Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 16

யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

பிரீமியம் ஸ்டோரி
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 16

த்தாம் வகுப்பு, ப்ளஸ்-டூவுக்கெல்லாம் பரீட்சைகள் முடிஞ்சு, பசங்க ரிசல்ட்டுக்காகக் காத்திருக்காங்க. காலேஜ் தேர்வுகள்கூட ஆரம்பிச்சுடுச்சுன்னு நினைக்கிறேன். அல்லது, தேர்தல் முடிஞ்சு ஆரம்பிக்குமோ என்னவோ!

இதுக்கப்புறம் பசங்க என்ன பண்ணலாம், என்ன மாதிரியான மேல் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்னு ஒரு பக்கம் கல்வி நிறுவனங்கள், மீடியாக்கள் ஆலோசனை வழங்கும். கல்லூரிப் படிப்பை முடிச்சு வேலைக்குப் போகப்போற இளைஞர்கள் இன்டர்வியூக்களின்போது எப்படி நடந்துக்கணும், கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லணும்னு கல்வியாளர்கள், கம்பெனி உயரதிகாரிகளின் பேட்டிகள் பத்திரிகைகளில் வெளியாகும்.

கேட்கிற கேள்விகளுக்குத் தன்னம்பிக்கையோடு பதில் சொல்லணும், தைரியமா பதில் சொல்லணும், வளவளன்னு சொல்லாம சரியான பதிலை ரத்தினச் சுருக்கமா சொல்லணும், எந்தக் கேள்விக்காவது பதில் தெரியலைன்னா மனசுக்குத் தோணின ஏதோ ஒரு தப்பான பதிலைச் சொல்லாம, தெரியலைன்னு சொல்லிடறது பெட்டர்னெல்லாம் பலவிதமான யோசனைகள் வழங்கப்படும்.

கல்லூரிகள்ல கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடக்கும். கம்பெனிகள் தங்களுக்குத் தேவையான ஒருத்தர் அல்லது ரெண்டு பேரைத் தேர்ந்தெடுக்க முதல் சுற்று, இரண்டாம் சுற்று என நேர்முகத் தேர்வுகள் நடத்திப் படிப்படியா வடிகட்டும்.

இந்த நேரத்துல, கேம்பஸ் இன்டர்வியூ அனுபவங்கள் சிலதை உங்களோடு பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன்.

ஒரு பெரிய சாஃப்ட்வேர் நிறுவனம் வேலைக்கு ஆள் எடுக்க ஒரு கல்லூரியில கேம்பஸ் இன்டர்வியூ நடத்த வந்தது. பட்டப் படிப்பு இறுதியாண்டு மாணவர்களை இன்டர்வியூ பண்ணி, ஃபைனல் ரவுண்டுக்கு 20 பேரைத் தேர்ந்தெடுத்துது. கம்பெனி ஹெட் ஆபீஸ்லேர்ந்து வந்திருந்த உயர் அதிகாரிகள் ரெண்டு பேர் அந்த 20 பேரையும் இன்டர்வியூ செஞ்சாங்க.

பொதுவா ‘உங்களைப் பத்திச் சொல்லுங்க’ன் னாங்க. அப்புறம், தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகள், கம்பெனி தொடர்பான கேள்வி கள்னு வழக்கமான கேள்விகள்தான். 

சத்தீஷ்னு ஒரு மாணவனை அவங்க இன்டர்வியூ பண்ணிட்டிருக்கும்போது, அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர், “உங்க பயோ-டேட்டால ‘ஹாபி’ங்கிற இடத்துல, ‘க்யூபர்’னு போட்டிருக்கீங்களே, அப்படின்னா என்ன? நான் கேள்விப்பட்டதே இல்லியே?”ன்னார்.

“இந்தக் காலத்துப் பசங்களுக்கு இப்படித்தான் விநோதமான பொழுதுபோக்கெல்லாம் இருக்கு!”ன்னு சொல்லிட்டுச் சிரிச்சார் இன்னொருத்தர்.

“சார், ரூபிக் க்யூப்னு நீங்க கேள்விப் பட்டிருக்கலாம். அதை சால்வ் செய்யறதுல எனக்கு ஆர்வமும் திறமையும் உண்டு. என்னை மாதிரி க்யூப் புதிரை சால்வ் பண்றவங்களை க்யூபர்னு சொல்வாங்க சார்!” என்றான் சத்தீஷ்.

“அடடே, ரூபிக் க்யூபா? தெரியுமே! நானும் ட்ரை பண்ணிப் பார்த்திருக்கேன். ம்ஹூம், என்னால ஒரு தடவைகூட சால்வ் பண்ண முடிஞ்சதில்லை!” என்றார் ஒரு அதிகாரி.

“ஆமாம்! என்னாலும்தான்! ஆனா, என் பையன் பட்டுப் பட்டுனு எல்லா பக்கமும் கலர்களை ஒண்ணு சேர்த்துடுவான். ஆனா, அதை என் கண்ணெதிரே பண்ண மாட்டான். உள்ளே ரூமுக்குள்ளே போய், ரெண்டு நிமிஷத்திலே சால்வ் பண்ணிக் கொண்டு வந்து காட்டுவான்”னார் மற்றவர்.

“கெட்டிக்காரன்தான்!”னு புகழ்ந்தார் மற்றவர்.

“அவன் கெட்டிக்காரத்தனத்தைதான் நானும் ஒரு நாள் நைஸா பார்த்துட்டேனே! ரூபிக் க்யூபையே சின்னச் சின்னத் துண்டு களா அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு, அப்புறம் கலர்களை ஒழுங்குபடுத்தி ஒண்ணு சேர்த்துடுவான்!”னு சொல்லி கபகபன்னு சிரிச்சார் அந்த அதிகாரி.

“ஒருவேளை, சாரும் அப்படித்தான் க்யூப் புதிரை சால்வ் பண்றாரோ என்னவோ! என்ன சத்தீஷ், நீங்க நிஜம்மாவே சால்வ் பண்ணுவீங் களா, இல்லே இவரோட சன்  டெக்னிக்கா?”னு கேட்டுச் சிரிச்சார் அடுத்தவர்.

“இல்ல சார், நான் நிஜம்மாவே க்யூப் புதிரை சால்வ் செய்வேன்!”னு பவ்வியமா சொன்னான் சத்தீஷ்.

“எத்தனை நிமிஷத்துல?”

சத்தீஷால் க்யூப் புதிரை அதிகபட்சம் ரெண்டு நிமிஷத்தில் சால்வ் செய்துவிட முடியும். ஆனால், அவன் என்ன சொன்னா லும், அதைவிடக் குறைவான நேரத்தைச் சொல்லி, அதற்குள் சால்வ் செய்ய முடியுமா என்று கேட்பார்கள் அவர்கள் என்பதும் சத்தீஷுக்குத் தெரியும். அதனால்…

“மூணு நிமிஷத்துக்குள்ள சால்வ் பண்ணி டுவேன் சார்!”னான்.

“இங்கே யார்கிட்டேயாவது க்யூப் இருக்குமா?”

“என்கிட்டேயே இருக்கு சார். வெளியில என் பேக்ல வெச்சிருக்கேன்.”

“போய் எடுத்துட்டு வா!”ன்னாங்க. எடுத்துட்டு வந்தான்.

அதை வாங்கி ஒருத்தர் கன்னாபின்னான்னு திருப்பி கலர்களை மாத்தி வெச்சு, “இதை மூணு நிமிஷத்துல இல்ல, ரெண்டே நிமிஷத்துல சால்வ் பண்ணிக் காட்டு பார்ப்போம்!”னார்.

சத்தீஷ் ரொம்பத் தயங்குற மாதிரி நடிச்சு, “இல்ல சார், நான் நிறைய தடவை ட்ரை பண்ணியிருக்கேன். மூணு நிமிஷத்துக்குக் குறையாம ஆகுது! ரெண்டு நிமிஷத்துக்குள்ள முடியுமான்னு தெரியலை. ட்ரை பண்ணிப் பார்க்கறேன்!”னான்.

“ட்ரையெல்லாம் கிடையாது. ரெண்டு நிமிஷத்துல முடிக்கணும். என்ன, சவால்னதும் பயமா இருக்கோ?”

“இல்ல சார், ஐ வில் ட்ரை மை பெஸ்ட்! ரெண்டு நிமிஷத்துல முடிக்கப் பார்க்கறேன்!”

ஆனால், சத்தீஷ் அதை ஒண்ணே முக்கால் நிமிஷத்திலேயே சால்வ் செய்துவிட்டான். அவன் எதிர்பார்த்தது போலவே அதிகாரிகள் ரெண்டு பேரும் ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டாங்க.

“வாவ்! அசத்திட்டே சத்தீஷ்! எப்படி உன்னால இதைச் சாதிக்க முடிஞ்சுது?”ன்னு கேட்டார் ஒருத்தர்.

“பொதுவா, ஒரு நெருக்கடின்னு வரும்போது என்னால இன்னும் பெட்டரா பெர்ஃபார்ம் பண்ண முடியும் சார்!” என்றான் சத்தீஷ் ரொம்பப் பணிவாக.

அவனுக்குதான் அந்தக் கம்பெனியில் வேலை கிடைத்ததுன்னு இந்தக் கதையை நான் முடிக்கணுமா என்ன?!

கடினமா உழைக்கிறவனைவிட ஸ்மார்ட்டா உழைக்கிறவனைத்தான் கம்பெனிகள் இப்போ விரும்புது. அதுக்கேற்ப கேம்பஸ் இன்டர்வியூக்கள்லயும் பசங்க ஸ்மார்ட்டா பதில் சொல்லவேண்டியது முக்கியம், இந்த சத்தீஷ் மாதிரி!

சில வருஷங்களுக்கு முன்னால, நான் ஒரு கம்பெனி இன்டர்வியூவுக்குப் போயிருந்தேன். அந்த கம்பெனியோட புராடெக்ட்ஸ் பத்தி, டர்ன் ஓவர் பத்தியெல்லாம் தரோவா ப்ரிபேர் பண்ணிட்டுப் போயிருந்தேன். நான் மட்டுமில்லே, அங்கே வந்திருந்த கேண்டிடேட்ஸ் அத்தனை பேருமே தங்களை இந்த வேலைக்கு முழுத் தகுதியா தயார் பண்ணிட்டு வந்திருப்பாங்கன்றதுல சந்தேகமே இல்லே. அதையும் தாண்டி இன்டர்வியூல என்னை நான் புரூவ் பண்றதுக்கான சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்தேன்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 16

கடைசியா, “எல்லா கேள்விகளுக்கும் பிரில்லியன்ட்டா பதில் சொல்லிட்டீங்க. வெரிகுட்! இப்போ உங்களை ஒண்ணு கேக்க விரும்பறோம். இதே வேலைக்கு, இதைவிட அதிக சம்பளம், சலுகைகள் தந்து எங்களைவிட வேற ஒரு பெட்டர் கம்பெனி உங்களை வேலைக்கு எடுத்துக்கறதா சொன்னா, உங்க ளுடைய ரீயாக்‌ஷன் என்ன?”ன்னு கேட்டார் என்னை இன்டர்வியூ பண்ணின கம்பெனி சி.இ.ஓ.

இதுக்கு நான் சொல்லப் போற பதிலை வெச்சுதான் இவங்க தீர்ப்பு இருக்கும்னு எனக்குப் புரிஞ்சுது. நான் என்ன பதில் சொல்லப் போறேன்னு சி.இ.ஓ. என்னையே உன்னிப்பா பார்த்துட்டிருந்தார்.
நான் சொன்னேன், “இதுல யோசிக்கிறதுக்கு எதுவுமே இல்ல சார், நான் கண்டிப்பா அந்த வேலையைத்தான் ஏத்துப்பேன்!”

அவர் கொஞ்சம் ஷாக்கான மாதிரி தெரிஞ்சுது. இந்த பதிலை அவர் எதிர்பார்க்கல போல!

“அப்படின்னா நீங்க எங்களுக்கு விசுவாசமா இல்லை. நாங்க உங்களுக்கு வேலை கொடுத்தாலும், நீங்க ஜாயின் பண்ணு வீங்கன்றதுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை, அப்படித்தானே? அப்புறம் எதுக்காக நாங்க உங்களுக்கு இந்த வேலையைக் கொடுக் கணும்?”னு கேட்டார் அவர்.

“விசுவாசத்தைப் பத்திப் பேசறதுனால, நானும் உங்களை ஒண்ணு கேக்க விரும்பறேன்.

என்னைவிட பெட்டரான கேண்டிடேட் இருந்தா, இந்த வேலையை நீங்க அவருக்குதானே கொடுப்பீங்க? எனக்கு இல்லையே! அதனால, இது விசுவாசம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை, சார்! எல்லாரும் சிறந்ததைத்தான் விரும்புவாங்க. நீங்க சிறந்த ஸ்டாஃப் வேணும்னு விரும்புவீங்க. அதே போல, நான் சிறந்த நிறுவனத்துல வேலை செய்ய ஆசைப்படுவேன். அதனாலதான் இந்த இன்டர்வியூல கலந்துக்கிட்டிருக்கேன். உங்க கம்பெனி பெஸ்ட் கம்பெனின்னு நீங்க நம்பறீங்கதானே?”

கொஞ்சம் துடுக்கான பதில்தான். ஆனா நேர்மையான, உண்மையான பதில் இல்லையா என்னோடது!

- இன்னும் பேசலாம்

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 16

ன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஐந்து மட்டும் இங்கே...

•   வளர்தல் என்பது வலி நிறைந்தது; மாறுதல் என்பது கடினமானது. ஆனால், நமக்குப் பொருத்தமில்லாத இடத்திலேயே தேங்கி நிற்பதை விடக் கடினமானதும், வலி நிறைந்ததும் வேறில்லை! துறைமுகத்தில் கப்பல் பாதுகாப்பாகத்தான் இருக்கும்; ஆனால், அது அங்கே நிறுத்தி வைக்கப்படுவதற்காகத் தயாரிக்கப்படவில்லை.

•   ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் எனப் பலவாறு நாம் வேறுபட்டிருந்தாலும், நம் அனைவரின் நோக்கமும் கடமையும், துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் மனித சமுதாயத்தின் முகங்களில் புன்னகையைத் தோற்றுவிப்பதாகத்தான் இருக்க வேண்டும்.

• என்னைப் பொறுத்தவரை தேசப்பற்று என்பது, நமது தொழிலை முழு மனத்தோடும் அதற்குண்டான நெறிமுறைகளின்படியும் ஒழுங்காகவும் சிரத்தையாகவும் செய்வதுதான்.

• அற்புதமான யோசனைகள் சில நேரம் எதிர்பாராத இடத்திலிருந்து, எதிர்பாராத நபர்களிடமிருந்து வரக்கூடும். அதேபோல், யதேச்சையாக வந்த வாய்ப்புகள் சில நேரம் புதிய கதவுகளைத் திறந்துவிடக்கூடும்.

• உங்கள் வேலையை நேசியுங்கள்; நீங்கள் பணி செய்யும் நிறுவனத்தை அல்ல! காரணம், உங்கள் நிறுவனம் எப்போது உங்களை நேசிப்பதை நிறுத்தும் என்று உங்களுக்குத் தெரியாது.

சவால்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 16நகர்ப்புறத்தைத் தாண்டி வெளியே தனியாக இருக்கும், புதிதாகக் கட்டப்பட்ட ஒரு வீடு. மின்சார வசதி இன்னும் வழங்கப்படவில்லை. ஒரு ஞாயிறன்று எட்டு நண்பர்கள் அங்கே சென்று ஒரு நாளைச் செலவழிக்கிறார்கள். எட்டுப் பேரும் ஆண்கள். யாரிடமும் மொபைல் போன்கள் இல்லை; லேண்ட்லைன் வசதியும் அந்த வீட்டுக்கு வழங்கப்படவில்லை.

காலை 9 மணி. அந்த எட்டுப் பேரில் ஒருவன் சமையல் வேலையில் ஈடுபட்டிருக்கிறான். இன்னொருவன் செஸ் ஆடிக் கொண்டிருக்கிறான். மூன்றாவது நபர், வீட்டைச் சுத்தம் செய்வதில் ஈடுபட்டிருக்கிறான். நான்காவது ஆசாமி, வீட்டைச் சுற்றியுள்ள செடி, கொடி, புதர்களை வெட்டி அப்புறப்படுத்திக்கொண்டு இருக்கிறான். ஐந்தாவது நபர், களைப்பின் மிகுதியால் படுத்து, கண்களை மூடி, ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறான். ஆறாவது நபர், மொட்டை மாடிக்குச் சென்று சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான். ஏழாவது ஆசாமி, கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து, அருகில் இருக்கும் டிரம்மில் ஊற்றிக்கொண்டு இருக்கிறான்.

எட்டாவது ஆசாமி என்ன செய்துகொண்டிருக்கிறான்?

சரியாக யூகித்து, உங்கள் பதிலை உடனே 98406 67184 என்ற எண்ணுக்கு வாட்ஸப்பில் அனுப்புங் கள்! குரல் பதிவாகவும் அனுப்பலாம். பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

பரிசு யாருக்கு?

ஒன்பது சிறு கட்டங்களில் நீங்கள் 6 புள்ளிகளை வைக்க வேண்டும். மூன்று புள்ளிகள் ஒரே வரிசையில் அமைந்து விடக்கூடாது என்பது நிபந்தனை! இதோ விடை. இதே போன்று வேறொரு கோணத்திலும் புள்ளிகளை வைக்கமுடியும்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 16

இந்தச் சரியான விடையை அனுப்பி இருந்தவர்களில் தஞ்சாவூரைச் சேர்ந்த ரிஷ்வந்த் என்ற வாசகருக்கு ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்  எழுதிய, ‘உறக்கத்திலே வருவதல்ல கனவு’ என்ற புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு