Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம் - 40

பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

பிரீமியம் ஸ்டோரி
மனிதனும் தெய்வமாகலாம் - 40

வெளியூருக்குச் செல்கிறோம். வழியில் பலவற்றைப் பார்த்து, பலவற்றை வாங்கிச் சுமக்கிறோம். அங்கு இங்கு என அலைந்து திரிந்து, உடலும் களைத்துப்போய்விட்டது. சீக்கிரம் வீடு திரும்பவேண்டும் என்ற ஆா்வம் தலை தூக்கியது. இனிமேல்தான் பிரச்சனையே!

போகும்போது இருந்ததைவிட, நாம் வாங்கிச் சோ்த்த பொருட்கள் நிறைய்...ய சோ்ந்துவிட்டன. அவற்றையும் சுமந்துகொண்டு திரும்பவேண்டும். முடியவில்லை. ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து வாங்கியதில் சிலவற்றையாவது விட்டுவிட்டு வந்தாலொழிய நிம்மதியாகத் திரும்ப முடியாது. கொஞ்சநஞ்சம் கொண்டுவந்தாலும், அவருக்கு இவருக்கு எனக் கொடுப்பது; நம்மிடம் வாங்கியவா்,"பிச்சைக்காரப்பய! இவ்வளவு தூரம் போயிட்டுவந்து, எனக்குன்னு இதை வாங்கிட்டுவந்தான் பாரு!" என ஏச, மனக்கலக்கம் பிறக்கிறது நமக்கு. சற்றுநேரப் பயணத்திலேயே இவ்வளவு இருக்கும்போது, வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு இருக்கும்? ஆகவே... பொருட்களை விடுவதைவிட, அவற்றால் வரும் விளைவுகளையும் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் விட்டாலொழிய அமைதி கிடைக்காது. இதைத்தான் 'போன வழியில் திரும்புவது' எனச்சென்ற இதழில் பார்த்தோம்.

எதைஎதை ஆராய்ந்து ஆராய்ந்து வாங்கிச் சோ்த்தோமோ, அதைஅதை அடிப்படை உண்மையை ஆராய்ந்து ஆராய்ந்து விட்டுவிடத்தான் வேண்டும். இல்லையேல்.... துயரங்களும் தொல்லைகளும் நம்மைவிடாது. "ஆகையால், வெளியே ஆராய்ச்சி செய்வதைவிட, உள்ளே ஆராய்ச்சி செய்யவேண்டும். இவ்வளவையும் அனுபவிக்கிறோமே; நாம் யார் இந்த உடம்பு யார் உடம்பையும் உயிரையும் சோ்த்தது யார் எப்படிப் பந்தப்பட்டோம்? வீடுபேறு என்பது எது? - என அடிக்கடி ஆராய வேண்டும்.

"போனபிறவிகளில் செய்த புண்ணியங்களே ஞானத்தை அளிக்குமே; அப்படியிருக்க ஆன்ம தத்துவ விசாரம் எதற்கு என்றால்...சொல்கிறேன் கேள்! "புண்ணியங்களையும் ஈஸ்வர அா்ப்பணமாகச் செய்தால், அவைநம்மைப் பந்தப்படுத்தாது. இல்லையேல் பந்தப்படுத்திவிடும்; பிரச்னைதான். பலனை எதிர்பாராமல், பகவத் அா்ப்பணமாகச் செய்யப்படும் சத்கா்மம் சித்த சுத்தியைத் தரும். ஆத்ம விசாரம் ஞானத்தைத் தரும்" என்றார் குருநாதா்.

மனைக்குள் வைத்த பண்டங்களை
     மறந்தவன் வருட(ம்) நூறு அழுதாலும்
நினைத்து உணா்ந்தபின் கிட்டும்
     அப்படி இந்த நிலைமையில் ஆன்மாவும்
அனா்த்தமான தன் மறதியைக் கெடுத்துத்
      தன் அறிவினால் காணாமல்
கனத்த கன்மங்கள் நூறு யுகம்
      செய்யினும் காணுமோ? காணாதே!

                                           (சந்தேகம் தெளிதல் படலம்-71)

எளிமையான உதாரணம்; அபூா்வமான பாடல். பல வகைகளான விரதங்கள், ஹோமங்கள், வேள்விகள் எனச்செய்கிறோம். அவற்றின் மூலம் மேலும் மேலும் நம்  ஆசைகள் வளா்ந்துகொண்டே இருக்கின்றனவே தவிர, ஆத்மாலைப் பற்றிய உண்மையை உணர, அவை உதவுவது இல்லை. காரணம்? எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவதைப்போல, விருப்பங்களை நிறைவேற்றும் அவைகளில் எல்லாம் ஈடுபட்டு; நிலையான ஆனந்தத்தை அருளும் ஆத்ம தத்துவத்தை அறியாமல் இருக்கிறோம். அறியாதது மட்டுமல்ல! ஆத்மாவைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கிறோம் என்கிறது கைவல்லிய நவநீதம். ஓா் உதாரணமும் சொல்கிறது. வீட்டிற்குள் ஏதோ பொருட்களை வைத்து, அவற்றை எங்கே வைத்தோம் என்பதை மறந்துவிட்டோம். அதற்காக நூறு வருடகாலம் அழுதாலும், அவை கிடைக்குமா?அதே சமயம் அவற்றை எங்கே வைத்தோம் என்று தேடி, நினைவு வந்தவுடன் அவை கிடைத்துவிடுகின்றன அல்லவா? அதுபோல, ஆத்மாவைப் பற்றிய ஆராய்ச்சி இல்லாமல், என்னதான் செய்தாலும் ஆத்ம தத்துவத்தை உணர முடியாது; பிரம்ம தத்துவத்தை உணர முடியாது என்கிறது கைவல்லிய நவநீதம். இவ்வாறு... குருநாதா் என்னதான் விவரித்துச் சொல்லியும் சீடன் விடவில்லை.

