பிரீமியம் ஸ்டோரி
பூச்சரம்!
பூச்சரம்!

கடவுளைக் காண்போம்!

‘‘கடவுளே, என்னிடம் பேச மாட்டாயா?’’ என்று ஒருவன் நெஞ்சுருக வேண்டினான்.  அப்போது, அவன் அருகில் ஒரு குயில் கூவியபடி பறந்து சென்றது. அதை அவன் கவனிக்கவில்லை.
 
‘‘கடவுளே, என்னிடம் நீ பேச மாட்டாயா?’’ என்று மீண்டும் அவன் உரத்த குரலில் கத்தினான். அப்போது வானத்தில் பலத்த இடியோசை கேட்டது. அதையும் அவன் கண்டுகொள்ளவில்லை.

‘‘கடவுளே, உன்னை நான் உடனடியாகப் பார்க்க வேண்டும்,’’ என்று அப்போது வானில் ஒரு தாரகை சுடர்விட்டுப் பிரகாசித்தது. அதையும் அவன் கவனித்தானில்லை. தனது பிரார்த்தனையைத் தொடர்ந்தான்...

‘‘கடவுளே, எனக்கு ஒரு அதிசயத்தையேனும் காட்டு!’’

அப்போது அருகில் உள்ள குடிசையில் குழந்தை பிறந்து, வீறிட்டு அழும் சத்தம் கேட்டது. அதையும் அவன் பொருட்படுத்தவில்லை.

‘‘கடவுளே, நீ இங்கு என் அருகில்தான் இருக்கிறாய் என்பதை நான் தெரிந்துகொள்ள என்னை நீ தொட வேண்டும்’’ என்று மன்றாடினான். அப்போது அவன் தோளில் அழகிய வண்ணத்துப்பூச்சி ஒன்று பறந்து வந்து அமர்ந்தது. அவனோ அதைக் கையால் அப்புறப்படுத்திவிட்டு கடவுளைக் காணமுடியவில்லை என்கிற கவலையொடு தனது பிரார்த்தனையை தொடர்ந்து கொண்டிருந்தான்.

இப்படித்தான் நண்பர்களே, நம்மைச் சுற்றியும் நமது அருகிலும் வெவ்வேறு வடிவங்களில் தமது இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கிறார் கடவுள். ஆனால், நாம்தான் அதை உணர்ந்து கொள்வது இல்லை.

- என்.கணேஷ் (வாட்ஸ் அப்)

பூச்சரம்!

‘‘நான் வாழையல்ல; சவுக்குமரம்!’’

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள், அவரது வானொலிப் பேட்டியில் இருந்து...

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும்போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்துகொண்டே போய், பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழே இறங்கும்போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக்கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று, கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி, அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய்விடும்.

இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கைதான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தை கள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.
மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவது இல்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக்கொண்டேயிருக்கும். நான் வாழை அல்ல; சவுக்கு மரம்!

- மெகாலிங்கம் (வாட்ஸ் அப்)

வாழும்போதே...

வாட்ஸப்பில் வந்த மெசேஜ் ஒன்று வெகுவாகச் சிந்திக்கவைத்தது. அது, உங்களுக்காக  இங்கே...

அந்திம காலத்தை நெருங்கிக்கொண்டிருந்த சிலரை அருகில் இருந்து கவனித்து வந்த நர்ஸ் ஒருவர், அவர்களின் மரணத் தறுவாயில், ‘உங்களுக்கு ஏதேனும் மன வருத்தம் உண்டா?’ என்று அவர்களிடம் கேட்டு, அதற்கு அவர்கள் சொன்ன பதில்களைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார். அவர்களின் பதில்களில் சில :

1. எனக்கு பிடிச்ச மாதிரி வாழாம, அடுத்தவங்க எதிர்பார்க்கிற மாதிரி வாழ்ந்துட்டேன்.

2. நான் வேலை வேலைனு ரொம்ப ஓடியிருக்கக் கூடாது

3. நான் நினைச்சதை சொல்றதுக்கு தைரியம் இருந்திருக்கணும்.

4. என் நண்பர்களோட டச்ல இருந்திருக்கணும்.

5. நான் சந்தோஷமா இருந்திருக்க நானே அனுமதிச்சிருக்கணும்.

- கீர்த்தனா சுரேஷ், பாளை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு