Published:Updated:

பூச்சரம்!

பூச்சரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பூச்சரம்!

பூச்சரம்!

பூச்சரம்!

எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும்போது, வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்குத் தெரிவதில்லை. எனவே தோல்வியை தழுவுகின்றனர்.

- தாமஸ் ஆல்வா எடிசன்

கண்ணாடிப் பாடம்!

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டிருந்தால், அதை கண்ணாடி பிரதிபலிக்கும். ஆனால், அந்தக் கறையை கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளதை உள்ளபடி  காட்டும். அதேபோன்று, உங்கள் நண்பர்கள், உற்றார் - உறவினர்களிடம் நீங்கள் காணும் குற்றம் குறைகளை அவை எந்தளவு உள்ளதோ, அதை அப்படியே சுட்டிக்காட்டவேண்டும். மிகைப்படுத்துதல் கூடாது.

கண்ணாடிக்கு முன் நிற்கும்போதுதான் அது நம் குறைகளைக் காட்டும்.  அதேபோல் நாமும் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே கூறவேண்டும். முதுகுக்குப் பின்னால் பேசக் கூடாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பூச்சரம்!

முகத்தில் இருக்கும் கறையைக் கண்ணாடி காட்டுவதால், அதனிடம் கோபப்படுகிறோமா நாம்? அப்படியே நமது குறைகளைச் சுட்டிக்காட்டுபவரிடமும் நாம் கோபமோ எரிச்சலோ படாமல், அவர்கள் சொல்லும் குறைகளைக் களைய முயற்சிக்க வேண்டும்.

- சங்கரன் கணேசன் (வாட்ஸ் அப் பகிர்வு)

கடவுள் அழைக்கிறார்!

அந்தக் கட்டடத்தின் 13-வது தளத்தில் நடைபெற்றுக் கொண் டிருந்த பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார்  கட்டுமானப் பொறியாளர் ஒருவர். அதேநேரம், ஒரு விஷயத்தை மேஸ்திரியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர், கீழே சித்தாள்களிடம் வேலைவாங்கிக் கொண்டிருந்தார்.

பொறியாளர் மேஸ்திரியை செல்ஃபோனில் அழைத்தார். வேலையில் தீவிரமாக இருந்த மேஸ்திரி செல்ஃபோன் அழைப்பை கவனிக்கவே இல்லை. சிறிது யோசித்த பொறியாளர் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து மேஸ்திரிக்கு அருகில் தரையில் விழுமாறு கீழே போட்டார். எதேச்சையாக தரையில் ரூபாய் நோட்டைக் கண்ட மேஸ்திரி அதை எடுத்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டாரே தவிர, மேலே பார்க்கவில்லை. அடுத்ததாக ஒரு ஐந்நூறு ரூபாய்த் தாளை கீழே போட்டார் பொறியாளர். அதையும் எடுத்துவைத்துக் கொண்ட மேஸ்திரி, அதைப் போட்டது யார் என்று யோசிக்கக்கூட இல்லை.

இப்போது பொறியாளர் பொறுமை இழந்தார். ஒரு சிறு கல்லை எடுத்து வேகமாக வீசியெறிந்தார். அது தன் தோளில் பட்டதும்தான் மேலே கவனித்தார் மேஸ்திரி; பொறியாளர் அழைக்கிறார் என்பதையும் புரிந்துகொண்டார்.

பூச்சரம்!

நம்மவர்களில் பலரும் அப்படித்தான். இறைவன் எண்ணற்ற அருட்கொடைகளை அளிக்கிறான். அப்போதெல்லாம் அவர்கள் இறைவனை ஏறிட்டுப் பார்ப்பதில்லை; உலக மாயைகளில் சிக்கித் தவிக்கிறார்கள்.  ஆனால் துன்பம் நேரும்போது மட்டும்தான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கிறார்கள். ஆக, துன்பங்கள் வரும் நேரம், இறைவன் உன்னைத் தேடி அழைக்கும் நேரம் என்று பொருள்.

- படித்ததில் ரசித்த கதை இது!

- ரமேஷ் (வாட்ஸ் அப் பகிர்வு)

தோல்விகள் தொடராது!

நான் இளைஞனாக இருந்தபோது, பத்து காரியங்கள் செய்தால் அதில் ஒன்பது தோல்வி அடைவதைப் பார்த்தேன். என்னுடைய வாழ்க்கையில் தோல்வி அடைவதை நான் விரும்பவில்லை. ஒன்பது முறையும் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபோது, எனக்கு ஓர் உண்மை பளிச்சென்று விளங்கியது. தொண்ணூறு முறை முயன்றால் ஒன்பது தடவை வெற்றி கிடைக்கும் என்பதுதான் அது. ஆகவே முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்

- பெர்னாட்ஷா

சூரிய ஒளியும் பூதக்கண்ணாடியும்!

அந்தச் சிறுவன் இளவயதிலேயே சிறந்த அறிவாளியாகத் திகழ்ந்தான். ஆனால் அவனது செயல்பாடுகள் ஒருமுகப்படவில்லை. அதைக் கவனித்த அவனுடைய அன்னை ஒரு காரியம் செய்தார். 
சிறுவனை அழைத்து ஒரு பூதக் கண்ணாடியையும், சில காகிதங்களையும் கொண்டுவரச் சொன்னார். அவன் எடுத்து வந்ததும், முற்றத்தில் வெயில் படும் இடத்தில் உட்கார்ந்துகொண்டு,  மகனையும் அருகில் அமரவைத்துக் கொண்டார்.

பின்னர், காகிதங்களை தரையில் பரப்பி, அதன் மேலாக பூதக் கண்ணாடியைப் பிடித்துக்கொண்டார். சிறிது நேரத்துக்கு அவரது கை ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் அசைந்துகொண்டிருந்தது. அதனால் எந்த விளைவும் இல்லை. பிறகு, ஓரிடத்தில் நிலையாக இருக்கும்படி பூதக்கண்ணாடியைப் பிடித்துக்கொண்டார். இப்போது பூதக்கண்ணாடி மூலம் ஓரிடத்தில் குவிந்த சூரியக் கதிர்கள் காகிதத்தைச் சுட்டெரித்தது. இதைக் கவனத்துடன் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஆச்சரியப்பட்டான்.

அப்போது தாயார் கூறினார், ‘‘ஒருமுகமாகக் குவிக்கப்பட்டதால் ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரித்தது. ஆனால் ஒருமுகப் படுத்தப்படாத கதிர்களால் நெருப்பு விளையவில்லை என்பதைக் கவனித்தாயா? நீயும் உனது செயல்பாடுகளை ஒருமுகப்படுத்தினால் எல்லா விஷயத்திலும் வெற்றியைச் சுவைக்கலாம்’’ என்றார்.

அம்மாவின் வார்த்தைகளை மனதில் நன்றாகப் பதியவைத்துக் கொண்ட அந்தச் சிறுவன், அதன்படி செயல்பட்டு வெற்றி பெற்றான். ஆம், பிற்காலத்தில் நோபல் பரிசு பெற்று பெரும் புகழடைந்த சர்.சி.வி.ராமன்தான் அவர்.

- இளமதி (வாட்ஸ்-அப்பில் பகிரப்பட்டது)