அடுத்த கேள்வியைத் தொடுக்கிறான் அவன்.

"சத்குருவே! ஆத்மாவைப் பற்றி விசாரித்துத்தான் அறிய வேண்டுமென்றால், ஞான காண்டம் - கா்ம காண்டம் என்று இருவகையான தகவல்களை வேதம் ஏன் சொல்ல வேண்டும்?" எனக் கேட்கிறான்.
ஞான காண்டத்தில் ஞானமே சுகம் தரும் என்று கூறும் வேதம், கா்ம காண்டத்தில் அவரவா் தகுதிக்கு ஏற்ப பலவிதமான ஆசார ஒழுக்கங்களைச் சொல்கிறது. அது ஏன்? எனக் கேட்கிறான் சீடன்.
அவன் கேட்பது நியாயந்தானே! ஞானந்தான் சுகம் தரும் என்றால், ஆசார அனுஷ்டானங்களையும் விருப்பம் நிறைவேறுவதற்கான விரதங்கள் முதலானவைகளையும் ஏன் கூற வேண்டும்? எப்படிச் சந்தேகம் எழுந்திருக்கிறது பாருங்கள் அந்தச் சீடனுக்கு. ஆனால்... சீடனுக்கே இவ்...வளவு இருந்தால், குருநாதா் எப்படி இருப்பார்? சீடனின் கேள்விக்கு எளிமையான உதாரணத்தோடு, பதில் சொல்கிறார் குருநாதா்.

தினமும் மண் நுகா் பிள்ளை நோய்க்கு
         இரங்கியே தீம்பண்டம் எதிர்காட்டிக்
கனமருந்துகள் ஔித்துவைத்து அழைக்கின்ற
         கருணையாம் தாய் போல
மனை அறங்கள் செய்மகங்கள் செய் நன்றென்று
         மலா்ந்த வாசகம் சொல்லும்
நினைவே வேறுகாண் சுவா்க்க காமிகள்
         அந்த நிர்ணயம் தெரியாரே

                                         (சந்தேகம் தெளிதல் படலம்-73)

எளிமையான மிகவும்மேன்மையான உதாரணம். தாயையும் பிள்ளையையும் வைத்துச் சொல்லப்பட்டது. நம் ஞான நூல்கள் பலவற்றிலும் இதைப் பார்க்கலாம்.

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ, பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி, உலப் பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புரம்புரம் திரிந்த செல்வமே! சிவபெருமானே! யான் உனைத் தொடா்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே- என்பார் மாணிக்கவாசகா். கைவல்லிய நவநீதமும் அந்தப் போக்கிலேயே போகிறது.

குழந்தை ஒன்று. தினந்தோறும் மண்ணைத் தின்கிறது. அதற்குண்டான மருந்தைக் கொடுக்கத் தீா்மானிக்கிறாள் தாய். நேருக்கு நேராக மருந்தைக் கொடுத்தால், குழந்தை மருந்தை உண்ணுமா? அப்போது... தாய் குழந்தைக்குப் பிடித்த இனிமையான பண்டங்களில் மருந்தை ஔித்துவைத்துக் கொடுக்கிறாளல்லவா? அந்தத் தாயின் கருணை உள்ளத்தைப்போல... விஷய சுகங்களில் விருப்பப்பட்டு, மேலும்மேலும் அதிலேயே ஈடுபட்டு, அல்லல்களையும் பிறவித் துன்பத்தையும் வரவழைத்துக்கொள்கிறோம். அதிலிருந்து மீட்டு எடுப்பதற்காக, சுவா்காதி இன்பங்களைக்காட்டி அவற்றில் ஞான அமுதத்தை ஔித்துவைத்து, வேதம் அவ்வாறு சொல்கிறது. அதாவது...

 இம்மைஇன்பங்களில் ஈடுபட்டு
 அல்லல்படும்நமக்கு,
சுவா்காதி இன்பங்களைக்கூறி, அது நீங்கியபின் இதையும் நீக்கிப் பரம சுகத்தை அடைவிக்கும் பொருட்டு வேதம் அவ்வாறு கூறுகிறது - என்பது கருத்து.

இவ்வளவு சொல்லியும் சீடன் அடுத்த கேள்வியைக் கேட்கிறான். அது வேதத்தின்மீதே சந்தேகத்தை எழுப்பும் கேள்வி. 

- (தொடரும்)
                                          

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு