Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 15

சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 15

தேர்தல் ஜுரம் தொடங்கியாச்சு! நல்லா கவனிச்சுப் பார்த்தீங்கன்னா தெரியும், இங்கே யாரும், எந்தக் கட்சியும் தங்களோட சொந்த பலத்துல நிக்கல; எந்த வேட்பாளரும் தான் இந்த நாட்டுக்கு இப்பவோ, எப்பவோ செய்த நல்ல காரியங்களுக்காக ஜனங்க தன்னை ஜெயிக்க வைப்பாங்கன்னு நம்புற மாதிரி தெரியலே! அப்படி ஏதாவது செஞ்சிருந்தாத்தானே? எல்லாரும், எல்லா கட்சியும் அடுத்தவனோட பலவீனத்தைதானே தன்னோட பலமா நினைக்கிறாங்க! அதிக கட்சிகள் தேர்தல்ல நிக்குறதால நம்மோட எதிர்ப்பு ஓட்டுகள் சிதறும்; நாம சுலபமா ஜெயிச்சுடலாம்னு ஒவ்வொருத்தரும் மனப்பால் குடிச்சிட்டிருக்காங்க.

ஜனநாயகம் ஜனநாயகம்கிறாங்களே, அது எங்கேங்க இருக்கு? ஒரு சின்ன கணக்கு சொல்றேன். ஒரு ஊர்ல மொத்தம் 100 ஓட்டு இருக்குன்னு வெச்சுக்குங்க. அஞ்சு பேர் தேர்தல்ல நிக்கிறாங்க. அதுல ரெண்டு பேர் தலா 15 ஓட்டு வாங்கறாங்க; ஒருத்தர் 20 ஓட்டு வாங்குறார்; ஒருத்தர் 23 ஓட்டும், இன்னொருத்தர் 27 ஓட்டும் வாங்குறார். 27 ஓட்டு வாங்கினவர் ஜெயிச்சு மந்திரியாகுறார். அதாவது, இவரை வேண்டாம்னு ஒதுக்கின மத்த 73 பேருக்கும்கூட இவர்தான் மந்திரி. இதுதான் ஜனநாயகமா? கேலிக்கூத்தால்ல இருக்கு!

ரூ.9,10,60,323,43,00,000/- இந்தத் தொகையை வாசிக்கவாவது முடியுதா உங்களால? ஒன்பது கோடியே பத்து லட்சத்து, அறுபதாயிரத்து, முந்நூற்று இருபத்து மூணு கோடியே நாற்பத்து மூணு லட்சம் ரூபாய்! மூச்சு வாங்குதா? நம்ம நாட்டுல இப்போ விசாரணையில் இருக்கிற ஊழல்களோட மொத்தக் கணக்கு இதுன்னு ஒரு புள்ளி விவரம் சொல்லுது. இப்படி இருந்தா நாடு எப்படிங்க முன்னேறும்? எந்தக் காலத்துலங்க வல்லரசாகும்?

‘நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள்; இந்தியாவை நான் வல்லரசாக்கிக் காட்டுகிறேன்’னு சொன்னார் சுவாமி விவேகானந்தர். சமீபத்திய இயற்கைச் சீற்றத்தின்போது இளைஞர்களின் எழுச்சியையும், தன்னார்வத்தையும், தன்னலமில்லாத சேவை மனப்பான்மையையும் நான் கண்கூடாகப் பார்த்தேன்.

வரப்போகிற தேர்தலும் ஓர் இயற்கைச் சீற்றம் மாதிரிதான்! எல்லா அரசியல் தலைவர் களும் சூறாவளிச் சுற்றுப் பயணம்தானே மேற் கொண்டிருக்காங்க? அப்ப சந்தேகமே இல்லாம இந்தத் தேர்தலும் ஒரு சுனாமிக்குச் சமம்தான்! போன மழை, வெள்ளப் பேரிடரின்போது இளைஞர்கள் காட்டின வேகத்தைவிட நூறு மடங்கு வேகத்தையும் விறுவிறுப்பையும் அவங்க இந்தத் தேர்தல்ல காட்ட வேண்டியிருக்கு. நம்ம நாட்டின் தலையெழுத்தை மாத்தி அமைக்கிற சக்தி இளைஞர்கள்கிட்டதான் இருக்கு.

ஆனா, எத்தனை படித்த இளைஞர்கள் அரசியல்ல ஈடுபட விரும்பறாங்க? சில இளைஞர்கள்கிட்ட பேசினதுல எனக்குச் சில விஷயங்கள் உறைச்சுது.

‘பாலிடிக்ஸ்’ங்கிற வார்த்தையையே ஏதோ கெட்ட வார்த்தை போலத்தான் நம்ம இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தி வெச்சிருக்கோம். காலேஜ்லயோ, வேலை செய்யற இடத்துலேயோ குட்டிக் குழப்பம் பண்றவங்களை, ‘அவன் பாலிடிக்ஸ் பண்றான்’னு சொல்றோம். எந்தப் பெற்றோர்களை வேணா கேட்டுப் பாருங்க, தங்கள் பிள்ளைங்க அரசியல்ல குதிக்கிறதை விரும்புவாங்களான்னு? நிச்சயம் மாட்டாங்க. அரசியல் ஒரு சாக்கடைன்னு அவங்க மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு. அதுல தங்கள் பிள்ளைகளும் குதிக்கணுமான்னு அவங்களுக்கு ஒரு தயக்கம் இருக்கத்தானே செய்யும்? தங்கள் பிள்ளைங்க நல்லா படிச்சு ஒரு இன்ஜினீயராவோ, டாக்டராவோ அல்லது ஒரு பெரிய தொழிலதிபராவோ ஏதோ ஒரு கௌரவமான உத்தியோகம் பார்க் கணும்னுதான் அவங்க ஆசைப்படுவாங்க. நல்லா கவனிங்க, கௌரவமான உத்தியோகம்; அவங்களைப் பொறுத்தவரைக்கும் அரசியல் அகௌரவமான விஷயம்.

அரசியலுக்குப் போயாச்சுன்னா மானம், மரியாதையெல்லாம் பார்க்கக்கூடாது. ரவுடிகளின் கூடாரமாயிடுச்சு நம்ம அரசியல் களம். ஒருத்தன் பேர்ல கிரிமினல் வழக்குகளும் பாலியல் புகார்களும் இருந்தாத்தான் அவன் திறமையான அரசியல்வாதி! இல்லேன்னா அவன் அரசியலுக்கே லாயக்கில்லேங்கிறதுதான் நடைமுறை யதார்த்தம்.

தவிர, ஒருத்தன் அரசியல்ல இறங்கி ஜெயிக்கணும்னா அவன் பண பலம் மிகுந்தவனா இருக்கணும். அல்லது, அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவனா இருக்கணும். கட்சிரீதியான தொடர்பு இருக்கணும். அப்பத் தான் அவன் அரசியல்ல ஜெயிக்க முடியும்.

‘இந்த வம்பெல்லாம் நமக்கெதுக்கு? நமக்கேன் அரசியலும் அடிதடியும்? படிச்சோமா, வேலைக்குப் போனோமா, நம்மை வளர்த்து ஆளாக்கின நம்ம பெற்றோர்களைக் கண்ணும் கருத்துமா வச்சுப் பார்த்துக்கிட்டோமா’ன்னுதான் இன்றைய இளைஞன் நினைக்கிறான். அதுல தப்பில்லையே?

60 வருஷங்களுக்கு முன்னாடியே வின்ஸ்டன் சர்ச்சில் தீர்க்கதரிசனமா ஒண்ணு சொன்னார்... “சுதந்திர இந்தியாவில் அதிகாரம் போக்கிரிகளின் கைகளுக்கும், முரடர்களின் கைகளுக்கும், பண மூட்டைகளின் கைகளுக்கும்தான் போய்ச் சேரும். எல்லா அரசியல் தலைவர்களும் குறைவான திறமையே கொண்ட பதர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் வாயில் தேன் ஒழுகும்; மனதில் கயமையே நிரம்பியிருக்கும். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அவர்கள் எப்போதும் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் அட்டூழியங்களால் தண்ணீருக்கும் காற்றுக்கும்கூட வரி விதிக்கப் படும் காலமும் வரலாம்!” 

அதுதான் இப்போ நடந்துட்டிருக்கு. மறுபடி யும் சொல்றேன், இந்த நிலையை மாத்த இளைஞர்களாலதான் முடியும். டாஸ்மாக்குக்கு எதிரா பொங்கி எழுந்து போராடின இளைஞர் களைப் பார்த்தோமே? மத்த அரசியல் கட்சிகள் ஏற்படுத்தாத ஒரு கவன ஈர்ப்பை இளைஞர்களின் போராட்டம் செய்ததா இல்லையா? 24 வயசே ஆன, சட்டக் கல்லூரி மாணவி மதுரை நந்தினி, மதுக் கடைகளை மூடச் சொல்லி அரசுக்கு எதிரா தைரியமா போராடி எத்தனை எத்தனை முறை கைதாகியிருக்கார்? சமூகத்தைச் சீர்குலைக்கும் அம்சங்களை ஒழிச்சுக் கட்டவும், ஊழல் பெருச்சாளிகளை ஓட ஓட விரட்டவும் இளைஞர்களாலதான் முடியும்.

ஆனா, அவங்களை தங்கள் கட்சி வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கலாமான்னுதான் அரசியல் தலைவருங்க பார்க்கிறாங்களே தவிர, அந்த இளைஞர்களை ஊக்குவிக்கவோ சரியான திசையில் வழிநடத்தவோ யாரும் தயாரா இல்லே. நாளைக்குத் தங்களோட வியாபாரம் போணியாக வேண்டாமா?

சில ஆண்டுகளுக்கு முன்னால வெளியான ‘ஆயுத எழுத்து’ படம், இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியத்தைப் பேசிச்சு. அது ஒரு முன்னோட்டம்தான். அதுக்கு முன்னே செய்ய வேண்டியது நிறைய இருக்கு.

இளைஞர்களை வழிநடத்த காந்தி, காமராஜ், கக்கன் மாதிரியான சிறந்த தலைவர்கள், முன்மாதிரிகள் இப்போ இல்லே. அப்படி ஒருத்தர் உடனடியா வேணும். இருக்காங்க. ஆனா, அவங்களும் நமக்கெதுக்குன்னு ஒதுங்கி யிருக்காங்க. தவிர, இளைஞர்களுக்கு அரசியலை முறையா போதிக்கக்கூடிய கல்வித் திட்டமோ, நிறுவனங்களோ இல்லே.

மேலும், ராஜ்ய சபா மாதிரி, மேலவை மாதிரி ஓர் அமைப்பை ஏற்படுத்தி, படித்த இளைஞர்கள் நேரடி அரசியலில் பங்கு கொள்ளும்படியான ஓர் ஏற்பாட்டைச் செய்யணும். இதையெல்லாம் இன்றைய அரசியல் தலைவர்கள் செய்வாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லே.

‘இளைஞர்கள் அரசியலில் ஈடுபட்டு ஜெயிக்க இங்கே வாய்ப்பு இல்லேங்கறீங்க; ஆனா, நம்ம நாட்டின் தலையெழுத்தை மாத்தி அமைக்கிற சக்தி இளைஞர்கள்கிட்டதான் இருக்குன்னும் சொல்றீங்க. நாங்க என்னதான் செய்யணும்?’னு உங்களுக்குள்ளே ஆதங்கமும் எரிச்சலும் கலந்து ஒரு கேள்வி எழலாம். இதுக்கு ஒரே ஒரு பதிலைத்தான் என்னால சொல்ல முடியும்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 15

ஓட்டுரிமைதான் உங்கள் ஆயுதம். அதனால, ஓட்டுப் போடும் உரிமை வந்துவிட்ட இளைஞர் கள் அத்தனை பேரும் உடனடியா தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பிச்சு உங்களுக்கான ஓட்டுரிமையை வாங்கிக்குங்க.

தேர்தலின்போது கட்சிகளைப் பார்க்காதீங்க; வேட்பாளரின் தகுதி என்னன்னு பார்த்து, அவருக்கு ஓட்டுப் போடுங்க. இளைஞர்களின் ஓட்டுகள்தான் இன்னிக்குப் பெரிய சக்தியா விஸ்வரூபம் எடுத்து நின்னு, அரசியல் கட்சிகளின் தலையெழுத்தையே மாத்தியமைக்கப் போகுதுன்னு அவனவனும் அடிவயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கான்.

நீங்க ஓட்டுப் போடுறது மட்டுமில்லே; உங்க வீட்டுப் பெரியவங்களையும் அக்கம் பக்கத்தாரையும் ஓட்டுப் போடச் சொல்லி வற்புறுத்துங்க. ஓட்டு எத்தனை பெரிய ஆயுதம்னு அவங்களுக்கு எடுத்துச் சொல்லுங்க. ஓட்டுப் போடறவனுக்குத்தான் அரசாங்கத்தைத் தட்டிக் கேட்கிற தார்மிக உரிமை இருக்குன்னு புரிய வைங்க. உங்க தொகுதியில நிக்கிற வேட்பாளர்கள் யார் யாரு, அவங்களோட தகுதி, தராதரம் என்னன்னு எல்லாருக்கும் தெரியிற மாதிரி புட்டுப் புட்டு வைங்க. உங்களுக்குத்தான் ஃபேஸ்புக், வாட்ஸப்னு பலது இருக்கே. நான் சொல்லியா தரணும்? 

