Published:Updated:

திருவண்ணாமலை: 1,200 ஆண்டுகள் பழைமையான கொற்றவை, விஷ்ணு துர்க்கை சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

கொற்றவை சிற்பம்
News
கொற்றவை சிற்பம்

"சுமார் 1,200 வருடங்களுக்கு மேல் பழைமையான இந்தக் கொற்றவை, இன்றும் வெட்டவெளியில் வெயிலுக்கும், மழைக்கும் நனைந்து கொண்டு மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்."

திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் அடுத்த ஆங்குணம் கிராமத்தில் சுமார் 1,200 ஆண்டுகள் பழைமையான கொற்றவை மற்றும் விஷ்ணு துர்கை சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இதனைத் திருவண்ணாமலை மரபுசார் அமைப்பினர் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக, அந்த அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசினோம்.

"நண்பர்கள் இருவருடன் இணைந்து வெறையூர் பகுதியில் களஆய்வு மேற்கொண்டிருந்தோம். அப்போது, வெறையூரை அடுத்துள்ள ஆங்குணம் கிராமத்தில் ஒரு வீட்டின் பின்புறம் பலகைக் கல்லில் சிற்பம் ஒன்று இருப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த கோபிநாத், கலையரசன் ஆகியோர் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு நேரில் சென்றோம். ஆங்குனம் - பன்னியூர் சாலையில் ஒரு வீட்டின் பின்புறமாக வெட்டவெளியில் பலகை கல்லினாலான சிற்பம் ஒன்று காணப்பட்டது. சுமார் 5 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட சதுரமான பலகைக் கல்லில் 8 கரங்களுடன் புடைப்புச் சிற்பமாகக் கொற்றவை வடிக்கப்பட்டிருந்தார்.

கொற்றவை சிற்பம்
கொற்றவை சிற்பம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்தச் சிற்பத்தில், அழகான கரண்ட மகுடம் தலையை அலங்கரிக்க, கழுத்தில் ஆரம் போன்ற சவடி அணிந்து, தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான கச்சை அணிந்து காட்சியளிக்கிறார் கொற்றவை. தனது எட்டு கரங்களில்... மேல் வலது கரத்தில் சங்கும் ஏனைய வலது கரங்கள் முறையே வாள், அம்பு ஏந்திய நிலையில் கீழ் வலக்கரம் இடையின் மீது ஊறு முத்திரையிலும், மேல் இடது கரத்தில் சக்கரமும் ஏனைய கரங்கள் முறையே வில், கேடயம் ஏந்திய நிலையில் கீழ் இடது கரம் இடை ஆடையை பிடித்தவாறு இருக்க எருமையின் தலையின் மீது கம்பீரமாக நின்றவாரு காட்சி தருகிறார்.

கொற்றவையின் இருபுறத்திலும் இரு வீரர்கள் காட்டப்பட்டுள்ளனர். ஒரு வீரர் கைகூப்பி வணங்கிய நிலையிலும், மற்றொருவர் நவகண்டம் தரும் வகையிலும் வடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொற்றவை சிற்பத்தின் ஆடை மற்றும் அணிகலன்களின் அமைப்பை வைத்துப் பார்க்கும் போது இது கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களின் கலைப்பணியாக இருக்கக்கூடும் என்று அறிய முடிகிறது.

மேலும், கொற்றவை சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து கிழக்கு திசையில் உள்ள தனது வயல்வெளியில் 'போர்வீரன் சிற்பம்' ஒன்று இருப்பதாக அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் அளித்த தகவலின் பேரில் அங்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டோம். சுமார் 3 அடி உயரத்தில் இருந்தது அந்த விஷ்ணு துர்க்கை சிற்பம். சதுர் புஜத்துடன் மேல் இருகரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், கீழ் வலதுகரம் அபய முத்திரையிலும், கீழ் இடதுக்கரம் இடைமீது ஊறு முத்திரையிலும் அழகுற காணப்படுகிறார் விஷ்ணு துர்க்கை.

விஷ்ணு துர்க்கை சிற்பம்
விஷ்ணு துர்க்கை சிற்பம்

தலையை ஜடா மகுடம் அலங்கரிக்க, கழுத்தில் சரப்பளி மற்றும் சவடி அணிந்து, ஆடையாக மார்பு கச்சையும், இடையிலிருந்து பாதம்வரை ஆடையும் அணிந்து அழகுறக் காட்சி தருகிறார். இச்சிற்பத்தின் அமைதியை வைத்துப் பார்க்கும் போது 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பல்லவர்கள் காலத்துச் சிற்பமாகக் கருதலாம்.

சுமார் 1,200 வருடங்களுக்கு மேல் பழைமையான கொற்றவை, இன்றும் வெட்டவெளியில் வெயிலுக்கும், மழைக்கும் நனைந்துக்கொண்டு மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதேபோல, விஷ்ணு துர்க்கை சிற்பமும் வெட்டவெளியில் காணப்படுகிறது. நம் வரலாற்று பொக்கிஷங்களாகிய இவை முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது" என்கிறார்.