Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 17

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 17
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 17

யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 17

யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

Published:Updated:
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 17
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 17
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 17

சென்ற இதழில் இன்டர்வியூ அனுபவங்கள் சிலதைச் சொல்லியிருந் தேன். அதைப் படிச்சுட்டு கோயமுத்தூர்லேர்ந்து பிரபாகரன்கிறவர் போன் பண்ணியிருந்தார். “‘இதே வேலைக்கு, இதைவிட அதிக சம்பளத்துல, எங்களை விடப் பெரிய கம்பெனி உங்களுக்கு வேலை கொடுத்தா என்ன செய்வீங்க?’ங்கிற கேள்விக்கு, ‘கண்டிப்பா அந்த வேலையைத்தான் ஏத்துப்பேன்’னு நீங்க சொன்ன பதில் உண்மையான பதில்; நேர்மையான பதில். உங்களை இன்டர்வியூ செஞ்ச அதிகாரிகளுக்கு அது புரிஞ்சிருந்தா, உங்களுக்கு அங்கே கட்டாயம் வேலை கிடைச்சிருக்கும்.

ஆனா, உங்க பதில் கொஞ்சம் முரட்டுத்தனமானதா அவங்களுக் குத் தோணியிருந்தா, ‘இவர் கொஞ்சம் சிக்கலான ஆசாமி; பிராப்ளம் பார்ட்டி. இவரை வேலைக்கு எடுத்தா தலைவலிதான்!’னு நினைச்சு உங்களை ரிஜெக்ட் பண்ணியிருப்பாங்க. இந்த ரெண்டுல என்ன நடந்ததுன்னு நீங்க சொல்லவே இல்லையே?”ன்னு கேட்டார்.

அப்புறம் அவரே, “அதை எங்களின் யூகத்துக்கே விட்டுட்டீங் களாக்கும்!”னு சொல்லிச் சிரிச்சுட்டு, “இதே போல ஒரு அனுபவம் எனக்கும் கிடைச்சுது. அதை உங்ககிட்டே பகிர்ந்துக்கலாமா?”ன்னார்.
“தாராளமா! எனக்கு அடுத்த இதழுக்கான கட்டுரை ரெடி!”ன்னு குஷியானேன்.

கல்வித் தகுதியைச் சோதிக்கிற கேள்விகளைத் தாண்டி, ஒருத்தர் எந்த அளவுக்குச் சாதுர்யமா செயல்படுவார், ஸ்மார்ட் வொர்க்கரா இருப்பார்ங்கிறதைத் தெரிஞ்சுக்கிறதுக்காகவும் நேர்முகத் தேர்வுகளில் சில கேள்விகள் கேட்கப்படறதுண்டு. ஹெச்.ஆர். கோணத்துலேயும் சில கேள்விகள் வந்து விழலாம்.

பிரபாகரனுடைய சிஸ்டர் ஒரு இன்டர்வியூவுக்குப் போயிருக் காங்க. அங்கே இன்டர்வியூ முடிஞ்சதும் ஹெச்.ஆர். ஹெட் முகத்தை அதிருப்தியா வெச்சுகிட்டு, “ஸாரிம்மா! யூ ஆர் அன்லக்கி. நீங்க செலக்ட் ஆகலை. நீங்க போகலாம்!”னு சொல்லியிருக்காங்க. உடனே இந்தப் பொண்ணு அமைதியா எழுந்து, “இந்த வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி!”ன்னு புன்னகையோடு சொல்லி, கம்பீரமா வெளியே வந்திருக்கு. அடுத்த நிமிஷமே அந்தப் பொண்ணோட செல்போனுக்கு, ‘யூ ஆர் செலக்டட்!

கங்கிராட்ஸ்’னு மெஸேஜ் வருது. அப்புறம்தான் தெரிஞ்சிருக்கு, செலக்ட் ஆகலைன்னு சொன்னா, அந்த ஏமாற்றத்தை அந்தப் பொண்ணு எப்படி எதிர் கொள்றான்னு டெஸ்ட் பண்றதுக்காகத்தான் ஹெச்.ஆர். ஹெட் அப்படிச் சொன்னாங்கன்னு! கேண்டிடேட் வெறுமே வாய் வார்த்தையா சொல்ற பதில் மட்டும் இல்லே; அவங்களோட முகபாவம், நாற்காலியை விட்டு எழுந்திருக்கும் விதம், நடையில் தளர்ச்சி இருக்கா, தன்னம்பிக்கை லெவல் எந்த அளவில் இருக்குன்னு எல்லாத்தையும் எடைபோடுவாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரபாகரன் தன்னோட அனுபவத்தைச் சொன்னார். இன்டர்வியூவை நல்லாவே பண்ணியிருந்தாராம் அவர். கிட்டத்தட்ட அவருக்கும் இதே மாதிரி, இன்டர்வியூ முடிவுல ‘ஸாரி, நீங்க செலக்ட் ஆகலை! எங்களுடைய எதிர்பார்ப்புக்கு நீங்க பொருந்தி வரலை. ஸாரி!’ன்னு சொல்லியிருக்காங்க. அவர் வெறுமே நன்றி சொல்லிட்டு எழுந்து வரலை.

“பெருமைக்குரிய உங்கள் நிறுவனத்தில் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு வழங்கினதுக்கு நன்றி! என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த இன்டர்வியூவை நான் சிறப்பாவே பண்ணினேன்னுதான் நினைக்கிறேன். உங்களுடைய பதில் ஏமாற்றத்தைத் தந்தாலும், என்னிடத்தில் உங்களை அதிருப்திக்கு உள்ளாக்கின விஷயம் எது, எங்கே நான் சொதப்பினேன்னு சொன்னீங்கன்னா, அடுத்தடுத்த இன்டர்வியூக்கள்ல என்னைத் திருத்திக்க அது உதவியா இருக்கும். ப்ளீஸ்..?”னு சொன்னாராம்.

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 17

இந்த பதில்ல சில முக்கியமான அம்சங்களை கவனிப்போம். இந்த பதில்ல நிச்சயம் தற்பெருமை இல்லை. இந்த வாய்ப்புக்கான நன்றியை மனப்பூர்வமா தெரிவிச்சாச்சு. இந்த ஒரு வாய்ப்பு மட்டுமில்லே; நிச்சயம் இது போன்ற அருமையான வாய்ப்புகள் அடுத்தடுத்து வரும் என்பதிலும் தனக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியாச்சு. அவங்க பதில் ஏமாற்றத்தைத் தருவதாகச் சொன்னாலும், அதற்கான காரணம் இன்டர்வியூவை சிறப்பாகச் செய்திருக்கும் தன்னுடைய தன்னம்பிக்கைதான் என்பதையும் சொல்லியாச்சு. முக்கியமா, தவறுகளைத் திருத்திக்கொள்ள தான் எப்போதுமே ஆர்வமாக இருப்பதையும் மறைமுகமா அவங்களுக்கு உணர்த்தியாச்சு!

ஆக மொத்தத்தில், இது ஒரு சிறப்பான பதில். பிரபாகரனுக்கு அந்த வேலை கிடைச்சதில் ஆச்சரியப்படுறதுக்கு ஒண்ணுமே இல்லை.

இதை எழுதிட்டிருக்கும்போதே வேறொரு வாசகரிடமிருந்து போன். “இளைஞர்களுக்குத் தேவையான விஷயங்களைத்தான் எழுதிட்டிருக் கீங்க. அதுல சந்தேகமே இல்லை. ஆனா, இதுக்கும் சக்தி விகடனுக்கும் என்ன சம்பந்தம்? ‘நல்லவங்களுக்கு ஓட்டுப் போடுங்க’ன்னு அரசியலும், இன்டர்வியூக்களை அட்டெண்ட் பண்ணுவது எப்படின்னு படிப்பு, வேலை சம்பந்தமாவெல்லாம் எழுதணுமா? அதுக்குப் பதிலா, இளைஞர்களுக்கு பக்தி மார்க்கத் தைப் போதிக்கும் விதமாவும், அவங்களை ஆன்மிகத்தின் பக்கம் திருப்புற விதமாவும் சக்தி விகடனுக்குப் பொருத்தமா ஏதாச்சும் எழுதலாமே?”ன்னு கேட்டார்.

நான் ஆரம்பத்துலேயே சொன்னேன், ஞாபகமிருக்கா? ‘உங்களுக்கு இருக்கிற அதே பிரச்னைங்கதான் என் மண்டையையும் பிறாண்டிக்கிட்டு இருக்கு. அதனால, நம்ம அனுபவங்களை ஷேர் பண்ணிக்கிட்டு, அதன்மூலம் ஏதாச்சும் தீர்வு கிடைக்குமான்னு தேடற ஒரு முயற்சிதான் இது’ன்னு என் முதல் கட்டுரையிலேயே சொன்னேன்.

இளைஞர்களின் கடமை, பொறுப்பு, பிறரோடு பழகும் விதம்னு எல்லாத்தைப் பத்தியும் இதுல பேசிட்டு வரோம். அதுல ஒரு அங்கம்தான், நல்லவங்களை அடையாளம் கண்டு ஓட்டுப் போடணும்கிறதும்!

இன்டர்வியூக்கள்ல எப்படிப் பதில் சொல்லணும்னு இங்கே பேசிட்டிருக்கோம்னா, அது வெறுமே கல்வி, வேலை வாய்ப்புக்கு மட்டுமேயான அம்சமா பார்க்கத் தேவையில்லை. நண்பர்களிடம், உறவினர்களிடம், எதிராளி யிடம் பேசும்போதும் பழகும் போதும்கூட நமக்கு இந்தப் புரிதல்கள் தேவை.

இன்டர்வியூக்கள்ல உங்களுடைய ஐ.க்யூ மட்டுமில்லே, ஈ.க்யூ-வும் சோதிக்கப்படும். EQ Emotional Quotient. அதாவது, உங்களுடைய தன்னம்பிக்கை, விழிப்பு உணர்வு இதெல்லாம் எந்த அளவுல இருக்கு, பிறரின் கோணத்திலிருந்து பார்த்து அவரின் கருத்துக்களை உங்களால உள்வாங்கிக்க முடியுமா (இதை ஆங்கிலத்தில் empathy-ன்னு சொல்வாங்க), அடுத்தவரோடு உணர்வுபூர்வமா பழக முடியுமான்னு பார்ப்பாங்க.

காரணம், ஒரு நிறுவனத்தின் வெற்றிங்கிறது ஒரு தனி மனிதனின் திறமையையும் உழைப்பையும் மட்டுமே சார்ந்திருக்கிறதில்லை. அது ஒரு குழுவின் வெற்றி. அப்படியிருக்கிறப்போ, ஒவ்வொரு ஊழியரும் திறமைசாலியா இருந்தா மட்டும் போதாது; அடுத்தவரோடு சரியான முறையில் தன் கருத்துக்களையும் எண்ணங்களையும் பரிமாறிக்கிட்டு, குழுவோடு இணைஞ்சு வேலை செய்யத் தெரியணும்.

இந்த குணங்கள் ஒரு கம்பெனியில சேர்ந்து சிறப்பா வேலை பார்க்கிறதுக்கு மட்டுமில்லீங்க; உறவுகள் மேம்படவும், பிறரோடு சரியான முறையில் பழகி நம்ம வாழ்க்கையை மேம்படுத்திக்கவும்தான்.

என்ன ப்ரோ, சரிதானே நான் சொல்றது?!

பின்குறிப்பு: சென்ற இதழ் கட்டுரை நிறைய இளைஞர்களைச் சென்று சேர்ந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி! பலரும் தொடர்பு கொண்டு, தங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து வருகிறார்கள். அவற்றில், ரமேஷ்குமார் என்னும் சென்னை வாசகரின் அனுபவம் சுவாரஸ்யமானது.

நேர்காணல் நடத்துபவர் இவர் முன், கழுத்து வரை தண்ணீர் நிரப்பி, இறுக்கமாக மூடிய பிளாஸ்டிக் பாட்டிலை வைத்துவிட்டு, மூடியைத் தொடாமல் அதில் உள்ள நீரைப் பருக வேண்டும் எனச் சவால் விட்டாராம். சற்றே யோசித்த ரமேஷ், அதை சாமர்த்தியமாகச் செய்து அசத்திவிட்டாராம்.