அரசியல் கட்சி எதுவும் உங்களை ஆரம்பிக்கச் சொல்லலை. ஆனா, இளைஞர்கள் அத்தனை பேரும் ஓரணியில் திரண்டு ஒரு பேரியக்கமா உருவாக வேண்டிய காலம் வந்தாச்சு. அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசியுங்க. நல்லவர்களை, நாட்டின் நலனில் அக்கறையுள்ளவர்களை அடையாளம் கண்டுபிடியுங்க. அவங்களை ஒண்ணு திரட்டுங்க.

இந்தியாவின் மிகப் பெரிய பலம் இளைஞர்களாகிய நீங்கள்தான். இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 சதவிகிதம் இளைஞர்கள் என்பது ஒரு பெரிய வரம். இந்த இளமைத் துடிப்பு வேறு எந்த நாட்டுக்கும் இல்லை.

இளைஞர் சக்தி, இந்தியாவின் சக்தியாக வீறு கொண்டு எழட்டும்!

என்ன, செய்வீர்களா? செய்வீர்களா?

- இன்னும் பேசலாம்

ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே…

1) சரியாக வழிநடத்துதல் அல்லது சரியான வழிகாட்டுதல் என்பது, பிறரை உங்கள் பாதையில் பயணிக்கச் செய்வதல்ல; அவர்களுக்கான பாதையை அடையாளம் காண உதவுவதே!

2) எந்தவொரு சிறந்த திரைப்படமோ, புத்தகமோ அல்லது சிறந்த கலைப் படைப்போ நமது வாழ்க்கையின் சிக்கல்களைத் தீர்த்துவிடாது. ஆனால், அதற்காக ஒரு துளியேனும் முயலும் என்று நம்புகிறேன்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 15

3) காலை 9:30 மணியிலிருந்து மாலை 5:30 மணி வரை கடுமையாக உழையுங்கள். மாலை 6 மணியிலிருந்து இரவு படுக்கச் செல்லும் வரை உங்கள் குடும்பத்தாருக்காக ஒதுக்குங்கள். வார இறுதி நாட்களை உங்கள் மகிழ்ச்சிக்காகப் பயனுள்ள விதத்தில் செலவிடுங்கள். நான் இதில் உறுதியாக இருக்கிறேன். நீங்களும் உறுதியாக இருங்கள்.

4) இப்பிறவியில் மற்றவர்களிடம் நாம் செலுத்தத் தவறிய அன்புதான், மறுபிறப்பில் துன்பங்களாய் வந்து நம்மை வருத்துகிறது.

5) கவனி; கற்றுக் கொள்வாய்; ஒரு ஸ்பாஞ்சைப் போல் உறிஞ்சிக் கொள்வாய். வெறுமே எப்போதும் ஆழ்ந்து கவனித்துக்கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே உன் வாழ்க்கை இன்னும் பல படிகள் சிறப்பாக அமைய முடியும்.

சவால்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 15இந்த முறை மிகச் சுலபமான புதிரையே கேட்டுள்ளேன். அருகில் உள்ள ஒன்பது சிறு கட்டங்களில் நீங்கள் 6 புள்ளிகளை வைக்க வேண்டும். நிபந்தனை: மூன்று புள்ளிகள் ஒரே வரிசையில் அமைந்துவிடக்கூடாது!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 15

என்ன, சவாலில் ஜெயித்துவிட்டீர்களா? உங்கள் விடையை மொபைலில் புகைப்படம் எடுத்து, உடனே 98406 67184 என்ற எண்ணுக்கு வாட்ஸப்பில் அனுப்பிவையுங்கள்! சக்தி விகடன் ஃபேஸ்புக் இன்பாக்ஸிலும் உங்கள் விடையைப் பதிவிடலாம். பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

பரிசு யாருக்கு?

ஓர் ஐந்து இலக்க எண். அதன் ஆரம்பத்தில் 1 சேர்ப்பதால் கிடைக்கும் ஆறு இலக்க எண்ணைப்போல், அந்த எண்ணின் கடைசியில் 1 சேர்ப்பதால் கிடைக்கும் ஆறு இலக்க எண் மூன்று மடங்கு எனில், அந்த ஐந்து இலக்க எண் என்ன? சென்ற இதழில் கேட்கப்பட்ட சவால் கேள்வி இதுதான். இதற்கான விடை: 42857

இந்தச் சரியான விடையை குரல் பதிவாகவும் எஸ்.எம்.எஸ். வழியாகவும் அனுப்பி இருந்தவர்களில் சென்னை - பெசன்ட் நகரைச் சேர்ந்த சியாமளா என்ற வாசகிக்கு ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்  எழுதிய, ‘உறக்கத்திலே வருவதல்ல கனவு’ என்ற புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு