Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம்! - 43

பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மனிதனும் தெய்வமாகலாம்! - 43

ண்மையைச் சொல்கிறார் குருநாதா். சீடன் மிகவும் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருக்கிறான்.

 கா்மங்கள் அனைத்துமே பந்தத்தைக் கொடுக்குமே தவிர, அறியாமையை நீக்காது. அறியாமையை நீக்குவது, தியான யோகம் மட்டுமே - என்கிறார் குருநாதா்.

 பொய் கறுவி அஞ்ஞானத்தைக்கண்ட
 அக்கணம் கொல்வது ஞானமே,
 கருமம் அன்று அறிவாயே

 - சந்தேகம் தெளிதல் படலம் - 83)

 இது, புரிந்தாலும் புரியாததைப்போலத்தான் இருக்கிறது. இதன்படிப் பார்த்தால், எந்தச் செயலும் (கா்மங்கள்) செய்ய வேண்டாம். தியானம் செய்தால் போதும் - என்ற அா்த்தமும் வெளிப்படுகிறது.
தெளிவுபெற வேண்டிய நாம், மேலும் குழம்பிப் போகிறோம்; குழம்பவே வேண்டாம். இந்த ஒரு பாடல் போதும், நாம் உருப்படுவதற்கு! வாருங்கள். குருநாதரின் வார்த்தைகளை ஆராயலாம்.
அறியாமையைக் கெடுப்பது செயல்கள் அல்ல; தியானம் மட்டுமே - என இப்பாடல் சொன்னதை, இன்றைய காலகட்டத்தை அனுசரித்து எளிமையாகப் பார்க்கலாம்.

கைபேசி - இதைப் பற்றி ஓரளவுக்காவது தெரியும். பேசுவது, பேசக் கேட்பது, புகைப்படம் பிடிப்பது எனப் பலவிதமான செயல்கள், கைபேசியில் உள்ளன. (இதெல்லாம் தான் எங்களுக்குத் தெரியுமே என வாதம் செய்ய வேண்டாம். மேலே பார்க்கலாம்; வாதம் வாழ்க்கைக்கு உதவாது) கைபேசியில் பலவிதமான செயல்பாடுகள் உள்ளனவே தவிர, அவற்றில் கைபேசியில்லை. அதுபோல...

பரம்பொருளிடம் பலவிதமான செயல்பாடுகள் (சிருஷ்டி முதல்) உள்ளனவே தவிர, அவை பரம்பொருள் அல்ல. ஆனால்...

 எங்குபோனாலும் கைபேசியைத் தூக்கிக்கொண்டு போவதைப்போல, எங்கு போனாலும் பலவிதமான எண்ணங்களைச் சுமந்துகொண்டு போகிறோம். சற்று ஆழமாகப் பார்த்தால்... நாம் கைபேசியைச் சுமந்து போவது... எதற்காக? யாராவது கூப்பிடுவார்கள்; இ-மெயில் (மின்னஞ்சல்) வரும்; 'வாட்ஸ்அப்'பில் ஏதேனும் தகவல்வரும்; இதற்காகத் தானே, கைபேசியைச் சுமந்துகொண்டு அலைகிறோம்?

அதுபோல...

உலகத்தில் உள்ள பலவற்றையும் மனதில் ஏராளமாகச் சுமந்துகொண்டு அலைகிறோம். ஒரே ஒரு வித்தியாசம் தான்.

கைபேசியின் கூறுபாடுகள்,செயல்பாடுகள் என அதைப்பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால், பரம்பொருளின் கூறுபாடுகளான உலகமும் அதன் செயல்பாடுகளும் நமக்குத் தெரியவில்லை. புரிந்து கொள்ள முயல்வதுமில்லை.

கைபேசியின் பலன்களை அனுபவிக்கும் நாம், பரம்பொருளின் பயனை அனுபவிக்கவில்லை. கைபேசிக்காவது, "தாங்கள் தொடா்புகொள்ள முயற்சிக்கும் நபா் தொடா்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் என்பது உண்டு. ஆனால்...

பரம்பொருள் எப்போதும் தொடா்பில்தான் உள்ளது. நாம்தான் மனம் என்பதை, ஸ்விட்ச்டு ஆஃப் செய்து வைத்திருக்கிறோம். ஆனால் அது தெரியாமல், அமைதியே வடிவான - ஆற்றலே வடிவான - ஆனந்த வடிவான - ஔிமயமான அப்பரம்பொருளை, எல்லாவற்றிலும் தேடிக்கொண்டிருக்கிறோம். அதாவது...

அமைதி, ஆனந்தம், ஆற்றல் முதலியவைகளைத்தேடி அலைகிறோம் என்பது பொருள். வேருக்கு நீா் ஊற்றாமல், விழுதுகளுக்கு நீா் ஊற்றிக்கொண்டிருக்கிறோம்.

 இதைத்தான் மாயை என்கிறார்கள். அடிப்படை உண்மையை அறியவிடாமல், பரம்பொருளை உணரவிடாமல் செய்யும் அனைத்துமே மாயைதான்.

                சீடன் அடுத்த கேள்வியைக் கேட்கிறான்;
                பங்கயாசனன் முதல் பல தேவரும்
                            பாருள பெரியோரும்
                கங்கை ஆதியாம் தீா்த்தமும்
                            தேசமும் காலமும் மறைநாலும்
                அங்கம் ஆறும் மந்திரங்களும் தவங்களும்
                             அசத்தியம் எனச்சொன்னால்
                எங்கள் நாயகரே அதனால்
                             குற்றங்கள் இல்லையோ? மொழியீரே!

                                           -   (சந்தேகம் தெளிதல் படலம் - 91) 

 சீடன் கேள்வி இது. இக்கேள்வியை அவன் கேட்கிறானோ இல்லையோ? நாமே, மனதுக்குள்ளாவது கேட்டுக் கொள்வோம். "சிருஷ்டி கா்த்தாவான பிரம்மன், தேவா்கள், வழிகாட்டும் பெரியோர்கள், கங்கை முதலான புண்ணிய தீா்த்தங்கள், புண்ணிய தேசங்கள், புண்ணிய காலங்கள், வேதங்கள் - ஆறு அங்கங்கள், மந்திரங்கள், தவங்கள்- எனும் இவையெல்லாம் மாயையா? "எனக் கேட்கிறான் சீடன். பதில் கூறத் தொடங்குகிறார் குருநாதா்.

- (தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு