத்துக்குடி

தண்ணீருக்குச் சூத்திரம்!

தண்ணீருக்கு H2O என்று சூத்திரம் சொல்கிறார்கள். அதாவது ஹைடிரஜன் இரண்டு மடங்கும், ஆக்ஸிஜன் ஒரு மடங்கும் கொண்ட கூட்டுப்பொருள் அது. இதை இன்றைய விஞ்ஞானம் வைத்தது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அதர்வண வேதத்தில்தான் முதன்முதலாக இந்த சூத்திரம் கையாளப் பட்டது. அதில், பிராணம் ஏகம் அன்யத்வே என்ற ஸ்லோகம் இருக்கிறது.

பூச்சரம்!

பிராணம் என்றால் பிராணவாயு. அதாவது ஆக்ஸிஜன் ஏகம் என்றால் ஒன்று. அன்ய என்றால் இன்னொன்று. த்வே என்றால் இரண்டு. அதாவது, தண்ணீரில் பிராணவாயு ஒரு பங்கும், இன்னொரு வாயு(ஹைடிரஜன்) இரண்டு பங்கும் இருக்கிறது என்று பொருள்.

பாருங்க! நம்ம வேதங்களில் இருக்கிற கருத்தைத்தான், வெளிநாட்டார் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்!

- சுரேஷ், கடலூர்

மூட்டைப் பூச்சியும் மும்மூர்த்திகளும்!

விக்கிரமாதித்தன் கதை ஒன்றில் மூட்டைப்பூச்சி வருகிறது. தாத்தா சொல்லியிருக்கிறார். கதை ஞாபகம் இல்லை. அதேபோல், பழைய இலக்கியங்களிலும் மூட்டைப் பூச்சி இடம்பிடித்திருக்கிறது. கோபாலகிருஷ்ணன் என்ற புலவரை மூட்டைப்பூச்சிகள் இம்சித்திருக்கின்றன. அந்த அனுபவம், தனக்கு மட்டுமல்ல, மும்மூர்த்திகளுக்குமே உண்டு என்பதைச் சொல்லி, பாட்டே எழுதியிருக்கிறார் இந்தப் புலவர்.

கண்ணுதலான் கயிலையையும் கார்வண்ணன் பாற்கடலையும்
எண்ணும் பிரமன் எழில் மலரையும் நண்ணியதேன்
வஞ்சகமூட் டுப்பூச்சி வன்கொடுமைக் காற்றாதே
அஞ்சியவர் சென்றார் அறி!


என்ன ஒரு கற்பனை பாருங்கள்! சிவனும் விஷ்ணுவும் பிரமனும் மலையிலும் பாற்கடலிலும், மலரிலும் ஏறிக்கொண்டது மூட்டைப்பூச்சிக் கடி தாங்காமல்தானோ என்கிறார் இந்தக் குறும்புக்காரப் புலவர்.

- என்.ரவீந்திரன், சென்னை-44

ஏற்றமா, ஏமாற்றமா?

சாது ஒருவர் தேசாந்திரம் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஓரிடத்தில் ஆட்டுக் கடா ஒன்றைக் கண்டார். அது, இவரைக் கண்டதும் தலையை தாழ்த்தியபடி சற்று பின்னால் நகர்ந்தது.

சாதுவுக்கு சந்தோஷம். ‘‘புத்திசாலி ஆடு. நமது அருமை பெருமையைத் தெரிந்துகொண்டு மரியாதை செய்கிறது” என்று மனதுக்குள் குதூகலித்தார்! ஆனால், மறு கணம் அந்த ஆட்டுக்கடா சட்டென்று முன்னால் பாய்ந்து வந்து அந்த சாதுவை முட்டிக் கீழே தள்ளி விட்டது! பல தருணங்களில் நாமும் இந்த சாதுவைப் போன்றே... சிலரை மரியாதைக்கு உரியவர்களாகவும் சான்றோர்களாகவும், திறமைசாலிகளாக வும் நம்பி ஏமாந்து போகிறோம். நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் இது போன்ற ஏமாற்றங்களைத் தவிர்த்தால், நம் வாழ்வின் ஏற்றங்களை யாராலும் தடுக்க முடியாது அல்லவா!

- கீர்த்தனா ரவி, திருச்சி-2

மாயம் செய்த மான்!

“மாரீசன் மாய மானாக உருவம் எடுத்து, சீதையிடமிருந்து ராமனை விலக்கி அப்பால் இட்டுச் செல்கிறான். உண்மையில் அவன் மாய (மாய - இறக்க), மானாகிறான். ஆம்... மாரீசனுக்கு ராமன் மா யமனாகிறான் (மா யமன் - பெரிய எமன்).”

- வாரியார் சுவாமிகள் சொன்னது