ரமேஷ் எப்படி அதைச் சாதித்தார் என நீங்களும் யோசியுங்களேன்.

- இன்னும் பேசலாம்

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 17

அர்த்த சாஸ்திரம் எழுதியவரும், இணையற்ற அரசியல் ராஜதந்திரியுமான சாணக்கியர், இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே.

** பிறர் செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். நீங்களா கவே பட்டு உணர்ந்து பாடம் கற்கவேண்டுமெனில், இந்த ஆயுள் போதாது!

** பயம் உங்களை நெருங்கும்போது, அதனைத் தாக்கி, முளையிலேயே நசுக்கி அழித்துவிடுங்கள்!

** குடிவெறியைவிடக் கொடிய பாவம் வேறெதுவும் இதற்கு முன்னும் இருந்ததில்லை; இனிமேலும் இருக்கப்போவதில்லை.

** எந்த வேலையைத் தொடங்கும் முன்னரும் மூன்று கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். நான் ஏன் இதைச் செய்ய வேண்டும்? இதன் விளைவு என்னவாக இருக்கும்? நான் இதில் வெற்றி பெறுவேனா? இந்த மூன்று கேள்விகளுக்கும் திருப்தியான விடைகள் கிடைத்தால், பணியைத் தொடங்குங்கள்.

** ஆர்வமோ உற்சாகமோ இல்லையென்றால், உங்களால் எதையும் சாதிக்க முடியாது!

சவால்!

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 171 முதல் 9 வரையிலான எண்கள் ஒவ்வொன்றையும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி, மூன்று இலக்க எண்கள் மூன்று எழுதும்படி சொன்னால், சுலபமாக எழுதிவீடுவிர்கள்தானே? ஆனால், ஒரு நிபந்தனை: முதலாவது எண்ணைப் போல் இரண்டாவது எண் இரண்டு மடங்கும், மூன்றாவது எண் மூன்று  மடங்கும் இருக்கவேண்டும்.

உ-ம்: 192, 384, 576.

இந்த உதாரணம் தவிர, இதே போன்று இன்னும் மூன்று செட் எண்களை எழுத முடியும். ஏதேனும் ஒரு செட் எண்களைக் கண்டுபிடித்து எழுதினாலும் பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

என்ன, கண்டுபிடித்துவிட்டீர்களா? உங்கள் பதிலை உடனே 97911 21738 என்ற எண்ணுக்குத் வாட்ஸப்புங்கள். அல்லது, எஸ்.எம்.எஸ். தட்டி விடுங்கள். உங்கள் பதிலை, வரும் 31.5.16-க்குள் பதிவு செய்ய வேண்டியது அவசியம்!

பரிசு யாருக்கு?

நகர்ப்புறத்தைத் தாண்டி வெளியே தனியாக இருக்கும், புதிதாகக் கட்டப்பட்ட வீட்டில் உள்ள எட்டுப் பேர் ஆளுக்கொரு வேலையாகச் செய்துகொண்டிருக் கிறார்கள். ஏழு பேர் செய்யும் வேலைகளைச் சொல்லிவிட்டு, எட்டாவது ஆசாமி என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று கேட்டிருந்தேன்.

சிம்பிளான புதிர்தான். கொஞ்சம் யோசித்தால், விடை சுலபமாகப் புரியும். இரண்டாவது ஆசாமி செஸ் ஆடிக்கொண்டிருக்கிறான் என்று சொன்னேனல்லவா? எனில், அவனோடு ஆடுவதற்கு இன்னொருவர் தேவைதானே? அந்த இன்னொருவர்தான் எட்டாவது நபர். ஆக, எட்டாவது நபரும் செஸ் ஆடிக்கொண்டு இருக்கிறார்.

இந்தச் சரியான விடையைச் சரியாக யூகித்து அனுப்பி இருந்தவர்களில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்ற வாசகருக்கு ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்  எழுதிய, ‘உறக்கத்திலே வருவதல்ல கனவு’ என்ற புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.