
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.
- சுவாமி விவேகானந்தர்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நெற்றியில் சுண்ணாம்பு!
வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். எதிரில் இருந்த வாலிபன் ஒருவன், ‘‘என்ன சாமி! நெற்றியில் இவ்வளவு பெரிசா சுண்ணாம்பு அடிச்சிருக்கீங்களே?’’ என்று அவர் விபூதி அணிந்திருப்பதைக் கேலி செய்தான்.
வாரியார் கோபப்படவில்லை. அவனிடம், ‘‘ஆமாம் அப்பா. நீ படித்தவன் உனக்குத் தெரியாததல்ல; குடியிருக்கும் வீட்டுக்குத்தான் சுண்ணாம்பு அடிப்பார்கள். குட்டிச் சுவற்றுக்கு அடிக்க மாட்டார்களே’’ என்றார். அவர் சொன்னதன் பொருள் பளிச்சென புரிந்தது, அந்த வாலிபனுக்கு. அவரிடம் மன்னிப்பும், ஆசியும் வேண்டிப் பணிந்தான். அறிவு, ஞானம், அன்பு முதலான நல்லவையெல்லாம் குடியிருப்பது நம் தலையில். அதன் முகப்புக்கு விபூதியெனும் வெள்ளை அடித்திருப்பது நியாயம்தானே என்பதை அந்த இளைஞனுக்கு மிக எளிமையாய் புரியவைத்தார் வாரியார் சுவாமிகள்.
துன்பமும் இன்பமும்!
வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று ஊர் திரும்பிய வணிகன் ஒருவன், தனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ந்தான்; அலறித் துடித்தான். அப்போது அவனின் மூத்த மகன் ஓடி வந்து, “தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்துக்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை” என்றான். அதைக் கேட்டதும் வணிகனின் சோகம் காணாமல் போனது. இப்போது அவனும் கூட்டத்தில் ஒருவனாக வேடிக்கைப் பார்க்கத் துவங்கினான்.
சிறிது நேரத்தில் இரண்டாவது மகன் ஓடிவந்து, “தந்தையே! வீட்டுக்கு முன்பணம்தான் வாங்கியிருக்கிறோம். முழுத்தொகை இன்னும் வந்துசேரவில்லை’’ என்றான். வணிகன் அதிர்ச்சியில் உறைந்தான். மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். சில மணித் துளிகளில், மூன்றாவது மகன் ஓடிவந்தான். “தந்தையே! இந்த வீட்டை வாங்கிய மனிதர் மிகவும் நல்லவர் போலும். ‘வீட்டை வாங்க முடிவு செய்தபோது, அது தீப்பிடித்து எரியும் என்று யாருக்கும் தெரியாது. ஆகவே, பேசியபடி முழுத் தொகையையும் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்’’ என்றான். இப்போது வணிகனின் சந்தோஷம் மீண்டது.
இங்கு எதுவுமே மாறவில்லை. அதே வீடு, அதே நெருப்பு! ‘இது என்னுடையது’ என்று நினைக்கும்போது, அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. ‘இது என்னுடையது அல்ல’ என்று நினைக்கும்போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. நான், என்னுடையது, எனக்குச் சொந்தமானது என்ற எண்ணம்தான் பற்று. உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. அனைத்துமே அழியக்கூடியவை அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாகக் கூடியவை. இதை நினைவில் நிறுத்தினாலே போதும்; சோகத்துக்கும் துன்பத்துக்கும் வேலையிருக்காது.
- ஒரு சொற்பொழிவில் கேட்டவர் ராமானுஜம், உடன்குடி
மாவடு மாலவன்!
மாவடு மூத்தவன் மாவடு யாதவன்
மாவடு மன்னவன் மாவடு மாலவன்
மாவடு மாலவன் மார்பினில் மாவடு
மாவடு சென்றனன் மாநிலம் வாங்கிட
மாவடு மூடினன் மாவடி தாயவே
மாவடு வாகுமோ மாநிலம் காத்தலே
இந்தப் பாடலைக் கவனித்தீர்களா?
ஒரேசொல் பலமுறை வந்தாலும், வெவ்வேறு பொருளை ஏற்றுள்ளது. கீழ்க்காணும் விளக்கத்தைக் கண்டால், இந்தப் பாடலின் சிறப்பை அறியலாம்.
மாவடு மூத்தவன் - விலங்கினமான கஜேந்திரனால் அழைக்கப்பட்ட ஆதிமூலம்
மாவடுயாதவன் - கேசி எனும் குதிரையால் தாக்கப்பட்ட கண்ணன்.
மாவடு மன்னவன் - விலங்கினமான மானை துரத்திச் சென்ற ராமன்
மாவடு மாலவன் - லட்சுமிதேவியால் அணுகப்பட்ட விஷ்ணு.
மாவடு மாலவன் மார்பினில் மாவடு- லட்சுமி வந்தமர்ந்ததால் விஷ்ணுவின் அடையாளமாக ஏற்பட்டது வத்ஸம் எனும் மறு.
மாவடு சென்றனன் - பெரிய பிரம்மச்சாரி வாமனன்
மாநிலம் வாங்கிட - உலகை மாவலியிடம் திரும்பப்பெற
மாவடு மூடினன் - தன் உண்மை ஸ்வரூபத்தை மறைக்க, ÿவத்ஸத்தை மான் தோலால் மறைத்தது.
மாவடி தாயவே - பெருவடிகளால் உலகை அளக்கவே அல்லவா?
மாநிலம் காத்தலே - உலகத்தைக் காத்தல்
மாவடு வாகுமோ - ஒரு பெருங்குற்றம் ஆகுமோ?
- சங்கரா சங்கர்
(வாட்ஸ்அப்-ல் பகிரப்பட்டது)